அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும்

வாயால் நிறேவேற்றும் அனுஷ்டானங்களில் அல்குர்ஆனை ஓதி வருவதே மிகவும் சிறப்புக்கு உரியதாகும். அதையடுத்து சிறப்புக்குரியதாக விளங்குவது அல்லாஹ்வை திக்ரு செய்வதும் (நினைவு கூர்வதும்) அவனிடம் தன் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியாக துஆ கேட்பதும் - பிரார்த்தனை செய்வதுமாகும்..

اسم الكتاب: توزيع العبادات على مقادير الأوقات


تأليف: ابن قدامة المقدسي


الناشر: موقع الكتيبات الإسلامية


نبذة مختصرة: كتاب مترجم إلى اللغة التاميلية للإمام بن قدامة المقدسى - رحمه الله - يبين فيه أن الطريق إلى تعالى بمراقبة الأوقات وعمارتها بالأوراد على سبيل الدوام ومن أحسن العبادات قولا القرآن الكريم ثم الذكر والدعاء.

அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும்


 
] தமிழ்– Tamil –[ تاميلي  

இப்னு குதாமா அல் மக்திஸி (ரஹ்)

தமிழில்
Y.M.S.I.இமாம்.
ரஷாதி-பெங்களூர்

 

 

 

 

2015 - 1436
 
 
تَوْزِيعُ العِبَادَاتِ عَلَى مَقاَدِيرِالأوْقَات

« باللغة تاميلي »

 

ابن قدامة المقدسي


ترجمة:

 

 

 

2015 - 1436
 


அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும்
تَوْزِيعُ العِبَادَاتِ عَلَى مَقاَدِيرِالأوْقَات

நூலாசிரியர்
இப்னு குதாமா அல் மக்திஸி (ரஹ்)
தமிழில்
Y.M.S.I.இமாம்.
ரஷாதி-பெங்களூர்
என்னுரை.
   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோ னுமாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன். சாந்தியும் சமாதானமும் நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
      உலகில் வாழும் சகல இனத்தவரும் இன, மத, பேதங்கள் இன்றி மன அமைதியைத் தேடி அலைகின்றனர். ஆனால் விளைவு பூச்சியம் தான். அதனையடைய இஸ்லாம் காட்டும் வழி இறைத் தியானமும் இறை வழிபாடுமாகும். இதனைச் சரியாகவும் கிரமமாகவும் மேற் கொள்வதன் மூலம் தான் இறைவனின் திருப்தியையும், மன அமைதியையும் பெற வழி பிறக்கும்.
     அதனை அடைந்து கொள்ளும் வழிகாட்டலை அல்குர்ஆனும், ரஸூல் (ஸல்)அவர்களின் மணி மொழிகளும் தந்துள்ளன. எனினும் அதனை அடைந்து  கொள்ள சரியான வழிகாட்டலும் பயிற்சியும் அவசியம். எனவே தான் இதர கலைகளைப் போன்று அல்லாஹ்வின் திருப்தி வழியைத் தேடுதல் என்பதும் ஒரு கலையாக வளர்ச்சி கண்ட போது அத்துறையிலும் வழிகாட்ட சான்றோர் சிலர் முன் வந்தனர்.அத்துறையில் புத்தகங்களும் எழுதினர்.
      இதன் பிரகாரம் ஹி.540/ கி.பி.1147ம் ஆண்டு பலஸ்தீனம் நாபுலிஸில் பிறந்த இப்னு குதாமா அல் மக்திஸி (ரஹ்) அவர்கள்  "تَوْزِيعُ العِبَادَاتِ عَلَى مَقاَدِيرِالأوْقَاتِ"   என்ற தலைப்பில் ஒரு கை நூலை வெளியிட்டார். அதன் மூலம் இறைத்திருப்தியையும் மன அமைதியையும் தேடுவோருக்கு அவசியமான வழிகாட்டல்களை முன் வைத்துள்ளார். அதனை அடியேன்“அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும்” என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளேன். 100% நேரடி மொழிபெயர்ப்பாக அன்றி கருத்து மொழி பெயர்ப்பாகவே அதனை மேற்கொண்டுள்ளேன்.
    எவ்வாறாயினும் மனிதன் என்ற கோதாவில் எனது இந்தப் பணியில் தவறுகள் இருக்காது என்று கூறுவதற்கில்லை. அப்படியாயின் அடியேனை மன்னித்து அதனைத் திருத்திக் கொள்ளுமாறும் அது பற்றி அடியேனுக்கு அறியத்தருமாறும் வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.
தலை சிறந்த அறிஞனும், முப்தியும், முஹந்திஸ்ஸும் இஸ்லாமியப் போராளியுமான இப்னு குதாமா (ரஹ்) அவர்களின் இயற்கை பெயர் முவாபிகுத்தீன் அபூ முஹம்மத் அப்துல்லா அஹ்மத் இப்னு குதாமா என்பதாகும்.
(عُمْدَةُ الأحْكَام، المُقْنِع، الكَافِي)  என்பன அவரின் பேராக்கங் களில் சிலவாகும். ஹி.583 / கி.பி.1187 ம் ஆண்டு ஸலாஹூத்தீன் அல் ஐயூபி, பலஸ்தீனத்தை விடுதலை செய்ய படையெடுத்த போது இப்னு குதாமாவும் அந்தப் படையில் இணைந்து போரிட்டார். இதே ஆண்டு ரஜப் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை சிலுவைக்காரர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த பைதுல் முகத்திஸை இஸ்லாமியப் படை மீட்டெடுத்தது. அதில் இப்னு குதாமாவின் பங்களிப்பும் அழியாத இடத்தைப் பிடித்துக் கொண்டது. அவர் ஹி.620/கி.பி.1223ம் ஆண்டு தன் 79 வயதில் காலமானார். அவரின் சடலம் டமஸ்கஸ் நகரில் நல்லடக்கம் செய்யப் பட்டது.
   உங்கள் பார்வையிலுள்ள அவரின் இந்த கையேட்டில் சில பலவீனமான ஹதீஸ்களும் தகவல்களும் அடங்கியிருப்பது உண்மையே. எனினும் பலவீனமான ஹதீஸ் விடயத்தில் அறிஞர்கள் இரு வகைப்பட்ட கருத்தை உடையவர் களாக இருக்கின்றனர். ஒரு சாரார் எவ்வாறாயினும் பலவீனமான ஹதீஸ் ஏற்புடையதன்று என அழுத்திக் கூறுகின்ற போது, மறு சாரார் அனுஷ்டான விடயங்களில் ஆர்வமூட்டுகின்ற நோக்கில் பலவீனமான ஹதீஸ்களை முன் வைக்கலாம் என்கின்றனர். இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் தனது நூலில் பலவீனமான தகவல்களைக் கொண்டு வந்திருப்பதானது, பலவீனமான ஹதீஸ் விடயத்தில் அவர் 2ம் தரப்பினரின் கருத்தை ஏற்றுக் கொண்டதனாலாகும் எனத் தோன்றுகிறது.
      எனினும் அவர் தனது நூலில் முன் வைத்துள்ள துஆக்களும், ஔராதுகளும் ஆதாரபூர்வமானவை என்பதால் இந்தக் கைநூல் பலன் தரும் என்பது எனது எண்ணம். மேலும் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல அதிலுள்ள துஆக்களையும், ஔராதுகளையும் கிரமமாக அனுஷ்டித்து வந்தால் இறைத் திருப்தியையும் மன அமைதியையும் அடையலாம் என நம்புகிறேன்.
      எனவே இறைவா! இந்நூலின் மூல ஆசிரியருக் கும், நமக்கும், இதை வெளியிட உதவியோர்க்கும், இதைப் படிக்கின்றவர்களுக்கும் இதன் உச்சப் பயனை அடையவும், ஈருலகத்திலும் நற்பாக்கியம் கிட்டவும் அருள் புரிவாயாக! நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மீதும் அவர் கிளையார், தோழர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
                                                         மொழிபெயர்ப்பாளன்
Y.M.S.I.இமாம்.
(ரஷாதி-பெங்களூர்)

 

 


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
சர்வ உலகையும் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் சொந்தம். ஸலாத்தும் ஸலாமும் நமது தூதர் முஹம்து (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவர் மீதும் உண்டாவதாக!
        வாயால் நிறேவேற்றும் அனுஷ்டானங்களில் அல்குர்ஆனை ஓதி வருவதே மிகவும் சிறப்புக்கு ரியதாகும். அதையடுத்து சிறப்புக்குரியதாக விளங்குவது அல்லாஹ்வை திக்ரு செய்வதும் (நினைவு கூர்வதும்) அவனிடம் தன் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியாக துஆ கேட்பதும் - பிரார்த்தனை செய்வதுமாகும்.
     பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ் களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதின் சிறப்பைத் தெளிவுபடுத்தும் ஆதாரங்களாகும்.
நீங்கள் என்னை நினைத்துக் கொண்டே இருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். (அல் பகரா; 152)
இத்தகையவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். (ஆல இம்ரான்;191)
அல்லாஹ்வின் திருப்பெயரை அதிகமாக நினைவு கூறும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்அஹ்ஸாப்; 35)
“என் அடியான் என்னை நினைத்துக் கொண்டி ருக்கும் போதும், என்னை நினைத்து அவனின் உதடுகள் இரண்டும் அசைந்து கொண்டிருக்கும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்.” என அல்லாஹ் கூறுகிறான் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (ஆதாரம்; அஹ்மத்)
     மேலும் “ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தினரை மலக்குமார்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் அல்லாஹ்வின் அருள் அவர்களைச் சூழ்ந்து  கொள்கிறது. இன்னும் அவர்களிடம் அமைதியும் இறங்குகிறது. மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடம் உள்ளவர்களிடம் (மலக்குமார்களிடம்) நினைவு கூறுவான்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்;முஸ்லிம்)
     அனுஷ்டானங்களின் சிறப்புக்கள் பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் இது சம்பந்தமாக ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன.  அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் இப்படி இடம் பெற்றுள்ளது.
“ஒரு சபையிலிருந்த கூட்டத்தினர் பிரிந்து செல்லும் வேளையில் அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறவில்லையெனில், அவர்கள் ஒரு கழுதையின் சவத்திடமிருந்து பிரிந்து செல்வது போல் அல்லாது பிரிந்து செல்வதில்லை. மேலும் அந்த சபை மறுமை நாளில் அவர்களுக்கு நஷ்டத்தையே தேடித் தரும்.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்; அபூதாவூத், அஹ்மத்)
       துஆவின் சிறப்புப் பற்றி ஒரு ஹதீஸில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பவதாவது,
“அல்லாஹ்விடம் மிகவும் கன்னியத்துக்குரிய விடயம் அவனிடம் துஆ கேட்பதாகும். மேலும் அல்லாஹ் தன்னிடம் கேட்காதவன் மீது கோபமடைகிறான்.” என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் அஹ்மத், திர்மிதி, அல்ஹாகிம்)
        மேலும் “நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். ஆகையால் நீங்கள்  அவன் அருளைத் தருமாறு அவனிடம்கேளுங்கள்.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்; திர்மிதி)
      எனினும் பிரார்த்தனை செய்வதற்காக சில ஒழுங்கு முறைகளும் அவை ஏற்றுக் கொள்ளப் படுவதற்குரிய சிறப்பான நேரங்களும் உள்ளன. எனவே, முதலில் அவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.
        வருடத்தில் ஒரு முறை வரும் அறபா தினம், ரமழான் மாதம், வாரத்தில் ஜும்ஆ தினம், இரவு காலத்தில் ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத் துக்கும் இடைப்பட்ட நேரம், தொழுகையை நிறைவேற்றியதுடனான நேரம், அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிகின்ற நேரம், நோன்பு திறக்கின்ற நேரம், மழை பொழியும் நேரம், கத்முல் குர்ஆனின் - அல்குர்ஆனைப் பூரணமாக ஓதி முடித்த சந்தர்ப்பம், மனம் சாவதனமாக இருக்கும் சமயம், மனம் அச்சத்துடன் இருக்கும் சந்தர்ப்பம் என்பன பிரார்த்தனை ஏற்றக் கொள்ளப்படும் சந்தர்பங்களில் சிலவாகும்.
நேரங்கள் அவை பெற்றுள்ள சந்தர்ப்ப சூழலைப் பொருத்தே அது தனிச் சிறப்புக்களைப் பெறு கின்றன. உதாரணமாக, ஸஹர் நேரத்தில் மனம் தெளிவாகவும்,வெறுமையாகவும் இருக்கின்ற படியால் ஸஹர் நேரம் சிறப்புற்று விளங்கக் காரணமாக அமைகிறது. மேலும் ஸுஜூதின் நிலையை எடுத்துக் கொண்டால் அது தாழ்மையை யும், பணிவையும் பிரதிபலிக்கச் செய்கிறது.
மேலும் பிரார்த்தனை செய்கின்ற போது கிப்லா திசையை முன்னோக்குவதும், இரண்டு கைகளயும் உயர்த்துவதும்,பின்னர் அவை கொண்டு முகத்தைத் தடவிக் கொள்வதும், சப்தத்தை தாழ்த்திக் கொள்வ தும், முதலில் அல்லாஹ்வை திக்று செய்து அவனை நினைவுபடுத்திக் கொள்வதும் ரஸூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதும், துஆ செய்கின்ற போது வலிந்து, எதுகை மோனையில் கவனம் செலுத்தாதிருப்பதும் போன்ற விடயங்கள் பிரார்த்தனையின் சில ஒழுங்கு முறைகளாகும்.
      மேலும்,பிரார்த்தனை செய்யும் முன் தொளபா செய்து கொள்வதும், அநியாய காரியங்களை விட்டு விலகிக் கொள்வதும் அவசியம். ஏனெனில், இவை பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அடிப்படையான அதன் ஒழுங்கு முறைகளாகும்.
ஔராதும் அதன் சிறப்பும்.
        இந்த தலையங்கமானது ஔராதுகள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் மற்றும் அனுஷ்டானங் கள் நிறைவேற்றப்பட வேண்டிய கால நேரங்களை யும் தொகுத்துத் தருகிறது.
          அல்லாஹ்வும் அவனின் வாக்கு உண்மை என்பதையும், தான் பெற்றுள்ள ஆயுட்காலம் குறுகியது என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டீர் களாயின், குறுகிய இந்த வாழ்நாளில் குறைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வது கடமை என்பதையும், ஏதேனும் ஒரு காரியத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற போது அந்த காரியத்தில் சோர்வுண்டாகிறபடியால் ஒரு காரியத்திலிருந்து இன்னொரு காரியத்திற்கு மாறிச் செல்கின்ற போதுதான் அதில் இன்பம் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
          அல்லாஹ் தன் திருமறையில், “காலையிலும் மாலையிலும் உங்களது இறைவனின் திரு நாமத்தை (க்கூறி) நினைவு கூறுங்கள்.”
“இரவிலும் அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடு நேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!” (அல் இன்ஸான்:25,26) என்று கூறுகிறான்.
          ஒளராதுகளை உரிய காலத்தில் நேமமாகச் செய்து வரவேண்டுமென்பதற்கு அல்லாஹ்வின் இது போன்ற வசனங்கள் வழிகாட்டுகின்றன.
       மேலும், அல்லாஹ் இன்னொரு வசனத்தில் “இரவையும், பகலையும் மாறி மாறி வரும் படி செய்கிறான்.எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறரார்களோ அவரகளுக்காக (இதைக் கூறுகிறான்) என்று இயம்புகிறான்.” (அல்புர்கான்; 26)
        இந்த வசனமானது ஒரு சந்தர்ப்பத்தில் தவறிப் போன ஒன்றை இன்னொரு சந்தர்ப்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது என்பதை உணர்த்துகிறது. எனவே, ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றின் வருகை நிகழ்கிறது என்பது இந்த வசனம் உணர்த்தும் பொருளாகும்.
      இரவு பகலின் ஔராதுகளும் அதன் எண்ணிக்கையும், அவற்றின் ஒழுங்கும்.
      பகற் பொழுதில் ஏழு சந்தர்ப்பங்களிலும் இரவு காலத்தில் ஆறு சந்தர்ப்பத்திலுமாக ஒரு நாளைக்கு பதிமூன்று சந்தர்ப்பங்களில ஓத வேண்டிய ஔராது கள் இருக்கின்றன. எனவே, அவற்றின் சிறப்புக்கள், கடமைகள், அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி இனி அறிந்து கொள்வோம்.
   பகற்கால ஒளராதுகள்.
       பஜ்ருத் தொழுகைக்காக அதான் சொல்லப்படும் நேரம், பஜ்ருஸ்ஸானி - இரண்டாம் பஜ்ர் எனப்படும். இந்த நேரம் முதல் சூரியன் உதயமாகும் வரை யிலான நேரம் ஔராதுக்குரிய முதலாவது கால நேரமாகும். இது மிகவும் முக்கியமானதும் சிறப்புக் குரியதுமான ஒரு நேரம். “உதயமாகும் காலையின் மீது சத்தியமாக!” (அத்தக்வீர்;18) என்று அல்லாஹ் காலை நேரத்தின் மீது ஆணையிட்டிருப் பது அந்த நேரத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.
    எனவே, அல்லாஹ்வின் திருப்தியை பெறும் வழியை தேடும் ஒரு முரீது தூக்கத்திலிருந்து எழுந்ததும் முதலில் அல்லாஹ்வை நினைவு கூறுவது அவசியம். எனவே அவன்
  (الحمد لله الذي أحيانا بعد ما اماتنا وإليه النشور)
 “நம்மை இறக்கச் செய்த பின்னர் மீண்டும் நம்மை உயிர்பித்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக!மீண்டும் நாம் அவனின் பக்கமே எழுப்பப் படுவோம்.” என்ற துஆவை ஓத வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதி வந்த இந்த துஆ புஹாரியில் பதிவாகியுள்ளது.
         மேலும், ரஸூல் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதில் பின்வரும் துஆவை ஓதுவார்கள் என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளர்கள். முஸ்லிமில் பதிவாகியுள்ள அந்த துஆ வருமாறு;
(أمسينا وأمسى الملك لله، والحمد لله، ولا إاله إلا الله وحده  لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شيء قدير، رب أسألك خير ما في هذه الليلة وخير ما بعدها، وأعوذ بك من شر هذه الليلة وشر ما بعدها، رب أعوذ بك من الكسل وسوء الكبر، رب أعوذ بك من عذاب في النار وعذاب في القبر)
“நாம் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலைப் பொழுதின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ் வுக்கே சொந்தம். மேலும் சர்வ புகழும் அந்த அல்லாஹ்வுக்கே சொந்தம். வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஓருவன். அவனுக்கு இணை யாருமில்லை. சகல ஆட்சி அதிகாரமும் அவனுக்கே உரியன. மேலும் சகல புகழுக்குரியவனும் அவனே. சகல பொருட்களின் மீதும் வல்லமையுள்ளவனும் அவனே. என் இரடசகனே! இந்த இரவிலும், அதன் பின்னருமுள்ள நல்லதை உன்னிடம் வேண்டு கிறேன். மேலும் இந்த இரவிலும் அதன் பின்னருமுள்ள தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறன். என் இரட்சகனே! சோம்பலையும் மற்றும் பெருமையின் தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இரட்சகனே! நரகத்தினதும், கப்ரினதும் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”
         மேலும் நபியவர்கள் காலைப் பொழுதில்,
أصبحنا وأصبح الملك لله..)
“நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலைப் பொழுதின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ் வுக்கே சொந்தம்..” எனும் வாக்கியத்தைக் கொண்டு துஆவை ஆரம்பித்து மாலைப் பொழுதின் துஆவின் ஏனைய பகுதிகளையும் சேர்த்துப் பிரார்த்தனை செய்வார்கள். அதன் பின்,
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم.)
“அல்லாஹ்வின் பெயரால் இன்றைய தினத்தை ஆரம்பம் செய்கிறேன். அவன் பெயரால் வானம் பூமியிலிருக்கும் எந்த பொருளும் தீமையினை விளைவிக்க முடியாது. அவன் யாவற்றையும் கேட்போனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.” என்ற வாசகத்தை 3 தடவைகள் சொல்வார்கள்.
மேலும்,
رضيت بالله ربا، وبالإسلام دينا، وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا.
“அல்லாஹ் தான் இரட்சகன் என்றும், இஸ்லாம் தான் மார்க்கம் என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் நபியும் ரஸூலுமாவார் என்றும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்” என்றும் கூறுவார்கள்.
     பின்னர் நபியவர்கள் பஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவார்கள். அதன் பின் தன் காலைத் மடக்கியவராக   யாருடனும் பேசாது
 لا إِله إِلا الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ عَلَى كُلِ شَيْءٍ قَديْرٌ)
“வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை எதுவுமில்லை. ஆட்சி அதிகாரம் யாவும் அவனுக்கே சொந்தம். புகழ் அனைத்தும் அவனுக்கே சொந்தம். உயிர் கொடுப்பவனும் உயிரை எடுப்ப வனும் அவனே. மேலும் எல்லா பொருட்களின் மீதும் வல்லமையுள்ளவனும் அவனே” என்ற வாசகத்தை 10 தடவைகள் சொல்வார்கள்.
        பின்னர் ஸையிதுல் இஸ்திஃபார் – தலைமை மன்னிப்புக் கோரல் என்ற,
اللَهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إلَهَ إلاَّ أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَناَ عَبْدُكَ، وَأناَ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَااسْتَطَعْتُ، أَعُوذ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْلِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذنُوبَ إلاَّ أَنْتَ)
எனும் வாசகங்களை சொல்லி பிழை பொறுக்கத் தேடுவார்கள். அதன் கருத்து வருமாறு, “அல்லாஹ் வே என் இரட்சகன். நீதான் வணக்கத்துக்குத் தகுதி யானவன் உன்னையன்றி யாருமில்லை. நீதான் என்னை படைத்தாய். நானோ உன் அடிமை. நான் என்னால் முடிந்த வரை உனக்களித்த வாக்குறுதி யின் பிரகாரமே இருக்கின்றேன். நான் மேற் கொள்ளும் காரியங்களில் தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்களித் துள்ள அருட்கொடைகளுடனும் மற்றும் என் பாவச் சுமையுடனும்தான் நான் உன் பக்கம் திரும்புகிறேன். ஆயினும் உன்னையல்லாது வேறு எவராலும் பாவங்களை மன்னித்தருள முடியாது. ஆகையால், நீ என்னை மன்னித்தருள்வாயாக!” என்று மன்றாடுவார்கள்.
       பின்னர்,
أَصْبَحْنَا عَلَى فِطْرةِ الإِسْلَامِ وَعَلَى كَلِمَةِ الإخْلاَصِ، وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صلى الله عليه وسلم، وَعَلَى مِلَّةِ أبِينَا إبْرَاهِيْمَ، حَنِيْفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ المُشْرِكِينَ
 “நாம் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் தூய்மை யான வாக்கின் மீதும், நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களினதும் நம் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களினதும் மார்க்கத்தின் மீதும், நேர்மையான முஸ்லிம் என்ற நிலையில் காலைப்பொழுதை அடைந்து கொண்டோம்.” மேலும்,
(الَلهُمَّ أصْلِحْ لِي دِيْنِي الذِّي هُوَ عِصْمَةُ أمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ  الَّتِي فِيْهَا مَعَاشِي، وَأصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ،
وَاجْعَلِ المَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ )        
“அல்லாஹ்வே! என் விடயத்தில் எனக்குப் பாதுகாப் பாக இருக்கின்ற என் மார்க்கத்தையும், என் ஜீவனோபாயம் அமைந்திருக்கும் என் உலகத்தையும் சீர்படுத்தித் தந்தருள்வாயாக. மேலும்,நான் திரும்பிச் செல்லவுள்ள என் மறு உலகையயும் சீர்படுத்தித் தந்தருள்வாயாக. மேலும், என் ஆயுளை நல்ல கருமங்களை அதிகம் செய்யக் கூடியவாறு ஆக்கி யருள்வாயாக. மேலும் என் மரணத்தை சகல தீமை களிலிருந்தும் ஓய்வு பெறத் தக்கதாய்  ஆக்கி யருள்வாயாக.”என்ற துஆவையும் ஓதுவார்கள். மேலும் நபியவர்கள் பின்வரும் இந்த துஆவையும் ஓதுவார்கள் என அபூ தர்தா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அது வருமாறு:  

 (اللَّهُمَّ أنْتَ رَبِّي، لاَ إلَهَ إلَّا أنْتَ، عَليْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ العَرْشِ العَظِيمِ، مَا شَاءَ اللهُ كَانَ، وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ، وَأَنَّ اللهَ قَدْ أحَاطَ بِكُلِّ شَيءٍ عِلْمًا)  
“அல்லாஹ்வே! நீயே என் இரட்சகன். உன்னை யன்றி வணக்கத்திற்குத் தகுதியானவன் யாரும் இல்லை. என் பொறுப்புக்களை உன்னிடமே ஓப்படைத்துள்ளேன். மகத்தான அர்ஷின் இரட்சகனும் நீயே தான். அல்லாஹ் நாடியதுதான் நடைபெறும். அவன் நாடாதது நடை பெற மாட்டா. நிச்சயமாக, அல்லாஹ் சகல விடயங்களையும் அறிந்தவனாக இருக்கின்றான்.”
(اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيم)
“அல்லாஹ்வே! என் ஆத்மாவின் தீமைகளை விட்டும் மேலும் சகல சிருஷ்டிகளின் தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அவற்றின் அதிகாரம் உன் வசமே உண்டு. நிச்சயமாக, எனது இரட்சகனின் வழியே நேர்த்தியானது.”
    அல்லாஹ்வின் திருப்திக்கான வழியைத் தேடிச் செல்லும் ஒரு முரீது இந்த துஆக்களை மனனம் செய்து கொள்வது அவசியம்.
     மேலும், அவர் பஜ்ருத் தொழுகைக்காகப் புறப்படு முன், வீட்டில் ஸூன்னத்தான 2 ரக்அத்துக்கள் தொழுவதும் அவசியம். அதன் பின் பள்ளிவாசலை நோக்கிப் புறப்படும் போது அவர் இந்த துஆவையும் ஓதவேண்டும்.
(اللَّهُمَّ إنِّي أسألُكَ بِحَقِّ السَّائِلِينَ عَلَيكَ، وَبِحَقِّ مَمْشَايَ هَذَا، فَإنِّي لَمْ أَخْرُجْ أشَرًا، وَلاَ بَطَرًا، وَلاَ رِيَاءً، وَلاَ سُمْعَةً، خَرَجْتُ اتِّقَاءَ سَخْطِكَ وَابْتِغَاءَ مَرْضَاتِكَ، أسْألُكَ أنْ تَنْقِذَنِي مِنَ اللنَّارِ، وأَنْ تَغْفِرَلِي ذُنُوبِي، إنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إلاَّ أنْتَ)
அல்லாஹ்வே!உன் பொறுப்பிலுள்ள யாசிப்போ ரின் நியாயத்தின் மீதும் எனது இந்த நடையின் நியாயத் தின் மீதும் ஆதரவு வைத்து, நான் உன்னிடம் வேண்டுகிறேன். நிச்சயமாக நான் எந்தவொரு தீய நோக்கத்திற்காகவோ, பெருமைக் காகவோ, முகஸ்துதிக்காகவோ, பிரபல்யபமடைய வேண்டு மென்பதற்காகவோ புறப்படவில்லை. உன் கோபத்தை விட்டும் பாதுகாப்புப் பெற வேண்டு மென்பதற்காகவும், உனது திருப்தியை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே நான் புறப்பட்டுள்ளேன். ஆகையால், நரகை விட்டும் நீ என்னை பாதுகாப்பாயாக. நீ அல்லாது வேறு எவராலும் பாவங்களை மன்னித்தருள முடியாது. ஆகையால், என் பாவங்களை நீயே மன்னித்தருள வேண்டுமென நான் உன்னை வேண்டுகிறேன்.” (ஆதாரம்; இப்னு மாஜா.)
     மேலும், உங்களில் எவரேனும் பள்ளிவாயலில் நுழைந்தவுடன்,
 (اللَّهُمَّ افْتَحْ لِي أبْوابَ رَحْمَتِكَ)    
என்றும் பள்ளிவாயலை விட்டும் வெளியே செல்லும் போது,
(اللَّهُمَّ إنِّي أسألُكَ مِنْ فَضْلِكَ)   
என்றும் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்:முஸ்லிம்)  இதன் பொருளாவது, “அல்லாஹ்வே! உன் அருளின் வாயலை எனக்குத் திறந்தருள்வாயாக! அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன் அருளை வேண்டுகிறேன்.”என்பதாகும்.
         பள்ளிவாசலில் நுழைந்த பின் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்தவாறு முன்னர் குறிப் பிட்ட திக்ருகளையும் துஆக்களையும் ஓதுவதுடன் முதலாம் ஸப்பையும் தேடிச் செல்ல வேண்டும்.
       பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் சூரிய உதயம் வரையில் அதே இடத்தில் அமர்ந்து கொள்வது விரும்பத்தக்க காரியமாகும். “யார் பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் சூரியன் உதயமாகும் வரை அங்கு அமர்ந்து அல்லாஹ்வை திக்ரு செய்தும், பின்னா 2 ரக்அத்துக்களையும் தொழுது கொள்வாராகில் அவருக்கு பூரணமாக ஒரு ஹஜ்ஜூம், உம்ராவும் நிறைவேற்றியது போன்ற நன்மை உண்டு.” என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்; திர்மிதி)
       மேலும், அந்நேரத்தில் பிரார்த்தனை செய்தல், திக்ரு செய்தல், அல்குர்ஆனை ஓதுதல், இறை சிந்தனையில் ஈடுபடுதல் ஆகிய 4 கடமைகளில் அவர் ஈடுபட வேண்டும்.
        பொதுவாக இந்த காரியங்களில் தன்னால் முடியுமானதை செய்ய வேண்டும். மேலும், அன்றைய தினத்தில் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு நல்ல காரியங்களுக்குத் தடையாகவும் அவற்றைத் திசை திருப்பவும் கூடிய காரியங்களில் கவணம் செலுத்தக் கூடாது. மேலும் அல்லாஹ் தனக்குத் தந்துள்ள நிஃமத்துக்களை நினைத்து அதற்காக நன்றி செலுத்தவும் வேண்டும்.
ஔராதுகளின் இரண்டாவது நேரம்.
        இதன் நேரம் சூரிய உதயம் முதல் ளுஹா-முற்பகல் வரையாகும். இது 3 மணித்தியாலங் களைக் கொண்ட ஒரு காலப்பகுதியாகும். 12 மணித்தியாலங் களைக் கொண்ட பகற் பொழுதில்அது கால் பாகமாகும். சிறப்பான இந்நேரத்தில் 2 கடமைகள் உள்ளன. இதில் ஒன்று ளுஹாத் தொழுகையை நிறைவேற்றுவது.
        இரண்டாவது, மக்களுடன் தொடர்புடைய விடயம். உதாரணமாக நோயாளியைத் தரிசித்தல், ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளல், அறிவு சார்ந்த விடயங்களில் பங்கேற்றல், ஒரு முஸ்லிம் சகோதரனின் தேவையை நிறைவு செய்தல் போன்ற காரியங்களைக் குறிப்பிடலாம். இக்காரியம் எதிலும் பங்கேற்காத சந்தர்ப்பத்தில் அல்குர்ஆனை ஓதுவதி லும்,திக்ரு செய்வதிலும் ஈடுபடல் வேண்டும்.
ஔராதின் மூன்றாவது சந்தர்ப்பம்.
       இதன் நேரம் ளுஹாவின் நேரம் முதல் சூரியன் உச்சத்தை அடையும் வரையிலாகும். இந்நேரத்தில் முன்னர் குறிப்பிட்ட 4 கருமங்களுடன் மேலதிகமாக இன்னும் 2 காரியங்களை மேற் கொள்ள வேண்டும்.
     அதில் ஒன்று சம்பாதித்தல், ஜீவனோபாயம், சந்தைக்கு வந்து போதல் போன்ற காரியங்களில் ஈடுபடுதல் அடங்கும். ஒரு வியாபாரியைப் பொருத்த வரையில் அவர், தன் வியாபார நடவடிக்கைகளை உண்மையாகவும் நம்பிக்கையா கவும் மேற் கொள்ள வேண்டும். ஒரு உற்பத்தியாளனையும், தொழிலாளி யையும் பொருத்த வரை அவர் தன் தொழிலை பயன் தரும் வகையிலும் கருணையோடும் மேற் கொள்ள வேண்டும். மேலும் அவன் தன் சகல நடவடிக்கை யின் போதும் அல்லாஹ்வை நினைவில் கொள்ள வேண்டும். தனக்கு கிடைப்பது சொற்பமாயினும் அதனைக் கொண்டு திருப்தியடைதல் வேண்டும்.
      இரண்டாவது விடயம் “கைலூலா” எனும் மதிய நேரத் தூக்கமாகும். ஸஹர் உணவு, பகற் காலத்தில் நோன்பு வைக்கத் துணையாக இருப்பது போன்று “கைலூலா” தூக்கம், இரவு காலத்தில் எழுந்திருக்க துணை புரியும். எனவே, மதிய நேரத்தில் நித்திரைக் குச் சென்றால் தொழுகைக்காக ஆயத்தமாகும் பொருட்டு தொழுகையின் நேரம் வர முன், சூரியன் உச்சத்தை அடைய முன் கண் விழிக்க முயல வேண்டும்.
         ஒரு நாள் என்பது இரவும் பகலும் சேர்ந்து 24 மணித்தியாலங்கள் என்ற படியால் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்களைக் கொண்ட மூன்றிலொரு பாகம் தூங்குவதே நியாயம். அதை விடவும் குறைந்த நேரம் நித்திரை செய்தால் அதன் காரணமாக உடம்பிலுண்டாகும் தொல்லைகளி   லிருந்து பாதுகாப்புப் பெற முடியாது. மாறாக அதிக நேரம் நித்திரை செய்தால் சோம்பல் அதிகரிக்கும். ஆனால், இரவு நேரத்தில் அதிக நேரம் நித்தரை கொள்ளும் ஒருவன் பகற் பொழுதில் நித்திரை கொள்வதில் நியாயம் எதுவுமில்லை. எனினும் இரவு காலத்தில் குறைவாக நித்திரை கொள்கின்றவன் அந்தக் குறையை பகற் காலத்தில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
ஔராதின் நான்காவது நேரம்.
         இதன் நேரம் சூரியன் உச்சத்தை அடைந்தது முதல் ளுஹர் தொழுகை முடியும் வரையிலாகும். இந்நேரத்தில் அனுஷ்டிக்கும் ஔராதுகள் பகற் காலத்து ஔராதுகளில் சிறந்ததும் சுருக்கமானது மாகும். இந்நேரத்தில் முஅத்தின் அதான் சொல்லும் போது, அதானின் வாக்கியங்களை திருப்பிச் சொல்வதன் மூலம் அதானுக்குப் பதில் சொல்வது அவசியம். பின்னர் எழுந்து 4 ரக்அத்துக்கள் தொழ வேண்டும். அதனை நீட்டித் தொழுவது விரும்பத் தக்கதாகும். அதன் பின் ளுஹர் தொழுகையையும் அதன்  ஸுன்னத்தையும் நிறைவேற்ற வேண்டும். அதனையும் 4 ரக்அத்துக்களாக நிறைவேற்ற வேண்டும்.
ஔராதின் ஐந்தாவது நேரம்.
      இதன் நேரம் முன் கூறிய தொழுகைகளை நிறவேற்றியது முதல் அஸர் வரையிலான நேரமா கும். இந்நேரத்தை திக்ரு, ஸலவாத்திலும் மற்றும் நன்மை பயக்கும் பல் வகைக் காரியங்களிலும் பயன்படுத்தல் வேண்டும். மேலும் ஒரு தொழுகையை நிறவேற்றிய பின் அடுத்து வரும் தொழுகையை எதிர்பார்த்திருப்பதும் ஒரு சிறந்த அனுஷ்டானமாகும்.
ஔராதின் ஆறாவது நேரம்.
         இதன் நேரம் அஸரின் நேரம் தொடங்கியது முதல் சூரியன் மஞ்சள் நிறமாகும் வரையிலாகும். இந்நேரத்தில் அஸருடைய அதானுக்கும், இகாமத் துக்கும் இடையில் நிறைவேற்றும் 4 ரக்அத் ஸூன்னத்துத் தொழுகை தவிர்ந்த வேறு எந்த ஸூன்னத்தான தொழுகையுமில்லை. அதை அடுத்து அஸரின் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதன் பின் ஔராதில் சொல்லப்பட்ட 4 விடயங் களில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், அந்நேரத்தில் அல்குர்ஆனைப் பொருள் விளங்கி சிந்தனையுடன் ஓதுவது சிறப்புக்குரியதாகும்.
ஔராதின் ஏழாவது நேரம்.
       இதன் நேரம் சூரியன் மஞ்சள் நிறமானது முதல் அது மறையும் வரையிலாகும். இதுவும் ஒரு சிறந்த நேரமாகும். இந்நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் “பகற் பொழுதின் ஆரம்பம் முதல் மாலை வரையிலான இந்நேரம் மிகவும் மகத்துவம் பொருந்தியது.” என்று கூறினார்கள். எனவே, இந்நேரத்தில் தஸ்பீஹ் செய்வதும், விஷேடமான இஸ்திஃபார்களில் ஈடுபடுவதும் விரும்பத்தக்க காரியமாகும்.
     மஃரிப் நேரத்துடன் பகல் கால ஔராதுகள் முற்றுப் பெறும். எனவே, அக்காலப் பகுதியில் நிகழ்ந்தன் செயற்பாடுகள் பற்றி ஒவ்வொரு அடியானும் சுய விசாரணை மேற் கொள்ள வேண்டும். இந் நடவடிக்கைகள் மூலம் அடியானின் செயற்பாடுகளின் ஒரு கட்டம் நிறைவு பெறும். மேலும் வயது என்பது சில நாட்களை உள்ளடக்கிய ஒரு காலப்பகுதியாகும். ஒரு நாள் கழிய வயதின் மொத்த எண்ணிக்கையில் குறைவுண்டாகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் “ஆதமின் மகனே! நீ என்பது ஒரு சில நாட்கள் தான். உன் நாட்களில் ஒன்று கழிய உன் சில பகுதி அழிந்து விட்டது, என்பது தான் அதன் பொருள்.” என்று கூறினார்கள்.
மேலும் தனது இன்றைய தினம் நேற்றைய தினத்திற்குச் சமனாகுமா? என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் பகற் பொழுதில் தனக்கு ஏதேனும் நற்கர்மம் செய்வதற்கான வாய்ப்பு கிட்டி யிருக்குமானால் அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும் அல்லது மாற்றுக் காரியம் ஏதேனும் நிகழ்ந்திருக்குமானால் அதற்காகப் பாவமன்னிப்புக் கோருவதும் அவசியம். மேலும், இரவு காலத்தில் நிகழ்ந்த ஒரு தவறுக்கு ஈடாக நற்கருமம் ஒன்றைச் செய்ய வேண்டும். ஏனெனில், நல்ல காரியம் கெட்ட காரியத்தை அழித்து விடும்.  மேலும், தான் பெற்றுள்ள உடல் நலனுக்காகவும், ஆயுளின் எஞ்சிய காலப் பகுதியில் தவறுகளை அகற்றிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்காகவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். முன்னோரில் சிலர் தன் வாழ் நாளில் ஒரு நாளேனும் தர்மம் ஏதும் செய்ய முடியாதவாறு கழிந்து விடக் கூடாதென மிகவும் விரும்பினர். அதாவது தினமும் ஏதேனும் ஒரு தர்மம் செய்ய வேண்டுமென்ற விடயத்தில் அவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். எனவே, தன்னால் முடியுமான எல்லா நல்ல காரியத்திலும் பங்கேற்க முயல வேண்டும்.
         ஔராதுகளின் இரண்டாம் கட்டம்.
இரண்டாம் கட்டத்தின் முதலாவது நேரம்.
         இதன் நேரம் சூரியன் மறைந்தது முதல் இஷா வரையிலாகும். சூரியன் மறைந்ததும் மஃரிபுத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பின்னர் மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடைப்பட்ட நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தல் வேண்டும்.
((تَتَجَافى جُنُوبُهُمْ عَنِ المَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ))
“அவர்கள் படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.” *32;16) எனும் இவ்வசனம் மஃரிபுக் கும் இஷாவுக்கும் இடையில் தொழுது வந்த நபித் தோழர்கள் பற்றி அருளப்பட்டது என அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் “எவரேனும் மஃரிபுக்குப் பின் தீய விஷயம் எதுவும் பேசாமல் 6 ரக்அத்துக்கள் தொழுவாராகில் அது அவரின் 12 ஆண்டுகளின் இபாதத்திற்குச் சமனாகும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் ;திர்மிதி)
இரண்டாம் கட்ட ஔராதின் 2வது நேரம்.
   இதன் நேரம் செவ்வானம் மறைந்தது முதல் நித்திரை கொள்ளும் வரையிலாகும். இஷாவின் அதானுக்கும், இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் தன்னால் முடிந்த வரை தொழ வேண்டும். அவ்வமயம் ஸூரா ஸஜதா மற்றும் ஸூரா முல்க் ஓதுவது விரும்பத்தக்கதாகும். மேலும் “ரஸுல் (ஸல்) அவர்கள் இவ்விரு ஸுராக்களையும் ஓதாமல் நித்திரை கொள்ள மாட்டார்கள்” என்று ஒரு ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்:அஹ்மத்,திர்மிதி,பைஹகீ)
மேலும் இன்னொரு ஹதீஸில் “எல்லா இரவு களிலும் ‘ஸுரா வாகிஆ’ ஓதி வருகின்றவனை வறுமை தீண்டாது.” என்ற விடயம் கூறப்பட் டுள்ளது. இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இப்னுஸ்ஸுன்னி என்பார்அறிவித்துள்ளார்.
   2ம் கட்டஔராதின் 3வது நேரம்.
        நித்திரை கொள்ள முன் வித்ருத் தொழுகையை தொழ வேண்டும். எனினும் இரவில் எழுந்திருக்கும் பழக்கமுள்ளவர் வித்ருத் தொழுகையைப் பிற்படுத்தி  தொழுவது சிறந்தது. ஏனெனில் “ரஸுல் (ஸல்) வித்ருத் தொழுகையை இரவின் ஆரம்பப் பகுதி யிலும், நடுப் பகுதியிலும், இறுதிப் பகுதியிலும் தொழுது வந்தார்கள். வித்ரை இரவின் இறுதிப் பகுதியில் தொழும் போது அன்னாரின் வித்ரு ஸஹர் வரை நீடிக்கும்.” என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்;புஹாரி,முஸ்லிம்)
மேலும் வித்ருத் தொழுகை முற்றுப் பெற்றதும்
   "سُبْحَانَ المَلِكُ القُدُّوسُ"   
“தூய்மை மிகு அரசனை துதிக்கிறேன்” எனும் வாசகத்தை 3 தடவைகள் சொல்ல வேண்டும்.
    2ம் கட்ட ஔராதின் 4வது நேரம்.
இது நித்திரை கொள்ளும் நேரத்தைக் குறிக்கும். நித்திரை கொள்ள முன் அதன் ஒழுங்கு முறைகள் பேணப்பட்டு அதன் நோக்கமும் நல்லதாக இருக்கும் பட்சத்தில் நித்திரையும் ஓர் இபாதத் என இங்கு கணிக்கப்படுகிறது. எனவேதான் முஆத் (ரழி) அவர்கள்  “எனது விழித்திருக்கும் சந்தர்ப்பம் பற்றி என்னிடம் விசாரிக்கப்படுவது போன்று, எனது நித்திரை பற்றியும் என்னிடம் விசாரிக்கப்படும்.” என்று கூறினார்கள். எனவே,நித்திரையின் ஒழுங்கு முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
     நித்திரையின் ஒழுங்கு முறைகளில் சில.
        நித்திரை கொள்ளும் போது வுளு செய்து கொள்ள வேண்டும். அது நித்திரையின் ஒழுங்கு முறைகளில் ஒன்றாகும். “ரஸுல் (ஸல்) அவர்கள் நித்திரைக்குச் செல்லும் போது தொழுகைக்காக வுளு செய்வது போன்று வுளு செய்து கொள்வார்கள்.” என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: அபூதாவூத், நஸாஈ)
   மேலும், “நித்திரை கொள்வோரின் ஆவிகள் வானத்தின் பக்கம்உயர்த்தப்படுகின்றன. அவ்வமயம் அர்ஷின் பக்கம் ஸுஜூது செய்யுமாறு அவையிடம் கட்டளையிடப்படும். அப்போது வுளுவுடன் இருக்கும் ஆவிகள் அர்ஷின் பக்கத்திலும் வுளு இல்லாமல் இருக்கும் ஆவிகள் அர்ஷுக்குத் தொலைவிலும் இருந்து ஸுஜுது செய்யும்.” என அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்.
         நித்திரையின் மற்றுமொறு ஒழுங்கு, நித்திரை கொள்வதற்கு முன் பாவமன்னிப்புக் கோருவதாகும். சில வேளை தூங்கும் போது மரணம் சம்பவித்து விடலாம். அவ்வமயம் மனிதனின் வெளிப்புறம் தூய்மையாக இருக்கும் போது அவனின் உட்புறமும் சுத்தமாக இருப்பது அவசியம். ஆகையால் நித்திரை கொள்ள முன் பாவ மன்னிப்புக்கோரி உள்ளத்தை யும் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் எவரையும் ஏமாற்ற வேண்டுமென்ற எண்ணமும், யாருக்கேனும் அநீதி இழைக்க வேண்டுமென்ற எண்ணமும் மனதில் இருக்கும் பட்சத்தில் அதனை மனதை விட்டும் நீக்கி விட வேண்டும். மேலும் கண் விழித்ததும் எந்த தவறும் செய்வதில்லையெனவும் உறுதி பூண வேண்டும். இவையும் நித்திரை ஒழுங்கு முறைகளாகும். மேலும் யாருக்கேனும் எதைப் பற்றியாவது வஸிய்யத் செய்ய வேண்டியிருப்பின் நித்திரை கொள்ள முன் அதனை எழுதி வைத்தல் வேண்டும். ஏனெனில் “ஏதேனும் ஒரு விடயம் பற்றி வஸிய்யத் செய்யவுள்ள ஒரு முஸ்லிம் அது பற்றி எழுதி வைக்காத நிலையில் 2 இரவுகள் நித்திரை கொள்வாராயின் அது நியாயமான காரியமல்ல்.” என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
       மேலும் நித்திரைக்காக படுக்கையை ஒழுங்கு படுத்தும் விடயத்தில் கடப்பு செய்யலாகாது. ஏனெனில் அது தூக்கத்தை அதிகரிக்கச் செய்யும். ஒரு முறை நபி (ஸல்) அவர்களுக்கு அன்னாரின் விரிப்பு மடித்து விரிக்கப்பட்டது. அதில் நித்திரை செய்த நபியவர்கள் “அதன் செல்வாக்கு என் இரவுத் தொழுகையைத் தடுத்து விட்டது.” என்று கூறினார்கள். மேலும் நித்திரை அதிகரிக்கும் வரையில் நித்திரைக்குச் செல்லக் கூடாது. முன்னோர்கள் நித்திரை அதிகரிக்கும் வரையில் நித்திரைக்குச் செல்லவதில்லை.
           மேலும் நித்திரை கொள்ளும் போது, கிப்லா திசையை முன்னோக்கியும் வலது பக்கமாக சாய்ந்தும் உறங்க வேண்டும். இதுவும் நித்திரையின் சில ஒழுங்குகளாகும்.
“உங்களில் எவரேனும் தன் படுக்கைக்குச் சென்றால் தன் போர்வையின் உட்பாகத்தை 3 தடவைகள் உதறிக் கொள்வீராக! ஏனெனில் பின்னர் அதில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அவன் அறிய மாட்டான்.”  மேலும் அவன் தன் விலாவைக் கிடத்தியதும்,
(بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي،وَبِكَ أرْفَعُهُ، فَإنْ أمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإنْ أرْسَلْتَهَا فَاحْفَظْهَا، بِمَا تَحْفَظ بِهِ عِبَادَكَ الصَالِحِينَ)
“என் இரட்சகனே! உன் நாமத்தின் உதவி கொண்டு என் விலாவைக் கிடத்தினேன். மேலும் உன் உதவி கொண்டே அதை அதை உயர்த்துவேன். நீ என் உயிரைக் கைப்பற்றிக் கொள்வாயாகில் நீ அதற்கு மன்னிப்பாயாக. நீ அதனை விட்டு வைப்பாயாகில் நீ உன் நல்லடியார்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிப் பாயோ அது போன்று அதனையும் பாதுகாத்தருள் வாயாக!” என்று கூறுவானாக என்று நபியவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்;புஹாரி,முஸ்லிம்)
மேலும் “நபியவர்கள் படுக்கைக்குச் சென்றதும்
(قُلْ هُوَ اللهُ أحَدٌ،  قُلْ أعُوذُ بِرَبِّ الفَلَق،  قُلْ أعُوذُ بِرَبِّ النَّاس)   
ஆகிய அத்தியாயங்களை ஓதி தன் உள்ளங்கை இரண்டிலும் ஊதிக் கொள்வார்கள். பின்னர் இயன்ற வரை தன் கைகளை தன் உடலில் சகல பாகங்களி லும், தலையிலும், முகத்திலும், உடலின் முன் பாகத்திலும்  தடவிக் கொளவார்கள். 3 தடவைகள் இதனைச் செய்வார்கள்.” என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பர்ராஉ இப்னு ஆஸிப் (ரழி) அவர்களிடம் “நீ உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுவதற்காக வுளு செய்வது போன்று வுளு செய்து கொள். அதன் பின் உன் வலது பக்கமாக சாய்ந்து கொள். பின்னர்,
 اللَّهُمَّ أسْلَمْتُ نَفْسِي إلَيكَ، وَفَوَّضْتُ  أمْرِي إلَيكَ، وَوَجَّهْتُ وَجْهِيَ إلَيكَ، وَألْجَأْتُ ظَهْرِي إلَيكَ، رَغْبَةً وَرَهْبَةً إلَيكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إلاَّ إلَيكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أنْزَلْت وَبنبِيّكَ الَّذِي أرْسَلْتَ )    
‘அல்லாஹ்வே! உன் மீது பாசமும் அச்சமும் கொண்டவனாக என் ஆத்மாவை உன்னிடம் ஒப்படத்து விட்டேன். மேலும் என் முகத்தை உன் பக்கம் திருப்பிக் கொண்டேன். என் விவகாரத்தை உன்னிடம் சாட்டி விட்டேன். மேலும் உன் பக்கமே தஞ்சமடைந்தேன். ஒதுங்கிக் கொள்ளவும், ஈடேற்றம் பெறவும் உன்னிடமல்லாது வேறு யாருமில்லை. எனவே,  நீ இறக்கிய உன் வேத்தின் மீதும் நீ அனுப்பிய உன் தூதர் மீதும் நான் விசுவாசங் கொண்டேன்.’ என்று கூறுவீராக. அவ்வமயம் நீ அன்று இரவில் இறந்து விடுவாயாகில் நீ இஸ்லாமிய மார்க்கத்தின் மீதே இறப்பாய் என்றும் அவ்வாறன்றி நீ காலைப் பொழுதை அடைந்து கொண்டால் நல்லதைப் பெற்றுக் கொள்வாய் என்றும் கூறினார்கள்.” (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
மேலும் “நீங்கள் படுக்கைக்குச் சென்றதும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்து லில்லாஹ், 34 தடவை அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். இது உங்களுடன் ஒரு சேவகன் இருப்பதை விடவும் சிறந்தது.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் தன்னிடமும் பாத்திமா(ரழி)அவர்களிடமும் கூறினார்கள் என அலி (ரழி) அவர்கள் அறிவிக்கி றார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
       மேலும் ரமழான் மாத்தில் கிடைத்த ஸகாத் பொருளைப் பாதுகாத்து வந்த விடயம் தொடர்பில் அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறும் செய்தி பிரசித்தமானது. “ஒருவரிடம் ஒரு ஷைத்தான், நீ உன் படுக்கை சென்றதும் ஆயதுல் குர்ஸியை ஓதுவீராக. அப்பொழுது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் உன்னிடம் இருந்து கொண்டே இருப்பார். மேலும் எந்த ஒரு ஷைத்தானும் உம்மிடம் நெருங்காது.” என்று கூறினான். இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார். அப்போது நபியவர்கள் “அவன் ஒரு பொய்யன். ஆயினும் அவன் உம்மிடம் ஒரு உண்மையைச் சொன்னான்.” என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் தன் படுக்கைக்குச் சென்றதும்
الحَمْدُ لِلَّهِ الَّذِي أطْعَمَنَا وَسَقَانَا، وَكَفاَنَا، وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُؤْوِيَ
“சகல புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். எங்களுக்கு  உணவும், பானமும் தந்தவன் அவனே. மேலும் திருப்தியும், ஒதுங்கு தலமும் தருகின்ற எவரும் இல்லாமல் பலர் இருக்கின்ற போது எமக்கு திருப்தியும், ஒதுங்கு தலமும் தந்தவனும் அவனே.” என்று கூறுவார்கள். (ஆதாரம்:முஸ்லிம்)
     எனவே தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்தவுடன் நபியவர்களின் இந்த துஆவை கேட்கவும்.
(الَّلهمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ، أنْـتَ قَيِّمُ السَّمَاواتِ وَالأرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ أنْتَ نُورُ السَّمَاواتِ وَالأرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ أنْتَ مَلكُ السَّمَاواتِ والأرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ أنْتَ الحَقُّ، وَوَعْدُكَ  الحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌ، وَالجَنَّةُ حَقٌ، والنَّارُ حَقٌ، والنَّبِيُّونَ حَقٌ، والسّاعَةُ حَقٌ، اللهُمَّ لَكَ أسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإلَيكَ أنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وإلَيكَ حَاكَمْتُ، فَاغْفِرْلِي مَا قَدَّمْتُ وَمَا أخَّرْتُ، وَمَا أسْررَرْتُ  وَمَا أعْلَنْتُ.)
   அதன் பொருளாவது:
“நம் இரட்சகனான அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும் சொந்தம். வானம், பூமியினதும் அதிலுள்ள யாவற்றினதும் பாதுகாவலன் நீயே. புகழ் யாவும் உனக்கே சொந்தம். வானம் பூமியினதும் அதிலுள்ள சகலவற்றினதும் பிரகாசமும் நீயே. புகழ் யாவும் உனக்கே சொந்தம். நிஜமானவன் நீயே. உன் வாக்கும் உனது சந்திப்பும் உண்மையானவை. அல்லாஹ்வே நான் உனக்கு அடிபணிந்தேன். உன் மீது விசுவாசம் கொண்டு என் பொறுப்புக்களை உன்னிடமே ஒப்படைத்தேன். என் பிரச்சினைகளை உன் மூலம் முன் வைத்து அதனை விசாரிக்கும் படியும் உன்னிடமே வேண்டுகிறேன். எனவே எனது முந்திய பாவங்களையும், பிந்திய பாவங்களையும் நீ மன்னித்தருள்வாயாக. மேலும் வணக்கத்திற்குத் தகுதியானவன் உன்னையன்றி யாருமில்லை. முற்படுத்துபவனும், பிற்படுத்துபவனும் நீயே தான். ஆகையால், என் குற்றங்களை என்னை விடவும் நன்கறிந்தவனும் நீயே தான். ஆகவே நீ என்னை மன்னித்தருள்வாயாக!”(ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
    மேலும் நித்திரைக்குச் செல்லும் போது தான் உச்சரிக்கும் கடைசி வார்த்தையும், தூக்கத்தை விட்டு கண் விழிக்கும் போது சொல்லுகின்ற முதல் வார்த்தையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லாக இருக்கும் படியாக ஆக்கிக் கொள்ள முயல வேண்டும். ஏனெனில் இது ஈமானின் அடையாளமாகும்.
   2ம் ஔராதின் 5வது நேரம்.
இதன் நேரம் முதல் பாதி இரவு கழிந்தது முதல் இரவின் எஞ்சிய ஆறில் ஒரு பாகம் வரையிலாகும். இதுவும் ஒரு சிறந்த நேரமே. அபூதர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். “நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையில் சிறந்தது எது என்று கேட்டேன்.அதற்கு நபியவர்கள் பாதி இரவில் தொழும் தொழுகை என்றும் அதனை சொற்பமான வர்களே செய்கினறனர், என்றும் கூறினார்கள்.” (ஆதாரம்:அல்பைஹகீ)
     மேலும் தாவூத் (அலை) என் இரட்சகனே! நான் உனக்காக எந்நேரத்தில் எழந்திருக்க வேண்டுமெனக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் “தாவூதே! நீ ஆரம்ப இரவிலும் எழ வேண்டாம், கடைசி இரவிலும் எழ வேண்டாம். எனினும், நீ பாதி இரவில் எழுந்திரு. நீ என்னுடன் தனித்தரு. நானும் உன்னுடன் தனித்தி ருப்பேன். மேலும் உன் தேவைகளை என்னிடம் முன் வை.” என்று வஹி மூலம் அறிவித்தான் என ஒரு ஹதீஸில் அறிவிக்கப் பட்டுள்ளது.
  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத்துக்காக எழுந்ததும் ‘ஸூரா ஆலஇம்ரானின் இறுதிப் பத்து வசனங்களையும் ஓதுவார்கள்’ என புஹாரி, முஸ்லிமில் பதிவாகியுள்ளது. எனவே, தஹஜ்ஜத்துக் காக எழும்புகின்றவர்கள் அந்த வசனங்களையும் ஓத வேண்டும். அத்துடன் இரவு நேரத்தில் எழுந்ததும் ஓதும்படி முன்னர் குறிப்பிட்ட துஆக்களையும் ஓத வேண்டும். பின்னர் தன் தொழுகையை இலகுவான 2 ரக்அத்துக்களைக் கொண்டு ஆரம்பம் செய்ய வேண்டும். ஏனெனில் “உங்களில் எவரேனும் எழுந்தவுடன் இரவுத் தொழுகையை தொழுது கொள்ளவும். முதலில் இலகுவான 2 ரக்அத்துக் களைக் கொண்டு ஆரம்பம் செய்து கொள்ளட்டும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்:முஸ்லிம்)
  இலகுவான 2 ரக்அத்துக்களை நிறைவேற்றிய பின் ஏனைய ரக்அத்துக்களை இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழுதல் வேண்டும். ரஸூல் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் வித்ருடன் சேர்த்து அநேகமாக 13 ரக்அத்துக்களும், குறைந்த பட்சம் 7 ரக்அத்துக்களும் தொழுது வந்தார்கள் என்பதை ரிவாயத்துகள் மூலம் அறிய முடிகின்றது.
       2ம் கட்ட ஔராதின் 6வது நேரம்.
   இதன் நேரம் இரவின் இறுதியில் ஆறில் ஒரு பகுதியான ஸஹர் நேரமாகும். இந்நேரத்தைப் பற்றி அல்லாஹ்”அவர்கள் விடியற்காலை நேரத்தில் மன்னிப்புக்கோரிக்கொண்டிருப்பார்கள்.”(51:18) என்று கூறுகிறான். மேலும், “கடைசி இரவில் அல்குர்ஆனை ஓதுகின்ற மனிதனிடம் மலக்குகள் வந்து சேர்வார்கள்.” என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஆதாரம்:முஸ்லிம்,அஹ்மத்)
தாவூஸ் (ரஹ்) அவர்கள் ஸஹர் நேரத்தில் ஒரு மனிதரைக் காண வந்தார்கள். அப்போது அங்கே இருந்தவர்கள் “அவர் நித்திரை கொள்கிறார்” என்று கூறினர். அதற்கு தாவுஸ் (ரஹ்) அவர்கள் “யாரும் ஸஹர் நேரத்தில் நித்திரை செய்வதை நான் பார்த்ததில்லை.” என்று கூறினார். எனவே, இறைத் திருப்தியைத் தேடும் முரீது ஸஹர் நேரத் தொழுகையை நிறைவேற்றிய பின் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோருதல் வேண்டும். இப்னு உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு செய்து வந்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான நேரங்களில்
வித்தியாசமான ஔராதுகள்
      இறைத்திருப்தியைத் தேடும் மனிதன் ஆறு வகை நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் இருப்பான். அதாவது வணக்கசாலியாகவோ, அறிஞனாகவோ, மாணவனாகவோ, அதிகாரியாகவோ, தொழிலாளி யாவோ, வேறு கவணம் எதுவுமின்றி அல்லாஹ் ஒருவன் மீது அன்பு கொண்ட இறைக் காதலனாகவோ இருப்பான்.     
  1ம் நபர்-ஆபித்:- வணக்கசாலி.
 இவர் எல்லா வேலைகளின் தொடர்புகளையும் துண்டித்து வணக்கம் ஒன்றயே குறிக்கோலாகக் கொண்டவர். இவர் முன்னர் குறிப்பிட்ட சகல ஔராதுகளையும் அனுஷ்டித்து வருவார். சில வேளை அவரின் கடமைகளில் வித்தியாசங்கள் இருக்கலாம்.  முன்னோரைச் சேர்ந்த வணக்க சாலிகள் பலதரப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களில் சிலர்  அல் குர்ஆனை அதிகமாக ஓதிவந்தனர்.  அதனால் அவர்கள் ஒரு தினத்தில் அல் குர்ஆனை 1 தடவையோ, 2 தடவையோ ஓதி முடித்தனர். இன்னும் சிலர் அதிக நேரம் தஸ்பீஹ் செய்து வந்தனர். வேறு சிலர் தொழுகையில் அதிக நேரத்தை செலவு செய்தனர். மற்றும் சிலர் பைதுல்லாஹ்வை அதிகம் தவாபு செய்தனர்.
      எனினும் ஔராதுகளில் எந்த விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்ற கேள்வி எழலாம். உண்மையில் எல்லா ஔராதுகளையும் உள்ளடக்கக் கூடியது தொழுகையில் இருந்தவாறு சிந்தனையுடன் அல்குர்ஆனை ஓதுவது தான். எனினும் இதனைத் தொடர்ந்து அனுஷ்டித்து வருவது சிரமமாக அமையலாம். எனவே ஒவ்வொரு தனி மனிதனின் நிலைக்கேற்ப ஔராதுகள் வித்தயாசப்படுவதே சிறந்தது. ஏனெனில் ஔராதுகளை அனுஷ்டிப்பதன் நோக்கம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதே என்ற படியால் அல்லாஹ் வின் திருப்தியை அடைவதில் நாட்ட முள்ள அனைவரும் இவ்விடயத்தில் தனக்கு அதிகப் பலனையும், தாக்கத்தையும் தரக்கூடியது எது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பின்னர் அதனை முறையாகச் செய்து வர வேண்டும். அப்போதும் சடைவு ஏற்படக் கண்டால் இன்னொரு ஔராதின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும்.
“நீண்ட நேரம் (நின்ற) நிலையில் இருக்க உன் மனம் விருப்பம் கொண்டிருந்தால் ருகூவின் நிலைக்குச் செல்லாதே. ருகூஇல் நீண்ட நேரம் இருக்க உன் மனம் விருப்பம் கொண்டால் ருகூஇல் இருந்து எழுந்து விடாதே.” என்று அபூ ஸூலைமான் தாரானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
    2ம் நபர்:-அறிஞன்
     இவர் தீர்ப்புக் கூறுதல், கற்பித்தல், நூலாக்கம் செய்தல் ,நல்லுபதேசம் செய்தல் போன்ற காரியங்களில் தன் அறிவைப் பயன்படுத்துவார். அதிலிருந்து மக்கள் பயனடைவர். எனவே இவரின் ஔராதுகளின் ஒழுங்கு முறை ஆபிதின் ஒழுங்கு முறையிலிருந்து வித்தியாசமானது. ஏனெனில் அவர் புத்தகங்களை வாசிக்கவும், நூல்களை ஆக்கவும், மற்றவர்களுக்கு பயன் தரும் விடயங்களிலும் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே அவருடைய நேர காலத்தையெல்லாம் அந்த காரியங்கள்
க்ரு, ஔராதுகளுக்காகவும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
  பின்னர் பகற் பொழுதிலிருந்து அஸர் வரையிலான காலத்தை நூலாக்கத்திலும், புத்தகங்களை வாசிப்பதிலும் ஈடுபடுத்தல் வேண்டும். அப்பொழுது வுளு செய்தல், கடிதம் எழுதுதல், கைலூலா தூக்கத்தில் கவனம் செலுத்துதல் போன்ற தேவைகள் ஏற்பட்டாலன்றி அந்த கருமங்களை நிறுத்தலாகாது. மேலும் அஸர் முதல் சூரியன் மஞ்சள் நிறமாகும் வரையிலான காலத்தை இன்னொருவர் வாசித்துக் காட்டும் தப்ஸீர், ஹதீஸ் மற்றும் பயன் தரும் அறிவு சார்ந்த விடயங்களை செவிமடுப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சூரியன் மஞ்சள் நிறமானது முதல் அது மறையும் வரையி லான காலத்தை இஸ்திஃபார் செய்தல் அல்லாஹ்வின் நாமத்தை ஜபம் செய்தல் போன்ற காரியங்களில் செலவிடல் வேண்டும்.
     மேலும் அறிஞனின் ஔராதுகள் முதலில் வாய்மூல ஔராதுகளாகவும், இரண்டாவது மனதால் சிந்திக்கின்ற விடயங்களாகவும், மூன்றாவது கண்ணுடனும், கரங்களுடனும், மற்றும் புத்தகம் வாசித்தல், அதிலிருந்து பிரதி எடுத்தல் போன்ற விடயங்களுடன் சம்பந்தப்பட்டவையாக இருத்தல் வேண்டும். அஸருக்குப் பின்னர் வாசிப்பதும் பிரதி பண்ணுவதும் சில வேளை கண்பார்வைக்கு பாதகம் ஏற்படுத்தலாம் என்ற படியால் அந்நேரத்தில் கண்ணுக்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டு செவி மடுக்கும் காரியத்தில் ஈடுபடுவது நல்லது.
    இரவு காலத்தை வகுத்துக் கொள்வதில் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கால அட்டவணை சிறந்ததாக விளங்குகிறது. அவர் இரவை 3 பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார். முதலாவது மூன்றில் ஒரு பாகத்தை அறிவு சார் விடயங்களை எழுதவும், 2ம் பகுதியை தொழுகைக்காகவும், 3ம் பகுதியை நித்திரை கொள்ளவும் என வகுத்துக் கொண்டார். சில வேளை இந்நேர அட்டவணை கோடை காலத்தில் பொருந்தாமல் இருக்கலாம். எனினும் பகற் காலத்தில் அதிக நேரம் நித்திரை கொள்ளும் ஒருவருக்கு அது பிரச்சினையாக அமையாது.
  3ம் நபர்:-மாணவன்.
   மாணவனைப் பொருத்தவைரயில் அவன் திக்ருகளிலும், நபில் தொழுகைகளிலும் அதிகம் கவனம் செலுத்தவதே மேல். எனவே ஔராதுகளை ஒழுங்குபடுத்தும் விடயத்தில் அறிஞனுக்குரிய விதியே மாணவனுக்கு  முரியதாகும். எனினும் அறிஞன் மற்றவர்களுக்கு பயனூட்டும் விடயத்தில் ஈடுபாடு கொள்ளும் போதும்,  பாடங்களை ஒத்தி வைக்கின்ற போதும், நூலாக்கம் செய்கின்ற போதும் பிரதி எடுக்கின்ற போதும் அவர் எடுத்தக் கொள் கின்ற கால நேரத்தை மாணவன் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களோ தங்களின் காலத்தை மேலதிக ஔராதுகளில் ஈடுபடுத்துவதையும் விட  அறிவு சார்ந்த மஜ்லிஸ்களிலும் உபதேச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது சிறந்தது.
4வது நபர்:-இஸ்லாமிய விவகாரங்களில் கவனம் செலுத்துகின்ற இமாம், நீதிபதி, அதிகாரிகள் போன்றோர்.
  இவர்கள் முன் குறிப்பிட்ட ஔராதுகளில் கவனம் செலுத்துவதை விட ஷரீஆவின் விதிகளின் படி தூய எண்ணத்துடன் முஸ்லிம் சமூகத்தின் தேவைகள், நோக்கங்கள் குறித்து கவனம் செலுத்துவதும் அதில் ஈடுபாடு கொள்வதும் சிறந்ததாகும். ஏனெனில் அவர்கள் மேற்கொள்கின்ற இத்தகைய இபாதத்துக் களின் பயன் பிறரை நோக்கிச் செல்கின்றன. எனவே இத்தகையவர்கள் பகற் காலத்தில் தங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளுடன் அனுஷ்டானங் களைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். மேலும் எஞ்சிய நேர காலத்தை அந்தப் பொது சேவைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இரவு நேர ஔராதுகளின் மூலம் திருப்தியுடைய வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.
  5ம் நபர்:- தொழிலாளி.
   அவனைப் பொருத்த வரையில் அவன் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் சம்பாதிக்க வேண்டியவன். எனேவ, அவன் தன் காலம் அனைத்தையும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்த இயலாது. எனவே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் கிரமமாக திக்ரு களையும் செய்து வர வேண்டும். மேலும் அவன் தனக்குப் போதியளவு பொருளீட்டிக் கொண்டதும் ஔராது விடயத்திற்குத் திரும்பி விட வேண்டும்.
  6ம் நபர்:- இறைக் காதலில் மூழ்கியிருப்பவர்.
   அவர் கடமையான அனுஷ்டானங்களை நிறை வேற்றிய பின் தன் மனதை அல்லாஹ்வின் பக்கம் ஈர்க்கும் காரியத்தில் ஈடுபடுவதே அவரின் ஔராதாக விளங்கும். எனவே அவர், தான் விரும்பிய ஏதேனும் ஔராதில் ஈடுபடலாம். மேலும் அதனைத் தொடர்ச்சியாகவும் கிரமமாகவும் செய்து வர வேண்டும். ஏனெனில் “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் சொற்பமாயினும், அதனைத் தொடர்ந்தும் செய்வதாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
   இரவுத் தொழுகையும் அதன் சிறப்பும் அதனை இலகுபடுத்தும் வழிகளும்.
அல்லாஹ்வின் திரு வசனங்களும் ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் பலவும் இரவுத் தொழுகையின் சிறப்பினை விவரிக்கின்றன. உதாரணமாக பின்வரும் வசனத்தையும் நபி மொழியையும் குறிப்பிடலாம்.
அல்லாஹ் கூறுகிறான். “அவர்கள் படுக்கையிலி ருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள்.”(32:16)
  நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் இரவில் நின்று வணங்குங் கள். அது உங்களின் ஸாலிஹான முன்னோர்களின் வழக்கமாகும். மேலும் அது உங்கள் இரட்சகனின் பால் நெருக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் அது கெட்ட காரியங்களுக்கு மன்னிப்பாகவும், பாவ காரியத்தை அழித்து விடக் கூடியதாகவும் இருக்கும்.”(ஆதாகம்:திர்மிதி,அல்ஹாகிம்)
    ஹஸன் அல் பஸரி (ரஹ்) இரவுத் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடும் போது “நடு இரவில் தொழுவதை விட கடினமான ஒரு இபாதத்தை நான் கண்ட தில்லை.” என்று கூறினார்கள். அப்பொழுது அவரிடம் தஹஜ்ஜத் தொழுகையாளிகளின் முகம் அழகாக இருக்கக் காரணம். யாது? என வினவப் பட்டது. அதற்கு அவர் “அன்னவர்கள் அருள் மிகு அல்லாஹ்வுக்காக தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டார்கள். எனவே அலாஹ் தன் பிரகாசத்தி லிருந்து சிலதை அவர்களுக்கு அணிவித்தான்.” என்று கூறினார்கள்.
இரவுத் தொழுகையை இலகுபடுத்தும் காரணிகள்.
எவர் உரிய நிபந்தனைகளின் படி இரவுத் தொழுகையை நிறைவேற்றும் தௌபீக்-வரப் பிரசாதம் கிடைக்கப் பெற்றுள்ளாரோ அவரல்லாத மற்றவர்களுக்கு இரவுத் தொழுகை என்பது மிகவும் கடினமான காரியமாகும். எனவே அதனை அடைய சில வெளிக்காரணிகளும் மற்றும் உள் காரணிகளும் இருக்கின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
   வெளிக்காரணிகள்.
உணவைக் குறைத்துக் கொள்வது தஹஜ்ஜத் தொழுகைக்கு வாய்பளிக்கும் காரணிகளுள் ஒன்றாகும். எனவே தான் “இறைத் திருப்தியை தேடும் கூட்டத்தவரே அதிகமாக உண்ணாதீர்கள். அப்பொழுது நீங்கள் அதிகமாக தண்ணீர் அருந்து வீர்கள். அதையடுத்து அதிகமாகத் தூங்குவீர்கள். அப்போது நீங்கள் மிகவும் நஷ்டமடைவீர்கள்.” என சில நல்லடியார்கள் கூறுவர்.
 மேலும் பகற் காலத்தில் பலுவான வேளைகளைத் தவிர்த்துக் கொள்வதும், கைலூலா தூக்கத்தில் ஈடுபடுவதும் இரவுத் தொழுகைக்கு உதவியாக அமையும் காரணிகளாகும். மேலும் பாவ காரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதும் தஹஜ்ஜத் தொழுவதற்கான வாய்ப்பை உண்டாக்கும்.
   இமாம் ஸௌரி (ரஹ்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். “நான் செய்த ஒரு பாவ காரியத்தின் காரணமாக 5 மாதங்கள் இரவுத் தொழுகையை விட்டும் தடுக்கப்பட்டிருந்தேன்.” என்று கூறினார்கள்.
  உள் காரணிகள்.
   முஸ்லிம்களுக்கு மன அமைதியைக் கொடுத்தல், பித்அத்தான காரியங்களை விட்டும் நீங்கியிருத்தல், அனாவசிய விடயங்களில் தலையிடாதிருத்தல் என்பன தஹஜ்ஜத் தொழுகைக்கு வாய்பளிக்கும் உள் காரணிகளில் சிலவாகும். மேலும் எதிர்பார்ப்பு குறைவாகவும், தண்டனை பற்றிய பயம் மனதில் அதிகமாக இருப்பதும், இரவுத் தொழுகையின் சிறப்புக்களை அறிந்து கொள்வதும்  இரவு வேளையில் நின்று வணங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் காரணிகளாக விளங்குகின்றன. மேலும் அல்லாஹ்வின் மீது காதல் கொள்வதும், இரவில் எழுந்திருப்பதன் மூலம் இரட்சகனுடன் தனிமையில் உரையாடலாம் என்றும், அல்லாஹ் தன்னுடன் இருக்கிறான், தன்னைப் பார்த்துக் கொண்டிருக் கிறான் என்றும் உறுதியாக நம்புவதும் இரவுத் தொழுகைக்கு வாய்ப்பளிக்கும் காரணிகளாகும்.
இச்சந்தர்ப்பத்தில் அவன் அல்லாஹ்வுடன் தனிமை யில் உரையாடுகின்ற போது அது அவனுக்கு நீண்ட நேரம் நின்று வணங்குவதற்குத் தூண்டுதலாக விளங்கும். எனவே தான் அபூ ஸுலைமான் (ரஹ்) அவர்கள் “ஆட்டக்காரர்களுக்கு விளையாட்டில் இருக்கம் இன்பத்தை விடவும், இரவில் நின்று வணங்குவோருக்கு இரவில் இருக்கும் இன்பம் அதிகம். இரவு என்பது இல்லையெனில் உலகில் இருப்பதை நான் விரும்பமாட்டேன்.”என்று கூறனார்கள்.
“எல்லா இரவுகளிலும் ஒரு நேரம் இருக்கின்றது. அதனை அடைந்து கொண்ட ஒரு முஸ்லிம் அடியான் அந்நேரத்தில் ஒரு விடயத்தை அல்லாஹ்விடம் கேட்டால் அதனை அல்லாஹ் அவனுக்கு நிச்சயம் கொடுப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:முஸ்லிம்)
இரவை உயிர்ப்பித்தலின் படித்தரங்கள்.
முதலாவது:
முழு இரவையும் உயிர்பித்தல்: சில தகவலின் படி சில முன்னோர்கள் முழு இரவும் விழித்திருந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காண முடிகின்றது.
இரண்டாவது:
பாதி இரவு நின்று வணங்குவது: சில முன்னோர்கள் இப்படியும் செயற்பட்டுள்ளனர் என்பதை அறிவுப்புக் களில் காண முடிகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இரவின் முதல் மூன்றில் ஒரு பாகத்திலும் இறுதியான ஆறில் ஒரு பாகத்திலும் நித்திரை கொள்வது சிறந்த முறையாகும்.
மூன்றாவது:
இரவின் மூன்றில் ஒரு பாகத்தில் நின்று வணங்குதல்:
அவ்வமயம் இரவின் முதல் பாதியிலும் இறுதியின் ஆறில் ஒரு பகுதியிலும் நித்திரை கொள்வது அவசியம். தாவூத் (அலை) அவர்களின் இரவு வணக்கம் இப்படித்தான் அமைந்திருந்தது.
“அல்லாஹ்வுக்கு விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர் பாதி இரவு நித்திரை கொண்ட பின் அதன் மூன்றில் ஒரு பாகத்தில் நின்று வணங்குவார்கள். மேலும் அதன் ஆறில் ஒரு பகுதியில் நித்திரை கொள்வார்கள்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
   கடைசி இரவில் நித்திரை கொள்வதானது காலைப் பொழுதில் முகத்தில் தெரியும் தூக்கத்தின் அடையாளங்களை போக்கி விடவும், முகத்தில் காணும் மஞ்சள் நிறத்தைக் குறைக்கவும் காரணமாக அமையும். எனவே கடைசி இரவில் தூங்குவது சிறந்த்தாகும்.
நான்காவது:
இரவில் ஆறில் ஒரு பாகமோ, அல்லது ஐந்தில் ஒரு பாகமோ நின்று வணங்குதல். இதன் படி இரவுத் தொழுகையை மேற் கொள்வோர் இரவின் கடைசிப் பாதிப் பகுதியில் தொழுவது  சிறந்தது. எனினும் இரவின் இறுதி ஆறில் ஒரு பகுதியில் தொழுவது தான் சிறந்தது என சிலர் கூறுவர்.
  ஐந்தாவது:
  நேரத்தைக் கருத்தில் கொள்ளாமல் இருத்தல்: ஏனெனில் சிலரைப் பொருத்த வரையில் நேரத்தை நிர்வகித்துக் கொள்வது என்பது கடினமான காரியம். எனவே அவர்கள் தங்களின் வசதி போல் எந்த நேரத்திலாவது இரவுத் தொழுகையை தொழுது கொள்ள வேண்டும்.
   இரவுத் தொழுகையை 2 வகையில் மேற் கொள்ளலாம்.
முதலாவது:
இரவின் ஆரம்பப் பகுதியில் எழுந்து இரவுத் தொழுகையை மேற்கொள்ளுதல். அவ்வமயம் தூக்கம் மேலிடும் போது நித்திரை கொள்ள வேண்டும். தூக்கம் கலைந்ததும் மீண்டும் இரவுத் தொழுகையைத் தொடர வேண்டும். அப்போதும் தூக்கம் மேலிட்டால் திரும்பவும் நித்திரை கொள்ள வேண்டும். இது மிகவும் சிரமமான காரியமாக இருந்த போதிலும் சில ஸலபுகள் இப்படியும் இரவுத் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர்.
“ரஸூல் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்க மாட்டார்கள்” என்று நாம் நினைக்கின்ற போது அவர் தொழுது கொண்டிருப்பார்.”அவர் இன்னும் நித்திரை கொள்ள போயிருக்க மாட்டார்” என்று நாம் நினைக்கின்ற போது அவர் நித்திரை கொண்டிருப் பார்”என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
மேலும் உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் நாட்டத்தின் படி இரவில் தொழுவார்கள். இரவின் கடைசிப் பகுதியில் தன் இல்லாளை எழுப்பி விடுவார்கள். அப்பொழுது தொழுகைக்குத் தயாராகுங்கள் என்று கூறுவார்கள்.
 மேலும் “இரவில் நீண்ட நேரம் தூங்கியமைக்காக அல்லாஹ்வைக் காண வெட்கப்படுகின்ற சிலரை நான் சந்தித்துள்ளேன்” என்று ழஹ்ஹாக் என்பவர் கூறியுள்ளார்.
இரண்டாவது:
இரவின் ஆரம்பப் பகுதியில் போதிய அளவு நித்திரை கொண்ட பின் இரவின் எஞ்சிய பாகத்தில் எழுந்திருப்பது. அது பற்றி ஸூப்யான் அஸ்ஸௌரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது “அது தான் என்னுடைய ஆரம்ப நித்திரை. அதன் பின் நான் கண் விழித்தால் மீண்டும் உறங்க மாட்டேன்” என்று கூறினார்கள்.
ஆறாவது:
4 அல்லது 2 ரக்அத்துக்கள் தொழும் நேரம் வரையில் எழுந்திருப்பது. “நீங்கள் இரவில் 4 அல்லது 2 ரக்அத்துக்கள் தொழுஙகள்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்ற படியால் அதை நிறவேற்றுகின்ற அளவு நேரம் விழித்துக் கொள்வது போதுமானது.
“எவர் இரவில் எழுந்து தன் மனைவியையும் எழுப்பி இருவருமாக 2 ரக்அத்துக்களையும் தொழுவார்களோ அவர்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுகின்ற ஆண்கள் கூட்டத்தையும் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுகின்ற பெண்கள் கூட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனப்படுவர்” என ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்:அஹ்மத்)
மேலும், தல்ஹா இப்னு முஸ்ரிப் என்பவர் இரவில் தன் குடும்பத்தினரை எழுந்திருக்கமாறு பணிப்பார். மேலும் நடு இரவில் தொழுவது பாவங்களை அழித்து விடும். எனவே 2 ரக்அத்துக்கள் தொழுங்கள். என்றும் அவர்களிடம் கூறுவார்.
   இது வரை இரவு காலத்தை எவ்வாறு ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்கான சில வழிமுறைகள் பற்றிக் கவனித்தோம். எனவேஇறைத் திருப்தியை அடைந்து கொள்வதில் நாட்டமுள்ள வர்கள் தங்களுக்கு வசதியான ஏதேனும் ஒரு வழிமுறையைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
     எவ்வாறாயினும் நடுநிசியில் எழுந்திருப்பதைக் கடினமெனக் காணும் ஒருவர் மஃரிபுக்கும் இஷா வுக்கும் இடையே மேற் கொள்ள வேண்டிய அனுஷ்டானங்களிலும் இடைஞ்சல் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வது அவசியம். இது இரவின் 2 ஓரங்களிலும் செய்ய வேண்டிய கருமங்களை நிறைவேற்றுவதற்கேற்ற வழியாக அமையும். மேலும் இது தான் இரவை உயிர்ப்பித்தலின் 7வது படிமுறையாகும்.
மேலும் இரவில் வுளு செய்யவும், தொழவும் இயலாதவர் கிப்லாத் திசைக்கு முகம் காட்டியவாறு அமர்ந்து கொண்டு அல்லாஹ்வை திக்ரு செய்ய வேண்டும். மேலும் தன்னால் இயலுமான துஆக்களையும் கேட்க வேண்டும்.
  அமர்ந்து கொள்ள முடியாதவர் சாய்ந்து கொண்டு துஆ-பிரார்த்தனையில் ஈடுபடல் வேண்டும். ஔராதுகளை வழமையாக ஓதி வரும் ஒருவர் தனக்குத் தூக்கம் மேலிட்டதன் காரணமாக அந்த ஔராதுகளை ஓத முடியாது, தவறி விட்டதென்றால் அதனை ளுஹாத் தொழுகைக்குப் பின்னர் அனுஷ்டித்துக் கொள்ள முடியும். இது பற்றி ரஸூல் (ஸல்) அவர்களின்  ஹதீஸில் அறிவிக்கப் பட்டுள்ளது.
 மேலும் வழமையாக இரவு நேரத்தில் எழுந்திருக்கும் ஒருவன் இரவுத் தொழுகையை நிறைவேற்றாது இருப்பானாகில் அவன் அவ்விடயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ரிடம் “இரவில் நீ கண்விழித்த பின்னர், இரவில் துயில் எழுந்து இரவுத் தொழுகையைத் தொழாமல் விட்டவன் போல் நீ ஆகி விடாதே.” என்று கூறினார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்)
  சிறப்பான நாட்களும் இரவுகளும்.
  சிறப்பான 15 இரவுகள் இருக்கின்றன. அவற்றை உயிர்பித்தல் விரும்பத்தக்க காரியமாகும். இலாபம் தேடக் கூடிய காலத்தை ஒரு வியாபாரி  மறந்து போனால், அவர் எப்போது அதிக இலாபத்தை ஈட்டிக் கொள்ளப் போகிறார். அது போல இறைத் திருப்தியை தேடுகிறவன் சிறப்பான இந்தக் காலங்களை மறந்து விடலாகாது. அந்தப் 15 நாட்களில் 7 நாட்கள் ரமழான் மாத்தில் வருபவை அதில் ஒன்று ரமழான் மாத்தின் 17ம் இரவு, அன்றைய காலைப் பொழுதில் தான் பத்ரு யுத்தம் நடைபெற்றது. ஏனைய 6 இரவுகளும் லைலதுல் கத்ரை எதிர்பார்க்கும் பிந்திய 10 இரவுகளின் ஒற்றையான இரவுகள்.
   ஏனைய 8 இரவுகளுமாவது முஹர்ரம் மாதத்தின் முதல் இரவு, ஆசூரா இரவு, ரஜப் மாதத்தின் முதல் இரவும் அதன் அரை மாத இரவும் மற்றும் மிஃராஜ் எனும் 27ம் இரவும் மேலும் ஷஃபானின் அரை மாத இரவும், இரு பெரு நாள் இரவுகள் என்பனவாகும். இவ்விரவுகளில் சில தொழுகைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதற்கு வளுவான ஆதாரம் எதுவுமில்லை.
 மேலும் சிறப்புக்குரிய 17 பகற் காலங்கள் இருக்கின்றன. அவையாவன;
   ஆஷூரா தினம், ரஜப் மாதத்தின் 27ம் நாள். அன்று தான் நபியவர்களிடம் ஜிப்ரீல் (அலை) முதற் தடவையாக வந்த நாள், பத்ரு நிகழ்வு நடைபெற்ற ரமழானின் 17ம் நாள். ஜூம்ஆ தினம், 2 பெருநாள் தினங்கள், மேலும் துல்ஹஜ் மாதத்தின் 10ம் நாளும் ஐயாமுத் தஷ்ரீக்கின் 3 நாட்களும் ஆகும்.
மேலும் வாரத்திலும், மற்றும் மாதம் தோறும் வரும் நாட்களில் திங்கள், வியாழன், ஐயாமுல் பீழ், ஆகிய நாட்கள் சிறப்பான நாட்களாகும்.
 எல்லாவற்றையும் நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. முடிவாக அவல்லாஹ்வின் அருளும் சாந்தியும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

[email protected]

 

அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும்

Download

About the book