தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள் - பகுதி - 5

1438ம் ஆண்டு ஐந்தாவது ஹதீஸ் மனனப் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 90 நபிமொழிகளும் அதன் அறிவிப்பாளர் பற்றிய சிறு குறிப்பும், ஹதீஸிலிருந்து பெறப்படும் படிப்பினைகளும்

தேர்ந்தெடுக்கப்பட்ட
90 நபிமொழிகள்
பகுதி - 5

1438 - 2017
        அறிவிப்பாளர் பற்றி சிறுகுறிப்பு
        சிறு விளக்கங்களுடன்

தொகுப்பு
கலாநிதி முஹம்மத் முர்தழா ஆஇஷ்

தமிழில்
எம். அஹ்மத் (அப்பாஸி)
போட்டி ஏற்பாடு
ரப்வா இஸ்லாமிய அழைப்பு நிலையம்- ரியாத்
சவூதி அரேபியா
مختارات من السنة
مع تراجم الرواة والفوائد العلمية لتسعين حديثا
الجزء الخامس

تأليف : الدكتور/ محمد مرتضى بن عائش محمد

ترجمة : أبو عبد الرحمن أحمد بن محمد


الإشراف والمتابعة
قسم الدعوة وتوعية الجاليات
المكتب التعاوني للدعوة وتوعية الجاليات في الربوة, الرياض
بالمملكة العربية السعودية

 

பொருளடக்கம்
இல    பொருளடக்கம்    பக்கம்
01    பொருளடக்கம்    2
02    முன்னுரை    8
03    ஹலாலான சம்பாத்தயத்திலிருந்து தர்மம் செய்தல்    12
04    சுவனம் செல்லும் வழி இலகுவானது    15
05    உழ்ஹிய்யாவில் நபிவழி    17
06    இமாமை எவ்வாறு பின் துயர்வது?    19
07    தொழுகை முடிவில் ஸலாம் சொல்லும் முறை    22
08    முகஸ்துதியைத் தவிர்ப்போம்    26
09    தஜ்ஜாலின் சில அடையாளங்கள்    29
10    விருந்துபசார ஒழுங்கு    31
11    பருகலின் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள்    33
12    தடுக்கப்பட்ட பொருளீட்டல் முறைகள் சில    35
13    விருந்துக்கு அழைக்கப்பட்டால்....    37
14    இஷா, பஜ்ர் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுவதன் சிறப்பு    39
15    உருவம் வரைதலாகாது    42
16    இரணம் புசிப்பதன் ஒழுக்கங்கள் சில    43
17    வுழூச் செய்யும் முறை    45
18    மனு, ஜின், மலக்குகள் எதனால் படைக்கப் பட்டார்கள்?    48
19    குபாப் பள்ளியின் சிறப்பு    51
20    வறியவர்களைக் கவனிப்போம்    53
21    நேசத்தை வெளிக்காட்டுவோம்    54
22    ஓய்வும் ஆரோக்கியமும்     57
23    உரிமைகளைப் பாதுகாக்கும் மார்க்கமே இஸ்லாம்    59
24    பிள்ளைகளின் சொத்தில் பெற்றோருக்கும் உரிமையுண்டு    62
25    தொழுகையில் இடுப்பில் கை வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது    65
26    நின்ற நிலையில் உண்ண, பருக முடியுமா?    66
27    ஸூரதுல் இஃலாஸின் சிறப்பு    68
28    திருமணத்தைத் தாமதப்படுத்தாதீர்    71
29    நபி (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகள்    73
30    சுவனத்தின் இன்பங்களில் சில    77
31    உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேரலாமா?    79
32    நரக வேதனையில் ஏற்றத்தாழ்வு    81
33    ஹஜ் பெருநாள் தினங்கள்    84
34    நோன்பு, பெருநாள் மக்களுடன் சேர்ந்தே    87
35    பெரும்பாவங்களை விட்டும் எச்சரிக்கை    90
36    விலையேற்றுதல் கூடாது    92
37    தொழுகையில் ஸலாம் கொடுத்தபின் ஓதும் திக்ருகள்    94
38    மாலைவேளையில் ஓதும் திக்ருகள் சில    97
39    சிறந்த மனிதரின் அடையாளமென்ன?    100
40    பிறரின் உடமைகளைப் பறிமுதல் செய்யலாகாது    102
41    துன்பத்தில் பொறுமை காப்போம்    105
42    சுவனத்துக்கல் 'ஹஜருல் அஸ்வத்"    106
43    பிரயாணியின் நோன்பு    108
44    இல்லறத்தில் தகாத முறை    109
45    தயம்முமின் சட்டங்கள் சில    111
46    பெண்பிள்ளைகளைப் பராமரிப்போம்    114
47    பள்ளிவாசலுடன் தொடர்புடைய துஆக்கள் சில (1)    115
48    பள்ளிவாசலுடன் தொடர்புடைய துஆக்கள் சில (2)    118
49    தொழுவோரை நோவினை செய்யலாகாது    124
50    தொலைந்த பொருளை பள்ளியில் தேடலாகாது    126
51    வித்ருடைய குனூத்    128
52    விடுபட்ட வித்ரு தொழுகையை எவ்வாறு தொழுவது?    132
53    வித்ரு தொழுகையின் நேரம்    135
54    பாவத்தை பகிரங்கப்படுத்தலாகாது    137
55    அன்னையின் மகத்துவம்    139
56    தந்தையைத் துன்புறுத்துவது பெரும்பாவமே    141
57    சுயமாக சம்பாதிப்போம்    143
58    தாடி வளர்ப்பது கடமையே    145
59    குடும்பத்திற்கு செலவு செய்வதிலும் நன்மையுண்டு    146
60    துக்கம் அனுஷ்டித்தலின் சில சட்டங்கள்    148
61    இஸ்லாத்தில் ஜீவகாரூண்யம்    152
62    ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் வேண்டுவோம்    154
63    உயிர்த்தியாகிகளின் வகைகள்    156
64    காணிகளை அபகரிப்பது பெரும்பாவமே    159
65    பேராசை கூடாது    161
66    தொழுகைக்குப் பின் ஒதும் திக்ருகளில்.....    163
67    தொழுகை முடிந்ததும் மஃமூம்களை முன்னோக்குதல்    165
68    பெண்கள் பள்ளிக்குச் செல்லலாமா?    167
69    பாதணிகளில் மஸ்ஹு செய்தல்    168
70    காலுறைகளில் மஸ்ஹு செய்தல்    170
71    புனித பூமியில் தொலைந்த பொருளை புறக்க முடியாது    172
72    நரகவாதிகளின் சில வர்ணனைகள்    175
73    நரகின் சில வர்ணனைகள்    177
74    மரணத்தின் பின் மீளெழுப்பப் படல்    178
75    பேரீத்தம் பழத்தின் மகிமை    180
76    பாவமன்னிப்புத் தேடல்    182
77    வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்யலாகாது    184
78    படைப்பினங்கள் மீது சத்தியம் செய்யலாகாது    185
79    மிஸ்வாக் செய்வதன் மகிமை    188
80    மனைவியுடன் அன்பாக நடந்து கொள்ளல்    190
81    நல்ல தோழர்களைத் தெரிவு செய்வோம்    192
82    பெற்றோருக்காகப் பிரார்த்திப்போம்    194
83    கடமையான குளிப்பின் சட்டங்கள் சில    196
84    ஷைத்தானை விரட்ட வழியொன்று    197
85    ஸஜூதின் மகிமை    199
86    மண்ணறைகளைப் பூசுவது கூடாது    201
87    ஓரிணச்சேர்க்கை குற்றமாகும்    203
88    இறந்தவருக்குப் பயனளிக்கக் கூடியவை    205
89    நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு    208
90    ரமழான் மாதத்தின் சிறப்பு    211
91    நயவஞ்சகர்களின் அடையாளங்கள்    212
92    குர்ஆனைச் சுமந்தோரை மதித்தல்    214

 

 

 

 

 

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
முன்னுரை
அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏக நாயன் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். இறுதிமுடிவு இறையச்சம் உள்ளோருக்கே. சாந்தியும் சமாதானமும் நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவருக்கும் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மற்றும் மறுமை வரை அவர்களைத் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக.
இஸ்லாத்தில் ஸுன்னாவுக்கு மாபெரும் முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் குர்ஆனுக்குப் பிறகு இஸ்லாத்தின் பிரதான மூலாதாரம் இந்த ஸுன்னாதான். எனவே இதில் அதிக கரிசனை எடுப்பது முஸ்லிம்களுக்கு அவசியமாகும்.
அதனால் அல்லாஹ்வின் உதவியுடன் அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள், பண்பாடுகள் சம்பந்தப்பட்ட சில நபிமொழிகளைத் தெரிவு செய்ய முயற்சித்துள்ளதுடன், அவற்றில் ஒவ்வொரு நபிமொழியுடனும் சம்பந்தப்படும் மார்க்க சட்டதிட்டங்களையும் கூறுயிருக்கிறேன். ஈருலகிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, முஸ்லிம்கள் நபியவர்களை நேசத்தடனும், கண்ணியத்துடனும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்.
நபிமொழிகளுக்குப் படிப்பினைகள் கூறும்போது, இஸ்லாத்திற்கு சேவைசெய்த இமாம் நவவீ (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றுக்களிலிருந்து பயன்பெற முனைந்துள்ளேன். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
இதற்கு முன்னரும் அல்லாஹ்வின் உதவியால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகள்" என்ற பெயரில் நான்கு பாகங்கள் எழுதியுள்ளேன். அல்லாஹ்வின் அருளால் அதற்கு வரவேற்புக் கிடைத்தது. அதேபோன்று இந்த ஐந்தாவது தொகுப்பும் ஏற்புடையதாக வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.
இந்நபிமொழிகளின் தரங்களைப் பொருத்தவரையில்: அந்நபிமொழி புஹாரி, முஸ்லிம் ஆகிய இரு நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாக இருந்தால் அதன் தரத்தைக் கூறத் தேவையில்லை. ஏனெனில் அவ்விரண்டிலும் இடம்பெற்றுள்ள நபிமொழிகள் ஆதாரபூர்வமானவை என்பது இச்சமூகத்தில் ஏற்கப்படும் அனைத்து அறிஞர்களின் கருத்தாகும்.
அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜஃ போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள நபிமொழியாக இருந்தால், ஹதீஸ்கலை மேதை அஷ்ஷேஹ் முஹம்மத் நாஸிருத்தீன் அல்அல்பானீ (ரஹ்) அந்நபிமொழிக்குக் கூறியுள்ள தரத்தை இங்கு நானும் கூறியுள்ளதுடன், திர்மிதீயில் இடம் பெற்றுள்ள நபிமொழிகளுக்கு இமாம் திர்மிதீயே வழங்கியுள்ள தீர்ப்பையும் இணைத்துள்ளேன். ஏனெனில் இத்துறையில் அவர்கள் தனித்து நிற்கக்கூடியவர். ஹதீஸுக்கு வழங்கும் தீர்ப்பானது, அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் ஆய்வுக்கமையவே இடம்பெற்றுள்ளது. அவர்களின் ஆய்வுகள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். அதனடிப்படையில் சில சந்தர்ப்பங்களில் தீர்ப்பும் மாறுபடலாம்.  நான் ஸுன்னா அல்லது நம்பகமான ஹதீஸ்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அது ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் ஸஹீஹான அல்லது ஹஸன் என்ற தரத்திலுள்ள ஹதீஸ்களையே குறிக்கும். அல்லாஹ் அனைத்து அறிஞர்களுக்கும் அருள்புரிவானாக. இதில் ஏதாவது பயனுள்ள அறிவியல், சிந்தனை, இலக்கிய, இலக்கண கருத்துக்கள் இருந்தால் அவை நன்றியுணர்வுடன் கருத்திட் கொள்ளப்படும்.
பின்னர் அழைப்புப்பணிக்கு சகல விதத்திலும் பயன்படும் சிறந்த வழிகாட்டல்களை எமக்குத் தந்துதவும் ரியாத் மாநகரத்திலுள்ள ரப்வா இஸ்லாமிய அழைப்பு நிலையத்தின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷேஹ் காலித் இப்னு அலீ அபல்கைல், நிலையத்தின் சனசமூகப்பிரிவுப் பொறுப்பாளர் அஷ்ஷேஹ் நாஸிர் இப்னு முஹம்மத் அல்ஹுவைஷ் ஆகியோருக்கும், ஏனைய பொறுப்புதாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
அதேபோன்று எனக்கு பயனளிக்கும் பல நல்ல கருத்துகள், ஆலேசனைகள் வழங்கிய இந்நிலையத்தில் பணிபுரியும் எனது சகோதர அழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, அழைப்புப் பிரிவின் செயலாளர் சகோதரர் அப்துல்அஸீஸ் மழ்ஊப் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லாஹ் அனைவருக்கும் ஈருலக நலவுகளையும் வழங்குவானாக. நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களின் வழியில் சென்ற அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

கலாநிதி முஹம்மத் முர்தழா ஆஇஷ் முஹம்மத்
1437- 1- 11 (24- 10- 2015)

தமிழில்
எம். அஹ்மத் (அப்பாஸி)
1438- 01- 02 (03- 10- 2016)


ஹலாலான சம்பாத்தயத்திலிருந்து
தர்மம் செய்தல்
1 -عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ:  قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  "مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللهُ إِلاَّ الطَّيِّبَ؛ فَإِنَّ اللهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّيْ أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُوْنَ مِثْلَ الْجَبَلِ".
(صحيح البخاري، رقم الحديث 1410، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 63 - (1014)، ).
(1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஹலாலான சம்பாத்தயத்திலிருந்து ஒரு பேரீத்தம் பழத்துண்டை தர்மம் செய்கிறாரோ – அல்லாஹ் ஹலாலானதைத் தவிர ஏற்க மாட்டான் – அதனை அல்லாஹ் தனது வலது கையால் ஏற்கிறான். பின்பு, உங்களில் ஒருவர் தனது குதிரைக் குட்டியை பராமரித்து வளர்ப்பதைப் போல் அதனை வளர்க்கின்றான். மலையளவு வளரும் வரை (இவ்வாறு வளர்க்கின்றான்).
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி 1410, முஸ்லிம் 1014. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
'ராவியதுல் இஸ்லாம்" என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யமன் தேசத்து தௌஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஆபூ ஹுரைரா அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர் (ரலி). தான் ஆடு மேய்க்கும் போது பூனைக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பதை வழமையாகிக் கொண்டதால் இவருக்கு 'அபூ ஹுரைரா" என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. 'கைபர்" போர் நடைபெற்ற ஹிஜ்ரி 7ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார். பின்னர் 4 வருடங்கள் நபிகளாருடனேயே இருந்தார்கள், நபியவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடனேயே இருந்து நபிமொழிகளைக் கற்பதில் முயற்சி எடுத்து அதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் நபிகளாரைத் தொட்டும் அதிக நபிமொழிகளை மனனமிட்டு, 5374 ஹதீஸ்களை அறிவித்து, நபித்தோழர்களில் மிகக் கூடுதலான நபிமொழிகளை அறிவித்தவர் என்ற பெயருக்கு சொந்தமானார். மேலும் மதீனாவின் பிரபல மார்க்க சட்டக்கலை வல்லுனர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ஹிஜ்ரி 57ம் ஆண்டு மதீனாவில் மரித்து பகீஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்.

 

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) எல்லா வணக்கங்களைப் போன்று தர்மத்திலும் எவ்வித சுயநலமுமின்றி, அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை அடையும் நோக்கமே இருக்க வேண்டும்.
(2) தடுக்கப்பட்ட சம்பாத்தியங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது, அல்லாஹ்வின் கோபத்தை வரவழைப்பதுடன், பேராசை, சுயநலம், தன்னலம், உலோபித்தனம், துர்ப்பாக்கியம், நிம்மதியின்மை, அமைதியின்மை போன்ற உள, உடல் ரீதியான நோய்களால் பீடிக்கப்படவும் காரணமாகின்றது.
(3) இந்நபிமொழியில் வலது கை என்று கூறப்படக் காரணம், பொதுவாக நல்ல பொருட்கள் வலதால்தான் ஏற்கப்படுகின்றன. அத்துடன் அல்லாஹ்வுடைய பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாமல், மறுக்காமல், உவமைப் படுத்தாமல், விதம் கற்பிக்காமல் வஹீயில் உள்ளவாரே நம்ப வேண்டும். அல்லாஹ்வுடைய தகுதிக்கும், வல்லமைக்கும் ஏற்றவாறு ஈமான் கொள்ள வேண்டும்.

 

சுவனம் செல்லும் வழி இலகுவானது
2- عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "‏الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ، وَالنَّارُ مِثْلُ ذَلِكَ".
(صحيح البخاري، رقم الحديث 6488).
(2) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுவனம் உங்களில் ஒருவருக்கு அவருடைய செருப்புநாரை விட சமீபத்திலுள்ளது. அதேபோன்று தான் நரகமும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
ஆதாரம் : புஹாரி 6488.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நபித் தோழர்களில் பிரபலமானவரும், மிகத் திறமையாக அல்குர்ஆனை ஓதக் கூடியவருமாவார். இவர்கள் நபியவர்களிடமிருந்து அறிவித்த நபிமொழிகள் 848. நபியவர்களுடன் அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டதுடன் நபியவர்களின் மரணத்திற்குப் பின் யர்மூக் போரிலும் கலந்து கொண்டார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் கூபாவிற்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இவர்களை அனுப்பினார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் தனது ஆட்சியில் அதே கூபாவிற்கு கவர்னராக நியமித்தார்கள். பின்னர் மதீனாவிற்குத் திரும்பும்படி ஏவினார்கள். தனது 60க்கும் 70க்கும் இடைப்பட்ட வயதில் ஹிஜ்ரி 32 ம் ஆண்டு மதீனாவில் மரணித்து பகீஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) செருப்பு நார் மனிதனுடைய காலுடன் நெருக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கின்றது. மிக நெருக்கமாக இருப்பதற்கு அரபு மொழியில் இவ்வாறு உதாரணம் கூறப்படுகின்றது.
(2) இஸ்லாம் ஓர் இலகுவான மார்க்கம், அதன் நம்பிக்கைக் கோட்பாடுகள் இலகுவானது, அதில் மூடலான, கடினமான விடயங்கள் கிடையாது. அதன் வணக்க வழிபாடுகள் இலகுவானது, அதில் சிரமமோ களைப்போ இல்லை. அதன் குணாதிசயங்கள் உயர்வானவை, அதில் இயற்கைக்குப் புறம்பானவையோ, பகுத்தறிவுக்கும் அழகிய நடைமுறைக்கும் முரணானவையோ இல்லை.
(3) எமது எண்ணத்தை சீர்திருத்தி, கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் சுவனத்தை அடைவது இலகுவாகும். அதேபோன்றுதான் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கு மாறு செய்வதன் மூலம் நரகத்தை அடைவதும் இலகுவானதுதான். எனவே நன்மையான சிறிய விடயமானாலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவ்வாறே, பாவமான சிறிய விடயமானாலும் அதனைத் தவிர்ந்து கொள்வதில் பராமுகமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில், நாம் செய்யும் நலவுகளில் எதனை வைத்து அல்லாஹ் எமக்கு அருள் புரிவானென்பது தெரியாது. பாவங்களில் எதனை வைத்து அல்லாஹ் எம்மை வெறுப்பானென்பதும் தெரியாது.
உழ்ஹிய்யாவில் நபிவழி
3- عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ: ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا.
(صحيح البخاري، رقم الحديث 5565، وصحيح مسلم، رقم الحديث 17 - (1966)،).
(3) நபி (ஸல்) அவர்கள் கொம்புள்ள கருமை கலந்த வெள்ளை நிற இரு ஆடுகளை உழ்ஹிய்யாவாகக் கொடுத்தார்கள். அவ்விரண்டையும் அல்லாஹ்வின் பெயர் சொல்லி, தக்பீர் சொல்லி தனது கையாலேயே அறுத்தார்கள். (அறுக்கும் போது) தனது காலை அவ்விரண்டினதும் பக்கவாட்டில் வைத்துக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : புஹாரி 5565, முஸ்லிம் 1966.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அபூ ஹம்ஸா என்ற புனைப்பெயருள்ள அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபிகளாரின் பணியாளர் என்று அழைக்கப்பட்டார். ஹிஜ்ரத் நடைபெற 10 வருடங்களுக்கு முன்னர் மதீனாவில் பிறந்த இவர் சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்றார். பின்பு நபிகளாருடன் சேர்ந்து 10 வருடங்கள் அவர்களுக்கு சேவை புரிந்து, நபியவர்கள் மரணிக்கும் வரை கூடவே இருந்தார்கள். பின்பு திமஷ்க் (ஸிரியா) நகரத்திற்குச் சென்று, அங்கிருந்து பஸரா நோக்கிச் சென்றார்கள். நபிகளாரைத் தொட்டும் 2286 ஹதீஸ்களை அறிவித்ததன் மூலம் அதிக நபிமொழிகளை அறிவித்தவர்களில் ஒருவரானார். தனது 100வது வயதைத் தாண்டிய பின்னர் ஹிஜ்ரி 93ம் ஆண்டு பஸராவில் காலமானார்.


 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இந்நபிமொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள 'அம்லஹ்" என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உள்ளன. (1) வேறு நிறங்கள் கலக்காத தனி வெள்ளை நிறம். (2) கருமை கலந்த வெள்ளை நிறம்.  
(2) அறுக்கும் போது 'பிஸ்மில்லாஹ்" என்று சொல்வது அவசியமாகும். அதனுடன் சேர்த்து 'அல்லாஹு அக்பர்" என்று தக்பீர் சொல்வது விரும்பத்தக்கதாகும்.
(3) ஒட்டகம், மாடு, ஆடு (செம்மறியாடு, சாதாரண ஆடு) ஆகிய பிராணிகளைத் தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும். அதுவும் குறைபாடற்ற ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஒரு கண் குருடான, தெளிவான நோயுள்ள, ஒரு கால் முடமான, நன்கு மெலிந்த பிராணிகளை அறுக்க முடியாது.
இமாமை எவ்வாறு பின் துயர்வது?
4- عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ: "سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ" لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ، حَتَّى يَقَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا، ثُمَّ نَقَعُ سُجُوْدًا بَعْدَهُ.
(صحيح البخاري، رقم الحديث 690، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 198- (474)، ).
(4) நபி (ஸல்) அவர்கள் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ" என்று கூறி நடுநிலைக்கு வந்தால், அவர்கள் ஸுஜூது செய்யும் வரை நாங்கள் யாரும் குனிய மாட்டோம். அவர்களுக்குப் பின்னால்தான் நாங்கள் ஸுஜூது செய்வோம்.
அறிவிப்பவர் : பர்ராஃ பின் ஆஸிப் (ரலி).
ஆதாரம் : புஹாரி 690, முஸ்லிம் 474. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மதீனாவின் அன்ஸாரிகளில் அல் ஹாரிஸீ குடும்பத்தைச் சேர்ந்த அபூ இமாராஃ அல்பர்ராஃ பின் ஆஸிப் பின் அல்ஹாரிஸ் (ரலி) கண்ணியமிக்க நபித்தோழரும் மார்க்க சட்டக்கலைப் பேரறிஞருமாவார். ஹிஜ்ரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார்கள். ஹதீஸ் நூல்களில் இவருடைய 305 நபிமொழிகள் பதியப்பட்டுள்ளன.
நாணயம் மிக்க ஒரு அன்ஸாரித் தோழராக இருந்த இவர், நபி (ஸல்) அவர்களுடன் 18 போர்களில் கலந்து கொண்டார்கள். பத்ருப் போரின் போது இவர் சிறுவரெனத் திருப்பப் பட்டதால் அகழ்ப் போரிலேயே முதலில் கலந்து கொண்டார்கள்.  நபியவர்களின் மரணத்திற்குப் பின்னர் பாரசீகப் போரிலும் கலந்து கொண்டார்கள். கூபாவில் வந்திறங்கி அங்கேயே தனக்கு வீடொன்றைக் கட்டி அதிலேயே வசித்தார்கள். ஹி. 71 அல்லது 72ல் தனது 80வது வயதைத் தாண்டிய பின் கூபாவிலேயே மரணித்தார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தொழுகையில் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு இமாம் செல்வதற்கு முன் நாம் செல்லக் கூடாது. ஸுஜூதில் இமாம் நெற்றியைப் பூமியில் வைக்கும் வரை நாம் குனிய ஆரம்பிக்கலாகாது. பின்பற்றித் தொழுபவர் ஒவ்வொரு செயலிலும் இமாமுடைய சத்தம் ஓய்ந்த பின்னரே அச்செயலை ஆரம்பிக்க வேண்டும். இதனால் அனைத்து செயற்பாடுகளிலும் இமாமை விட சற்று தாமதமாக வேண்டிய தேவையுள்ளது.  
(2) இஹ்ராம் தக்பீரைப் (முதல் தக்பீர்) பொருத்த வரையில் அதனை இமாம் முழுமையாக் கூறி முடிந்த பின்னரே பின்பற்றித் தொழுவோர் ஆரம்பிக்க வேண்டும்.
(3) தொழுகையின் இறுதியில் இமாம் இரண்டு ஸலாம்களையும் கொடுத்து முடிந்த பின்னரே பின்பற்றித் தொழுபவர் ஸலாம் கொடுக்க வேண்டும்.
தொழுகை முடிவில் ஸலாம் சொல்லும் முறை
5- عَنْ سَعْدِ بْنِ أَبِيْ وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ أَرَى رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِيْنِهِ وَعَنْ يَسَارِهِ، حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ.
(صحيح مسلم، رقم الحديث 199 - (582)، ).
(5) நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிவில் வலது, இடது இரு புறங்களும் ஸலாம் கொடுப்பதை நான் கண்டிருக்கின்றேன். அவர்களது கன்னத்தின் வெண்மை தெரியுமளவு அவர்கள் திரும்புவார்கள்.
அறிவிப்பவர் : ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 582.


 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அபூ இஸ்ஹாக் என்ற புனைப்பெயர் கொண்ட, குரைஷிக் கோத்திரத்தின் பனூ ஸுஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) என்பவர் கண்ணியமிக்க ஒரு நபித்தோழராவார். ஹிஜ்ரத்திற்கு 23 ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பிறந்து அங்கேயே வளர்ந்த இவர், ஆரம்பத்திலேயே இஸ்லாத்தில் நுழைந்து முந்திக் கொண்டோர்களுக்குரிய சிறப்பைப் பெற்றுக் கொண்டார்கள். மேலும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட 10 பேரில் ஒருவராகவும், உமர் (ரலி) அவர்களுக்குப் பின் கலீபாவாகத் தெரிவு செய்யப்பட அவர்களாலேயே நியமிக்கப்பட்ட அறுவர் கொண்ட தெரிவுக் குழுவில் ஒருவராகவும் இருந்தார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று பத்ருப்போர் மற்றும் அதன் பின் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள்.
நபியவர்களின் தாயார் ஆமினாவின் சிற்றப்பாவின் பிள்ளைகளில் இவரும் ஒருவர். அதனால்தான் நபியவர்கள் இவரை "எனது மாமா" என அழைப்பவராக இருந்தார்கள். அதன் அர்த்தம் நபியவர்களின் மாமன்மார்களில் இவரும் ஒருவர் என்பதே தவிர, நபியவர்களின் தாயாருடைய நேரடிச் சகோதரர் என்ற அர்த்தம் கிடையாது.
இவர் துணிவான குதிரைவீரராகவும், நபியவர்களால் அனுப்பப்படும் சிறுபடைகளின் தளபதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்கள். அபூபக்ர் (ரலி), மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலங்களில் பேசும் படியான பல (யுத்த) நிலைப்பாடுகள் இவருக்கு இருந்தன. உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் கூபாவிற்கு கவர்ணராக நியமிக்கப்பட்டார்கள்.
பாரசீகம் மற்றும் இராக் பகுதியில் நடைபெற்ற யுத்தங்களில் முஸ்லிம் படைகளைத் தளபதியாக நின்று வழிநடத்திச் சென்றார்கள். அல்லாஹ்வின் அருளால் காதிஸிய்யாப் போரில் பாரசீகர்களைப் படுதோல்வியடையச் செய்தார்கள். மதாஇன் பகுதியையும் இவர்கள்தான் வெற்றிகொண்டார்கள். இவருக்கு இன்னும் பல சிறப்புக்கள் உள்ளன. விரிவஞ்சி விட்டோம்.
பிற்காலத்தில் ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அரசியல், பதவிகள் அனைத்தையும் துறந்ததுடன், நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்கள். தனது பிள்ளைகளிடமும் இதுபற்றி எத்தகவலும் தன்னிடம் கொண்டு வரவேண்டாமென்றும் கூறி விட்டார்கள்.
நபியவர்களைத் தொட்டும் 270 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். இவர் சற்று குண்டானவராக இருந்தார்கள். மதீனாவிலிருந்து 7 மைல்கள் தொலைவிலுள்ள அகீக் என்ற இடத்தில் தனது வீட்டில் ஹி.55ல் மரணித்தார்கள். அங்கிருந்து மதீனாவிற்குக் கொண்டு வரப்பட்டு பகீஃஇல் அடக்கம் செய்யப்பட்டார்கள். அப்போது மதீனாவிற்கு கவர்ணராக இருந்த மர்வான் பின் ஹகம் இவருடைய ஜனாஸாத் தொழுகையை நடத்தினார்கள். முஹாஜிரீன்களில் இறுதியாக மரணித்தவர் இந்த ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தான்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தொழுகை முடிவில் ஸலாம் கொடுக்கும் போது பக்கத்திலிருப்பவருக்குத் தனது கண்ணம் தெரியுமளவு இரு பக்கங்களும் திரும்ப வேண்டும்.  
(2) ஸலாத்தில் நபியவர்கள் காட்டித் தந்த வாசகம்: 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்". இதனை மேற்கூறப்பட்ட பிரகாரம் இரு பக்கங்களும் திரும்பிக் கூற வேண்டும். இவ்வழிமுறை அபூதாவூத் 996, திர்மிதீ 295, நஸாஈ 1325, இப்னு மாஜாஃ 914 ஆகிய நூல்களில் பதியப்பட்டுள்ளது. இமாம் திர்மிதீ இதனை ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலுள்ளதாகவும், அறிஞர் அல்பானீ ஸஹீஹ் எனும் தரத்திலுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.
(3) தொழுகையின் இறுதியில் ஸலாம் கொடுப்பது அதன் அத்தியவசியக் கடமைகளுள் ஒன்று. அதுவின்றி தொழுகை நிறைவேறாது. இக்கருத்தில்தான் நபித்தோழர்கள் மற்றும் பெரும்பான்மை அறிஞர்கள் உள்ளனர். இது ஆதாரபூர்வமானது. நபியவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளார்கள். ஆனால் இந்த ஸலாம் ஸுன்னத் என்று கூறுவோரும் அறிஞர்களிலுள்ளனர்.
முகஸ்துதியைத் தவிர்ப்போம்
6- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ  رَضِيَ اللهُ عَنْهُماَ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ سَمََّعَ، سَمََّعَ اللَّهُ بِهِ، وَمَنْ رَاءَى، رَاءَى اللَّهُ بِهِ".  
(صحيح مسلم، رقم الحديث 47 - (2986)، واللفظ  له، وصحيح البخاري، رقم الحديث 6499).
 
(6) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தான் செய்யும் நற்செயலைப் பிறருக்கு சொல்லிக் காட்டுகிறாரோ அவருடைய உள்நோக்கத்தை அல்லாஹ் மக்களுக்குக் காட்டி விடுவான். இன்னும் யார் முகஸ்துதிக்காக அமல் செய்கின்றாரோ அவர் முகஸ்துதிக்காகத் தான் செய்கின்றார் என்பதையும் அல்லாஹ் காட்டி விடுவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).
ஆதாரம் : புஹாரி 6499, முஸ்லிம் 2986. இவ்வார்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் பிரபலமான ஒரு நபித்தோழராவார். அவருடைய புனைப்பெயர் அபுல் அப்பாஸ். நபித்தோழர்களில் சிறந்த அடையாளங்களுள் ஒருவர், இந்த உம்மத்தின் அறிவுக்கடல், அல்குர்ஆனிற்கு சிறந்த விரிவுரையாளர் என்றெல்லாம் போற்றப்பட்டவர். நபிகளாரின் பெரிய தந்தையின் மகனுமாவார். ஹிஜ்ரத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர், பனூ ஹாஷிம் குடும்பத்தினர் கனவாயில் முற்றுகையிடப்பட்ட நேரத்தில் அதிலிருந்து வெளிவருமுன் இவர்கள் பிறந்தார்கள். பின்பு நபிகளாருடன் கூடவே இருந்து அவர்களிடமிருந்து நிறைய அறிவைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களைத் தொட்டும் 1660 ஹதீஸ்களை அறிவித்திருக்கின்றார். நபியவர்கள் மரணிக்கும் போது இவருக்கு வயது 13. அலீ (ரலி) அவர்கள் இவரை பஸராவுக்கு கவர்னராக நியமித்தார்கள். தனது 70ம் வயதில் ஹஜ்ரி 68ம் ஆண்டு தாஇபில் மரணமடைந்தார். (அவருடைய வயது 71 அல்லது 74 என்று வேறு இரு கருத்துக்களும் உள்ளன.

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) முகஸ்துதி என்பது, அல்லாஹ்வுக்காக என்ற நோக்கத்தில் ஒரு விடயத்தைச் செய்யாமல், மக்கள் அதனைக் காண வேண்டும், அவனைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் செய்வதாகும். அதேபோன்று தான் அல்லாஹ்வுக்காக என்ற நோக்கத்தில் ஒரு விடயத்தைச் செய்துவிட்டு பின்பு அதனை மக்களுக்கு, தன்னைப் புகழ வேண்டுமென்ற நோக்கில் சொல்லிக் காட்டுவதும் கூடாது.
(2) மேற்கூறப்பட்ட இரு பண்புகளையும் எச்சரிக்கை செய்து இந்நபிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிறரின் புகழ் நாடாமல் உளத்தூய்மையுடன் வணக்கங்களை நிறைவேற்றுவது அவசியமாகும்.
(3) முகஸ்துதி அல்லாஹ்விடத்தில் அமல்கள் அழிக்கப் படுவதற்கான பிரதான காரணங்களிலொன்று. குப்ரை மறைத்துக் கொண்டு ஈமானை வெளிக்காட்டும் நயவஞ்சகமே முகஸ்துதியில் மிக மோசமானது. அதற்கடுத்ததாக அடிப்படைக் கடமைகளில் ஏற்படும் முகஸ்துதி. தனித்திருக்கும் போது அக்கடமைகளை விடுவதும் மக்கள் முன்னிலையில் அதனைச் செய்வதும் இதிலடங்கும்.

தஜ்ஜாலின் சில அடையாளங்கள்
7- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:  قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "الدَّجَّالُ مَمْسُوحُ الْعَيْنِ، مَكْتُوْبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ"، ثُمَّ تَهَجَّاهَا: ك، ف، ر، "يَقْرَؤُهُ كُلُّ مُسْلِمٍ".
(صحيح مسلم، رقم الحديث 103 - (2933)، واللفظ  له، وصحيح البخاري، رقم الحديث 7408).
(7) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தஜ்ஜாலின் கண் (இல்லாதது போன்று) துடைக்கப்பட்டிருக்கும். அவனது இரு கண்களுக்குமிடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும். பின்பு அதனை க ப ர என்று ஒவ்வோர் எழுத்தாக சொல்லிக்காட்டினார்கள். அதனை ஒவ்வொரு முஸ்லிமும் வாசிப்பர்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : புஹாரி 7408, முஸ்லிம் 2933. இவ்வார்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மறுமைக்கு முன் தஜ்ஜால் வருவானென்பதையும், ஸிரியாவின் தலைநகர் டமஸ்கஸிற்கருகில் அவனை நபி ஈஸா (அலை) கொலை செய்வார்களென்பதையும் ஈமான் கொள்வது அவசியமாகும். இது பலஸ்தீனத்திலுள்ள டெல்அவிவ் என்ற ஊருக்கு நெருங்கிய பகுதியாகும்.
(2) தஜ்ஜாலின் சில அடையாளங்கள் :
    இரு கண்களும் குறையுள்ளவை.
    வலது கண் குருடாக இருக்கும்.
    இடது கண் அறவே இல்லாதது போன்று துடைக்கப்பட்டிருக்கும். அக்கண்ணை மூடுமளவு தடித்த தோல் வளர்ந்திருக்கும்.
    இரு கண்களுக்குமிடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும்.
    முகம் மிக அலங்கோலமாக இருக்கும்.
இது பற்றி இன்னும் அறிந்து கொள்ள பார்க்க : புஹாரி 5902, முஸ்லிம் 169, 2934.
(3) தஜ்ஜாலின் நெற்றியில் தெளிவாகவே காபிர் என்று எழுதப்பட்டிருக்கும். அவன் இறை மறுப்பாளன், பொய்யன் என்பதற்குரிய ஓர் அடையாளமாக அல்லாஹ் இதனை வைத்துள்ளான். எழுதத் தெரிந்த, தெரியாத அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் இதனை வெளியாக்கிக் காட்டுவான்.
விருந்துபசார ஒழுங்கு
8- عَنْ أَبيْ قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "سَاقِي الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا".
(جامع الترمذي، رقم الحديث 1894، واللفظ له، وصحيح مسلم، جزء من رقم الحديث 311 - (681)، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه: حسن صحيح، وصححه الألباني).
(8) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு கூட்டத்துக்கு பாணங்கள் வழங்குபவர்தான் அக்கூட்டத்தில் இறுதியாக அருந்துபவராக இருப்பார்.
அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 681, திர்மிதீ 1894. இவ்வார்தை திர்மிதீயிலிருந்து பெறப்பட்டது.


 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மதீனாவின் அன்ஸாரிகளில் ஒருவரான அபூ கதாதா பின் ரிப்இய் (ரலி) கண்ணியமிக்க நபித்தோழராவார். உஹது, மற்றும் பல யுத்தங்களில் பங்குபற்றிய இவர் நபி (ஸல்) அவர்களுக்கு பயணத்தின்போது காவல்காப்பவராக இருந்தார்கள். பாரசீகத்தில் போர் புரிய உமர் (ரலி) அவர்கள் இவரை அனுப்பினார்கள். தனது கையாலேயே அவர்களின் மன்னரைக் கொன்றார்கள்.
இவருடைய மரணத் திகதி, இடங்களில் கருத்து வேறுபாடுள்ளது. ஹி. 38ல் கூபாவில் மரணித்து, அலீ (ரலி) அவர்கள் இவருக்குத் தொழுகை நடத்தினார்கள். ஹி. 54ல் மதீனாவில் மரணித்தார் என்ற கருத்தும், வேறு சில கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஒரு கூட்டத்திற்கு ஏதாவது பாணம் விநியோகித்தால் வயதில் முதிர்ந்தோரை அல்லது தனக்கு வலதிலிருப்பவரை முற்படுத்துவது இஸ்லாம் எமக்குக் காட்டித் தந்துள்ள நல்லொழுக்கங்களில் ஒன்று. விநியோகிப்பவர் இறுதியில் தான் பருக வேண்டும்.
(2) குடிபாணங்களைப் போன்றுதான் உணவுவகைகளும். அதை விநியோகிப்பவர் இறுதியில்தான் புசிக்க வேண்டும்.
(3) 'உன்னிலிருந்து ஆரம்பி" என்று பிறிதொரு நபிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டிற்குமிடையில் எந்தவித முரண்பாடுமில்லை. அந்த நபிமொழி பொதுவாக வந்தது. அதிலிருந்து இப்பாடத்தில் கூறப்பட்ட நபிமொழி விதிவிலக்களிக்கப் பட்டுள்ளது.
பருகலின் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள்
9- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:  قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ؛ فَإِذَا أَرَادَ أَنْ يَعُوْدَ؛ فَلْيُنَحِّ الْإِنَاءَ، ثُمَّ لِيَعُدْ إِنْ كَانَ يُرِيدُ".
(سنن ابن ماجه، رقم الحديث 3427، وصححه الألباني).
(9) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் ஏதாவது பருகினால் அப்பாத்திரத்தில் அவர் மூச்சு விட வேண்டாம். மீண்டும் பருக விரும்பினால் பாத்திரத்தை சற்று தூரப்படுத்தட்டும். பின்பு (மூச்சு விட்டு விட்டு) மீண்டும் பருகட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : இப்னு மாஜாஃ 3427. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் எனக்கூறியுள்ளார்கள்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இந்நபிமொழியில் பாத்திரத்தினுள் மூச்சு விடுவது தடுக்கப்பட்டுள்ளது. புஹாரி (5631), முஸ்லிமில் (2028) இடம்பெறும் மற்றுமொரு நபிமொழியில் நபியவர்கள் பருகும் போது மூன்று முறை பாத்திரத்தில் மூச்சு விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டு நபிமொழிகளுக்குமிடையில் முரண்பாடு போல் தோன்றினாலும் அவற்றுக்கிடையில் இணக்கப்பாட்டுக்கு வரலாம். மூச்சு விடத் தடை செய்யப்பட்ட நபிமொழியின் அர்த்தம், பருகும் போது பாத்திரத்தினுள்ளே மூச்சு விடக் கூடாதென்பதாகும். புஹாரி, முஸ்லிமில் மூச்சு விட்டதாக இடம்பெறும் நபிமொழியின் அர்த்தம், பருகும் போது ஒரே மிடரில் குடிக்காமல் பாத்திரத்திற்கு வெளியே மூன்று தடவைகள் மூச்சு விட்டு விட்டுக் குடிப்பார்கள் என்பதாகும். அதுவே நபிவழியாகும். எனவே இவ்விரு நபிமொழிகளுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுமில்லை
(2) பருகும் போது மூச்சு விடக்கூடாதென்ற தடை பொதுவானது. அப்பாத்திரம் தனிநபர் பாவணைக்குரியதாக இருந்தாலும், பலர் பகிர்ந்து பருகும் பாத்திரமாக இருந்தாலும் சரியே. இது, இஸ்லாம் பருகும் போது காட்டித்தரும் தூய்மையையும், உயர்ந்த பண்பாட்டையுமே பறைசாட்டுகின்றது. ஏனெனில், பருகும் போது பாத்திரத்தில் மூச்சு விடுவதால் அதனுடன் சேர்த்து உமிழ்நீர் அல்லது காரல் வெளிப்பட வாய்ப்புள்ளது. இன்னும் சில வேளை துர்வாடை வீசவும் காரணமாகிவிடும். இது சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
தடுக்கப்பட்ட பொருளீட்டல் முறைகள் சில
10-عَنْ أَبيْ جُحَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا؛ فَقَالَ: "إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الْبَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَالْمُصَوِّرَ".
 (صحيح البخاري، رقم الحديث 5962).
(10) அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் இரத்தம் உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை வாங்கினார்கள். பின்பு கூறினார்கள் :  (அவருடைய இரத்தம் உறிஞ்சும் கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,)  நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் தடை செய்தார்கள். மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்தி விடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் உருவப் படங்களை வரைகின்றவனையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஜுஹைபா (ரலி).
ஆதாரம் : புஹாரி 5962.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
கூபாவில் ஸுவாஃ குடும்பத்தைச் சேர்ந்த நபித்தோழராகிய அபூ ஜுஹைபாவின் பெயர் வஹ்ப் இப்னு அப்தில்லாஹ். அவருக்கு 'வஹ்புல் கைர்" (நன்கொடையாளர்) என்ற சிறப்புப்பெயரும் உண்டு. நபியவர்கள் மரணிக்கும் போது இவர் பருவமடையாத (சிறிய)வராக இருந்தார். இவர் அறிவித்த நபிமொழிகள் 45 ஆகும். (பிற்காலத்தில்) இவர் கூபாவில் வந்திறங்கி, அங்கேயே ஹி. 74ம் ஆண்டு மரணித்தார்கள். (இவரது மரணத்திகதி பற்றி) வேறு கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. இறைவனே மிக்க அறிந்தவன்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இரகசியத்திலும், பகிரங்கத்திலும் இஸ்லாமியப் போதனைகளைக் கடைபிடித்து, விலக்கல்களைத் தவிர்ந்து கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வது அவசியமாகும். அதிலேதான் ஈருலக வெற்றி இருக்கின்றது.
(2) விவசாயம், கைத்தொழில் மற்றும் ஏனைய வியாபார முறைகளில் நல்லவற்றைத் தேடுவதற்கான பல வழிகளை இஸ்லாம் திறந்துள்ளது. அத்துடன் இரத்தம், நாய் போன்றவற்றை விற்ற காசு, விபச்சாரத்தின் மூலம் கிடைத்த சம்பாத்தியம், வட்டி போன்ற முறைகளில் பொருளீட்டுவதைத் தடை செய்துள்ளது.
(3) பச்சை குத்துவதும், உயிருள்ளவற்றை வரைவதும் தடுக்கப்பட்டவை என்பதற்கும் இந்நபிமொழி சான்றாகவுள்ளது.
விருந்துக்கு அழைக்கப்பட்டால்...
11- عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ دُعِيَ إِلَى عُرْسٍ أَوْ نَحْوِهِ فَلْيُجِبْ".
(صحيح مسلم، رقم الحديث 101 - (1429)، ).
(11) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : திருமண விருந்து அல்லது அதுபோன்றவற்றுக்கு யாராவது அழைக்கப்பட்டால் அவர் (அவ்வழைப்புக்கு) பதிலளிக்கட்டும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 1429.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மக்காவில் குரைஷிக் கோத்திரத்தில் பனூ அதிய் குடும்பத்தில் பிறந்த அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் (ரலி) சிறந்த நபித்தோழராவார். இவர் பருவமடைய முன், தன் தந்தையுடனே இஸ்லாத்தை ஏற்று அவருக்கு முன் மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டவர். கந்தக் யுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார். எகிப்து, ஸிரியா, இராக், பஸரா, பாரசீகம் போன்ற இஸ்லாமியப் பெரும்வெற்றிகளில் இவருக்கும் பங்குண்டு. இவர் அதிக துணிச்சலுள்ளவராகவும், அழகிய தோற்றமுள்ளவராகவும் இருந்ததுடன், நபித்தோழர்கள் மத்தியில் பிரபல அறிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். நபிகளாரிடமிருந்து 2630 ஹதீஸ்களை அறிவித்திருக்கின்றார். வணக்கம், பேணுதல் ஆகியவற்றில் முன்னுதாரணம் கூறப்பட்டவர். தனது 86ம் வயதில் ஹிஜ்ரி 73ம் ஆண்டு மக்காவில் மரணமடைந்தார்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) திருமண வலீமாவுக்கு அழைக்கப்பட்டோர் அதற்கு பதிலளிப்பது அவசியமாகும். ஏனெனில் மணமகனை மதித்து, அவரது உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இது இருக்கின்றது.
(2) இஸ்லாம் என்பது நற்குணம், தூய உள்ளங்கள் போன்றவற்றை போதிக்கும் ஒரு மார்க்கம். அதன் மூலம், குடும்ப, சமூக அங்கத்தவர்களிடையே பகைமைச் சூழல் உருவாகுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதனால்தான் மார்க்கத்திற்கு முரணில்லாத ஏதாவது விருந்துக்கு தனது சகோதர முஸ்லிம் அழைக்கும் போது அதற்கு பதிலளிப்பது அவசியமாகின்றது.
(3) ஒரு விருந்துக்குச் சென்றால் அங்குள்ள உணவைக் குறை கூறுவதாகாது. தனக்குப் பிடித்தால் உண்ண வேண்டும். இல்லாவிட்டால் அதனை விமர்சிக்காமல் விட்டுவிட வேண்டும்.
இஷா, பஜ்ர் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுவதன் சிறப்பு
12- عَنْ عُثمَانَ بنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ: "مَنْ صَلَّى العِشَاءَ فِيْ جَمَاعَةٍ؛ فَكَأنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِيْ جَمَاعَةٍ؛ فَكَأنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ".
(صحيح مسلم، رقم الحديث 260 - (656)، ).

(12) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஷாத் தொழுகையைக் கூட்டாகத் தொழுபவர் இரவின் பாதியை நின்று வணங்கியவருக்குச் சமனாவார். பஜ்ர் தொழுகையையும் கூட்டாகத் தொழுபவர் முழு இரவையும் நின்று வணங்கியவருக்குச் சமனாவார்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 656.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
குரைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்த உஸ்மான் பின் அப்பான் பின் அபில் ஆஸ் (ரலி) நபியவர்கள் பிறந்த பின் (யானை வருடம்) ஆறாம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள். நபித்துவம் கிடைத்து சில நாட்களிலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இவர் பிற்காலத்தில் மூன்றாம் கலீபாவாக அமீருல் முஃமினீன் என்ற சிறப்புப் பெயருடன் இருந்தார். மக்காவிலிருந்து எத்யோபியாவுக்கு முதலில் ஹிஜ்ரத் செய்தது உஸ்மான் மற்றும் நபியவர்களின் மகள் ருகைய்யா தம்பதியினர்தான். தனது உடலாலும் பொருளாலும் இஸ்லாத்திற்குப் பல உதவிகள் செய்தார்கள். தபூக் யுத்தத்தின் போது 950 ஒட்டகங்களும் 50 குதிரைகளும் வழங்கி படையைத் தயார் செய்ததுடன், மதீனாவிலுள்ள ரூமாஃ என்ற கிணற்றை 20 ஆயிரம் வெள்ளிக்காசுகள் கொடுத்து வாங்கி தர்மம் செய்தார்கள். மேலும் மஸ்ஜிதுந் நபவியை விரிவாக்கவும் தனது பணத்திலிருந்து 25 ஆயிரம் வெள்ளிக்காசுகள் செலவளித்தார்கள். உமர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஹி.23ல் கலீபாவாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். அல்குர்ஆனில் கருத்து வேறுபாடு ஏற்படாமல் அதனைப் பாதுகாத்தார்கள். ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பாக் கண்டங்களில் இஸ்லாமிய வெற்றி இவரது ஆட்சிக் காலத்தில் பரவியது. நபியவர்களைத் தொட்டும் 146 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். ஹி. 35ம் ஆண்டு தனது 80வது வயதில் மதீனாவில் தனது வீட்டிலே கிளர்ச்சியாளர்களால் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பொதுவாக எல்லாத் தொழுகைகளையும் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதுடன் இஷா மற்றும் பஜர் தொழுகைகளில் அதிக கரிசனை எடுக்க வேண்டும்.
(2) இந்நபிமொழியில் மேற்கண்ட இரு தொழுகைகளையும் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதன் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இஷா, பஜ்ர் இரு தொழுகைகளையும் அவ்வாறு கூட்டாக நிறைவேற்றும் போது முழு இரவும் நின்று வணங்கிய நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அவ்விரண்டிலொன்றைக் கூட்டாக நிறைவேற்றும் போது பாதி இரவு நின்று வணங்கிய நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.
உருவம் வரைதலாகாது
13- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ:  "مَنْ صَوَّرَ صُوْرةً في الدُّنيا، كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَنْفُخَ فِيْهَا الرُّوْحَ، وَلَيْسَ بِنَافِخٍ".
(صحيح البخاري، رقم الحديث 5963، واللفظ  له، وصحيح مسلم، رقم الحديث 100- (2110)،).
(13) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகில் யார் ஓர் உயிருள்ள உருவத்தை வரைகிறைரோ மறுமையில் அதற்கு உயிர் கொடுக்கும்படி அவர் பணிக்கப்படுவார். ஆனால் அவரால் உயிர் கொடுக்க முடியாது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).
ஆதாரம் : புஹாரி 5963, முஸ்லிம் 2110. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 6ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) உயிருள்ள ஒரு பொருளை சிற்பமாக வடிப்பதையோ, வரைவதையோ, விற்பனை செய்வதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மரங்கள், ஆறுகள், மலைகள், கட்டிடங்கள் போன்ற உயிரற்ற பொருட்களைச் செய்வதும், வரைவதும் கூடும்.  
(2) உயிருள்ள பொருட்களைப் போன்ற கற்பனைப் பாத்திரங்களை வரைவது, செதுக்குவது கூட அனுமதிக்கப்படாத ஒன்றே. அது போன்ற ஒன்று நிஜத்தில் இல்லாவிடினும் சரியே.
இரணம் புசிப்பதன் ஒழுக்கங்கள் சில
14- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُماَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "إِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ وَسَطَ الطَّعَامِ؛  فَكُلُوْا مِنْ حَافَّتَيْهِ، وَلاَ تَأْكُلُوْا مِنْ وَسَطِهِ".
(جامع الترمذي، رقم الحديث 1805، واللفظ له،  وسنن أبي داود، رقم الحديث 3772، وسنن ابن ماجه، رقم الحديث 3277، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح، وصححه الألباني).
(14) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக உணவுத்தட்டின் மத்தியில்தான் பரகத் இறங்குகின்றது. எனவே அதன் இரு மருங்கிலும் இருந்து உண்ணுங்கள். மத்தியிலிருந்து உண்ணாதீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 3772, திர்மிதி 1805, இப்னு மாஜாஃ 3277. இவ்வார்தை திர்மிதியிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலுள்ளதாகவும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 6ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) உண்ணும் போது நடுவிலுள்ளதை உண்ண முன் தனக்கு முன்னுள்ளதையே உண்ண வேண்டும். ஏனையோரின் பகுதியிலிருந்தோ நடுவிலிருந்தோ உண்பது நற்பண்பல்ல. ஆனால் பல வித பண்டங்கள் உணவுத்தட்டில் ஆங்காங்கே இருந்தால் அவற்றை நடுவிலிருந்து உண்ணலாம்.
(2) இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள பரகத் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவியும் அதிகரிப்புமாகும். அதன் அடையாளங்களுள் சில : ஆரோக்கியம், மகிழ்ச்சி, போதுமென்ற மனம், அச்சம் கலக்கம் ஏதுமின்றி பாதுகாப்பு, அமைதியை உணர்தல். பரகத் குறைந்ததற்கான அடையாளங்கள் சில : பேராசை, சுயநலம், தன்னலம், உலோபித்தனம், துர்ப்பாக்கியம், பொறாமை, குரோதம், நிரந்தர வறுமை, நிம்மதியின்மை, அமைதியின்மை.
வுழூச் செய்யும் முறை
15- عَنْ حُمْرَانَ رحمه الله، مَوْلَى عُثمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَا بِوَضُوْءٍ؛ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ؛ فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِيْنَهُ فِي الْوَضُوْءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوْئِيْ هَذَا، وَقَالَ: "مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوْئِيْ هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيْهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ".
(صحيح البخاري، رقم الحديث 164، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 3 - (226)،).
(15) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, (தண்ணீர் வந்ததும்) தமது (முன்) கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் முழங்கை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்று முறை கழுவினார்கள்.
பிறகு (இதோ!) நான் செய்த இந்த வுழூவைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் வுழூச் செய்யக் கண்டேன் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), யார் என்னுடைய இந்த வுழூவைப் போன்று வுழூச் செய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தம் உள்ளத்தில் இடந்தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அவரது முன்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று கூறினார்கள் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹும்ரான் (ரஹ்) தனது எஜமான் உஸ்மான் (ரலி) அவர்களைத் தொட்டும்.
ஆதாரம் : புஹாரி 164, முஸ்லிம் 226. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
பாரசீகத்தைப் பிறப்பிடமாக் கொண்ட ஹும்ரான் பின் அபான் அவர்கள் மதீனாவின் பிரபல மார்க்க அறஞர்களில் ஒருவராவார். இவர் முன்னர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர். ஹிஜ்ரி 75ம் ஆண்டு இவர்கள் மரணித்தார்கள். இதில் வேறு கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன.
உஸ்மான் (ரலி) அவர்கள் பற்றி 12ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வுழூ விடயத்தில் பிரதான ஓர் அடிப்படையாக இந்நபிமொழி திகழ்கின்றது. எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இதில் கரிசணை எடுத்து, வுழூச் செய்யும் முறையை கற்க வேண்டும். தலையை ஒரு தடவை மாத்திரம் இரு காதுகளுடன் சேர்த்து முழுமையாக மஸ்ஹு செய்ய வேண்டுமென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  
(2) பாவமன்னிப்புக்கும், சுவனம் நுழைவதற்குமான காரணிகளில் வுழூவும் ஒன்று. வுழூச் செய்து முடிந்ததும் அதன் காணிக்கையாக இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத்தக்கது.
(3) வுழூவைப் பூரணமாகச் செய்துவிட்டுப் பின்வரும் துஆவை ஓதினால் அவருக்கு சுவனத்தின் 8 வாயில்களும் திறக்கப்படும். தான் விரும்பிய வாயிலால் நுழையலாம். இதுபற்றிய ஹதீஸ் முஸ்லிமில் (234) இடம்பெற்றுள்ளது. அந்த துஆ பின்வருமாறு :
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنََّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லையென்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன்.
மனு, ஜின், மலக்குகள் எதனால் படைக்கப்பட்டார்கள்?
16- عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: "خُلِقَتِ المَلاَئِكَةُ مِنْ نُوْرٍ، وَخُلِقَ الجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ، وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ".
(صحيح مسلم، رقم الحديث 60 - (2996)، ).
(16) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டுள்ளார்கள். ஜின்கள் நெருப்புக் கொழுந்திலிருந்து படைக்கப்பட்டுள்ளார்கள். ஆதம் (அலை) அவர்கள் உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட (மண்ணிலிருந்து) படைக்கப்பட்டுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2996..
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
உம்முல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தாய்) ஆஇஷா (ரலி) அவர்கள் (இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரும், அருமை நண்பருமான) அபூபக்கர் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வியாவார். நபியவர்கள் ஹிஜ்ரதுக்கு முன் இவர்களைத் திருமணம் செய்து, (ஹிஜ்ரதுக்குப் பின்) மதீனாவில் அன்னையாருக்கு 9 வயதிருக்கும் போது உறவுகொண்டார்கள். நபியவர்கள் மரணிக்கும் போது அன்னாருக்கு வயது 18 ஆகும். சிறந்த சட்டவல்லுனராகவும், அறிவாளியாகவும், அழகான கருத்துள்ளவராகவும் திகழ்ந்தார்கள், மேலும் கொடை வழங்குவதில் முன்னுதாரணம் கூறப் படக்கூடியவராகவும் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) (அவர்களுடன் மிகநீண்ட காலங்கள் வாழ்ந்திருந்ததன் காரணமாக) அவர்களைத் தொட்டும் அதிக நபிமொழிகளை அறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கை 2210 ஆகும்.
அன்னையவர்கள் ஹிஜ்ரி 57 அல்லது 58 ல் ரமழான் அல்லது ஷவ்வால் மாதம் 17ம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு மதீனாவில் மரணித்து பகிஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களுடைய ஜனாஸாத் தொழுகையை (அவர்களுடைய வஸிய்யத்தின் பிரகாரம்) அபூ ஹுரைரா (ரலி) நடத்தினார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மலக்குகளும் ஜின்களும் படைக்கப்பட்ட விதத்தை இந்நபிமொழி வேறு பிரித்துக் காட்டியுள்ளது. சுற்றுச் சூழலைப் பிரகாசப்படுத்தும் ஒளியினால் மலக்குகள் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பினால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்களின் தலைவன் இப்லீஸ்தான் இந்நபிமொழியில் நாடப்பட்டுள்ளான். இதில் வேறு கருத்துக்களும் உள்ளன.
(2) ஜின், ஷைத்தான் ஆகிய இனங்கள் இருப்பதாகவும், அவர்களும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்களென்றும், மனிதர்களைப் போன்று அவர்களும் மரிப்பார்களென்றும் விசுவாசிப்பது அவசியமாகும்.
(3) ஈமானின் அடிப்படை விடயங்கள் 6. அதில் மலக்குகளை நம்புவதும் ஒன்று. அவர்கள் அல்லாஹ்வின் கண்ணியமிக்க அடியார்கள். ஒளியினால் படைக்கப்பட்ட அவர்கள் இரவு, பகலாக அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பார்கள். இஸ்லாமியக் கொள்கையின் பிரகாரம் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களாவார். அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டாலும் மண்ணாக மாத்திரமே அவர்களிருக்கவில்லை. மாறாக, ஆவி, அறிவு, நாடி நரம்புகள், சதை, எலும்பு, குருதி அனைத்தையும் உள்ளடக்கிய உயிருள்ள ஒரு மனிதராகவே இருந்தார்கள்.
குபாப் பள்ளியின் சிறப்பு
17- عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا وَمَاشِيًا؛ فَيُصَلِّيْ فِيْهِ رَكْعَتَيْنِ.
(صحيح مسلم، رقم الحديث 516- (1399)، واللفظ له وصحيح البخاري، رقم الحديث 1194).
(17) நபி (ஸல்) அவர்கள் குபாப் பள்ளவாயிலுக்கு சிலபோது வாகனத்திலும், சிலபோது நடந்தும் வருவார்கள். அங்கு 2 ரக்அத்துக்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : புஹாரி 1194, முஸ்லிம் 1399. இவ்வார்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் மதீனாவிலுள்ள குபாப் பள்ளிக்கு வாகனத்திலும், நடந்தும் வருவார்கள். (முஸ்லிம் 1399). அதனடிப்படையில் அப்பள்ளியைத் தரிசிப்பது எங்களுக்கும் ஸுன்னத்தாகும்.
(2) இப்பள்ளியில் தொழுவதை சிறப்பித்துக் கூறும் பல நபிமொழிகள் வந்துள்ளன. அவற்றில் சில :
ஹதீஸ் 01 : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குபாப் பள்ளியில் தொழுவது ஓர் உம்ராச் செய்வதற்குச் சமனாகும். (திர்மிதி 324, இப்னு மாஜாஃ 1411).
ஹதீஸ் 02 : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தனது வீட்டிலே வுழூச் செய்து, பின்பு குபாப் பள்ளிக்குச் சென்று ஏதாவதொரு தொழுகையைத் தொழுதால் அவருக்கு ஓர் உம்ராச் செய்த நன்மைப் போன்று கிடைக்கின்றது. (நஸாஈ 699, இப்னு மாஜாஃ 1412).

வறியவர்களைக் கவனிப்போம்
18- عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ رحمه الله قَالَ: رَأَى سَعْدٌ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ لَهُ فَضْلاً عَلَى مَنْ دُونَهُ؛ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  "هَلْ تُنْصَرُوْنَ وَتُرْزَقُوْنَ إِلاَّ بِضُعَفَائِكُمْ".
(صحيح البخاري، رقم الحديث 2896).
(18) ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஏனையோரை விடத் தான் சிறந்தவரெனக் கருதினார்கள். அப்போது நபியவர்கள் 'நீங்கள் உதவி செய்யப்படுவதும், வாழ்வாதாரம் அளிக்கப் படுவதும் உங்களில் இருக்கும் பலவீனமானோரை வைத்துத்தான்" என்றார்கள்.
அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃத் (ரஹ்) தனது தந்தை ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களைத் தொட்டும்.
ஆதாரம் : புஹாரி 2896.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் புதல்வர் முஸ்அப் பின் ஸஃது பின் அபீ வக்காஸ் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தாபிஈன்களைச் சேர்ந்தவர். கூபாவிலே வசித்து அங்கேயே ஹிஜ்ரி 103ல் மரணித்தார்கள்.
ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பற்றி 5ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் மதிப்பு, மரியாதையைப் பகிர்ந்து கொள்வதுடன் ஒன்றிணைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.  
(2) வறியவர்களைக் கவனித்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுமாறு இஸ்லாம் அழைக்கின்றது.
(3) பகைவர்களுக்கெதிராகக் கிடைக்கும் வெற்றி, உதவி, செல்வந்தர்களுக்குக் கிடைக்கும் வாழ்வாதார விஸ்தீரணம் எல்லாம் வறியோரின் பரகத்தினால்தான் என்பதை உணர்ந்து, அவர்களை மதிக்க வேண்டும். அவர்களிடம் பெருமையடிக்கவோ, அவர்களை இழிவு படுத்தவோ கூடாது.
நேசத்தை வெளிக்காட்டுவோம்
19- عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِيْكَرِبَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "إِذَا أحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُخْبِرْهُ أنَّهُ يُحِبُّهُ".
(سنن أبي داود، رقم الحديث 5124، واللفظ له، وجامع الترمذي، رقم الحديث 2391، قال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح غريب، وصححه الألباني).
(19) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் தனது சகோதரனை நேசித்தால் அதனை அவரிடம் தெரிவிக்கட்டும்.
அறிவிப்பவர் : மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 5124, திர்மிதி 2391. இவ்வார்தை அபூ தாவூதிலிருந்து பெறப்பட்டது. திர்மிதீ அவர்கள் இது ஹஸன் ஸஹீஹ் கரீப் எனும் தரத்திலுள்ளதாகவும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
கின்தா கோத்திரத்தைச் சேர்ந்த அபூ கரீமா என்ற புனைப் பெயருடைய மிக்தாம் பின் மஃதீகரிப் பின் அம்ரு (ரலி) பிரபலமான நபித்தோழராவார். (ஸிரியாவிலுள்ள) ஹிம்ஸ் எனும் ஊரில் வசித்த இவர் நபியவர்களிடத்தில் இஸ்லாத்தைத் தழுவ கூட்டங் கூட்டமாக மக்கள் வந்த காலப்பகுதியில் ஒரு கூட்டத்துடன் வந்தார். ஷாம் (ஸிரியா), இராக் போன்ற நகரங்களில் நடைபெற்ற இஸ்லாமிய வெற்றிப் போர்களில் கலந்துகொண்டதுடன், குறிப்பாக யர்மூக் மற்றும் காதிஸிய்யாப் போர்களில் கலந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் தமது எதிரிகளுடன் செய்த எந்தவொரு போரிலிருந்தும் இவர் பின்வாங்கவில்லை. நபிமொழிக் கிரந்தங்களில் இவருடைய 42 பொன்மொழிகள் பதியப்பட்டுள்ளன. இவர் ஷாம் வாசியாகக் கணிக்கப்படுகிறார். ஹிஜ்ரி 87ல் தனது 91வது வயதில் அங்கேயே மரணித்தார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அல்லாஹ்வுக்காக நேசம் வைப்பது இஸ்லாத்தின் முக்கய பகுதிகளிலொன்று. இன்னொரு மனிதரிடத்தில் அதற்குரிய காரணிகள் இருக்கும் போது அவர்பால் ஏற்படும் ஓர் உள்ளுணர்வே இந்த நேசமென்பது. அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, அவனுடைய பொருத்தத்தை நாடி, ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் கொள்வது அல்லாஹ்வுக்காக நேசம் வைப்பதன் பிரதான காரணிகளிலுள்ளது.
(2) அல்லாஹ்வுக்காக நாம் ஒருவரை நேசித்தால், அவரும் எம்மை நேசிப்பதற்காக அதனை அவரிடம் தெரிவிப்பது சிறந்தது.
(3) உலக நோக்கங்களுக்காக நேசம் வைத்துக்கொண்ட இருவர் தமது எண்ணங்களை அல்லாஹ்வுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அல்லாஹ்வுக்காக நேசித்தோருக்குக் கிடைக்கும் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளலாம். அந்நேசத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மறுமையின் எந்தவொரு நிழலுமில்லாத சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் அர்ஷுக்குக் கீழ் நிழல் வழங்கப்படும் ஏழு கூட்டத்தாரில் நாங்களும் உள்வாங்கப்படுவோம்.
ஓய்வும் ஆரோக்கியமும்
20- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:  قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "نِعْمَتَانِ مَغْبُوْنٌ فِيْهِمَا كَثِيْرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالْفَرَاغُ".
(صحيح البخاري، رقم الحديث 6412).
(20) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் இரு அருட்கொடைகள் உள்ளன, அவற்றில் அதிக மக்கள் ஏமாற்றமடைந்து நிற்கின்றனர். ஒன்று ஆரோக்கியம், மற்றது ஓய்வு நேரம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).
ஆதாரம் : புஹாரி 6412.


 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 6ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) உடலாரோக்கியத்தையும் ஓய்வு நேரத்தையும் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட நல்வழிகளிலும், ஹலாலான வாழ்வாதாரத்தைத் தேடுவதிலும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(2) மேற்கண்ட இரு நிஃமத்துக்களுக்காகவும் அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவனது ஏவல்களை எடுத்து நடப்பதும், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதும் அவனுக்கு நன்றி செலுத்தும் வழிமுறைகளிலுள்ளதுதான். இதில் குறை வைப்போர்தான் ஏமாளிகள்.
(3) மேற்கண்ட நபிமொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள 'மஃபூன்" என்ற சொல்லிற்கு ஏமாளி, நஷ்டவாளி, சதிவலையில் சிக்கியவர் போன்ற பல கருத்துக்கள் உள்ளன. அல்லாஹ் ஒருவனுக்கு இவ்விரு நிஃமத்துக்களையும் வழங்கி, பின் அவ்வடியான் அதிலிருந்து பயனடையாமல், நன்றி செலுத்தாமல், அவ்வரண்டையும் வீணடித்தால் அவனே ஏமாந்து நஷ்டம் அடைந்தவனாவான்.

உரிமைகளைப் பாதுகாக்கும் மார்க்கமே இஸ்லாம்
21- عَنْ مَعْقَلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ:  "مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً؛ فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ إِلاَّ لَمْ يَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ".
(صحيح البخاري، رقم الحديث 7150، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 227 - (142)،).
(21) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஓர் அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர்களின் நலனைக் காக்கத் தவறினால் சுவனத்தின் வாடையை நுகரவே மாட்டான்".
அறிவிப்பவர் : மஃகல் பின் யஸார் (ரலி).
ஆதாரம் : புஹாரி 7150, முஸ்லிம் 142. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.

 

 ஹதீஸ் அறிவிப்பாளர்:
முஸைனாக் குடும்பத்தைச் சேர்ந்த மஃகல் பின் யஸார் அல்பஸரீ (ரலி) ஸிரியாப் பகுதியிலிருந்து நபியிடத்தில் வந்து ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன் இஸ்லாத்தில் இணைந்தார்கள். அவ்வுடன்படிக்கையின் போது மரத்தடியில் இவர்களும் உறுதிமொழி அளித்ததுடன், நபியவர்கள் மக்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் முகத்தில் படும் மரக்கிளைகளை அகற்றிக் கொண்டிருந்தார்கள். இவர் அறிவித்துள்ள நபிமொழிகள் 34 ஆகும். நபியவர்கள் மரணித்த பின் அபூ பக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மதம்மாறியோருக்கு எதிரான யுத்தங்களிலும், பாரசீக வெற்றிகளிலும் பெரும் பங்காற்றினார்கள்.
உமர் (ரலி) இவர்களை பஸராவுக்கு கவர்னராக நியமித்தார்கள். அவர்களின் பணிப்புரைக்கிணங்க அங்கே ஒரு குளத்தைக் கட்டினார்கள். அந்த பஸராவிலேயே தனக்கொரு வீட்டைக் கட்டிக்கொண்டு வசித்து வந்து, அங்கேயே ஹிஜ்ரி 65ல் மரணித்தார்கள். ஹிஜ்ரி 60ல் என்ற மற்றொரு கருத்துமுள்ளது.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நாட்டுத்தலைவர்கள், அதனையொட்டியுள்ள இலாகா பொறுப்புக்களில் உள்ளோர், நிறுவனங்களின் பொறுப்பாளிகள், ஏன் குடும்பப் பொறுப்பிலுள்ளோர் கூட தமது பொறுப்புக்களுக்குக் கீழுள்ளவர்களுடைய விடயத்தில் கரிசனை எடுப்பது அவசியமாகும். அதில் குறை வைப்பது, ஊழல் செய்வது, ஏமாற்றுவது போன்ற காரியங்கள் சம்பந்தப்பட்ட பொறுப்புதாரிகளை சுவனத்தை விட்டும் தடுத்துவிடும். நரகில் கடும் வேதனைக்குள்ளாக்கப் படுவர்.
(2) இது போன்ற ஹதீஸ்கள் எச்சரிக்கை சம்பந்தப்பட்டவை. எச்சரிக்கை சம்பந்தமான செய்திகளில் அஹ்லுஸ்ஸுன்னக்களின் நிலைப்பாடு என்னவெனில், அதனை அமுல்படுத்த வேண்டுமென்ற அவசியப்பாடு அல்லாஹ்வுக்கில்லை. மரணிக்கும் போது இணைவைக்காமல் மரணித்தால் ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் ஷிபார்சு, பாவங்களை அழிக்கும் நற்காரியங்கள் மூலம் மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். அவன் ஒரு நல்வாக்களித்தால் அதனை நிறைவற்றுவதைத் தனக்குள் கடமையாக்கிக் கொண்டுள்ளான். ஒரு வேதனை பற்றி எச்சரிக்கை செய்தால் அதற்குத் தகுதியானோருக்கு அதனை நிறைவேற்றுவதைத் தனக்குள் கடமையாக்கிக் கொள்ளவில்லை. நாடினால் மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். இது அவனுடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றது.
(3) இஸ்லாம் அமானிதங்களை அதற்குரியவர்களிடம் சேர்ப்பதிலும், தனிநபர், சமூக உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அதிக கரிசனை எடுக்கும் மார்க்கமாகும்.
பிள்ளைகளின் சொத்தில் பெற்றோருக்கும் உரிமையுண்டு
22- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَجُلاً قَالَ:  ياَ رَسُوْلَ اللهِ! إن لِيْ مَالاً وَوَلَداً، وَإِنَّ أَبِيْ يُرِيْدُ أَنْ يَجْتَاحَ مَالِي؛ فَقَالَ: "أَنْتَ وَمَالُكَ لِأَبِيْكَ".
(سنن ابن ماجه، رقم الحديث 2291، وصححه الألباني).
(22) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு நிறைய சொத்துக்களும் குழந்தைகளுமுள்ளனர். எனது தந்தை எனது சொத்தை அபகரிக்க வருகின்றார்" என்று முறைப்பட்டார். அப்போது நபியவர்கள் 'நீயும் உனது சொத்துக்களும் உனது தந்தைக்கே சொந்தம்" என்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).
ஆதாரம் : இப்னு மாஜாஃ 2291. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.

 


 ஹதீஸ் அறிவிப்பாளர்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்ஸாரீ (ரலி) அவர்கள் பிரபலமான நபித்தோழராவார். நபி (ஸல்) அவர்களுக்கும் மதீனா வாசிகளுக்குமிடையில் நடைபெற்ற உடன்படிக்கையில் தனது தந்தையுடன் சேர்ந்து நபியவர்களுக்கு உறுதிப்பிரமாணம் செய்தார்கள். (ஹுதைபியாவில்) மரணத்திற்காக நபியவர்களிடம் உறுதிமொழியளித்தவர்களில் இவரும் ஒருவர். இவர் அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர்களில் அடங்குவதுடன், அவர் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கை 1540க உள்ளது. ஹிஜ்ரி 73ல் மரணித்தார்கள். (இவரது மரண ஆண்டில் வேறு கருத்துகளும் உள்ளன.).
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஒரு தந்தை தனது பிள்ளையின் பணத்திலிருந்து தேவையான அளவு பயன்படுத்தலாம். எனினும், இது தந்தை பிள்ளையின் சொத்துக்களை உடமையாக்கிக் கொள்வதல்ல. மாறாக பிள்ளையின் சொத்துக்கு அவன்தான் உரிமையாளன். அவன் மீதுதான் அச்சொத்தில் ஸகாத் விதியாகும். அவன் மரணித்த பின்தான் அச்சொத்திலிருந்து அநந்தரமாகப் பெறுவார். அப்படியாயின் இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள விடயம், பெற்றோருக்கு வசதியில்லாத பட்சத்தில் பிள்ளைகள் அவர்களுக்கு அவசியம் வழங்க வேண்டிய செலவினங்களையே குறிக்கின்றது. அச்செலவினங்களைப் பிள்ளைகள் வழங்காத பட்சத்தில் தந்தைக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
(2) பிள்ளைக்குத் தேவையிருக்கும் போது, அல்லது அவ்வாறு எடுக்கும் போது பிள்ளைக்குத் தட்டுப்பாடு ஏற்படுமெனில், அதேபோன்று தக்க காரணமின்றி இன்னொரு பிள்ளைக்கு எடுத்துக் கொடுக்கும் நோக்கில் ஒரு தந்தை தனது பிள்ளையின் சொத்திலிருந்து எடுக்கலாகாது. ஏனெனில், ஒரு பிள்ளையின் சொத்துக்களுக்கு தந்தையின்றி அவன்தான் உரிமையாளன். வாரிசுரிமைச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை மாத்திரமே தந்தைக்குச் சொந்தமென பின்வரும் இறைவசனம் சுட்டிக்காட்டுகின்றது :
இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). (நிஸாஃ 11).
எனவே மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம், பிள்ளைக்கு தீங்கு விளைவிக்காமல் தேவையான அளவு எடுக்க உரிமையுண்டு என்பதே.
(3) மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்டுள்ள 'உனது தந்தைக்கே சொந்தம்" என்பதன் அர்த்தம் முழுமையாக உரிமையாக்கிக் கொள்வதல்ல. மாறாகப் பயன்படுத்தும் உரிமை மாத்திரமே. ஏனெனில் பிள்ளை மரணிக்கும் போது அவருக்கும் மனைவி குழந்தைகளிருந்தால் அவர்களுக்கும் சொத்தில் பங்குண்டு. தந்தைக்கு முழுவுரிமை இருந்தால் அவரைத் தவிர வேறுயாரும் சொத்தில் பங்கெடுக்க முடியாது.
தொழுகையில் இடுப்பில் கை வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது
23- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: "نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا".
(صحيح البخاري، رقم الحديث 1220، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 46 - (545)،).
(23) தொழும் போது ஒருவர் இடுப்பில் கையை வைத்துக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி 1220, முஸ்லிம் 545. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தொழும்போது இடுப்பில் கை வைத்துக் கொள்வது பெருமையின் அடையாளம். படைத்தவனிடம் நாம் பணிவாகவே செல்ல வேண்டும்.
(2) தொழுகைக்குள் நுழையும் போது அழகிய தோற்றத்தில் நுழைய வேண்டும்.
(3) இந்நபிமொழி அதனை முற்றாகத் தடுத்துள்ளது. இன்னொரு புறத்தில் ஒன்றை வேடிக்கை பார்க்கவும் நாம் அவ்வாறு இடுப்பில் ஒரு கையையோ அல்லது இரு கைகளையுமோ கட்டிக் கொள்வோம். இது படைத்தவன் முன் செல்லும் தோற்றமல்ல.
நின்ற நிலையில் உண்ண, பருக முடியுமா?
24- عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَمْشِي، وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ.
(جامع الترمذي، رقم الحديث 1880، واللفظ له،  وسنن ابن ماجه، رقم الحديث 3301، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح غريب، وصححه الألباني).
(24) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் நடந்து கொண்டே சாப்பிடுவோம். நின்ற நிலையிலேயே நாம் பருகுவோம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : திர்மிதி 1880, இப்னு மாஜாஃ 3301. இவ்வார்தை திர்மிதியிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இது ஹஸன் ஸஹீஹ் கரீப் எனும் தரத்திலுள்ளதாகவும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நின்ற நிலையில் உண்ண, பருக முடியுமென்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. நபி (ஸல்) அவர்களே நின்ற நிலையில் உண்டு, பருகியிருக்கின்றார்கள் என்று திர்மிதியில் (1883) இடம்பெறும் மற்றொரு செய்தி இதற்கு இன்னும் வலுவூட்டுகின்றது.
(2) மற்றுமொரு நபிமொழியில் நபியவர்கள் நின்ற நிலையில் பருகுவதைத் தடுத்ததாக வந்துள்ளது. இவ்விரண்டிற்குமிடையில் எவ்வித முரண்பாடுமில்லை. ஏனெனில் உட்கார்ந்த நிலையில் உண்ணுவதும் பருகுவதும்தான் அடிப்படை, அதுதான் நபிவழியும், ஆரோக்கியமும் கூட. இதனை ஸுன்னாவாகவும், நின்ற நிலையில் உண்ணல், பருகலை தேவையான சந்தர்ப்பத்தில் செய்வதற்கான அனுமதியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(3) நீர் விநியோகிப்போருக்குத்தான் நின்ற நிலையில் பருக வேண்டாமென்ற தடை வந்துள்ளதெனவும் சிலர் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்கருத்து வலுவானதல்ல.
ஸூரதுல் இஃலாஸின் சிறப்பு
25- عَنْ أَبِيْ الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ فِيْ لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالُوْا: وَكَيْفَ يَقْرَأْ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالَ: "(قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ".
(صحيح مسلم، رقم الحديث 259- (811)، ).
(25) ஒரே இரவில் அல்குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை எவ்வாறு ஒரே இரவில் ஓத முடியும்? என நபித்தோழர்கள் வினவினர். அப்போது நபியவர்கள், 'குல் ஹுவல்லாஹு அஹத்" என்ற அத்தியாயம் அல்குர்ஆனின் மூன்றிலொரு பகுதிக்குச் சமம் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபுத் தர்தாஃ (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 811.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மதீனாவின் அன்ஸாரிகளில் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அபுத்தர்தாஃ என்ற (புனைப்பெயருள்ள) இவரின் பெயர் உவைமிர் பின் ஸைத் பின் கைஸ் (ரலி) என்பதாகும். (இவர்) பத்ர் யுத்த தினத்தன்று இஸ்லாத்தில் இணைந்தார். இந்த உம்மத்தின் ஞானி என்று அறியப்பட்ட இந்நபித்தோழர் ஸிரியாவில் (அல்குர்ஆனைத் திறன்பட ஓதக்கூடிய) காரிகளின் தலைவராகவும், (ஸிரியாவில்) நீதிபதியாகவும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் அல்குர்ஆனைத் தொகுத்து, அதனை மனனமிட்டவர்களில் இவரும் ஒருவர். நபியவர்களிடமிருந்து இவர்கள் அறிவித்த 179 பொன்மொழிகள் நபிமொழிக் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன. உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட 3 ஆண்டுகளுக்கு முன்னர், தனது 72 வயதில் ஹி. 31 அல்லது 32ல் இவர்கள் மரணம் எய்தார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஸூரத்துல் இஃலாஸின் சிறப்பு பற்றி இந்நபிமொழி விளக்குகின்றது. இதனை ஒரு முறை ஓதினால் அல்குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓதிய நன்மையை அல்லாஹ் வழங்குகின்றான்.
(2) நாளாந்தம் பல சந்தர்ப்பங்களில் இவ்வத்தியாயத்தை ஓதுமாறு நபியவர்கள் எமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். அவற்றில் சில : பஜ்ருடைய ஸன்னத்தில் இரண்டாவது ரக்அத்தில், ஐவேளைத் தொழுகைகள் முடிந்த பின்னர், காலை, மாலை திக்ருகளுடன், இரவில் தூங்க முன், தவாபுடைய ஸன்னத்தில் இரண்டாவது ரக்அத்தில், வித்ரு தொழுகையின் இறுதி ரக்அத்தில்.
(3) அல்குர்ஆன் முழுவதிலும் ஈருலக வெற்றிக்கான போதனைகள் அதிகமிருப்பதால் ஏனைய ஸூராக்களையும் கரிசனையெடுத்து ஓதி, விளங்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.
(4) அல்குர்ஆனின் வசனங்கள் பெரும்பாலும் பின்வரும் 3 விடயங்களையொட்டியதாகவே காணப்படுகின்றது. அவை 1. அடிப்படைக் கொள்கை. 2. சட்டதிட்டங்கள். 3. முன்சென்ற அல்லது எதிர்கால நிகழ்வுகள். ஸூரதுல் இஃலாஸ் முழுவதும் முதல்வகை அடிப்படையை மாத்திரம் தனியாகப் பொதிந்துள்ளது. அதனால்தான் இவ்வத்தியாயம் மூன்றிலொரு பகுதிக்குச் சமனாகின்றது.
திருமணத்தைத் தாமதப்படுத்தாதீர்
26- عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ: لَنَا رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يَا مَعْشَرَ الشَّبَابِ! مَنِ اسْتَطَاعَ منكُم الْبَاءَةَ؛ فَلْيَتَزَوََّجْ؛ فَإِنََّهُ أَغَضُُ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ؛ فَعَلَيْهِ بِالصََّوَْمِ؛ فَإِنََّهُ لَهُ وِجَاءٌ".
(صحيح مسلم، رقم الحديث 3 - (1400)، واللفظ له،  وصحيح البخاري، رقم الحديث 5066).
(26) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வாலிபர்களே! உங்களில் திருமணம் செய்ய சக்தி பெற்றவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அதுதான் பார்வையைத் தாழ்த்த மிகவும் வழிவகுக்கின்றது. தவறான நடத்தைகளிலிருந்து அபத்தைக் காக்கின்றது. அதற்கு சக்தி பெறாதோர் அதிகமாக நோன்பைக் கடைபிடித்துக் கொள்ளட்டும். அது அவருக்கு இச்சையைக் கட்டுப்படுத்த உதவும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
ஆதாரம் : புஹாரி 5066, முஸ்லிம் 1400. இவ்வார்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 2ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள 'சக்தி" என்பது திருமணத்தின் மஹர், குடும்பச் செலவினங்கள் போன்றவற்றையே குறிக்கின்றது. அதற்கு வசதியில்லாதவர்கள் நோன்பு பிடித்துக் கொள்ள வேண்டும். இச்சைக் குறைபாட்டின் காரணமாக உறவு கொள்ள சக்தியற்றவர்கள் நோன்பு பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்நபிமொழியில் நோன்பின் நோக்கம் இச்சையைக் கட்டுப்படுத்துவதாகும். அத்தேவை அவருக்கில்லை.
'சக்தி" என்பதில் மஹர், குடும்பச் செலவினங்கள், உறவு கொள்வதற்கான சக்தி (ஆண்மை) ஆகிய அனைத்தும் உள்ளடங்குமெனக் கூறும் அறிஞர்களுமுள்ளனர்.
(2) மஹர், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் செலவு செய்ய சக்தி, உறவு கொள்ள சக்தி, ஆசையுள்ள அனைத்து வாலிபர்களையும் திருமணத்தின்பால் தூண்டக்கூடியதாகவே இந்நபிமொழி இருக்கின்றது. எனவே அதனைத் தாமதப்படுத்தாமலிருப்பது அவசியமாகும்.
(3) திருமணத்தால் கற்பைப் பாவங்களிலிருந்து பாதுகாத்தல், பார்வையைத் தாழ்த்துதல், அதன் பிரதிபலனாக உளத்தூய்மை போன்ற பல பயன்பாடுகளுள்ளன.
நபி (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகள்
27-عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "أُعْطِيْتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الْأَنْبِيَاءِ قَبْلِيْ: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُوْرًا، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلَاةُ؛ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثتُ إِلَى النَّاسِ كَافَّةً، وَأُعْطِيْتُ الشَّفَاعَةَ".
(صحيح البخاري، رقم الحديث 438، واللفظ له،  وصحيح مسلم، رقم الحديث 3 - (521)،).
(27) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கு வழங்கப்படாத 5 விடயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. 1. ஒரு மாதம் நடந்து செல்லும் தூர அளவுக்கு (எதிரிகள் மத்தியில் என்னைப் பற்றிய பயத்தைப் போடப்பட்டு) உதவி செய்யப்பட்டுள்ளேன். 2. பூமி முழுவதும் சுத்தமானதாகவும் தொழுவதற்கான இடமாகவும் எனக்கு ஆக்கித்தரப்பட்டுள்ளது. எனது சமூகத்திலுள்ள ஒருவர் எவ்விடத்தில் தொழுகை நேரத்தை அடைகிறாரோ அப்போதே தொழுது கொள்ளட்டும். 3. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனக்கு முன் எவருக்கும் அவ்வாறு அனுமதிக்கப்படவில்லை.) 4. ஒவ்வொரு நபிமாரும் தமது சமூகத்திற்கு மாத்திரம்தான் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் பொதுவாக அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளேன். 5. (மக்களுக்கு) பரிந்துரைக்கும் சந்தர்ப்பம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).
ஆதாரம் : புஹாரி 438, முஸ்லிம் 521. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.


 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 22ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அல்லாஹ் ஏனைய நபிமார்களை விட இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களை பல விடயங்களைக் கொண்டு சிறப்பாக்கியுள்ளான். அவற்றில் சில :
1. பயம் : அல்லாஹ் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நபிகளாருக்கு உதவி செய்தான். நபி (ஸல்) அவர்கள் ஓர் இடத்தில் நின்றார்கள் என்றால் அவ்விடத்திலிருந்து சுமார் ஒரு மாதகாலம் பிரயாணம் செய்யும் தூர அளவில் இருக்கும் அனைத்துக் காபிர்களும் அஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்.
2. அல்லாஹ் இந்த நபிக்கும் அவரது உம்மத்திற்கும் பூமியை மஸ்ஜிதாக்குவது கொண்டு விசாலப்படுத்தினான். அவர்களுக்கு எங்கு தொழுகை கிடைக்கின்றதோ அங்கு தொழட்டும். நீரில்லாவிடில் பூமியிலுள்ள மண்ணில் தயம்மும் செய்து தொழுது கொள்ள முடியும். முன்சென்றவர்கள் தம்முடைய இபாதத்களை வணக்கஸ்தளங்களிலேதான் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இச்சமூகத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடம் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் மண்ணறை, குப்பைத் தொட்டி, நடமாடும் பாதை, ஒட்டகத் தொழுவம் போன்ற தடை செய்யப்பட்டுள்ள இடங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அடிப்படையில் தொழகை பள்ளியில்தான் நிறைவேற்றப்பட வேண்டும். பிரயாணம், நோய், மழை போன்ற தகுந்த காரணங்களிருந்தால் இருக்குமிடத்திலேயே தொழலாம்.
3. இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட புனித யுத்தத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்கள் (கனீமத்) முன்னைய நபிமார்களுக்கும் அவர்களது உம்மத்திற்கும் ஹராமாக்கப்பட்டதன் பின்னால் இந்த நபிக்கும் அவரது உம்மத்திற்கும் அனுமதிக்கப் பட்டுள்ளது.
4. முன்னைய நபிமார்கள் அவர்களுடைய கூட்டத்திற்கு தஃவா செய்யவே அனுப்பட்டார்கள். இந்த நபியின் தஃவா கியாமநாள் வரை அனைவருக்கும் உள்ளது. எனவே இஸ்லாம் என்பது சர்வதேசத் தூதாக எல்லாக் காலங்களிலுமுள்ள எல்லா இனத்தவர்களுக்குமானதாக உள்ளது.
5. அனைத்து மக்களையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தக்கூடிய அந்த மறுமையின் அகோர நிலையிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக அல் மகாமுல் மஹ்மூத் எனப்படும் ஷபாஅத்தைக் கொண்டு எமது நபியவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளார்கள். அன்றைய நாளில் உலுல் அஸ்ம்கள் பின்வாங்குவார்கள். இதற்கு 'அஷ்ஷபாஅதுல் உழ்மா" என்றும் சொல்லப்படுகின்தறது.
(2) இவ்வாறானதொரு சிறப்பை நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது சமூகமாகிய எமக்கும் அருளிய அந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கு நாம் அதிக நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
சுவனத்தின் இன்பங்களில் சில
28- عَنْ أَبيْ مُوْسَى الْأَشْعَرِيِّ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "إِنَّ فِي الْجَنَّةِ خَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ  مُجَوَّفَةٍ، عَرْضُهَا سِتُّونَ مِيْلاً، فِيْ كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ، مَا يَرَوْنَ الْآخَرِيْنَ، يَطُوْفُ عَلَيْهِمُ الْمُؤْمِنُ".
(صحيح مسلم، رقم الحديث 24 - (2838)، واللفظ له،  وصحيح البخاري، رقم الحديث 4879).
(28) நபி (ஸல்) கூறினார்கள் : நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறை நம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்ற துணைவியரைப் பார்க்க முடியாது. இறை நம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.
அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி).
ஆதாரம் : புஹாரி 4879, முஸ்லிம் 2838. இவ்வார்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அவர் பெயர் அப்துல்லாஹ் பின் கைஸ் அல் அஷ்அரீ, யமன் தேசத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் மக்காவிற்கு வந்து இஸ்லாத்தை ஏற்று யமனுக்கு திரும்பிவிட்டார். பின்பு எத்யோப்பியா சென்று, கைபர் வெற்றியின் பின்னர் மதீனாவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு அறப்போரில் கலந்து கொண்டார்கள். நபித்தோழர்களில் மிக அழகான குரலில் அல்குர்ஆனை ஓதக்கூடிய இவர் அதிக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவராகவும், உலகப்பற்றற்ற கல்விமானாகவும் இருந்தார். ஹிஜ்ரி 44ல் மதீனா அல்லது கூபாவில் மரணத்தை எய்தினார்.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) சுவர்க்கத்தையும், அதிலுள்ள இன்பங்களையும் விசுவாசங் கொள்வது அவசியமாகும்.
(2) சுவர்க்கம் என்பது மறுமையில் அல்லாஹ் தனது முஸ்லிமான அடியார்களுக்காகத் தயார் செய்து வைத்துள்ள இன்பங்கள் நிறைந்த, நிரந்தரமான வீடாகும். அடிப்படையில் இது அவர்கள் குடியிருக்கும் வீடாகும். அதனைச் சுற்றி ஆறுகள், பழவகைகள், மரங்கள் எல்லாம் அதிகமாக இருக்கும். அதில் அவர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்க, தாம் விரும்பியதெல்லாம் உண்டு, பருகி மகிழலாம். அங்கு எவ்வித நோயோ, உளைச்சல்களோ, துர்ப்பாக்கிய நிலையோ கிடையாது.
(3) இதில் நுழைவதற்கான முதற்காரணம் அல்லாஹ்வை விசுவாசங் கொண்டு, அவன் காட்டிய பிரகாரம் நற்செயல்கள் புரிவதாகும். எனவே ஸலபுகள் வாழ்ந்து காட்டிய பிரகாரம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு அதன் மூலம் அவனது திருப்பொருத்தத்தை அடைந்து சுவனம் செல்ல முயற்சிப்போம்.
உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேரலாமா?
29- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  "الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ، وَالْجَزُوْرُ عَنْ سَبْعَةٍ".  
(سنن أبي داود، رقم الحديث 2808، وصححه الألباني).
(29) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (உழ்ஹிய்யா, பரிகாரத்திற்காக அறுக்கப்படும்) ஒரு மாடு ஏழு பேருக்குப் பதிலாக செல்லுபடியாகும். ஓர் ஒட்டகம் ஏழு பேருக்குப் பதிலாக செல்லுபடியாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 2808. அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 22ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஒட்டகத்தில் 7 பேர் கூட்டுச் சேரலாமா அல்லது 10 பேர் கூட்டுச் சேரலாமா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் இரு அபிப்பிராய பேதங்களுள்ளன.
(2) 'நாம் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்திலிருந்த போது ஈதுல் அழ்ஹா பெருநாள் வந்தது. நாங்கள் உழ்ஹிய்யாவில் ஒரு மாட்டில் 7 பேரும் ஓர் ஒட்டகத்தில் 10 பேரும் கூட்டாகச் சேர்ந்து கொடுத்தோம். (திர்மிதீ 905, நஸாஈ 4392, இப்னு மாஜா 3131) என்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றையே உழ்ஹிய்யாவில் 10 பேர் சேர முடியுமென்று கூறும் அறிஞர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர். ஆனால் ஹஜ் வணக்கத்தில் பரிகாரத்திற்காக அறுக்கப்படும் ஒட்டகத்தில் 10 பேர் சேர முடியாது. மாட்டில் 7 பேர்தான் சேர முடியும்.
(3) ஒட்டகம், மாட்டில் பங்கு சேர்வது போன்று ஆட்டில் கூட்டுச் சேர முடியாது. 7 பேர் பங்கு சேர முடியுமான ஒரு பிராணியில் அதனை விடக் குறைவான பேர் தாராளமாகக் கூட்டுச் சேரலாம். ஏனெனில் அதி குறைந்தபட்ச அளவாக ஏழிலொரு பங்கிருக்க, பங்குதாரர் எண்ணிக்கை குறையும் போது பங்கின் அளவு அதிகரிக்கின்றது. எனவே 7 அல்லது அதற்குக் குறைந்த எண்ணிக்கையுடையோர் ஒரு மாடு அல்லது ஒட்டகத்தில் பங்கு வகிக்கலாம். பங்குதாரர் அனைவரும் சரிசமமாகப் பங்கெடுக்க வேண்டுமென்ற நிபந்தனையும் கிடையாது. ஒருவர் பாதியையும் மீதி அறுவர் மீதியையும் செலுத்தினாலும் பரவாயில்லை.
நரக வேதனையில் ஏற்றத் தாழ்வுண்டு
30- عَنْ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ نَبِيََّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "إِنََّ مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ إِلَى حُجْزَتِهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ إِلَى عُنُقِهِ".
 (صحيح مسلم، رقم الحديث 32 - (2845)، ).
(30) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக, நரகவாசிகளில் சிலரைத் தமது கணுக்கால் வரை நெருப்பு பீடித்துக் கொள்ளும். வேறு சிலரை அவர்களது இடுப்பு வரை பீடித்துக் கொள்ளும். இன்னும் சிலரை அவர்களின் கழுத்து வரை பீடித்துக் கொள்ளும்.  
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2845.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
ஸமுரா பின் ஜுன்துப் அல்பிஸாரீ (ரலி) அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போதே நபியவர்களை சந்தித்தார்கள். அதனால் அவருக்கு இஸ்லாத்திற்கு முன்னைய ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழவில்லை. தனது தந்தையின் மரணத்திற்குப் பின் தாயை மறுமணம் செய்து கொண்டவரின் கண்கானிப்பில் அநாதையாக வளர்ந்து வந்தார்கள். பருவமடைந்த பின் நபியவர்களுடன் ஒரு சில யுத்தங்களில் கலந்து கொண்டார்கள்.
வீரம், குற்றவாளிகளிடத்தில் விட்டுக் கொடுக்காமை போன்ற சில நல்ல பண்புகள் இவரிடமிருந்தது. வழிகெட்ட பிரிவுகளில் ஒன்றான கவாரிஜ்களுடன் இவர்கள் நடந்து கொண்ட விதம் இதற்கு சான்றாகவுள்ளது. இவர் அறிவித்துள்ள நபிமொழிகளின் எண்ணிக்கை 100 ஆகும்.

ஸமுரா (ரலி) இராக்கிலுள்ள பஸராவில் வசித்து வந்தார்கள். அக்காலத்தில கூபா, பஸரா இரண்டிற்கும் கவர்னராக இருந்த ஸியாத் ஓர் ஊரிலிருந்து மறு ஊருக்குச் செல்லும்போது இவர்களை நியமித்துவிட்டுச் செல்வார். இரு ஊர்களிலும் தலா ஆறு மாதங்கள் இருப்பார். இந்த ஸியாத் முஸ்லிம்களைத் தக்க காரணமின்றிக் காபிர் என்று கூறி, அவர்களின் இரத்தத்தை ஓட்டக்கூடிய கவாரிஜ்களுடன் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களில் யாராவது பிடித்து வரப்பட்டால் உடனே கொன்று விடுவார்கள்.
ஹிஜ்ரி 58ல் ஒரு வெந்நீர் நிரம்பிய பாத்திரத்தில் விழுந்ததன் காரணமாக ஸமுரா (ரலி) அவர்கள் மரணித்தார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நரக வேதனையென்பது ஒரே தரத்திலில்லை. காபிர்கள் மற்றும் முஸ்லிம்களில் பாவஞ்செய்தோர் அவர்களின் செயல்களுக்கேற்ப வேறுபடுவார்கள். பெரும்பாவம் செய்தோரின் வேதனை சிறுபாவம் செய்தோரை விட வேறுபட்டிருக்கும். ஏனெனில் பாவங்கள் வேறுபடும் போது அதன் தண்டனைகளும் வேறுபடும்.
(2) எம்மை நரகில் தள்ளக்கூடிய காரணிகளிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். அவை இரு வகைப்படும். இஸ்லாத்தை விட்டும் முற்றாக வெளியேற்றக்கூடிய இணைவைப்பு, இறைநிராகரிப்பு போன்றன. இவை நரகில் நிரந்தரமாகத் தள்ளிவிடும். மற்றது, ஏனைய பாவங்கள். இவை நரகில் நுழையக் காரணமாகக்கூடிய விபச்சாரம், ஓரிணச்சேர்க்கை, களவு போன்றன. இதன்மூலம் அல்லாஹ் நாடினால் நரகில் நுழைய வேண்டியேற்படும். ஆனால் நிரந்தரமாக இருக்கமாட்டார்.
ஹஜ்பெருநாள் தினங்கள்
31- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: "يَوْمُ عَرَفَةَ، وَيَوْمُ النَّحْرِ، وَأَيَّامُ التَّشْرِيْقِ، عِيْدُنَا أَهْلَ الإِسْلاَمِ، وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ".
(سنن أبي داود، رقم الحديث 2419، وجامع الترمذي، رقم الحديث 773، واللفظ لهما، وسنن النسائي، رقم الحديث 3004، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح، وصححه الألباني).


(31) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரபா தினம் (துல் ஹஜ் 9), அந்நஹ்ர் தினம் (துல் ஹஜ் 10), அய்யாமுத் தஷ்ரீக் தினங்கள் (துல் ஹஜ் 11, 12, 13) ஆகியன எங்களுடைய பெருநாட்தினங்கள் முஸ்லிம்களே. அவை உண்டு, பருகி மகிழும் தினங்களாகும்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 2419, திர்மிதி 773, நஸாஈ 3004. இவ்வார்தை முதலிரு நூட்களிலிருந்து பெறப்பட்டது. திர்மிதீ அவர்கள் இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலுள்ளதாகவும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த உக்பா பின் ஆமிர் பின் அபஸ் (ரலி) என்பவர் பிரபலமான நபித்தோழராவார். இவர் அல்குர்ஆனை சிறப்புர ஓதக்கூடிய காரியாகவும், மார்க்க சட்டக்கலை வல்லுனராகவும், சொத்துரிமைக் கலையில் தேர்ந்தவராகவும், கவிஞராகவும், மொழிவல்லுனராகவும் இருந்ததுடன், இஸ்லாமியப் படைத் தளபதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
உக்பா (ரலி) அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக்கூடியவராக இருந்தார்கள். அவரது ஓதலை நபித்தோழர்களில் பலர் செவிமடுத்து, அல்லாஹ்வின் அச்சத்தினால் அவர்களது உள்ளங்கள் அஞ்சி, கண்கள் கண்ணீர் வடிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபியவர்களுடன் உஹது மற்றும் அதன்பின் நடைபெற்ற யுத்தங்களில் கலந்து கொண்டார்கள்.
இவர் எகிப்தை வெற்றிகொண்ட இஸ்லாமியப் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தார். அதற்கு வெகுமதியாக அமீருல் முஃமினீன் முஆவியா (ரலி) அவர்கள் உக்பாவை எகிப்துக்கு கவர்னராக 3 ஆண்டுகளுக்கு நியமித்தார்கள். பின்பு மத்தியதரைக் கடலிலுள்ள ருடோஸ் என்ற தீவைக் கைப்பற்ற அனுப்பினார்கள்.
நபியவர்களைத் தொட்டும் இவர்கள் அறிவித்த பொன்மொழிகள் 55 ஆகும். ஹிஜ்ரி 58ம் ஆண்டு மரணித்து கைரோவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அரபா தினம், அடுத்து வரும் பெருநாள்தினம், அதனைத் தொடர்ந்து வரும் 3 தினங்கள் இஸ்லாத்தில் பெருநாட் தினங்களாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. எனினும் அறுத்துப் பலியிடும் வணக்கம் அரபா தினத்திலன்றி அடுத்த நாளிலிருந்து ஆரம்பித்து 13ம் நாள்வரை நீடிக்கின்றது.
(2) ஹஜ் பெருநாளுடன் தொடபுடைய நாட்கள் ஐந்து உள்ளன. துல்ஹஜ் 10ம் நாளில்தான் பெருநாள் தொழகை போன்ற கிரியைகள் நடைபெறும். அதற்கு முன்தினமாகிய அரபா தினம், பின்தினங்களாகிய 11, 12, 13 ஆகிய நாட்களும் உண்டு, பருகி மகிழும் தினங்கள். அத்தினங்களில் நோன்பு பிடிக்கலாகாது. எனினும் அவ்வருடம் ஹஜ் செய்யாதோர் அரபா தினத்தில் நோன்பு நோற்பது ஸுன்னாவாகும். அதேபோன்று, கிரான் அல்லது தமத்துஃ முறைப்படி ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்து, பலியிட வசதியற்றவர்கள் அதற்குப் பகரமாக இத்தினங்களில் நோன்பு நோற்கலாம்.
(3) பெருநாள் தினத்தின் பிரதான நோக்கம், அதிக வணக்கங்கள் புரிய பருவங்களை ஏற்படுத்தித் தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதாகும்.
(4) வருடத்தின் சிறந்த நாள் ஹஜ்பெருநாள் தினமாகும். அதனால்தான் அத்தினம் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைவிட சிறந்ததாக இருக்கின்றது.

 


நோன்பு, பெருநாள் எல்லாம் மக்களுடன் சேர்ந்தே
32- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "الصَّوْمُ يَوْمَ تَصُوْمُوْنَ، وَالفِطْرُ يَوْمَ تُفْطِرُوْنَ، وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ".
 (جامع الترمذي، رقم الحديث 697، واللفظ له، وسنن أبي داود، رقم الحديث 2324 وسنن ابن ماجه، رقم الحديث 1660، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن غريب، وصححه الألباني).
(32) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நோன்பு (மக்களாகிய) நீங்கள் (சேரந்து) நோற்க்கும் தினம்தான். நோன்பு விடுவதும் (மக்களாகிய) நீங்கள் (சேரந்து) விடும் தினம்தான். உழ்ஹிய்யாவும் (மக்களாகிய) நீங்கள் (சேரந்து) கொடுக்கும் தினம்தான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 2324, திர்மிதி 697, இப்னு மாஜாஃ 1660. இவ்வார்தை திர்மிதியிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இது ஹஸன் கரீப் எனும் தரத்திலுள்ளதாகவும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஊரிலுள்ள ஏனைய முஸ்லிம்களுடன் சேர்ந்தே நோன்பு, பெருநாள், உழ்ஹிய்யா அகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். பிரிவினையைத் தவிர்க்குமுகமாக தனித்துச் செயல்படலாகாது. இதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது.
(2) மக்களை ஒன்று சேர்த்து ஒரே வரிசையில் அணிவகுப்பதும், அதனைக் குழைக்கும் அனைத்துவித தனிக்கருத்துகளை விட்டும் அவர்களைத் தூரமாக்குவதும் இஸ்லாமியப் போதனைகளின் முக்கிய குறிக்கோல்களிலுள்ளதாகும். குறிப்பாக நோன்பு, பெருநாள் தினங்கள், உழ்ஹிய்யா போன்ற கூட்டாகச் செய்யும் வணக்கங்களில் இதனைப் பேண வேண்டும். யதார்த்தத்தில் அத்தனிக்கருத்துக்கள் சில சந்தர்ப்பங்களில் சரியானதாக இருந்தாலும் அவற்றுக்கு எவ்வித மதிப்புமில்லை.

பெரும்பாவங்களை விட்டும் எச்சரிக்கை
33- عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: "ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ، وَالدَّيُّوْثُ، وَثَلاَثَةٌ لاَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ، وَالْمَنَّانُ بِمَا أَعْطَى".
 (سنن النسائي، رقم الحديث 2562، حسنه الألباني وصححه).
(33) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று பேருள்ளனர். அவர்களை அல்லாஹ் தனது கருணைக்கண் கொண்டு மறுமையில் பார்க்க மாட்டான். 1. பெற்றோரைத் துன்புறுத்துபவன். 2. ஆண்களைப் போன்று செயற்படும் பெண். 3. ரோசமற்றவன். தனது குடும்பத்துப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்தும் கண்டிக்காமலிருப்பவன். மேலும் மூவர் சுவனம் நுழைய மாட்டார்கள். 1. பெற்றோரைத் துன்புறுத்துபவன். 2. மதுப்பழக்கத்தில் மூழ்கியிருப்பவன். 3. கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டுபவன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : நஸாஈ 2562. அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும், ஹஸன் என்றும் கூறியுள்ளார்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அல்குர்ஆனிலும் ஸஹீஹான நபிமொழிகளிலும் அல்லாஹ்வுக்கிருப்பதாக வந்துள்ள அனைத்துப் பெயர், பண்புகளையும் மறுக்காமல், மாற்றுக் கருத்து கொடுக்காமல், விதம் கற்பிக்காமல், உவமைப்படுத்தாமல் விசுவாசங் கொள்வது அவசியமாகும். அவ்வாறான பண்புகளிலொன்றுதான் பார்வை. அல்லாஹ் நாடிய நேரத்தில் நாடிய விதத்தில் பார்ப்பான்.
(2) ஆண்களைப் போன்று செயற்படும் பெண் என்பது அவர்களது ஆடை, நடை, பேச்சுத்தொனி போன்றவற்றில் ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்கள். ரோசமற்றவன் என்பது தனது குடும்பத்துப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்தும் கண்டிக்காமலிருப்பவன். மதுப்பழக்கத்தில் மூழ்கியிருப்பவன் என்றால் அதிலேயே திளைத்திருந்து பாவமன்னிப்புத் தேடாமல் மரணிப்பவன்.
(3) கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டுபவனென்றால், ஓருதவியைப் பிறருக்குச் செய்து விட்டு பெருமையடிக்கும் விதத்தில் அதனை மற்றவர்களிடம் சொல்லித் திரிந்து கொண்டேயிருப்பவன். மேற்கூறப்பட்ட பாவங்களிலொன்றைச் செய்தவன் அதற்காக உடனடியாக மரணம் வருமுன் பாவமன்னிப்புத் தேடிட வேண்டும்.
விலையேற்றுதல் கூடாது
34- عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: نَهَى النََّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النََّجْشِ.
(صحيح البخاري، رقم الحديث 2142، واللفظ له،  وصحيح مسلم، رقم الحديث 13 - (1516)،).
(34) நபி (ஸல்) அவர்கள் அவசியமின்றி (பொருட்களின்) விலையை ஏற்றுவதைத் தடை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : புஹாரி 2142, முஸ்லிம் 1516. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.

 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வாடிக்கையாளரை ஏமாற்றும் விதத்தில் மூன்றாம் தரப்பு ஒருவர் மத்திமம் வகித்து விலையேற்றுவதை இஸ்லாம் தடுத்துள்ளது.  
(2) அடிப்படையில் இஸ்லாம் வியாபாரக் கொடுங்கல், வாங்கலை அனுமதித்துள்ளது. விற்பனையாளர், வாடிக்கையைளர் இரு தரப்பினரில் ஒருவருக்குப் பாதகம் ஏற்படும் அனைத்து வியாபார முறைகளையும் தடுத்துள்ளது. அதன் பிரதான காரணிகளாக பொருளைப்பற்றிய சரியான அறிவின்மை, ஏமாற்றம், வட்டி ஆகியனவாகும். இம்மூன்று விடயத்தில் ஒன்று எந்த வியாபாரத்தில் இருக்கின்றதோ அவ்வியாபாரம் தடைசெய்யப் படுகின்றது.
(3) மேற்கண்ட முறைப்படி மூன்றாம் தரப்பால் விலையேற்றி நடைபெறும் வியாபாரம் தடைசெய்யப்பட்டாலும் அது செல்லுபடியாகும். இவ்விடயம் விற்பனையாளருக்குத் தெரியா விடின் விலையேற்றியவர் மாத்திரமே குற்றவாளி. அவ்வாறில்லா விடில் இருவரும் குற்றவாளிகளே.
தொழுகையில் ஸலாம் கொடுத்தபின் ஓதும் திக்ருகள்
35- كَتَبَ الْمُغِيْرَةُ بْنُ شُعْبَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا فَرَغَ مِنَ الصَّلاَةِ وَسَلَّمَ، قَالَ: "لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ".
(صحيح مسلم، رقم الحديث 137- (593)، واللفظ له، وصحيح البخاري، رقم الحديث 844).
(35) நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்தால் பின்வரும் திக்ரை ஓதுவார்கள் என்று முஃகீரா (ரலி) எழுதி அனுப்பினார்கள் :
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி).
ஆதாரம் : புஹாரி 844, முஸ்லிம் 593. இவ்வார்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை எதுவுமில்லை, அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. எங்கள் இரட்சகனே! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவரும் இல்லை, நீ தடுப்பதைக் கொடுப்பவர் எவரும் இல்லை, மதிப்புடைய எவரும் எந்தப் பலனும் அளிக்க மாட்டார், மதிப்பு உன்னிடமே உள்ளது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
தாஇஃப் நகரிலுள்ள ஸகீஃப் கோத்திரத்தைச் சேர்ந்த அபூ அப்தில்லாஹ் என்ற புனைப்பெயர் கொண்ட முஃகீரா பின் ஷுஃபா (ரலி) தாஇப் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டு, அங்கேயே வளர்ந்தவர். இவர் அதிக பிரயாணம் செய்யக்கூடியவராக இருந்தார்கள். அகழ்ப்போர் நடைபெற்ற காலத்தில் இஸ்லாத்தை ஏற்று, ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்து கொண்டார்கள்.
அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் காலத்தில் பாரசீக வெற்றிகளில் பெரும்பங்காற்றியதுடன் யமாமா, யர்மூக், காதிஸிய்யா போன்ற பிரபலமான போர்களிலும் கலந்து கொண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் இவரைக் கூபாவிற்கு கவர்னராக நியமித்தார்கள். பின்பு முஆவியா (ரலி) அவர்களும் அதே இடத்திற்கு நியமித்தார்கள். இறுதிவரை அவர்களே கவர்னராக இருந்தார்கள்.
முஃகீரா (ரலி) அவர்கள் நல்ல புத்திசாலியாகவும், இலக்கியவாதியாவும், அறிவுக்கூர்மையுள்ளவராகவும், எதனையும் வேகமாக அனுமானித்துக் கிரகிக்க கூடியவராகவும் இருந்தார்கள். இவர்கள் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கை 136 ஆகும்.  கூபாவில் தனது 70வது வயதில் ஹிஜ்ரி 50ல் மரணித்தார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட திக்ரை தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்ததும் ஓதுவார்கள் என்பதற்கு இந்பிமொழி ஆதாரமாகவுள்ளது.  
(2) அல்லாஹ், தனது பெயர்கள், பண்புகள், செயற்பாடுகள் அனைத்திலும் தனித்துவமானவன், அனைத்து வணக்கஙகளுக்கும் தகுதியானவன் அவன் மாத்திரமே என்ற ஓரிறைக் கொள்கையைப் பறைசாற்றுவதாக இந்த திக்ர் அமைந்துள்ளது. அவன் மாத்திரமே படைப்பினங்களின் அனைத்து செயற்பாடுகளையும் திட்டமிட்டு செயற்படுத்துகின்றான்.  
(3) 'மதிப்புடைய எவரும் எந்தப் பலனும் அளிக்க மாட்டார், மதிப்பு உன்னிடமே உள்ளது" என்பதன் விளக்கம், வசதி, மதிப்பு போன்ற எந்தவொன்றும் உன்னிடம் பயனளிக்காது. மாறாக நற்செயல்கள் மாத்திரம்தான் பயனளிக்கும். எந்தளவு வசதி வாய்ப்புக்களுடன் மனிதன் இருந்தாலும் அவன் அல்லாஹ்வின்பால் தேவையுடையவனாகவே இருக்கின்றான்.
மாலைவேளேயில் ஓதும் திக்ருகளில் சில
36- عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ كان رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمْسَى قَالَ: "أَمْسَيْـنَا وَأَمْسَـى الْمُـلْكُ لِلَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، لاَ شَرِيْكَ لَهُ، اَللَّهُمََّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ اللَّيْلَةِ وخَـيْرِ مَا فِيْهَا، وَأَعـوْذُ بِكَ مِنْ شَـرِّها وَشَرِّ مَا  فِيْهَـا، اَللَّهُمََّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوْءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ".
(صحيح مسلم، رقم الحديث 76 - (2723)، ).
(36) நபி (ஸல்) அவர்கள் மாலை நேரத்தில் பின்வரும் திக்ரை ஓதுவார்கள் :
أَمْسَيْـنَا وَأَمْسَـى الْمُـلْكُ لِلَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، لاَ شَرِيْكَ لَهُ، اَللَّهُمََّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ اللَّيْلَةِ وخَـيْرِ مَا فِيْهَا، وَأَعـوْذُ بِكَ مِنْ شَـرِّها وَشَرِّ مَا  فِيْهَـا، اَللَّهُمََّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوْءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ".
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2723.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை எதுவுமில்லை, அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன். இறைவா! இந்த இரவின் நலவிலிருந்தும், அதிலுள்ள நலவிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் அதன் தீங்கிலிருந்தும் அதிலுள்ள தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இறைவா! சோம்பல், தள்ளாடும் வயது, தற்பெருமை, இவ்வுலகின் குழப்பம், மண்ணறை வேதனை ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இரவு, பகல் இரண்டையும் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் ஆரம்பித்து அவ்வாறே முடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதில்தான் எமது ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்பு அனைத்தும் தங்கியுள்ளது.  
(2) மாலைநேர திக்ருகளை எப்போது ஓத வேண்டுமென்பதில் அறிஞர்களின் பல கருத்துக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் வலுவான கருத்து : சூரியன் மறையும் வேளையிலாகும். மேற்கண்ட நபிமொழியில் 'இந்த இரவு" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. சூரியன் மறைவதிலிருந்தே இரவு ஆரம்பிக்கின்றது. அதனடிப்படையில் இக்கருத்து வலுவாகத் தெரிகின்றது. இதனை வலுப்படுத்துமுகமாக மற்றுமொரு நபிமொழி இடம்பெற்றுள்ளது. 'உங்களிடம் ரமழான் வந்தால் நோன்பு நோறுங்கள். நீங்கள் மாலையை அடைந்து கொண்டால் நோன்பை விடுங்கள்". இங்கு மாலை என்பது சூரியன் மறைந்தபின் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
சிறந்த மனிதரின் அடையாளமென்ன?
37-عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ:  قِيْلَ لِرَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ النَّاسِ أَفْضَلُ؟  قَالَ: "كُلُّ مَخْمُوْمِ الْقَلْبِ صَدُوْقِ اللِّسَانِ"، قَالُوْا: صَدُوْقُ اللِّسَانِ نَعْرِفُهُ، فَمَا مَخْمُوْمُ الْقَلْبِ؟  قَالَ: " هُوَ التَّقِيُّ النَّقِيُّ، لاَ إِثمَ فِيْهِ، وَلاَ بَغْيَ، وَلاَ غِلَّ،  وَلاَ حَسَدَ".
(سنن ابن ماجه، رقم الحديث 4216، وصححه الألباني).
(37) நபி (ஸல்) அவர்களிடம் மனிதர்களில் சிறந்தவர் யார்? என வினவப்பட்ட போது தூய உள்ளமும், உண்மை நாவும் கொண்டவர்கள் எனக் கூறினார்கள். அப்போது தோழர்கள், உண்மை நாவென்றால் எமக்குத் தெரியும். தூய உள்ளமென்றால் என்ன? என்று வினவுனார்கள். அதற்கு நபியவர்கள், எந்தவொரு பாவமோ, தீய எண்ணமோ, பகைமையோ, பொறாமையோ இல்லாத தூய்மையான இறையச்சமுள்ள உள்ளமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
ஆதாரம் : இப்னு மாஜாஃ 4216. அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
குரைஷிகளில் பனூ ஸுஹைம் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) என்ற இவர் அறியப்பட்ட சிறந்த நபித்தோழராவார். தனது தந்தைக்கு முன்னரே இவர் இஸ்லாத்தில் இணைந்து கொண்டார். இவருடைய 700 பொன்மொழிகள் நபிமொழிக் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன. நபியவர்களுடன் சில யுத்தங்களில் கலந்து கொண்டதுடன், அரசியல் துறையிலும், நிர்வாகத்துரையிலும் இவர்கள் பிரபலமானவராக இருந்தார்கள். இதனால் முஆவியா (ரலி) அவர்கள் தனது ஆட்சியின் போது குறிப்பட்ட காலத்திற்கு கூபா நகரத்திற்கு கவர்னராக நியமித்தார்கள்.
எகிப்திலுள்ள ஜாமிஉல் புஸ்தாத் பள்ளியில் (தற்போது அம்ரு இப்னுல் ஆஸ் பள்ளி) நபியவர்களின் பொன்மொழிகளை அறிவித்துக்கொண்டும், மார்க்கத் தீர்ப்பு வழங்கிக் கொண்டும் இருந்தார்கள். அவரிடமிருந்து எகிப்து, ஸிரியா, ஹிஜாஸ் (தற்போதய மக்கா, மதீனா, ஜித்தா, தாஇப்) போன்ற நகரங்களிலிருந்து அதிகமானோர் கல்வி கற்றுக்கொண்டனர். ஹி. 65ல் எகிப்தில் தனது வீட்டிலே மரணித்து அதே எகிப்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். (இவர் மரணித்த இடம் மக்கா, ஸிரியா என வேறு இரு கருத்துக்களும் உள்ளன).

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) உள்ளத்தை சுத்தப்படுத்தும் சில காரணிகள் இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளன, அவை : இறையச்சம், உண்மை, பாவங்களை விட்டுவிடுதல், அநியாயம், அத்துமீறல், குரோதம், பொறாமை போன்றவற்றைத் தவிர்ந்து கொள்ளல்.
(2) இறையச்சமென்பது, அல்லாஹ்வை அஞ்சி, நேசித்து, கண்ணியப்படுத்தி அவனுக்கு வழிப்பட்டு, மாறு செய்வதை விட்டும் தூரமாகுதல்.
(3) சிறந்த மனிதனாவதற்கான நற்பண்புகள், நற்செயல்கள், நல்வார்த்தைகள் அனைத்தும் சரியான விசுவாசத்தின் மூலமே உருவாகின்றன.
பிறரின் உடமைகளைப் பறிமுதல் செய்யலாகாது
38- عَنْ أَبِيْ أُمَامَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:  "مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِيْنِهِ؛ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ" ؛ فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيْرًا يَا رَسُوْلَ اللَّهِ؟ قَالَ: "وَإِنْ قَضِيْبًا مِنْ أَرَاكٍ".
(صحيح مسلم، رقم الحديث 218 - (137)، ).
(38) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் பிற முஸ்லிமின் உடமையை பொய்ச்சத்தியம் செய்து அபகரிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகை விதியாக்கி, சுவனத்தை தடைசெய்து விடுகின்றான். அப்போது ஒரு மனிதர், அது அற்பப் பொருளாக இருந்தாலுமா? அல்லாஹ்வின் தூதரே! என்று வினவ, 'அது 'அராக்" எனும் மரத்தின் சிறு குச்சியாக (மிஸ்வாக் குச்சி) இருந்தாலும்" என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 137.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அபூ உமாமா என்ற புனைப்பெயரால் அறியப்படும் ஸுதைய் பின் அஜ்லான் பின் வஹ்ப் அல்பாஹிலீ உலகப்பற்றில்லாச் சிறந்த நபித்தோழராவார். இறைவழியில் போரிடுவதை அதிகம் விரும்பும் இவர் எந்தவொரு போரிலிருந்தும் பின்வாங்காமல் நபியவர்களுடனேயே இருந்தார்கள். நபியவர்களின் ஏவலுக்கமைய தனது தாய்க்குப் பணிவிடை செய்வதற்காக பத்ருப்போரில் கலந்து கொள்ளவில்லை, தவிர மற்ற எந்தப்போரிலிருந்தும் விலகியிருக்கவில்லை. அதேபோன்று கலீபாக்களின் காலத்திலும் அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். இவர்கள் அறிவித்த 250 நபிமொழிகள் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன. ஸிரியாவில் வசித்து வந்ததுடன் அங்குள்ள ஹிம்ஸ் எனும் ஊரில் ஹி. 81ல் மரணித்தார்கள்.  
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அனைத்துக் கெடுதிகளினதும் பிறப்பிடம் அநியாயமே. எச்சமூகத்தில் அநியாயம் தலைவிரித்தாடுகிறதோ அச்சமூகத்திற்கு அழிவு நிச்சயம். அதனால்தான் அநியாயத்தின் முதற்படியான பிறரின் உடமைகளை அபகரிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.
(2) அநீதியிழைக்கப்பட்டவரிடம் அதற்கான தக்க சான்றுகள் இல்லாவிடினும், அபகரித்தவனின் வாதம் உடமையிழந்தவரின் சான்றைவிட பலமாயிருந்தாலும் அல்லாஹ்விடத்தில் அது எவ்வித மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்த மாட்டாது. இரு தரப்பினரும் எந்த இனம்? எந்த மதம்? என்ற பாகுபாடின்றி உரிமைகளை அதற்குரியவர்களுக்குப் பாதுகாத்துக் கொடுப்பதில் இஸ்லாம் எந்தளவு அக்கரை செலுத்துகின்றது என்பதை இங்கு நாம் அவதானிக்கலாம்.  

 

துன்பத்தில் பொறுமை காப்போம்
39- عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، زَوْجِ النَّبيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ  قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: "مَا مِنْ مُصِيْبَةٍ تُصِيْبُ الْمُسْلِمَ إِلاَّ كَفَّرَ اللَّهُ عَنْهُ بِهَا حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا".
صحيح البخاري، رقم الحديث 5640، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 50 - (2572)،).
(39) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் எவ்வித சோதனையாக- அது காலில் தேய்க்கும் முள்ளாக- இருந்தாலும் அதனை அல்லாஹ் அம்முஸ்லிமுக்கு குற்றப்பரிகாரமாக ஆக்குகின்றான்.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் : புஹாரி 5640, முஸ்லிம் 2572. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 16ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) சோதனைகள் எவ்வளவு உயரத்தைத் தொட்டாலும் அச்சந்தர்ப்பத்தில் பொறுமை காப்பது எமக்கு அவசியமாகும்.  
(2) உலகில் ஒரு முஸ்லிமுக்கு வரும் சோதனைகள் பல காரணங்களுக்காக ஏற்படலாம். அவன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக வரலாம். அவனுடைய பதவி உயர்வுக்காக வரலாம். எனவே அவ்வாறு வரும் துன்பங்களில் ஈருலகிற்கும் நலவிருப்பதாக உறுதிபூண்டு, அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக்கொள்ள வேண்டும்.
சுவனத்துக்கல் 'ஹஜருல் அஸ்வத்"
40- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "نَزَلَ الْحَجْرُ الْأَسْوَدُ مِنَ الجنَّةِ وَهُوَ أشدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ؛ فَسََوَّدَتْهُ خَطَايَا بَنِيْ آدَمَ".
(جامع الترمذي، رقم الحديث 877، قال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح، وصححه الألباني).

(40) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாலை விட வெண்ணிறத்தில் ஹஜருல் அஸ்வத் கல் சுவனத்திலிருந்து இறங்கியது. மனிதர்களின் பாவச்செயல்களே அதனைக் கருமையாக்கியது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).
ஆதாரம் : திர்மிதி 877. அவர்கள் இதனை ஹஸன் ஸஹீஹ் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 6ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வழுக்கலான ஒரு கல்லிலேயே பாவங்கள் தாக்கம் செலுத்துகின்றதென்றால் உள்ளத்தில் அதனுடைய தாக்கம் எவ்வாறிருக்கும்?
(2) ஹஜருல் அஸ்வத் கல் : கஃபாவின் தென்கிழக்குத் திசையில் ஒரு வெள்ளை கவரால் வெளிப்புறமாக அடைக்கப் பட்டிருக்கின்றது. அவ்விடத்திலிருந்துதான் தவாப் ஆரம்பிக்கப் படுகின்றது. தரைமட்டத்திலிருந்து சுமார் ஒன்றரை மீட்டரளவு உயரத்திலுள்ளது.
(3) இக்கல்லால் எவ்வித நலவோ கெடுதியோ கிடையாது. அதனை முத்தமிடுவது நபியவர்களின் ஸுன்னாவைக் கடைபிடிப்பதற்காகவே தவிர அக்கல்லை வணங்குவதற்காக அல்ல. ஏனையோருக்கு இடையூறு விளைவிக்காமல் முடியுமான பட்சத்தில் தவாப் செய்யும்போது அதனை முத்தமிடுவது ஸுன்னாவாகும்.
பிரயாணியின் நோன்பு
41-عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ: كُنَّا نُسَافِرُ مَعَ النَّبيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ؛ فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلاَ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ.
(صحيح البخاري، رقم الحديث 1947، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 98 - (1118)،).
(41) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ரமழானில்) பிரயாணிப்போம். எங்களில் நோன்பாளிகள் நோன்பை விட்டவர்களையோ, நோன்பை விட்டவர்கள் நோன்பாளிகளையோ குறைகாண மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : புஹாரி 1947 முஸ்லிம் 1118. இவ்வார்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பிரயாணிக்கு நோன்பை விட அனுமதியுண்டு. சக்தியிருந்தால் நோற்கலாம். அதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது.  
(2) இஸ்லாம் இலகுபடுத்திக் கொடுக்கும் மார்க்கமென்பதற்கு இச்சலுகையும் ஓர் உதாரணமாகும். பிரயாணிக்கு நோன்பு பிடித்துத்தான் ஆக வேண்டுமென்று பணிக்கவில்லை. மாறாக முடியுமானால் நோற்கலாம். முடியாவிட்டால் பிறிதொரு நாளில் நோற்கலாம்.
இல்லறத்தில் தகாதமுறை
42- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ جَامَعَ امْرَأَتَهُ فِي دُبُرِهَا".
(سنن ابن ماجه، رقم الحديث 1923، وصححه الألباني).
(42) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனது மனைவியின் மலவாயிலில் புணரக்கூடியவனை அல்லாஹ் (மறுமையில் கருணைக்கண் கொண்டு) பார்க்க மாட்டான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : இப்னு மாஜாஃ 1923. அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பெண்ணின் மலவாயிலில் புணர்வதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஏனெனில் இது இயற்கைக்குப் புறம்பான செயலாகும். பின்பு இது, அல்லாஹ்வுடைய கோபத்தையும் சாபத்தையும் தேடித்தருவதுடன் பலவிதமான நோய்களுக்கும் காரணமாக அமைகின்றது.
(2) இவ்வாறு ஈடுபடுபவன் பெரிய பாவமொன்றை செய்தவனாவான். எனவே உடனடியாகத் தௌபாச்செய்து மீள வேண்டும்.  
(3) குழந்தை உற்பத்தியாவதற்கான விளைநிலமாகிய முன்பகுதியில் எத்திசையிலிருந்தும் புணரலாம். ஆனால் பின்பகுதி உறவுக்குரிய இடமல்ல.
தயம்முமின் சட்டங்கள் சில
43- عَنْ أَبِيْ سَعِيْدٍ اَلْخُدْرِيِّ  رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ: خَرَجَ رَجُلاَنِ فِيْ سَفَرٍ؛ فَحَضَرَتِ الصَّلاَةُ وَلَيْسَ مَعهُمَا مَاءٌ؛  فَتَيَمَّمَا صَعِيْداً طَيِّباً؛ فَصَلَّيَا، ثُمَّ وَجَدَا الْماءَ فِي الْوقْتِ؛ فَأَعَادَ أحَدُهُمَا الصَّلاَةَ وَالوُضُوْءَ، وَلَمْ يُعِدِ الآخَرُ، ثُمَّ أتَيَا رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَذَكَرَا ذَلِكَ لَـهُ؛ فَقَالَ لِلَّذِيْ لَمْ يُعِدْ: "أصَبْتَ السُّنَّةَ وَأَجْزأَتْكَ صَلاَتُكَ"، وقَالَ لِلآخَرِ: "لَكَ الأجْرُ مَرَّتَيْنِ".
 (سنن أبي داود، رقم الحديث 338، واللفظ له، وسنن النسائي، رقم الحديث 433، وصححه الألباني).
(43) இரண்டு பேர் ஒரு பிரயாணம் சென்றார்கள். அவ்விருவரிடமும் நீரில்லாத நிலையில் தொழுகை நேரம் வந்தது. இருவரும் தயம்மும் செய்து தொழுதார்கள். பின்னர் சற்று நேரத்தில் அவர்களுக்கு நீர் கிடைத்து. ஒருவர் வுழூவையும், தொழுகையையும் மீட்டினார். மற்றவர் மீட்டவில்லை. அவ்விருவரும் அதனை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபியவர்கள் தொழுகையை மீட்டாதவரைப் பார்த்து 'ஸுன்னாப்படி செய்திருக்கிறீர். உமது தொழுகை செல்லுபடியாகும்" என்றும், மீட்டியவரைப் பார்த்து 'உமக்கு இரு மடங்கு கூலியுண்டு" என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 338, நஸாஈ 433. இவ்வார்தை அபூ தாவூதிலிருந்து பெறப்பட்டது. அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மதீனாவின் அன்ஸாரிகளில் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அபூ ஸஈத் அல்குத்ரீ என்ற (புனைப்பெயருள்ள) இவரின் பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் (ரலி) என்பதாகும். இவர் நபித்தோழர்களில் அறியப்பட்டவராகவும், சிறந்த அறிஞர்களில் ஒருவராகவும் உள்ளார். இவர் கலந்துகொண்ட முதல் யுத்தம் கன்தக் ஆகும். நபியவர்களுடன் 12 யுத்தங்களில் கலந்து கொண்ட இவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த 1170 பொன்மொழிகள் நபிமொழிக் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன. தனது 86வது வயதில் ஹி. 74ல் மதீனாவில் மரித்து பகீஇல் அடக்கப்பட்டார்கள். (இவரது மரணத்திகதி பற்றி) வேறு கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இஸ்லாம் இலகுவான ஒரு மார்க்கம். அதில் எவ்வித சிரமமும் இல்லை. வணக்கவழிபாடுகளின் போது சிரமங்களிருந்தால் அதனை இலகுவாக நிறைவேற்றும் பொருட்டு அல்லாஹ் சில சலுகைகளை வழங்குகின்றான்.
(2) ஒரு தொழுகையின் ஆரம்ப நேரத்தில் தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும். தொழுகை முடிந்தபின் தண்ணீர் கிடைத்தால் மீண்டும் அத்தொழுகையை மீட்டவேண்டிய அவசியமில்லை. ஆனால், தொழுது கொண்டிருக்கும் போது தண்ணீர் கிடைத்தால் உடனே தொழுகையை இடைநிறுத்தி வுழூச் செய்துகொண்டு மீண்டும் அத்தொழுகையை ஆரம்பித்துத் தொழ வேண்டும். ஏனெனில் தண்ணீர் கிடைக்காவிட்டால் என்றுதான் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. எப்போது தண்ணீர் பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கின்றதோ அப்போதே தயம்மும் முறிந்து விடுகின்றது.

 

பெண்பிள்ளைகளைப் பராமரிப்போம்
44-عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ عَالَ جَارِيَتَيْنِ دَخَلْتُ أَنَا وَهُوَ الْجَنَّةَ كَهَاتَيْنِ وَأَشَارَ بِإِصْبَعَيْهِ".
(جامع الترمذي، رقم الحديث 1914، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 149 -(2631)، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن غريب، وصححه الألباني).
(44) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இரு பெண்பிள்ளைகளை திறன்பட வளர்க்கிறாரோ அவரும் நானும் சுவனத்தில் இவ்வாறு நுழைவோம் என்று கூறி இரு விரல்களையும் சேர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2631, திர்மிதி 1914. இவ்வார்தை திர்மிதியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பெண்பிள்ளைகள் அல்லாஹ்வின் அருட்கொடை. அவர்களை நல்லெண்ணத்துடன் வளர்த்தெடுப்பதால் சுவனம் நுழையலாம்.
(2) அவர்களுக்கு நல்ல முறையில் செலவு செய்து, அவர்களைப் பராமரிப்பதன் சிறப்பை இந்நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது.
(2) பெண்பிள்ளைகள் சமூகத்தின் சாபக்கேடு என அறியாமைக் கால மக்கள் எண்ணிக்கொணடிருந்தனர். அதனால் அவர்களுக்கு எவ்வித கல்வியுரிமை, சொத்துரிமைகளையும் வழங்காமல் பெண்களைத் தமது இச்சையைப் போக்கும் ஓர் இயந்திரமாகவே பார்த்தார்கள். அந்த நிலையை மாற்றித்தான் இஸ்லாம் இந்த சிறப்புக்களை பெண்பிள்ளைக்கு வழங்கியுள்ளது.
பள்ளிவாசலுடன் தொடர்புடைய துஆக்கள் சில (1)
45- عَنْ أَبِيْ حُمَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ :  قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِذَا دَخَلَ أحَدُكُمُ المَسْجِدَ؛ فَلْيَقُلْ: اَللَّهُمَّ افْتَحْ لِيْ أبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ: اَللَّهمَّ إِنِّيْ أسْألُكَ مِنْ فَضْلِكَ".
(صحيح مسلم، رقم الحديث 68 - (713)، ).
(45) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழையும்போது اَللَّهُمَّ افْتَحْ لِيْ أبْوَابَ رَحْمَتِكَ என்றும் வெளிவரும்போது اَللَّهمَّ إِنِّيْ أسْألُكَ مِنْ فَضْلِكَ என்றும் கூறுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுமைத் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 713.
பொருள் :
பள்ளிக்குள் நுழையும் போது : இறைவா! உனது அருள் வாயில்களை எனக்குத் திறந்து தருவாயாக.
பள்ளியிலிருந்து வெளியேரும் போது : இறைவா! உனது சிறப்புக்களிலிருந்து உன்னிடம் வேண்டுகிறேன்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மதீனாவின் அன்ஸாரிகளில் பனூ ஸாஇதா குடும்பத்தைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் பின் முன்திர் (ரலி) என்ற ஸஹாபி அபூ ஹுமைத் என்ற புனைப்பெயர் மூலம் பிரபலமடைந்தவர்கள். நபித்தோழர்களில் மார்க்க சட்டக்கலை வல்லுனர்களில் இவரும் ஒருவர். மதீனாவில் ஹிஜ்ரி 60ல் மரணித்தார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பள்ளிக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் பலவிதமான துஆக்கள் வந்துள்ளன. அவற்றில் மேற்கண்ட துஆவும் ஒன்று. இரு சந்தர்ப்பங்களிலும் முதலில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லிவிட்டுத்தான் இந்நபிமொழியில் வந்துள்ள துஆக்களை ஓத வேண்டும். இதுபற்றி அபூ தாவூத் (465), திர்மிதீ (314), இப்னு மாஜாஃ (772, 773) போன்ற நூட்களில் நபிமொழிகள் உள்ளன.
(2) நுழையும் போது அருளும், வெளியேறும் போது சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காரணம், பள்ளிக்குள் நுழைந்தால் அங்கு அல்லாஹ்வை நெருங்குவதற்கான முறைகளைக் கையாள்வோம். அல்லாஹ்வின் நெருக்கத்திற்கு மிக அவசியமானது அவனது அருளே.
வெளியே வந்தால் ஹலாலான வாழ்வாதாரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றோம். அதை அதிகப்படுத்தித் தருவது அல்லாஹ்வின் சிறப்பிலுள்ளது.

 


பள்ளிவாசலுடன் தொடர்புடைய துஆக்கள் சில (2)
46- عَنْ فَاطِمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ المَسْجِدَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ، وَقَالَ: "رَبِّ اغْفِرْ لِيْ ذُنُوبِيْ، وَافْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ"، وَإِذَا خَرَجَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ، وَقَالَ: "رَبِّ اغْفِرْ لِيْ ذُنُوبِيْ، وَافْتَحْ لِيْ أَبْوَابَ فَضْلِكَ".
(جامع الترمذي، رقم الحديث 314، واللفظ له، وسنن ابن ماجه، رقم الحديث 771، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن، وصححه الألباني).

(46) நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்குள் நுழையும்போது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லிவிட்டு
 رَبِّ اغْفِرْ لِيْ ذُنُوبِيْ، وَافْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
என்றும், வெளியேறும்போது அதேபோன்று ஸலவாத்தும் ஸலாமும் சொல்லிவிட்டு
رَبِّ اغْفِرْ لِيْ ذُنُوبِيْ، وَافْتَحْ لِيْ أَبْوَابَ فَضْلِكَ என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : பாத்திமா (ரலி).
ஆதாரம் : திர்மிதி 314, இப்னு மாஜாஃ 771. இவ்வார்த்தை திர்மிதீயிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இதனை ஹஸன் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
பொருள் :
பள்ளிக்குள் நுழையும் போது : இறைவா! எனது பாவங்களை மன்னித்து, உனது அருள் வாயில்களை எனக்குத் திறந்து தருவாயாக.
பள்ளியிலிருந்து வெளியேரும் போது : இறைவா! எனது பாவங்களை மன்னித்து, உனது சிறப்பான வாழ்வாதார வாயில்களை எனக்குத் திறந்து தருவாயாக.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
நபி (ஸல்) அவர்கள் – அன்னை கதீஜா பின்து குவைலித் (ரலி) தம்பதியினருக்கு நபித்துவத்துக்கு முன் இறுதியாகப் பிறந்த பெண்குழந்தை அன்னை பாத்திமா (ரலி) அவர்களே. நபித்துவ சூழலில் பத்தினித் தன்மை, சுயகௌரவம், அழகிய குணங்களுடன் வளர்ந்த இவர்கள் தனது தந்தை (ஸல்) அவர்களையே தனது எல்லா விடயங்களிலும் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டார்கள். பொறுமை, நன்றியுணர்வு, அதிக வணக்கம், மார்க்கப்பற்று போன்ற பல பண்புகளைக் கொண்டிருந்தார்கள்.
இவர்களது சிறப்புக்கள் பற்றி பல நபிமொழிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று : நிச்சயமாக இதோ ஒரு வானவர் வந்துள்ளார். இந்த இரவிற்கு முன்னர் இவர் பூமிக்கு இறங்கியதே கிடையாது. எனக்கு ஸலாம் சொல்லவும், பாத்திமாதான் சுவனத்துப் பெண்களுக்கெல்லாம் தலைவி, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் சுவனத்து வாலிபர்களின் தலைவர்கள் என்று நற்செய்தி கூறவும் தனது இறைவனிடத்தில் அனுமதி கேட்டுள்ளார். (திர்மிதி 3781, அவர்கள் இதனை ஹஸன் கரீப் எனும் தரத்திலுள்ளதாகவும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.)
அன்னையாருக்கு 15 வயதும் 5 மாதங்களுமிருக்கும் போது அலீ (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் அன்னையரை அதிகம் நேசிப்பவராகவும், மதிப்பவராகவும் இருந்தார்கள்.
நபியவர்கள் மரணித்து 6 மாதங்களின் பின் ஹிஜ்ரி 11 ரமழான் 3ம் நாள் அன்னையவர்கள் மரணித்து பகீஃஇல் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பள்ளிக்குள் நுழையும் போது ஓதும் துஆ இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொன்னதன் பின்னர் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதற்குப் பல முறைகள் உள்ளன. அவற்றில் சில :
முறை 01 :
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ.
(புஹாரி 3370, முஸ்லிம் 406. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டுள்ளது)


முறை 02 :
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ.
(புஹாரி 6358.)
முறை 03 :
اَلَّلهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ؛ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ.
(புஹாரி 3369, முஸ்லிம் 407. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டுள்ளது)
முறை 04 :
اَلَّلهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
(நஸாஈ 1292. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்)
(2) அல்லாஹ் நபிகளாரின் மீது ஸலவாத் சொல்வதென்றால் அவன் அவர்களை கண்ணியப்படுத்தி வானவர்கள் மத்தியில் புகழ்வதாகும். 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்" என்றால் 'இறைவா! ஈருலகிலும் அண்ணலாரின் தகுதிக்கேற்ப அவர்களை கண்ணியப்படுத்துவாயாக" என்பதாகும்.
(3) நபிகளார் மீது ஸலாம் சொல்வதற்கும் பல முறைகளுள்ளன. அவற்றில் சில :
1. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
2. اَلسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ
3. اَلسَّلاَمُ عَلَيْكَ يَا نبي الله
4. اَلسَّلاَمُ عَلَى النَّبِيِّ
ஸலவாத்தும் ஸலாமும் எங்கிருந்து சொன்னாலும் வானவர்களினூடாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும். (பார்க்க: நஸாஈ 1282, அபூதாவூத் 2042. இரு நபிமொழிகளையும் அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்)
தொழுவோரை நோவினை செய்யலாகாது
47-عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : "مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّوْمَ وَالْكُرَّاثَ؛ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا؛ فَإِنَّ الْمَلائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ".
(صحيح مسلم، رقم الحديث 74 - (564)، واللفظ له،  وصحيح البخاري، رقم الحديث 854 ،).
(47) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வெள்ளைப் பூண்டு, வெங்காயம், லீக்ஸ் போன்றவற்றை உண்டவர்கள் (அதன் வாடை நீங்கும் வரை) எமது மஸ்ஜிதுக்கு வர வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் நோவினைப்படும் அனைத்தினாலும் வானவர்களும் நோவினைப்படுகின்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).
ஆதாரம் : புஹாரி 854, முஸ்லிம் 564. இவ்வார்த்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டுள்ளது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 22ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வெள்ளைப் பூண்டு, வெங்காயம், லீக்ஸ் போன்றவற்றை உண்டவர்கள் (அதன் வாடை நீங்கும் வரை) எமது மஸ்ஜிதுக்கு சமூகந்தராமலிருப்பது அவசியமாகும். அதன் துர்வாடையினால் தொழுவோர் சிரமப்படுகின்றனர். தொழுவோரை நோவினைப் படுத்தியவன் அங்கு சமூகந்தரும் வானவர்களையும் நோவினைப் படுத்துகின்றான்.
(2) மேற்கூறப்பட்டவை போன்று நாற்றம் வீசும் அனைத்தையும் தவிரந்து கொள்ள வேண்டும். ஸிகரட் புகைத்தல், அழுக்குப் படிந்த ஆடைகள், சொக்ஸ்கள் போன்றவற்றில் பள்ளிக்குள் செல்ல முன் கவனமெடுக்க வேண்டும். இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பூண்டு, வெங்காயம், லீக்ஸ் போன்றவற்றை உண்டவர்களே பள்ளிக்குள் வர வேண்டாமெனத் தடுக்கப் பட்டிருக்கும் போது, ஹராமான மது, ஸிகரட் போன்றவற்றுக்கு அடிமையானவர்களின் நிலை என்னவென்பதை இங்கு சிந்திக்க வேண்டும்.
(3) பள்ளிக்குச் செல்லும் போது எம்மை நாம் அழகாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். குளித்து, அழகாக வழூச் செய்து, நறுமணம் பூசி, அழகான ஆடையணிந்து செல்ல முயற்சிக்க வேண்டும்.
தொலைந்த பொருளை பள்ளியில் தேடலாகாது
48- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُوْلُ:  قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ؛ فَلْيَقُلْ: لاَ رَدََّهَا اللَّهُ عَلَيْكَ؛ فَإِنََّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا".
 (صحيح مسلم، رقم الحديث 79 -(568)، ).
(48) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொலைந்த ஒரு பொருளை மஸ்ஜிதில் யாராவது தேடுவதைக் கேட்டால் அவனைப் பார்த்து 'அல்லாஹ் உமது பொருளைத் திருப்பித் தராமலிருக்கட்டும்" என்று கூறுங்கள். ஏனெனில் பள்ளிகள் இதற்காகக் கட்டப்படவில்லை.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 568.

 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பள்ளிகள் என்பது பூமியில் மிகச் சிறந்த இடமாகவும், அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடமாகவுமுள்ளது. இஸ்லாத்தில் இதற்கென தனித்துவமும், உயர்ந்த இடமும் உள்ளது. அதனைப் பேணுவது அவசியமாகும்.
(2) காணாமல் போன பொருளோ, பணமோ எதனையும் பள்ளியில் தேடுவதோ, அது பற்றி அறிவிப்பதோ கூடாது. ஏனெனில் பள்ளிகள் இதற்காகக் கட்டப்படவில்லை. அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கும், அவனுக்கு வழிப்பட்டு, அவனை வணங்குவதற்கும், அவனது வேதத்தை ஓதுவதற்கும், அவனது மார்க்கக் கல்வியைப் பரப்பவுமே கட்டப்பட்டுள்ளது. எனினும் அது பற்றி ஒரு தாளில் எழுதி பள்ளியின் வெளிப்பகுதியில் தொங்கவிடுவதோ, அறிவிப்புச் செய்வதோ தடை செய்யப்பட வில்லை.
(3) பள்ளிகள் என்பது அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கட்டப்பட்டவை. அதில் வேறு யாரும் வணங்கப்படவோ, அழைக்கப்படவோ கூடாது. அதில் நுழைபவர் அல்லாஹ்வுக்கென உளத்தூய்மையுடன்தான் செயற்பட வேண்டும். இதுபற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது : 'நிச்சயமாக பள்ளிகள் அல்லாஹ்வுக்குரியனவே, அவற்றில் அல்லாஹ்வுடன் சேர்த்து வேறு யாரையும் அழைத்திடாதீர்". (ஜின் : 18) அது போன்றுதான் காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாகாது. அவ்வாறு தேடுவதைக் கேட்டால் அவனுக்கு அப்பொருள் கிடைக்கக் கூடாதெனக் கூறுமாறு பணிக்கப்பட்டுள்ளோம்.
வித்ருடைய குனூத்
49- عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: عَلَّمَنِيْ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُوْلُهُنَّ فِيْ قُنُوْتِ الْوِتْرِ: "اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّ مَا قْضَيْتَ؛ إِنَّكَ تَقْضِىْ وَلاَ يُقْضَى عَلَيْكَ، وَإنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَّالَيْتَ، وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ".
(سنن أبي داود، رقم الحديث 1425، واللفظ له، وجامع الترمذي، رقم الحديث 464، وسنن النسائي، رقم الحديث 1745، وسنن ابن ماجه، رقم الحديث  1178، قال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن، وصححه الألباني).
(49) நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையின் இறுதியில் குனூதில் ஓத பின்வரும் வார்த்தைகளைக் கற்றுத் தந்தார்கள் :
اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّمَا قْضَيْتَ؛ إِنَّكَ تَقْضِىْ وَلاَ يُقْضَى عَلَيْكَ، وَإنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَّالَيْتَ، وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ.
அறிவுப்பவர் : ஹஸன் (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 1425, திர்மிதி 464, நஸாஈ 1745, இப்னு மாஜாஃ 1178. இவ்வார்த்தை அபூ தாவூதிலிருந்து பெறப்பட்டது. இமாம் திர்மிதீ இதனை ஹஸன் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.


பொருள் :
இறைவா! நீ நேர்வழி காட்டியோரில் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ ஆரோக்கியமளித்தோரில் எனக்கும் ஆரோக்கிய மளிப்பாயாக. நீ பொறுப்பெடுத்தோரில் என்னையும் பொறுப்பெடுப் பாயாக. நீ கொடுத்ததில் எனக்கு செழிப்பை வழங்குவாயாக. நீ விதித்தவற்றிலுள்ள தீங்கை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக. நிச்சயமாக நீ தான் தீர்ப்பு வழங்கக் கூடியவன் உனக்கெதிராக தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. மேலும் நிச்சயமாக, உன்னை நேசித்த யாரும் இழிவடைவதில்லை. உன்னை எதிர்த்த யாரும் உயர்வடைவதுமில்லை. எங்கள் இறைவனே! நீ தூய்மையாகி விட்டாய். உயர்வடைந்து விட்டாய்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
நபி (ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையும், அன்னை பாத்திமா (ரலி) – அலீ (ரலி) தம்பதியினருக்கு ஹிஜ்ரி 3ல் பிறந்த ஆண்குழந்தையுமான அபூ முஹம்மத் ஹஸன் (ரலி) அவர்கள் குரைஷிக் கோத்திரத்தில் ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிறந்ததும் நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்துண்டை தமது வாயில் மென்று இவர்களின் வாயில் வைத்துவிட்டு ஹஸன் எனப் பெயரிட்டார்கள். இத்தம்பதியினருக்கு இவர்தான் முதல் குழந்தை. தனது பாட்டனார் நபிகளாரைத் தொட்டும் 13 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்கள்.
புத்திக்கூர்மை, நிதானம் போன்ற நற்குணங்களுக்கு சொந்தக் காரரான இவர்கள் முஸ்லிம்களின் உயிரைப் பாதுகாப்பதிலும், அவர்களின் ஒற்றுமையிலும் அதிக அக்கரையுள்ளவர்களாக இருந் தார்கள். ஹிஜ்ரி 41ம் ஆண்டு இரு கோணங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம்களை ஓராட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்கில் தனது பதவியை முஆவியா (ரலி) அவர்களுக்கு விட்டுக்கொடுத்ததே இதற்கு பெரிய சான்றாகவுள்ளது. ஒரு கலீபாவின் கீழ் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்ததால் அவ்வாண்டுக்கு 'ஆமுல் ஜமாஆஃ" ஒற்றுமை ஆண்டு எனப் பெயரிடப்பட்டது.
ஹஸன் (ரலி) அவர்களின் சிறப்புக்கள் ஏராளமாக உள்ளன. அதிலொன்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஹஸனும், ஹுஸைனும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்கள். (திர்மிதீ 3768. அவர்கள் இதனை ஹஸன் ஸஹீஹ் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.)
தனது 47வது வயதில் ஹிஜ்ரி 49 அல்லது 50ல் மதீனாவில் மரணித்து பகீஃல் தனது அன்னை பாத்திமா (ரலி) அவர்களுக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.


 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) குனூத் என்பது தொழுகையில் ருகூஃவிற்குப் பின் நடுநிலையில் சற்று தாமதித்துக் கேட்கும் ஒரு வித துஆவாகும். நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாக எந்தவொரு ஆதார பூர்வமான அறிவிப்புக்களும் இல்லை. எனினும் ஹஸன் (ரலி) அவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தார்கள். எனவே வழமையாகவின்றி சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு குனூத் ஓதலாம்.
(2) அடிப்படையில் குனூத் என்பது வித்ரு தொழுகையில் ருகூஃவிற்குப் பின் நடுநிலையில் தான் ஓத வேண்டும். எனினும் ருகூஃவிற்கு முன்னரும் ஓதலாம். அதிலும் மேற்கண்ட குனூதையே ஓத வேண்டும்.
விடுபட்ட வித்ரு தொழுகையை எவ்வாறு தொழுவது?
50- عَنْ أَبِيْ سَعِيْدٍ اَلْخُدْرِيِّ  رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ نَامَ عَنِ الْوِتْرِ أَوْ نَسِيَهُ؛ فَلْيُصَلِّ إِذَا ذَكَرَ وَإِذاَ اسْتَيْقَظَ".
(جامع الترمذي، رقم الحديث 465، واللفظ له، وسنن أبي داود، رقم الحديث 1431، وسنن ابن ماجه، رقم الحديث 1188، وصححه الألباني).
(50) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வித்ரு தொழாமல் யாராவது தூங்கினால், அல்லது மறந்தால் அவர் நினைவு வந்ததும், அல்லது விழித்ததும் அதனைத் தொழுது கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 1431, திர்மிதி 465, இப்னு மாஜாஃ 1188. இவ்வார்த்தை திர்மிதீயிலிருந்து பெறப்பட்டது. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 43ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வித்ரு தொழுகையை மறந்தவர், அல்லது தொழாமல் தூங்கியவர் எந்நேரத்திலும் சரி விழித்தவுடன் அல்லது நினைவு வந்தவுடன் அதனைத் தொழ வேண்டுமென்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. இதனை வலுப்படுத்தும் விதத்தில் முஸ்லிமிலும் (684) ஒரு பொதுவான நபிமொழி பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : 'ஒரு தொழுகையை ஒருவர் மறந்தால் அல்லது தொழாமல் தூங்கினால் நினைவு வந்ததும் அதனைத் தொழுவதே அதற்குறிய பரிகாரமாகும்".
(2) இன்னும் சில அறிஞர்கள், வித்ரு தொழ முடியாமல் தூக்கம் மிகைத்தால் மறுநாள் காலையில் ளுஹாத் தொழுகை நேரத்தில் அதனை இரட்டையாக நிறைவேற்ற வேண்டுமெனக் கூறுகின்றனர். விடுபட்ட வித்ரு தொழுகையை காலையில் தொழுவோருக்கு இதுவே சிறந்தது. ஏனெனில், இது பற்றி ஆஇஷா (ரலி) அறிவிக்கும் பின்வரும் நபிமொழி முஸ்லிமில் (746) இடம்பெற்றுள்ளது : 'நபியவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதனைத் தொடர்ந்து நிறைவேற்ற விரும்புவார்கள். இரவுத் தொழகையின் போது அவர்களுக்கு தூக்கம் மிகைத்தால் அல்லது சிரமம் ஏற்பட்டால் மறுநாள் பகல் வேளையில் இரட்டையாக 12 ரக்அத்கள் தொழுவார்கள்".
(3) இவ்வாறு வித்ரு தொழுகை விடுபட்டவர்கள் இரவிலேயே நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஒற்றையாகவும், அவ்வாறில்லாவிடில் பகலில் இரட்டையாகவும் நிறைவேற்ற வேண்டுமென்பதே மேற்கண்ட இரு கருத்துக்களின் சாரம்சம்.


வித்ரு தொழுகையின் நேரம்
51- عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ خَافَ أَنْ لاَ يَقُوْمَ مِنْ آخِرِ اللَّيْلِ؛ فَلْيُوْتِرْ أَوَّلَهُ، وَمَنْ طَمِعَ أَنْ يَقُوْمَ آخِرَهُ؛ فَلْيُوْتِرْ آخِرَ اللَّيْلِ؛ فَإِنَّ صَلاَةَ آخِرِ اللَّيْلِ مَشْهُوْدَةٌ، وَذَلِكَ أَفْضَلُ".
(صحيح مسلم، رقم الحديث 162 -(755)، ).
(51) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழ முடியாதென யாராவது அஞ்சினால் அவர் ஆரம்பத்திலேயே தொழுது கொள்ளட்டும். இறுதிப் பகுதியில் தொழ விரும்புவோர் அவ்வாறே தொழுது கொள்ளட்டும். ஏனெனில் இரவின் இறுதிப் பகுதியில் தொழப்படும் தொழுகை சான்று கூறுவதாயிருக்கின்றது. அதுவே சிறந்ததும் கூட.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 755.

 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 22ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வித்ரு தொழுகையை நேரகாலத்துடன் விழித்தெழ முடியுமானவர்கள் இரவின் கடைசிப் பகுதியில் தொழுவதுதான் சிறந்தது என்பதற்கான தெளிவான சான்று இந்நபிமொழியில் உள்ளது. அதில் உறுதியற்றவர்கள் ஆரம்பத்திலேயே தொழுவது சிறந்தது.
(2) இரவின் ஆரம்பத்தில் வித்ரு தொழுத ஒருவர் இறுதியில் விழித்து, மீண்டும் தொழ விரும்பினால் இரட்டை இரட்டையாக விரும்பியளவு தொழுது கொள்ளலாம். ஆனால் வித்ரு தொழுகையை மீட்டித் தொழக்கூடாது. ஏனெனில் ஒரே இரவில் இரு வித்ரு தொழ முடியாது.
(3) இஷாத் தொழுகை முடிந்தவுடன் வித்ரு தொழுகையின் நேரம் ஆரம்பித்து, பஜ்ர் வரை அது நீடிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஸுபஹ் தொழ முன்னர் வித்ரு தொழுது கொள்ளுங்கள். (முஸ்லிம் 754), மேலும் கூறினார்கள் : பஜ்ர் உதயமானால் வித்ரு உட்பட இரவின் எல்லாத் தொழுகைகளும் முடிந்து விடும். எனவே பஜ்ர் உதயமாக முன் வித்ரு தொழுது கொள்ளுங்கள். (திர்மிதீ 469).
பாவத்தை பகிரங்கப்படுத்தலாகாது
52- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُوْلُ: سَمِعْتُ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: "كُلُّ أُمَّتِي مُعَافًى إِلاَّ الْمُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً، ثُمَّ يُصْبِحُ وَقَدْ سَتَرَهُ اللَّهُ؛ فَيَقُوْلُ:  يَا فُلاَنُ، عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ، وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ ".
(صحيح البخاري، رقم الحديث 6069، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 52 - (2990)،).
(52) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய சமூகத்தினரில் அனைவரும் மன்னிக்கப்படுவர். செய்த பாவத்தை சொல்லிக்காட்டுவோரைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு பாவத்தைச் செய்து, காலையில் அவன் விழிக்கும் போது அதை அல்லாஹ் மறைத்திருக்க, இவனோ, இன்னவரே! நான் நேற்றிரவு இன்னின்ன பாவங்களைச் செய்தேன் என்று சொல்லித் திரிவதும் பாவங்களை பகிரங்கப் படுத்துவதிலுள்ளதாகும். அவனுடைய இறைவனே அவனை மறைத்திருக்க, அவனோ அல்லாஹ்வின் திரையைக் கிழித்து (மக்களுக்கு) தெரியப்படுத்திய நிலையில் விழிக்கிறான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி 6069, முஸ்லிம் 2990. இவ்வார்த்தை புஹாரியில் இருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் திரையை எடுத்து தன்னை மறைத்துக் கொள்வது அவசியமாகும். அத்துடன் அல்லாஹ் தனக்கு வழங்கியிருக்கும் ஆரோக்கியத்திற்காக அவனைப் புகழ்ந்து, தான் செய்த பாவங்களுக்காக இரகசியமாக அவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் தௌபாச் செய்து மீண்டால் அவன் அதனை ஏற்று ஈருலகிலும் மறைத்து விடுகிறான்.
(2) தான் செய்த தவறை நீதிபதியிடம் சென்று ஒப்புக் கொண்டு சரணடைவதை விட, அதனை தனக்குள் மறைத்துக் கொண்டு அல்லாஹ்விடம், இதற்குப் பின் அப்பாவத்தைச் செய்வதில்லை என்ற உறுதியுடன் பாவமன்னிப்புத் தேடுவதே சிறந்தது. ஏனெனில் பாவத்திற்கு உலகில் தண்டனை பெறாவிட்டாலும், உண்மையாகவும், உளத்தூய்மையுடனும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவோரை அல்லாஹ் மன்னிக்கிறான்.
(3) மேற்கண்ட நபிமொழியில் இடம்பெற்றுள்ள 'முஆபாஃ" என்ற சொல்லுக்கு பல கருத்துக்கள் உள்ளன. மன்னிக்கப்பட்டவர்கள் என்ற கருத்தே இந்நபிமொழியில் நாடப்பட்டுள்ளது. அத்துடன் ஆரோக்கியம் என்ற கருத்தும் இதற்குள்ளது. அதாவது அனைத்து கெடுதிகள், தீங்குகள், நோய்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர் என்பதே அதன் அர்த்தம்.
அன்னையின் மகத்துவம்
53-عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَقَالَ:  يَا رَسُوْلَ اللَّهِ! مَنْ أحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: "أُمُّكَ" قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: "ثُمَّ أُمُّكَ"، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: "ثُمَّ أُمُّكَ"، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: "ثُمَّ أَبُوْكَ".
(صحيح البخاري، رقم الحديث 5971، وأيضاً صحيح مسلم، رقم الحديث 1 - (2548)،).
(53) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் மிகவும் நெருங்கிப் பழகத் தகுதியானவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் உன்னுடைய தாயெனக் கூறினார்கள். பின்பு யார்? என்று கேட்டார். அதற்கும் நபியவர்கள் பின்பும் உன்னுடைய தாய்தான் எனக் கூறினார்கள். பின்பு யார்? என்று கேட்டார். அதற்கும் நபியவர்கள் பின்பும் உன்னுடைய தாய்தான் எனக் கூறினார்கள். பின்பு யார்? என்று கேட்டார். அதற்கு நபியவர் பின்பு உன்னுடைய தந்தையெனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி 5971, முஸ்லிம் 2548.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இந்நபிமொழியில் நெருங்கிப் பழகுவதன்பது, நல்ல தோழ்மையும் அழகிய நடைமுறையுமாகும்.
(2) தனது சிசுவைக் கருவில் சுமந்ததிலிருந்து, பெற்று, பாலூட்டி, வளர்த்து, கருணை காட்டி, அதற்காக சிரமப்படுவதாலேயே தந்தையை விட தாயை அதிகம் நேசித்து, நெருங்கிப்பழகுமாறு பணிக்கப்பட்டுள்ளோம்.
(3) நல்ல சிநேகிதம், அழகிய நடைமுறை, உதவி செய்தல், செலவளித்தல், மென்மையாகப் பேசுதல், அவள் விரும்பும் பொருளை பரிசாகக் கொடுத்தல், பணிவாக நடத்தல், அவளுக்கு சிரமமோ இடையூறோ ஏற்படாத விதத்தில் அடிக்கடி சந்தித்தல், நோயுற்றால் அவளுக்காக விழத்திருந்து கவனித்தல், அவளுக்காகப் பிரார்த்தனை புரிதல் இவையணைத்துக்கும் மிக மிகத் தகுதியானவள் எம்மைப் பெற்றெடுத்த தாய் அவர்களே. அவர்கள் இணைவைப்பு, வழிகேட்டிலிருந்தாலும் உலக விடயங்களில் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் குறையின்றி நிறைவேற்றிட வேண்டும்.
தந்தையைத் துன்புறுத்துவது பெரும்பாவமே
54- عَنْ عَبْدِ اللَّهِ بنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُما، عَنِ النَّبِيِّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قالَ: "رِضَا الرَّبِّ فِيْ رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِيْ سَخَطِ الْوَالِدِ".
(جامع الترمذي، رقم الحديث 1899، صححه الألباني).
(54) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறைவனின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலேயே தங்கியுள்ளது. இறைனின் கோபம் தந்தையின் கோபத்திலேயே தங்கியுள்ளது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி).
ஆதாரம் : திர்மிதி 1899. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 37ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தந்தைக்குக் கட்டுப்படுவதன் அவசியத்தை இந்நபிமொழி எடுத்துரைக்கின்றது. அவருக்கு வழிப்பட்டவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவனாகின்றான். அவரைக் கோபமூட்டியவன் அல்லாஹ்வைக் கோபமூட்டியவனாகின்றான். தாயும் இவ்வாறு தான். இன்னும் சொல்லப்போனால் தாய் இதனைவிட ஒரு படி மேலே இருக்கின்றாள்.
(2) அல்லாஹ்வின் கோபத்துடன் இது சம்பந்தப்படுவதால் பெற்றோரை நிந்திப்பது பெரும்பாவங்களிலுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 


சுயமாக சம்பாதிப்போம்
55- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُوْلُ:  قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "لأَنْ يَحْتَزِمَ أَحَدُكُمْ حُزْمَةً مِنْ حَطَبٍ؛ فَيَحْمِلَهَا عَلَى ظَهْرِهِ؛ فَيَبِيْعَهَا؛ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلاً يُعْطِيْهِ أَوْ يَمْنَعُهُ".
(صحيح مسلم، رقم الحديث 107 - (1042)، واللفظ له،  وصحيح البخاري، رقم الحديث 2074).
(55) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களிலொருவர் விறகு தேடச்சென்று, அதனைத் தனது முதுகில் சுமந்து வந்து, விற்று சம்பாதிப்பதானது பிறரிடம் கைநீட்டுவதை விடச் சிறந்தது. (சில வேளை நீங்கள் கேட்டுச் சென்றவர்) தருவார். அல்லது தராமல் தடுத்துக் கொள்வார்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி 2074, முஸ்லிம் 1042. இவ்வார்த்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.


 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இஸ்லாம் மனிதர்களின் சுயகௌரவத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றது. அதன் ஓர் அங்கமாகத்தான் பிறரிடம் கைநீட்டுவதை விட சுயமாக ஹலாலானவற்றை சம்பாதிப்பதை சிறப்பித்துக் கூறுகின்றது. அவ்வாறு கைநீட்டும் பட்சத்தில் இழிவாகி சுயகௌரவத்தை இழக்க நேரிடுகின்றது.
(2) அனுமதிக்கப்பட்ட எந்தத் தொழிலும், அதில் ஹராம் கலக்காத பட்சத்தில் அத்தொழிலுக்கு இஸ்லாத்தில் மதிப்புண்டு. எனினும் அதனை முழு முயற்சியுடன் திறன்படச் செய்யப் பழக வேண்டும்.
(3) சோம்பேறிகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதையும், தனக்கு தொழில் செய்யும் சக்தியிருந்தும் வீட்டிலுள்ள பெண்களை சம்பாதிக்க விட்டுத் தான் அனுபவிப்பதையும் இஸ்லாம் அடியோடு வெறுக்கின்றது.

 

தாடி வளர்ப்பது கடமையே
56- عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،  قَالَ: "أَحْفُوْا الشَّوَارِبَ وَأَعْفُوْا اللِّحَى".
(صحيح مسلم، رقم الحديث 52- (259)، واللفظ له، وصحيح البخاري، رقم الحديث 5893،).
(56) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : புஹாரி 5893, முஸ்லிம் 259. இவ்வார்த்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தாடி உள்ளவர்கள் அதனை வழிக்காமல், கத்தரிக்காமல், பிடுங்காமல் அவ்வாறே வளர்ப்பது கடமையென்பதை இந்நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது.
(2) உதட்டுக்குக் கீழ் வளரும் முடிகளும் தாடியாகவே கணிக்கப்படுகின்றது.
(3) மீசையைக் கத்தரிப்பதும் அவசியமென்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. அதனை அளவுக்கதிகமாக வளர்ப்பதோ, இரு ஓரங்களையும் விட்டு நடுவில் மாத்திரம் கத்தரிப்பதோ கூடாது.
(4) தாடியை வழித்து, மீசையை வளர்ப்பது யூத, கிறிஸ்தவர்களின் கலாச்சாரமெனவும், அவர்களுக்கு மாறு செய்யுமாறும் பிறிதொரு நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
குடும்பத்திற்கு செலவு செய்வதிலும் நன்மையுண்டு
57- عَنْ سَعْدِ بْنِ أَبِيْ وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِيْ بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِيْ فَمِ امْرَأَتِكَ".
(صحيح البخاري، رقم الحديث 56، واللفظ له، وصحيح مسلم، جزء من رقم الحديث 5 - (1628)،).


(57) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் பொருத்தத்தை எதிர்பார்த்து நீ எதனைச் செலுவு செய்தாலும் அதற்காக உனக்குக் கூலி வழங்காமலிருக்கப்பட மாட்டது. அது நீ உனது மனைவியின் வாயில் ஊட்டிவிடுவதாயிருந்தாலும் சரியே.
அறிவிப்பவர் : ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி).
ஆதாரம் : புஹாரி 56, முஸ்லிம் 1628. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 5ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) எந்தவொரு காரியமாக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்காக, நன்மையை எதிர்பார்த்து செய்யப்படாவிட்டால் அதற்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காது.
(2) வணக்கம் என்பது பரந்த ஒரு கருத்தை உள்ளடக்கியது. அனுமதிக்கப்பட்ட வழமையான செயற்பாடுகள் கூட எண்ணங்களைப் பொருத்து வணக்கமாக மாறி, அதற்காக நன்மையும் கூட வழங்கப்படுகின்றது.
(3) பொதுவாக இன்பமனுபவிக்கும் நோக்குடன் மனைவியுன் கொஞ்சுவது கூட, தடுக்கப்பட்ட விபச்சாரத்தைத் தவிர்ந்து கொள்வது போன்ற நன்நோக்கங்களுக்காக இருந்தால் அது ஒரு நல்லமலாக அல்லாஹ்விடம் பார்க்கப்பட்டு நன்மை வழங்கப் படுகின்றது.
துக்கம் அனுஷ்டித்தலின் சில சட்டங்கள்
58- عَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ، أَنْ تُحِدَّ فَوْقَ ثَلاَثٍ إِلاَّ عَلَى زَوْجٍ؛ فَإِنَّهَا لاَ تَكْتَحِلُ وَلاَ تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا، إِلاَّ ثَوْبَ عَصْبٍ".
(صحيح البخاري، رقم الحديث 5342).
(58) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும் தனது கணவனின் பிரிவுக்காகவே தவிர மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பது கூடாது. (கணவனைப் பிரிந்த பெண்) கண்களுக்கு சுர்மா இட்டுக் கொள்ள மாட்டாள். சாயம் போடப்பட்ட ஆடையை அணிய மாட்டாள். நெய்வதற்கு முன் சாயம் போடப்பட்ட 'அஸ்ப்" எனும் ஆடையைத் தவிர.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி).
ஆதாரம் : புஹாரி 5342.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மதீனாவில் அன்ஸாரிகளைச் சேர்ந்த உம்மு அதிய்யா (ரலி) அறப்போரில் கலந்து கொள்ளக் கூடிய பிரபலமான ஒரு நபித்தோழியாவார். புனைப்பெயரைக் கொண்டு அறியப்பட்ட இவர்களின் இயற்பெயர் நுஸைபா பின்துல் ஹாரிஸ் எனவும், நுஸைபா பின்த் கஃப் எனவும் இரு கருத்துக்கள் உள்ளன.
இவர்கள் நபியவர்களுடன் 7 யுத்தங்களில் கலந்து கொண்டு, காயப்பட்டோருக்கு அவசர சிகிச்சை அழித்துக் கொண்டும், தாகித்தோருக்கு நீர் வழங்கிக் கொண்டும், கொல்லப்பட்டோரை மதீனாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டுமிருந்தார்கள். இதனை அவர்களே அறிவித்துள்ளார்கள் : நான் நபி (ஸல்) அவர்களுடன் 7 யுத்தங்களில் கலந்து கொண்டேன். அவர்கள் போருக்குச் சென்ற பின் அவர்களது இருப்பிடங்களில் பின்துணையாக இருந்து, அவர்களுக்காக சமைத்து, காயப்பட்டோருக்கு சிகிச்சையளித்து, நோயாளிகளைக் கவனித்துக் கொள்வேன். (முஸ்லிம் 1812)
உம்மு அதிய்யா (ரலி) நபித்தோழியாகவும், போராளியாகவும், முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க அறிவைப் பரத்தக் கூடியவராகவும் ஒரே காலத்தில் இருந்துள்ளார்கள். இது போன்ற சிறப்பு அநேக பெண்களுக்குக் கிடைக்கவில்லை. நபியவர்களின் புதல்வி ஸைனப் (ரலி) மரணித்த போது அவ்வம்மையாரைக் குளிப்பாட்டும் பாக்கியத்தைக் கூட இவர்களே பெற்றார்கள்.
நபியவர்களின் மரணத்திற்குப் பின் உம்மு அதிய்யா அவர்கள் தமது இறுதிக் காலத்தில் பஸராவுக்குச் சென்றார்கள். அங்கு மக்கள் இவர்களிடமிருந்து அறிவு ஞானத்தைப் பெற்று பயனடைந்தார்கள். குறிப்பாக ஜனாஸா சம்பந்தப்பட்ட பல சட்டதிட்டங்களை அங்கிருந்த ஸஹாபாக்களும் தாபிஈன்களும் இவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். இவர்கள் அறிவித்த நபிமொழிகள் 40 ஆகும். சுமார் ஹிஜ்ரி 70 வரை உம்மு அதிய்யா (ரலி) வாழ்ந்தார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) துக்கம் அனுஷ்டிப்பதென்பது கணவனை மரணத்தின் மூலமோ விவாகரத்தின் மூலமோ பிரிந்து, இத்தா இருக்கும் ஒரு பெண் தனது உடலிலும் உடையிலும் அலங்காரத்தை வெளிப்படுத்தும் அனைத்தையும் தவிர்ந்து கொள்வதாகும். வழமையாகத் தனது கணவனுக்காக அலங்கரிக்கப் பயன்படுத்தும் சுர்மா, சாயங்கள் (லிப்ஸ்டிக், நைல் பொலிஷ்), தூள்கள் (பௌடர்), நறுமணங்கள், ஆபரணங்கள், ஆடம்பர ஆடைகள் போன்றவற்றைத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். துக்கம் அனுஷ்டிக்கவென்றே குறிப்பட்ட ஆடையோ, நிறமோ கிடையாது.
(2) கர்ப்பிணி அல்லாத, கணவனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண், அத்தினத்தில் இருந்து 4 மாதங்களும் 10 நாட்கள் (கணவனை இழந்த பெண்) அல்லது 3 மாதவிடாய் காலங்கள் (விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்) இத்தா இருக்க வேண்டும். அப்பெண் கர்ப்பிணியாக இருந்தால் பிள்ளையைப் பிரசவிக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். குறைமாதக் குழந்தையாயினும் மனிதத் தோற்றத்தில் பிரசவித்தால் அவளுடைய இத்தா முடிந்து விடும்.
(3) அதேபோன்று தான், கணவனை இழந்த பெண், அவளுடன் அக்கணவன் ஏற்கனவே உறவு கொண்டிருந்தாலும், இல்லா விடினும் 4 மாதங்களும் 10 நாட்கள் இத்தா இருந்து துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்.
(4) கணவனுக்காக ஒரு மனைவி துக்கம் அனுஷ்டிப்பது கடமையாகும். ஏனையோருக்காக பெண் உட்பட அனைவரும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அவ்வாறு அனுஷ்டிப்பதாயிருந்தால் அதற்கான அதிகபட்ச கால எல்லையாக நபியவர்கள் மூன்று நாட்களை வரையறுத்துள்ளார்கள்.
(5) ஆண்களுக்கு இத்தா என்ற ஒன்று இல்லை.

இஸ்லாத்தில் ஜீவகாரூண்யம்
59- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "عُذِّبَتِ امْرَأَةٌ فِيْ هِرَّةٍ رَبَطَتْهَا، حَتَّى مَاتَتْ؛ فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لاَ هِيَ أطعمَتْها وَسَقَتْها؛ إذْ حَبَسَتْها، وَلاَ هِيَ تَرَكَتْها؛ تَأْكُلُ مِنْ خَشَاشِ الأرْضِ".
(صحيح البخاري، رقم الحديث 3482، واللفظ له، وصحيح مسلم، جزء من رقم الحديث 151 - (2242)،).
(59) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பூனையை இறக்கும் வரை கட்டி வைத்த காரணத்தினால் ஒரு பெண் தண்டிக்கப்பட்டு, அதன் காரணமாகவே அவள் நரகில் நுழைந்தாள். அவள் அதற்கு உண்ண, பருகக் கொடுக்கவுமில்லை. அதுவே தானாக பூமியிலுள்ள பூச்சி, புழுக்களை உண்ணுவதற்காக அதனை விடுவிக்கவுமில்லை.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : புஹாரி 3482, முஸ்லிம் 2242. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.

 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) காரணமின்றி பிராணிகளை அடைத்து வைப்பதும், அவற்றுக்கு உண்ண, பருக கொடுக்காமலிருப்பதும் வன்நெஞ்சம் பிடித்த உள்ளத்துக்கான அடையாளமாகவும், தீய குணத்திற்கும், இரக்கமின்மைக்குமான அடையாளமாகவும் உள்ளது.  
(2) காரணமின்றி மிருகவதையில் ஈடுபடுவோருக்கான தண்டனை என்னவென்று இந்நபிமொழியின் மூலமே எமக்குப் புரிந்து கொள்ளலாம். இதில் கூறப்பட்ட பெண் நரகில் நுழையக் காரணமே பூனையை வதை செய்ததுதான்.
(3) பூனை மற்றும் ஏனைய வளர்ப்புப் பிராணிகளை அவற்றுக்குரிய வாழ்வாதாரத்தை சரியான முறையில் வழங்கினால் அவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்க அனுமதியுண்டு.
(4) மறுபுறத்தில், முன்சென்ற சமூகத்தில் தாகித்த ஒரு நாய்க்கு நீர் புகட்டிய ஒரே காரணத்திற்காக சுவனம் நுழைந்த ஒரு பாவியின் வரலாறும் ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.
ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் வேண்டுவோம்
60- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  "مَا مِنْ دَعْوَةٍ يَدْعُو بِهَا الْعَبْدُ أَفْضَلَ مِنْ، اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ".
(سنن ابن ماجه، رقم الحديث 3851، وصححه الألباني).
(60) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
என்ற பிரார்த்தனையை விட சிறந்த ஒரு பிரார்த்தனையை எந்தவோர் அடியானும் கேட்பதில்லை.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : இப்னு மாஜாஃ 3851. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்.
பொருள் : இறைவா! உன்னிடம் ஈருலகிலும் ஆரோக்கியத்தைத் தருமாறு வேண்டுகின்றேன்.

 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மேற்கண்ட துஆவை உள்ளச்சத்துடனும், உறுதியான நம்பிக்கையுடனும் நாம் ஓத வேண்டும். ஏனெனில் அல்லாஹ் அடியார்கள் எவ்வாறு அவனை எண்ணுகிறார்களோ அவ்வாறே அவர்களுடன் நடந்து கொள்கின்றான். அவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்துப் பிரார்த்தித்தால் அவனிடமிருந்து அபயம், ஆரோக்கியம், அமைதி, ஈடேற்றம், மகிழ்ச்சி அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
(2) அதேபோன்று இந்த துஆவை ஓதுவதன் மூலம் அனைத்துவித துன்பங்கள், குழப்பங்கள், சோதனைகள், வழிகேடுகள், ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்தும் அவனை அல்லாஹ் பாதுகாக்கின்றான்.
(3) சுருக்கமாகக் கூறுவதாயின், ஆரோக்கியமென்பது, ஒரு மனிதனுக்கு ஈருலகிலும் ஏற்படவிருக்கின்ற உலக, மார்க்க தீங்குகள், அவன் வெறுப்பவை அனைத்தையும் விட்டு அல்லாஹ் அவனைப் பாதுகாப்பதென்று கூறலாம்.

உயிர்த்தியாகத்தின் வகைகள்
61-عَنْ سَعِيْدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "مَنْ قُتِلَ دُوْنَ مَالِهِ؛ فَهُوَ شَهِيْدٌ، وَمَنْ قُتِلَ دُوْنَ أَهْلِهِ، أو دُوْنَ دَمِهِ، أو دُوْنَ دِيْنِهِ؛ فَهُوَ شَهِيْدٌ".
(سنن أبي داود، رقم الحديث 4772، واللفظ له، وجامع الترمذي، رقم الحديث 1421، وسنن النسائي، رقم الحديث 4095، وسنن ابن ماجه، رقم الحديث 2580، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح، وصححه الألباني).
(61) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தனது உடமைக்காகப் போராடிக் கொல்லப்படுகிறாரோ அவர் உயிர்த்தியாகியாவார் (ஷஹீத்). மேலும் யார் தனது குடும்பத்திற்காக அல்லது தற்காத்துக் கொள்ள, அல்லது தனது மார்க்கத்திற்காகப் போராடிக் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர்த்தியாகியாவார்.
அறிவிப்பவர் : ஸஈத் பின் ஸைத் (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 4772, திர்மிதி 1421, நஸாஈ 4095, இப்னு மாஜாஃ 2580. இவ்வார்த்தை அபூ தாவூதிலிருந்து பெறப்பட்டது. திர்மிதீ அவர்கள் இதனை ஹஸன் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
மக்காவின் குரைஷிக் கோத்திரத்தில் பனூ அதிய் குடும்பத்தைச் சேர்ந்த அபுல் அஃவர் என்ற புனைப்பெயர் கொண்ட ஸஈத் பின் ஸைத் (ரலி) என்பவர் சிறந்த நபித்தோழராவார். ஹிஜ்ரத்துக்கு 22 வருடங்களுக்கு முன் மக்காவில் பிறந்தார்கள். இவர் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட 10 பேரில் ஒருவராகத் திகழும் இவரும், இவருடைய மனைவி பாத்திமா பின்துல் கத்தாப் (ரலி) அவர்களும் (உமர் (ரலி) அவர்களின் சகோதரி) ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.
ஸஈத் (ரலி) மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து, பத்ர் யுத்தத்தைத் தவிர, உஹத் மற்றும் ஏனைய அனைத்து யுத்தங்களிலும் பங்கேற்றார்கள். பத்ரு யுத்தத்தின் போது அதற்குக் காரணமாயிருந்த ஷாம் பகுதிக்குச் சென்ற குரைஷி வியாபாரக் குழுவை உளவு பார்க்கச் சென்றிருந்தார்கள். எனினும் அப்போரில் கிடைக்கப்பெற்ற கனீமத் பொருட்களில் நபியவர்கள் இவருக்கும் ஒரு பங்கு வைத்தார்கள். இவர் நபியவர்களைத் தொட்டும் 48 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். ஹிஜ்ரி 51 அல்லது 52ல் அகீக் எனும் ஊரில் மரணித்த இவர்கள் அங்கிருந்து மதீனாவிற்கு சுமந்து வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தனது உயிருக்கோ, தன்னுடைய மனைவி, குழந்தை, பெற்றோர், உறவினர்களுக்கோ, அல்லது தனது உடமைகளுக்கோ ஆபத்து ஏற்படும் விதத்தில் யாராவது அத்துமீறினால் அதனைப் படிப்படியாகத் தடுப்பது அவசியமாகும். அத்துமீறுபவனைக் கொலை செய்வதன் மூலம்தான் தற்காத்துக் கொல்ல முடியுமென்றால் அதனையும் செய்யலாம். அதற்காகப் பலிக்குப்பலியோ, பரிகாரமோ கூட கிடையாது. அவ்வாறு கொல்லப்பட்டவன் நரகைக் கொண்டு எச்சரிக்கப்பட்டுள்ளான். மறுபுறம், அத்துமீறப்பட்டவர் போராடிக் கொலை செய்யப்பட்டால் அவருக்கு மறுமையில் அல்லாஹ் நாடினால் உயிர்த் தியாகிக்குரிய கூலி வழங்கப்படும்.
(2) ஒரு முஸ்லிமின் உயிர் மாத்திரமல்ல, அவனுடைய குடும்பம், சொத்துக்களும் இஸ்லாத்தில் எந்தளவு மதிக்கப்படுகின்றது என்பதை இந்நபிமொழியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
(3) இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயிர்த்தியாகம் (ஷஹாதத்) என்பது இவ்வுலகிலல்ல. மறுமையில் தான் அவர்களுக்கு அதற்குரிய கூலி வழங்கப்படும்.  இவ்வுலகில் அவர்கள் ஏனைய சாதாரண முஸ்லிம்களைப் போன்றே அனைத்து கடமைகளும் நிறைவேற்றப்பட்டு தான் அடக்கம் செய்யப்படும்.

காணிகளை அபகரிப்பது பெரும்பாவமே
62- عَنْ سَعِيْدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: "مَنْ ظَلَمَ مِنَ الْأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ".
(صحيح البخاري، رقم الحديث 2452، واللفظ له،  وصحيح مسلم، رقم الحديث 137 - (1610)،).
(62) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தனக்கு உரிமையில்லாத (அடுத்தவர்களின்) காணியிலிருந்து சிறிதளவேனும் அநியாயமாகப் பெறுகிறாரோ அப்பகுதி ஏழு பூமிகளுக்கும் கீழிருந்து எடுக்கப்பட்டு அவருக்கு மாலையாக அணிவிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஸஈத் பின் ஸைத் (ரலி).
ஆதாரம் : புஹாரி 2452, முஸ்லிம் 1610. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 61ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) உரிமைகளையும், உடமைகளையும் பாதுகாப்பதில் இஸ்லாம் அதிக கரிசனை எடுக்கின்றது. அவற்றை அபகரிப்பதை வன்மையாகத் தடுக்கின்றது.  
(2) பூமியின் ஒரு பகுதியை யார் சொந்தமாக்கிக் கொள்கின்றாரோ அதிலுள்ள கட்டிடங்கள், மரங்கள், கீழ்ப்பரப்பிலுள்ள கனிய வளங்கள் அனைத்தும் அவருக்கே அடிப்படையில் சொந்தமாகின்றன.
(3) பிறரின் உடமைகளை சுரண்டக் கூடிய வழிகளான களவு, கொள்ளை, மோசடி, இலஞ்சம் போன்ற அனைத்தையும் தவிர்ந்து, இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றி நாம் பொருளீட்டல் செய்ய வேண்டும்.
(4) அபகரிக்கப்பட்ட பூமி மாலையாக அணிவிக்கப்படுமென இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. அதற்குப் பல விளக்கங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். 1. அபகரித்த பூமியை மஹ்ஷர் மைதானத்திற்குக் கொண்டு வரும்படி பணிக்கப்படுவான். அது அவனுடைய கழுத்தில் மாலை போன்றிருக்கும். 2. அதனை மாலையாக மாற்றும்படி அவனே பணிக்கப்படுவான். முடியாத பட்சத்தில் அதன் மூலமே தண்டிக்கப்படுவான். 3. மாலையாக அணிவிக்கப்படுவது பூமியல்ல. மாறாக அந்த அநியாயத்திற்கான பாவங்கள்தான் அவனது கழுத்தில் மாலையாக அணிவிக்கப்படும். 4. அவன் பூமியில் சுளி வாங்கப்படுவான். அவன் அபகரித்த பகுதி அவனது கழுத்தில் மாலையாக இருக்கும். அதற்கேற்ப அவனது கழுத்தும் விசாலமாகும்.
பேராசை கூடாது
63- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ  رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يَكْبُرُ ابْنُ آدَمَ، وَيَكْبُرُ مَعَهُ اثْنَتَانِ: حُبُّ الْمَالِ، وَطُوْلُ الْعُمْرِ".

(صحيح البخاري، رقم الحديث 6421، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 115 - (1047)،).
(63) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமுடைய மகன் வளரும் போது அவனுடன் சேர்ந்தே இரு விடயங்கள் வளர்கின்றன. பணத்தாசை, நீண்ட நாள் வாழும் ஆசை.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : புஹாரி 6421, முஸ்லிம் 1047. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஹலாலான பணம் இஸ்லாத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஸகாத், ஹஜ், ஜிஹாத் போன்ற பிரதான வணக்கங்கள் பணத்துடன் தொடர்புபடுவது மாத்திரமின்றி மனிதர்களுடைய வாழ்கைச் செலவினங்களும் அதில்தான் தங்கியுள்ளது. இதனால் முழுமையாக பணத்தை விட்டும் ஒதுங்கியிருக்கும்படி கூறவில்லை. எனினும் அல்லாஹ்வை வழிப்படுவதை விட்டும் தடுக்கும் அளவுக்கோ அல்லது அதில் மோகம் ஏற்படுமளவுக்கோ பணத்தாசை இருப்பதைத் தான் எச்சரிக்கை செய்கின்றது.
(2) அல்லாஹ்வுடைய வழிபாட்டிலேயே மனிதனின் ஆயுள் நீளும் போதெல்லாம் அவன் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றான். மறுமையில் பதவி உயர்ந்து கொண்டே போகும்.
(3) ஆயுள் நீடிப்பதில் மாத்திரம் மனிதனுக்கு எவ்வித நலவும் கிடையாது. மாறாக அதனை இஸ்லாமிய நெறிகளைக் கொண்டு செதுக்க வேண்டும். அதனால்தான் மார்க்கத்தைப் புறக்கணித்துக் கொண்டே நீண்டநாள் வாழ ஆசைப்படுவது இஸ்லாத்தில் தவறாகப் பார்க்கப் படுகின்றது.
தொழுகைக்குப் பின் ஒதும் திக்ருகளில்.....
64- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النََّبِيُُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ، لَمْ يَقْعُدْ، إِلاَّ مِقْدَارَ مَا يَقُوْلُ: "اَللَّهُمََّ أَنْتَ السََّّلاَمُ وَمِنْكَ السََّّلامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالاِكْرَامِ".
(صحيح مسلم، رقم الحديث 136 - (592)، ).
 (64) நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்தால்
اَللَّهُمََّ أَنْتَ السََّّلاَمُ وَمِنْكَ السََّّلامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالاِكْرَامِ
என்று கூறக்கூடிய அளவே உட்கார்வார்கள்.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 592.
பொருள் : இறைவா! நீ சாந்தியளிப்பவன், உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. மகத்துவமும் கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 16ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இமாம் தொழுகையில் ஸலாம் கொடுத்தவுடன் அவ்விடத்திலிருந்து எழுந்து விட வேண்டுமென சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட திக்ர் ஒதுமளவுதான் நபியவர்கள் உட்கார்வார்கள் என்பதே இவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும். இன்னும் சிலர், ஸலாம் கொடுத்த பின் மக்கள் பக்கம் திரும்ப முன் கிப்லாத் திசையை நோக்கியவராகவே மேற்கண்ட வார்த்தையை ஒதுவார்கள் என்பதே இதன் விளக்கம் என்கின்றனர். இக்கருத்து வலுவானதாக உள்ளது. காரணம் தொழுகைக்குப் பின் அநேகமான திக்ருகளை நபியவர்கள் அறிமுகப்படுத்தி விட்டு அவர்கள் ஓதாமல் எழும்பிச் செல்வார்களென்பது சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகின்றது.
(2) தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் ஓதக்கூடிய பல திக்ருகள் ஸஹீஹான நபிமொழிகளில் வந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்நபிமொழியில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட துஆ. முஸ்லிமில் இடம்பெற்றுள்ள மற்றுமோர் நபிமொழியில் (591) இந்த துஆவிற்கு முன்னர் أستغفر الله என்று 3 தடவை கூறுவார்களென வந்துள்ளது.
(3) اَللَّهُمََّ أَنْتَ السََّّلاَمُ என்ற இவ்வார்த்தையில் ஸலாம் என்பது அல்லாஹ்வுடைய திருநாமங்களிலொன்று. இறைவா! உனது தகுதிக்குப் பொறுத்தமில்லாத அனைத்துக் குறைபாடுகளை விட்டும் நீ தூய்மையானவன் என்பதே அதன் அர்த்தம். وَمِنْكَ السََّّلامُ என்ற இவ்வார்த்தையிலுள்ள ஸலாம் என்பது சாந்தி, ஈடேற்றத்தைக் குறிக்கின்றது. அதனை வழங்கக் கூடியவன் நீ தான் என்பதே இதன் அர்த்தமாகும்.
தொழுகை முடிந்ததும் மஃமூம்களை முன்னோக்குதல்
65- عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ: كَانَ النََّبِيُُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلاَةً أَقْبَل عَلَيْنَا بِوَجْهِهِ.
(صحيح البخاري، رقم الحديث 845، واللفظ له، وصحيح مسلم، جزء من رقم الحديث 23 - (2275)،).
(65) நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையை நடத்தி முடித்தால் தனது முகத்தை எமது பக்கம் திருப்பி உட்காருவார்கள்.
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி).
ஆதாரம் : புஹாரி 845, முஸ்லிம் 2275. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 30ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இமாம் கடமையான தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்தால் அதன் பின் கீழ் வரும் திக்ரை ஓதிவிட்டு பின்னர் மஃமூம்களின் பக்கம் திரும்பி உட்கார்வது ஸுன்னத்தாகும்.
أَسْتَغْفِرُ اللَّهَ، أَسْتَغْفِرُ اللَّهَ، أَسْتَغْفِرُ اللَّهَ
اَللَّهُمََّ أَنْتَ السََّّلاَمُ وَمِنْكَ السََّّلامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ
(2) தொழுகை முடிந்து அதே இடத்தில் தொழுகையில் உட்கார்வது போன்றே உட்கார்வதை சில அறிஞர்கள் வெறுத்துள்ளனர். அதனைத் தவிர்ந்து கொள்ளும் முகமாக மஃமூம்கள் பக்கம் திரும்பி உட்கார்வது சிறந்தது.
(3) அவ்வாறு திரும்பி உட்கார்வது மக்களுக்கு ஏதாவது உபதேசங்கள் செய்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
பெண்கள் பள்ளிக்குச் செல்லலாமா?
66- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  "لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ  مَسَاجِدَ اللَّهِ".
 (صحيح مسلم، رقم الحديث 136 - (442)، واللفظ له، وصحيح البخاري، رقم الحديث 900).
(66) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெண்களை அல்லாஹ்வுடைய பள்ளிவாயில்களை விட்டும் தடுக்காதீர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : புஹாரி 900, முஸ்லிம் 442. இவ்வார்த்தை முஸ்லிமிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 11ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பெண்களுக்கும் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற பள்ளிகளுக்குச் செல்லலாம் என்பதை இந்நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது. எனினும் அவர்கள் வீட்டில் தொழுவதுதான் அவர்களுக்கு சிறந்தது. பிறிதொரு நபிமொழியில் 'உங்களது பெண்களை பள்ளிவாயில்களை விட்டும் தடுக்காதீர். அவர்களது வீடுதான் அவர்களுக்கு சிறந்தது" என்று இடம்பெற்றுள்ளது. (அபூ தாவூத் 567).
(2) ஆண், பெண் கலப்பு போன்ற பித்னாக்கள் இல்லாத பட்சத்தில் மனைவி பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் கணவன் அதற்கு அனுமதிக்க வேண்டுமென்பதையும் இந்நபிமொழியிலிருந்து புரியலாம்.
(3) நறுமணம் பூசிக் கொண்டோ, தன்னை அலங்கரித்துக் கொண்டோ ஒரு பெண் பள்ளிக்குச் செல்லக்கூடாது. நபியவர்கள் கூறினார்கள் : '(பெண்களே! உங்களில் ஒருவர் பள்ளிக்கு வருவதாயின் நறுமணம் பூச வேண்டாம்". (முஸ்லிம் 443).
பாதணிகளில் மஸ்ஹு செய்தல்
67- عَنِ المُغِيْرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:  كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيْ سَفَرٍ؛ فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ؛ فَقَالَ: "دَعْهُمَا؛ فَإِنِّيْ أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ"؛  فمَسَحَ عَلَيْهِمَا.
(صحيح البخاري، رقم الحديث 206، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 80 - (274)،).
(67) நபி (ஸல்) அவர்களுடன் நான் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். (நபியவர்கள் தொழுகைக்காக வுழூச் செய்ய எத்தனித்த போது) அவர்களுடைய இரு பாதணிகளையும் கலைவதற்காக நான் குனிந்தேன். அப்போது நபியவர்கள் 'அவ்விரண்டையும் அவ்வாறே விட்டு விடுங்கள். ஏனெனில் அதனை நான் வுழூவுடனே அணிந்தேன்" என்று கூறி விட்டு அவ்விரு பாதணிகளிலும் மஸ்ஹு செய்தார்கள்.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி).
ஆதாரம் : புஹாரி 206, முஸ்லிம் 274. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 35ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மஸ்ஹு செய்வதற்கான பாதணிகள் (ஷூஸ்) கரண்டைக் காலை மறைக்கக் கூடியதாக இருப்பதுடன், அதில் கிழிவுகள் இருக்கவும் கூடாது.
(2) ஊரிலிருக்கும் போதும், பிரயாணத்தின் போதும், கோடை, மாரி அனைத்துக் காலங்களிலும் வுழூச் செய்யும் போது காலைக் கழுவுவதற்குப் பதிலாக நாம் அணிந்திருக்கும் பாதணிக்கு மேலால் ஒரு தடவை மஸ்ஹு செய்யலாம். ஆனால் அவ்வாறு மஸ்ஹு செய்ய இரு பாதணிகளையும் ஏற்கனவே கால்களைக் கழுவி பரிபூரண வுழூச் செய்த பின்னரே அணிந்திருக்க வேண்டும்.
(3) ஊரிலிருப்பவர் 1 நாளும், பிரயாணி 3 நாட்களும் இவ்வாறு பாதணியில் மஸ்ஹு செய்யலாம். பாதணி அணிந்த பின் வுழூ முறிந்து முதட்தடவை எப்போது வுழூச் செய்கிறாரோ அந்த நேரத்திலிருந்தே நாள் கணிக்கப்படும். உதாரணமாக, ஒருவர் இன்று பஜ்ருக்கு வுழூச் செய்த பின் காலணிகளை அணிந்து, அவருடைய வுழூ முறிந்து மீண்டும் ளுஹர்த் தொழுகைக்காக வுழூச் செய்து மஸ்ஹு செய்தால் நாளைய தினம் ளுஹர் வரை ஊரிலிருப்பவருக்கு மஸ்ஹு செய்யலாம். அவருடைய நேரம் இன்று ளுஹர் முதலே ஆரம்பிக்கின்றது.
காலுறைகளில் மஸ்ஹு செய்தல்
68- عَنِ المُغِيْرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:  تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ وَمَسَحَ عَلَى الجَوْرَبَيْنِ والنَّعلينِ.
(جامع الترمذي، رقم الحديث 99، واللفظ له، وسنن أبي داود، رقم الحديث 159، وسنن النسائي، رقم الحديث 125( م)، وسنن ابن ماجه، رقم الحديث  559، قال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح، وصححه الألباني).
(68) நபி (ஸல்) அவர்கள் வுழூச் செய்து விட்டு இரு காலுறைகளிலும் (ஷொக்ஸ்) மற்றும் செருப்புகளிலும் மஸ்ஹு செய்தார்கள்.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 159, திர்மிதி 99, நஸாஈ 125, இப்னு மாஜாஃ 559. இவ்வார்த்தை திர்மிதீயிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இதனை ஹஸன் ஸஹீஹ் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 35ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பாதணிகளைப் போன்றே காலுறைகளும், வுழூவின் போது அவசியம் கழுவ வேண்டிய கரண்டைக் கால் அளவிற்கு காலை மறைத்திருக்க வேண்டும்.
(2) ஊரிலிருக்கும் போதும், பிரயாணத்தின் போதும், கோடை, மாரி அனைத்துக் காலங்களிலும் வுழூச் செய்யும் போது காலைக் கழுவுவதற்குப் பதிலாக நாம் அணிந்திருக்கும் காலுறைக்கு மேலால் ஒரு தடவை மஸ்ஹு செய்யலாம். ஆனால் அவ்வாறு மஸ்ஹு செய்ய இரு காலுறைகளும் கால்கள் தெளிவாக விளங்காதவாறு சற்று கடினமானதாகவும், அடர்த்தியாக நெய்யப் பட்டதாகவும் இருப்பதுடன், ஏற்கனவே கால்களைக் கழுவி பரிபூரண வுழூச் செய்த பின்னரே அணிந்திருக்க வேண்டும்.
(3) பாதணி அணிந்திருப்பவரைப் போன்றே காலுறை அணிந்திருப்பவரும் ஊரிலிருந்தால் 1 நாளும், பிரயாணத்தின் போது 3 நாட்களும் காலுறையில் மஸ்ஹு செய்யலாம். பாதணி காலுறை இரண்டிற்கும் நாட்கணிப்பீடு முன்னைய ஹதீஸின் 3ம் இலக்க விளக்கத்தில் கூறப்பட்ட விதத்திலேயே கணிக்கப்படும்.
புனித பூமியில் தொலைந்த பொருளை புறக்க முடியாது
69- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التََّيْمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ.
(صحيح مسلم، رقم الحديث 11 - (1724)، ).
(69) நபி (ஸல்) அவர்கள், ஹஜ்ஜுக்கு இஹ்ராம் நிய்யத் வைத்தவர் (மக்காவில்) தொலைந்த பொருட்களை புறக்குவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 1724.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
குரைஷக் கோத்திரத்தின் பனூ தைம் குடும்பத்தைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் (ரலி) ஹுதைபியாவின் போது இஸ்லாத்தில் இணைந்து, நபியவர்களிடம் உடன்படிக்கை செய்த ஒரு நபித்தோழராவார். மக்கா வெற்றியின் போதுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஹுதைபியா உடன்படிக்கை நடந்த மறு வருடம் நபியவர்கள் உம்ராச் செய்யச் சென்ற போதே இவர்கள் முதலில் நபியவர்களுடன் பயணித்தார்கள். பின்னர் யர்மூக் போரில் கலந்து கொண்டார்கள். ஹிஜ்ரி 73ம் ஆண்டு மக்காவில் கொலை செய்யப்பட்டார்கள்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இஸ்லாத்தின் அடிப்படையில் புறக்கப்பட்ட பொருள் என்பது, பாதையிலோ அல்லது வேறு இடங்களிலோ தொலைக்கப்பட்டு, அதன் உரிமையாளர் அறியப்படாத நிலையில் கண்டடெடுக்கப்பட்ட பெறுமதியுள்ள ஒரு பொருள்.
(2) பொதுவாக ஒரு பொருளைக் கண்டெடுத்தவர் அதனை உரியவர் பெற்றுக் கொள்ளும் வரை ஓராண்டு காலம் மக்கள் மத்தியில், பொது இடங்களில் அறிவிக்க வேண்டும். அதன் பின்னரும் உரிமையாளர் வராவிட்டால் கண்டெடுத்தவருக்கு அதனைப் பயன்படுத்தலாம். அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொருள் பெறுமதியற்றதாக இருந்தால், அல்லது நீண்ட நாட்கள் நிலைக்காத ஒரு பொருளாக இருந்தால் அதனை அறிவிக்கத் தேவையில்லை. இந்த விதிமுறை புனித பூமிகளல்லாத வேறு இடங்களுக்குரியதாகும்.
(3) புனித பூமிகளில் பொருட்களை, அவை செயலிழந்து விடும், அல்லது தொலைந்து விடுமென அஞ்சினாலே தவிர புறக்கவும் முடியாது. அவ்வாறு புறக்கிய பொருளை உரிமையாக்கிக் கொள்ளவும் முடியாது. மாறாக மக்காவை விட்டு வெளியேறு முன் அதனை அறிவுத்துக் கொடுத்து விட வேண்டும். அல்லது அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட வேண்டும். எவ்விதத்திலும் கண்டெடுத்தவருக்கு உரிமை கொண்டாட முடியாது. நபியவர்கள் கூறினார்கள் 'அறிவித்தல் கொடுக்கக் கூடியவரே தவிர அங்கு பொருள்கள் கண்டெடுக்கப்பட மாட்டது.
நரகவாதிகளின் சில வர்ணனைகள்
70- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "ضِرْسُ الْكَافِرِ أَوْ نَابُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ، وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلاَثٍ".
(صحيح مسلم، رقم الحديث 44 - (2851)، ).
(70) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிராகரிப்பாளனின் கடைவாய்ப்பல் அல்லது கோரைப்பல் உஹது மலை போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2851.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

 

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அல்லாஹ் நரகில் அனைத்துவித தீங்குகளையும் வேதனைகளையும் வைத்துள்ளான். அது நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள், பாவிகளுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் எங்களை அதனை விட்டும் பாதுகாப்பானாக.
(2) நரகவாதிகள் உலகிலிருந்த அதே நிலையில் இருக்க மாட்டார்கள். மாறாக, அவர்களுடைய உடம்பு பெருத்து விடும். உயரத்திலும் கூடி பிரமாண்டமாக் காட்சியளிப்பார்கள். அவர்களில் ஒருவரின் உடம்பு பிரமாண்டமான மலையை விடப் பெரிதாயிருக்கும். அதுபோன்று தான் அவர்களுடைய பற்கள், தலைகள், தோல்களெல்லாம். வேதனையை உணர்வதற்காகவே அவர்களுக்கு இந்நிலை.
(3) காபிர்களுடைய வேதனை இலகுபடுத்தப்படவோ, நிறுத்தப் படவோ மாட்டாது. மாறாக தொடர்ந்து கொண்டேயிருக்கும். பலவித வேதனைகளை அல்லாஹ் அவர்களுக்கு சாட்டி விடுவான். அவர்கள் வேதனை தாங்க முடியாமல் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மரணம் வருவது போலிருக்கும். ஆனால் வேதனையிலிருந்து தப்புவதற்காக அவர்கள் மரணிக்க மாட்டார்கள்.

நரகின் சில வர்ணனைகள்
71- عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  "يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُوْنَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُوْنَ أَلْفَ مَلَكٍ يَجُرُّوْنَهَا".
(صحيح مسلم، رقم الحديث 29 - (2842)، ).
(71) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அந்நாளில் நரகத்தை அதற்கு எழுபதாயிரம் கயிறுகளுள்ள நிலையில் இழுத்து வரப்படும். அதன் ஒவ்வொரு கயிறையும் எழுபதாயிரம் வானவர்கள் இழுத்து வருவார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2842.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 2ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

 

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நரகம் எவ்வளவு பிரமாண்டமானதென்பதை இந்நபிமொழியின் மூலம் அறியலாம். அது மிகவும் பயங்கரமான, விசாலமான ஒரு படுகுழி.
(2) அல்லாஹ் நரகத்தை ஏற்கனவே படைத்து விட்டான். அதை நிராகரிப்பாளர்கள், குற்றவாளிகள், பாவிகள் தங்குமிடமாக ஆக்கியுள்ளான். அவனது கோபத்தை அதில் நிரப்பி, இன்னும் பல வேதனைகளையும் வைத்துள்ளான்.
(3) அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தூரமாகுவதன் மூலம் நரகத்தின் வழியைத் தெரிவு செய்யாமல், அவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு சுவனம் செல்லும் வழியைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
மரணத்தின் பின் மீளெழுப்பப் படல்
72- عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ:  سَمِعْتُ النََّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: "يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ".
(صحيح مسلم، رقم الحديث 83 - (2878)، ).
(72) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வோர் அடியானும் எந்நிலையில் மரணிக்கிறானோ அதே நிலையில் எழுப்பப் படுவான்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2878.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 22ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மனிதன் இவ்வுலகில் செய்யும் நன்மை, தீமைகளுக்கு நிச்சயம் முடிவுகள் உண்டு. மறுமையில் ஒவ்வொருவரும் அவர்கள் செய்த அமல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவர் என்பதை விசுவாசம் கொள்வது அவசியமாகும்.
(2) எம்மால் ஏற்பட்ட பாவங்களுக்காக நாம் அஞ்ச வேண்டும். ஏனெனில் நாம் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோராவிட்டால் நிச்சயம் அவை ஈருலகிலும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
(3) இவ்வுலகில் ஒவ்வொருவரும் மரணிக்கும் போது எந்தக் கொள்கை, செயற்பாடு, நடத்தைகளில் இருந்தார்களோ அதே நிலையில்தான் மறுமையில் அவர்கள் எழுப்பப் படுவார்கள்.
பேரீத்தம் பழத்தின் மகிமை
73- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: "لاَ يَجُوْعُ أَهْلُ بَيْتٍ عِنْدَهُمُ التَّمْرُ".
(صحيح مسلم، رقم الحديث 152 - (2046)، ).
(73) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பேரீத்தம் பழம் வைத்திருக்கும் வீட்டாருக்கு பட்டனி ஏற்பட மாட்டாது.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2046.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 16ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.


 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வீட்டில் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் பாவணைக்காக பேரீத்தம் பழம் வைத்துக் கொண்டிருப்பதை இந்நபிமொழி தூண்டுகின்றது.
(2) பேரீத்தம் பழத்தை அதிகமாகப் பயன் படுத்தும் வீட்டாருக்கு பட்டினி ஏற்படாதென இந்நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது.
(3) இந்த நபிமொழி மதீனாவாசிகள் போன்று பேரீத்தம் பழத்தைப் பிரதான உணவாகப் பயன்படுத்துவோருக்கே கூறப்பட்டுள்ளதாக சில அறிஞர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் நபியவர்கள் மதீனாவாசிகளின் நிலையைக் கூறியுள்ளார்கள். அவர்களின் பிரதான உணவாக அக்காலத்தில் பேரீத்தம்பழமே இருந்தது. அது யாருடைய வீட்டில் இல்லையோ அவர் பட்டனியுடன் இருக்க நேரிடுகின்றது. அதனைத்தான் நபியவர் குறிப்பிட்டதாக இவ்வறிஞர்கள் கூறுகின்றனர். எனினும் இக்கருத்தை முழுமையா ஏற்க முடியாது. தற்காலத்தில் பேரீத்தம் பழம் பிரதான உணவாக பயன்படுத்தப்படாமலிருந்தாலும் பேரீத்தம் பழத்துக்கென்று பல சிறப்புக்கள் உள்ளன. அது பட்டினியைப் போக்குவது மாத்திரமின்றி அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட ஓர் அற்புதமான பழமாக இருக்கின்றது.

பாவமன்னிப்புத் தேடல்
74- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، تَابَ اللَّهُ عَلَيْه".
(صحيح مسلم، رقم الحديث 43 - (2703)، ).
(74) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சூரியன் மேற்கிலிருந்து உதிக்க முன்னர் பாவமன்னிப்புத் தேடுகிறவருக்கு அல்லாஹ் மன்னிப்புக் கொடுக்கிறான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2703.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தௌபா என்பது செய்த ஒரு பாவத்திற்காக இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடி மீள்வதாகும். எனினும் பின்வரும் அதன் நிபந்தனைகள் பரிபூரணமாகும்வரை அல்லாஹ்விடத்தில் அத்தௌபா ஏற்கப்பட மாட்டாது :
1. அந்த தௌபா அல்லாஹ்வுக்காக மாத்திரம் இருக்கவேண்டும். அதில் உலக நோக்கமோ மனிதர்களின் புகழோ எதிர்பார்க்கப்படக் கூடாது.
2. செய்த பாவத்தை முழுமையாக விட்டுவிடுதல்.
3. அப்பாவத்தைச் செய்ததற்காகக் கவலைப்படல்.
4. மீண்டும் அதைச் செய்யமாட்டேன் என்று உறுதிகொள்ளல்.
5. அப்பாவம் ஏனைய மனிதர்களின் உரிமைகளுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களிடம் அதனைத் திருப்பி ஒப்படைக்கவேண்டும், அல்லது மன்னிப்புக் கேட்டல் வேண்டும்.
6. சூரியன் மேற்கிலிருந்து உதிக்க முன் (மறுமை நெருங்க முன்) மரணத்தின் அறிகுறிகள் தென்பட முன் தௌபா செய்தல் வேண்டும்.
7. உயிர் தொண்டைக் குழியை அடைய முன் தௌபாச் செய்ய வேண்டும்.
(2) பாவங்கள் செய்யும் ஒவ்வொருவரும் உடனுக்குடன் அதிலிருந்து தௌபாச் செய்து விட வேண்டும். பாவங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் சரி தௌபாச் செய்து விட வேண்டும். சரியான முறையில் தௌபாச் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்கிறான்.
(3) வழமைக்கு மாறாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதுடன், மறுமையுடைய பெரிய அடையாளங்களுள் ஒன்றாகவும் உள்ளது. சிலர் கருதுவது போல் இது பூமி சுழல்வதால் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வில்லை.
வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்யலாகாது
75- عَنْ أَبِيْ قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقُوْلُ: "إِيَّاكُمْ وَكَثرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ؛ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمََّ يَمْحَقُ".
(صحيح مسلم، رقم الحديث 132 - (1607)، ).
(75) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வியாபாரத்தில் அதிக சத்தியம் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது பொருளை விலைபோகச் செய்தாலும் அதன் பரகத்தை அழித்துவிடும்.
அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 1607.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 8ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அவசியமின்றி கொடுக்கல், வாங்கலில் சத்தியம் செய்வது கூடாது என்பது இந்நபிமொழியிலிருந்து புரிகின்றது.
(2) இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டு ஹலாலான சம்பாத்தியத்தைத் தேட நாம் முயற்சிக்க வேண்டும். அதில் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அதிக சத்தியம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
படைப்பினங்கள் மீது சத்தியம் செய்யலாகாது
76- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "لاَ تَحْلِفُوْا بِالطَّوَاغِيْ، وَلاَ بِآبَائِكُمْ".
(صحيح مسلم، رقم الحديث 6 - (1648)، ).
(76) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தாகூத்கள் மீதோ, உங்கள் பெற்றோர் மீதோ நீங்கள் சத்தியம் செய்யாதீர்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 1648.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
குரைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்த அபூ ஸஈத் என்ற புனைப்பெயர் கொண்ட அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி) சிறந்த படைத்தளபதியாகவும், கவர்னராகவும் திகழ்ந்த ஒரு நபித்தோழராவார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தன்று இஸ்லாத்தை ஏற்ற இவர் முஅத்தா போரில் கலந்து கொணடதுடன், ஸிஜிஸ்தான், காபில் போன்ற பிரதேசங்களையும் வெற்றி கொண்டார். ஸிஜிஸ்தானில் கவர்னராக இருந்து, அங்கிருந்து குராஸான் (ஆப்கானிஸ்தான்) பகுதிக்கு படையெடுத்துச் சென்று அதனையும் வெற்றி கொண்டார்கள். பின்பு பஸராவுக்கு வந்து இறுதிவரை அங்கேயே இருந்தார்கள்.
இவர் அறிவித்துள்ள நபிமொழிகள் 14. ஹிஜ்ரி 50 அல்லது 51ல் பஸராவிலே மரணித்தார்கள்.


 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) படைப்பினங்கள் மீது சத்தியம் செய்வது கூடாதென்பதை இந்நபிமொழி சுட்டிக்காட்டுகின்றது. எனினும் ஸஹீஹ் முஸ்லிமில் (11) மார்க்க சட்ட திட்டங்களைப் பற்றி கேட்ட ஒரு ஸஹாபி திரும்பிச் சென்றதும், அவரைப் பற்றி நபியவர்கள் 'அவர் உண்மையாக நடந்து கொண்டால் அவரின் தந்தை மீது சத்தியமாக அவர் வெற்றி பெறுவார்" என்று கூறியதாக ஒரு நபிமொழி இடம்பெறுகின்றது. இதற்கு அறிஞர்கள் பல விளக்கங்களைக் கூறி இருக்கின்றனர். அவற்றில் வலுவானது, படைப்பினங்கள் மீது சத்தியம் செய்யக் கூடாதென்ற தடை வர முன்னரே நபியவர்கள் இவ்வாறு சத்தியம் செய்தார்கள் என்பதாகும். வேறு பல கருத்துக்களும் இதில் கூறப்பட்டுள்ளன. விரிவஞ்சி விட்டோம்.
(2) இந்நபிமொழியில் இடம்பெற்றுள்ள தாகூத் என்பது அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக்கூடிய அனைத்து கற்கள், மரங்கள், சிலைகளையும் குறிக்கும்.

 


மிஸ்வாக் செய்வதன் மகிமை
77- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: "السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ".
(سنن النسائي، رقم الحديث 5، وصححه الألباني).
(77) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மிஸ்வாக் செய்வது வாயைச் சுத்தப்படுத்தும். இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும்.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் : நஸாஈ 5. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 16ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

 

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மிஸ்வாக் செய்வதால் வாய் தூய்மையாகி, துர்நாற்றம் நீங்கி விடுகின்றது. அத்துடன் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கும் இது காரணமாகின்றது.
(2) அடிப்படையில் அராக் எனும் மரத்திலிருந்து எடுக்கப்படும் குச்சியினால்தான் மிஸ்வாக் செய்ய வேண்டும். அதேபோன்று வாயை சுத்தப்படுத்தி, துர்நாற்றத்தை நீக்கும் பற்தூரிகை (பிரஷ்) போன்ற அனைத்து சாதனங்களாலும் மிஸ்வாக் செய்யலாம். எனினும் கை விரல்களால் பல் துலக்குவது இஸ்லாம் காட்டித் தந்த ஒரு வழிமுறையல்ல என்பதையும் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.
(3) மிஸ்வாக் செய்யும் போது பேண வேண்டிய சில ஒழுக்கங்கள்:
1. கூட்டத்துடனிருக்கும் போதோ, பொதுச் சபைகளிலோ மிஸ்வாக் செய்வதைத் தவிர்ந்து கொள்ளல் சிறந்தது. ஏனெனில் அது வீரியத்தைப் பாதிக்கும்.
2. அறுவறுக்கத்தக்க விதத்தில் அதனை மக்கள் முன் வைக்காமலிருத்தல்.
3. மிஸ்வாக் செய்து முடிந்தவுடன் அதிலுள்ளவற்றை சுத்தப்படுத்துமுகமாக கழுவிக்கொள்ள வேண்டும்.
மனைவியுடன் அன்பாக நடந்து கொள்ளல்
78- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "لا يَجْلِدُ أَحَدُكُمْ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِيْ آخِرِ الْيَوْمِ".
(صحيح البخاري، رقم الحديث 5204، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 49 - (2855)،).
(67) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் யாரும் தனது மனைவியை அடிமைகளை அடிப்பது போன்று அடித்து விட்டு, பின்பு இரவில் அவளுடன் உறவு கொள்ள(க்கூடிய நிலையில் இருக்க) வேண்டாம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி).
ஆதாரம் : புஹாரி 5204, முஸ்லிம் 2855. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
குரைஷிக் கோத்திரத்தில் பனூ அஸத் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நபித்தோழர்களில் ஒருவர். ஹஜ்ரி 35ம் ஆண்டு உஸ்மான் (ரலி) ஷஹீதாக்கப்படுவதற்காக முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்காக காவலிலிருக்கும் போது இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஹிஜ்ரி 63ம் ஆண்டு மதீனாவிற்கான யஸீதின் படையெடுப்பின் போது இவர்கள் கொல்லப்பட்டதாகவும் சில அறிவிப்புக்கள் உள்ளன. அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பெண்களை, குறிப்பாக மனைவியை மதித்து, அவர்களுடன் நளினமாக நடக்கும் படியும், அவர்களுக்காக பொறுமை காக்கும்படியும் இஸ்லாம் கட்டளையிடுகின்றது. அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அடிக்காமல் உரியமுறையில் திருத்த முயற்சிக்க வேண்டும்.
(2) மனைவிக்கு உடல்ரீதியாக எவ்விதத் துன்புறுத்தலும் கொடுக்கக் கூடாதென்பதற்கு இந்நபிமொழியில் தெளிவான சான்றுள்ளது. நேசத்தையும், அன்னியோன்யத்தையும், சிறந்த குடும்ப வாழ்கையையும் போதிக்கும் இஸ்லாம் ஒரு போதும் மனைவிக்கு காயமேற்படும் அளவிற்கு அடிப்பதை அனுமதிக்காது.
(3) இருவரும் நல்ல மனநிலையிலிருக்கும் போது உறவு கொள்வதுதான் மிகவும் பொருத்தம். மனைவிக்கு அடித்தால் அவளிடமிருந்து அந்த மனநிலை நீங்கிவிடுகின்றது. அதன்பின் அவளை நெருங்கவதாயிருந்தால் கணவன் அவனுடைய தேவையை மாத்திரம்தான் கருத்திற் கொள்கிறான் என்பது அர்த்தம். அதனைத் தான் நபியவர்கள் தடுத்தார்கள்.
நல்ல தோழர்களைத் தெரிவு செய்வோம்
79- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الْجِيرَْانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ".
(جامع الترمذي، رقم الحديث 1944، قال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن غريب، وصححه الألباني).
(79) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனது தோழனிடத்தில் சிறந்தவனே அல்லாஹ்விடம் தோழர்களில் சிறந்தவனாக இருப்பான். தனது அயல்வீட்டாரிடத்தில் சிறந்தவனே அல்லாஹ்விடம் அயல்வீட்டாரில் சிறந்தவனாக இருப்பான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி).
ஆதாரம் : திர்மிதீ 1944. அவர்கள் இதனை ஹஸன் கரீப் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.

 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 37ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தனது நண்பனுக்கும், அயல் வீட்டாருக்கும் அதிக பயனளிப்பவனே அல்லாஹ்விடத்தில் சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.
(2) மறுமையில் ஒன்றாக எழுப்பப்படுவதற்காக இஸ்லாமிய வரையறைகளுக்குக் கட்டுப்படக்கூடிய நல்லவர்களைத் தனது தோழர்களாக, சகோதரர்களாகத் தெரிவு செய்ய வேண்டும். அதே நேரம் எம்மையும் சேர்த்து நரகிற்கு இழுத்துச் செல்லும் கெட்ட தோழர்களை ஒன்றோ திருத்த முயற்சிக்க வேண்டும். முடியா விட்டால் நாம் ஒதுங்கி விட வேண்டும்.
(3) அல்லாஹ்வுக்காக ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வுக்காகப் பிரியும் இரு நண்பர்களுக்கு மறுமையில் எந்தவொரு நிழலுமில்லாத சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வுடைய அர்ஷுக்குக் கீழ் நிழல் கிடைப்பதாக மற்றுமோர் நபிமொழியில் இடம்பெற்றுள்ளது.

 

பெற்றோருக்காகப் பிரார்த்திப்போம்
80- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ؛ فَيَقُوْلُ: أَنَّى لِيْ هَذَا؟ فَيُقَالُ:  بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ".
(سنن ابن ماجه، رقم الحديث 3660، وحسنه الألباني).
(80) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக ஒரு மனிதனுக்கு சுவனத்தில் அந்தஸ்துக்கள் உயர்த்தப்படும். அப்போது இதுவெல்லாம் எனக்கு எப்படி கிடைத்தது? எனக் கேட்பான். உனது பிள்ளை உனக்காகச் செய்த இஸ்திஃபாரின் மூலம்தான் எனக்கூறப்படும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : இப்னு மாஜாஃ 3660. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஹஸன் என்று கூறியுள்ளார்கள்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) பெற்றொர் தமது பிள்ளைகளை சரியான இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை, ஷரீஆ, நற்குணங்களின் அடிப்படையில் வளர்ப்பதன் முக்கியத்துவம் இந்நபிமொழியில் புரிகின்றது. ஏனெனில் தமது பெற்றோருக்குக்காகப் பாவமன்னிப்புத் தேடும் ஒரு பிள்ளை நிச்சயமாக மார்க்கப்பற்றுள்ள ஒருவராகத் தான் இருக்க முடியும். அல்லாஹ்வுக்கு அடுத்த படியாக இதில் பெற்றோரின் பங்களிப்புதான் அதிகம். மார்க்கத்துடன் தொடர்பற்ற தீயவனாக இருக்கும் ஒரு பிள்ளை தனக்கே பாவமன்னிப்புத் தேடத் தெரியாதவனாக இருக்கும் போது பெற்றோருக்கோ, பிறருக்கோ எவ்வாறு அவன் பாவமன்னிப்புத் தேட முடியும்?
(2) ஒவ்வொரு பிள்ளையும் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் பிரார்த்திக்க வேண்டும். அவ்விருவரில் உயிரோடுள்ளவர்களுக்கு மனநிம்மதிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்க வேண்டும். அவர்களில் மரணித்தவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, அல்லாஹ்வுடைய ரஹ்மத்துக்காகவும் பிரார்த்திப்பதுடன் அவர்கள் பெயரில் அதிகமாக தர்மம் செய்ய வேண்டும்.
(3) நாம் எமது பெற்றோருக்கு செய்யும் பாவமன்னிப்பு அவர்களுடைய பதவியுயவர்வுக்குக் காரணமாகின்றது.

கடமையான குளிப்பின் சட்டங்கள் சில
81- عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنُبًا؛ فَأَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ؛ تَوَضََّأَ وُضُوءَهُ لِلصََّلاَةِ.
(صحيح مسلم، رقم الحديث 22 -(305)، ).
(81) நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் சாப்பிட அல்லது தூங்க விரும்பினால் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்து கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 305.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 16ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஜனாபத்து என்பது உறவு கொள்வதன் மூலமும் – விந்து வெளிப்படாவிட்டாலும் – அல்லது உறவு கொள்ளாமலும் விந்து வெளிப்படுவதன் மூலம் குளிப்பு கடமையாவதைக் குறிக்கின்றது. இவ்வாறு குளிப்புக் கடமையானவர்கள் குளிக்க முன் தாராளமாக உண்ண, பருக, மறுமுறை உறவு கொள்ள, உறங்க அனைத்தும் செய்யலாம்.
(2) அதே போன்றுதான் பெண்ணும் குளிப்பு கடமையான நிலையில் சமையல், குழந்தைகளைப் பராமரித்தல், தேவைகளை நிவர்த்தி செய்தல் போன்ற அனைத்தையும் செய்யலாம்.
(3) ஒரு ஜுனுபாளி உண்ண, பருக, மீண்டும் மனைவியுடன் உறவு கொள்ள, உறங்க விரும்பினால் அச்சந்தர்ப்பத்தில் வுழூச் செய்து கொள்வது விரும்பத்தக்கது. எனினும் குளிப்பதுதான் மிகச் சிறந்தது. இதன் மூலம் விந்து வெளிப்பட்டதால் இழந்த சக்தியை மீட்டெடுக்கலாம். மீண்டும் உற்சாகமும் உத்வேகமும் ஏற்படும்.
ஷைத்தானை விரட்ட வழியொன்று
82- عَنْ جَابِرِ بْنِ عَبْدِاللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ: "إِذَا دَخَلَ الرّجُلُ بَيْتَهُ؛ فَذَكَرَ اللهَ عِنْدَ دُخُوْلِهِ، وَعِنْدَ طَعَامِهِ؛ قَالَ الشّيْطَانُ: لاَ مَبِيْتَ لَكُمْ وَلاَ عَشَاءَ، وَإِذَا دَخَلَ؛ فَلَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ دُخُولِهِ؛ قَالَ الشّيْطَانُ: أَدْرَكْتُمُ المَبِيْتَ، وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ طَعَامِهِ، قَالَ: أَدْرَكْتُمُ المَبِيتَ وَالعَشَاءَ".
(صحيح مسلم، رقم الحديث 103 - (2018)، ).
(82) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும், உணவருந்தும் போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஷைத்தான் (தனது சகாக்களைப் பார்த்து) 'உங்களுக்கு இங்கு உண்ண இரவுணவும் கிடையாது. தங்க இடமும் கிடையாது" என்கின்றான். நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் 'உங்களுக்கு தங்குமிடம் கிடைத்து விட்டது" என்கின்றான். உணவருந்தும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் 'உங்களுக்கு தங்க இடமும், இரவுணவும் கிடைத்து விட்டது" என்கின்றான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 2018.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 22ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) எம்மிடம் எந்நேரமும் அல்லாஹ்வின் நினைவிருக்க வேண்டுமென இந்நபிமொழி தூண்டுகின்றது. எமது வீடுகளிலும், நாம் உண்ணும் உணவுகளிலும் ஷைத்தான் பங்கெடுக்காமலிருக்க அச்சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வை நினைவுகூர்வதை மறந்து விடக்கூடாது.
(2) அல்லாஹ்வை நினைவுகூர்வது ஷைத்தானை விரட்டும். படைத்தவனைப் பொருத்தமாக்கி வைக்கும். துன்ப, துயரங்களைப் போக்கி மகிழ்ச்சி, சாந்தத்தைக் கொண்டு வரும். அல்லாஹ் தன்னைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்ற எண்ணம் உருவாகி அவனை நேரடியாகக் காண்பது போலவே வணங்கத் தோன்றவதுடன், தவறுகள் செய்யும் பட்சத்தில் பாவமன்னிப்புத் தேடி அவன்பால் மீள்வதற்குரிய வழியை ஏற்படுத்தும்.  
ஸுஜூதின் மகிமை
83- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنََّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "أَقْرَبُ مَا يَكُوْنُ الْعَبْدُ مِن رِّبِّهِ وَهُوَ سَاجِدٌ؛ فَأَكْثِرُوْا الدُّعَاءَ".
 (صحيح مسلم، رقم الحديث 215 -(482)، ).
(82) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியான் தனது ரப்புக்கு மிக நெருக்கமாக இருக்குமிடம் அவன் ஸுஜூதிலிருக்கும் போதுதான். எனவே அதில் அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 482.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஓர் அடியானை அல்லாஹ்வின்பால் மிக நெருக்கமாக்கி வைக்கும் பிரதான வணக்கங்களில் ஸுஜூது முதன்மையானது.
(2) தொழும் தொழுகை கடமையானதோ அல்லது உபரியானதோ அதில் அதிகம் பிரார்த்திக்க வேண்டும். அதற்கு மிகப் பொருத்தமான இடம் தொழுகையில் ஸுஜூதுதான்.
(3) கேட்கும் துஆக்களில் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸில் இடம்பெற்றுள்ள துஆக்களை மனனமிட்டு ஓதுவது சிறந்தது. எமது தனிப்பட்ட வாழ்கை, குடும்பம், பொருளாதாரம், மறுமை வாழ்கை அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியுள்ள பல துஆக்கள் அல்குர்ஆன், ஹதீஸில் உள்ளன.


மண்ணறைகளைப் பூசுவது கூடாது
84- عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: نَهَى رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصََّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ.
(صحيح مسلم، رقم الحديث 94 -(970)، ).
(82) நபி (ஸல்) அவர்கள் மண்ணறைகளை சுண்ணாம்பு போன்றவற்றால் பூதுவதையும், அதன் மீது உட்கார்வதையும், அதிலே கட்டிடங்கள் கட்டப்படுவதையும் தடைசெய்தார்கள்
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 970.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 22ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மண்ணறைகளில் சுண்ணாம்பு பூசுவது, கட்டிடங்கள் கட்டுவது, பள்ளிவாயில்கள் கட்டுவது போன்றவை இஸ்லாத்தில் கூடாது. இதனால் இறந்தவருக்கு எந்தவொரு நன்மை, தீமைகளுமில்லை.
(2) சுண்ணாம்பு பூசுவதைத் தடைசெய்யக் காரணம் அவ்வாறு பூசப்படும் போது மக்கள் பார்வைக்கு வித்தியாசமாகக் காட்சியளிக்கின்றது. அதன் விளைவு, அம்மண்ணறைக்கு ஏதாவது சிறப்பம்சங்கள் இருப்பதாக அறிவிலிகள் எண்ணி, அதனைப் புனிதப்படுத்த தலைப்படுவர். இறுதியில் அளவு கடந்து சென்று தமது தேவைகளை இறந்தவர்களிடம் கேட்க முற்படுவர். அது இணைவைப்பாகும். எனவே, சுண்ணாம்பு மாத்திரமல்ல ஏனைய மண்ணறைகளை விட வேறுபடுத்திக் காட்டும் எந்தவொரு அடையாளங்களும் அங்கு வைக்கப்படக் கூடாது.
(3) மண்ணறைக்கு மேல் உட்கார்வது, அதன் மீது சாய்ந்திருப்பது போன்றவற்றையும் இந்நபிமொழி தடை செய்துள்ளது. பொதுவாக எல்லா மண்ணறைகளுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையில் மேற்கண்ட செயற்பாடுகள் சிறு கீறலை ஏற்படுத்துகின்றது. ஒரு முஸ்லிம் உயிர்வாழும் போது எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமோ அவன் மரணித்த பின்பும் அதே போன்று மதிக்கப்பட வேண்டும். அந்த முஸ்லிம் ஜனாஸா மதிக்கப்படுவதைப் போல் அது அடக்கப்பட்டிருக்கும் இடமும் மதிக்கப்பட வேண்டும்.

 


ஓரிணச்சேர்க்கை குற்றமாகும்
85- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ وَجَدْتُمُوْهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ؛ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُوْلَ بِهِ".
(سنن أبي داود، رقم الحديث 4462، وجامع الترمذي، رقم الحديث 1456، واللفظ لهما، وسنن ابن ماجه، رقم الحديث 2561، وقد حسن وصحح الألباني هذا الحديث).
(85) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓரிணச்சேர்க்கையில் ஈடுபடுவதை நீங்கள் கண்டால் செய்பவன், செய்யப்படுபவன் இருவரையும் கொன்று விடுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 4462, திர்மிதீ 1456, இப்னு மாஜாஃ 2561. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் என்றும், ஹஸன் என்றும் கூறியுள்ளார்கள்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 6ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) இயற்கைக்குப் புறம்பாக ஆணும் ஆணும் புணர்வதே ஓரிணச்சேர்க்கை எனப்படுகின்றது. இச்செயல் அறிவின்மை, குறுகிய புத்தி, மார்க்கக் குறைபாடு ஆகியவற்றையே காட்டுகின்றது. இதனால் பல நோய்கள், ஒழுக்கேடுகள் சமூகத்தில் பரவுகின்றன. அடிப்படையில் மனித இயல்புக்கே மாற்றமானதே இச்செயல். இது குடிகொண்டிருந்த நபி லூத் (அலை) அவர்களுடைய சமூகத்தை அல்லாஹ் அடியோடு அழித்தான். அதுபற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான் : 'நமது கட்டளை வந்தபோது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்". (ஹூத்: 82). அக்கூட்டத்தினரே உலகில் முதலில் இதனை அறிமுகப்படுத்தியவர்கள்.
(2) இதில் ஈடுபட்ட இருவரையும் கொலை செய்யும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள். காரணம் இருவரும் அப்பாவத்தில் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இதே கருத்தில் அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டுள்ளனர். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும் தண்டனை நிறைவேற்றும் முறையில் விபச்சாரத்தில் கூறப்பட்டது போன்று இதில் கூறப் படவில்லை. அதனால் நீதிபதிதான் முடிவெடுக்க வேண்டும். வாளால் வெட்டலாம், கல்லடித்தும் கொலை செய்யலாம், உயர்ந்த இடத்திலிருந்து தள்ளியும் விடலாம். இது போன்ற முறைகள் முன்சென்ற சில அறிஞர்ளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நிர்ப்பந்திக்கப்பட்டவருக்கோ, பருவமடையாதவருக்கோ தண்டனை இல்லை. என்றாலும் பருவமடையாதோர் இதற்கு உடந்தையாக இருந்தால் குறைந்த பட்ச தண்டனை வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுவர்.
(3) ஓரிணச்சேர்க்கை ஒரு கீழ்த்தரமான செயல். இக்குற்றத்தை செய்தவர் தண்டனை பெறுவதற்காக, அதனைத் தானாகவே ஒப்புக்கொண்டு, தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளத் தேவையில்லை. மாறாக, தௌபாவுடைய நிபந்தனைகளைப் பேணி அல்லாஹ்விடத்தில் உண்மையாகத் தௌபாச் செய்து மீள வேண்டும். அப்பாவம் மீண்டும் நடைபெறாமலிருக்க சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இறந்தவருக்குப் பயனளிக்கக் கூடியவை
86- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثَةٍ: إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُوْ لَهُ".  
(صحيح مسلم، رقم الحديث 14 -(1631)، ).
(86) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதன் மரணித்தால் மூன்று விடயங்களைத் தவிர அனைத்தும் நின்று விடுகின்றன. (அந்த மூன்று விடயங்கள்: ) 1. நிரந்தரமாகப் பயனளிக்கும் தர்மம். 2. பயனளிக்கும் கல்வி. 3. தனக்காகப் பிரார்த்திக்கும் தனது பிள்ளை.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 1631.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மனிதன் மரணித்தால் அவனது அனைத்து செயற்பாடுகளும் நின்று விடுகின்றன. அதனால் அவனுக்கு நன்மைகள் சேரும் வழியும் அடைக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சில நலவுகள் நடைபெற அவன் காரணமாயிருந்தால் அதன் வழிகள் அடைக்கப்பட மாட்டாது. அவைதான் மேற்கூறப்பட்ட மூன்று விடயங்கள். குழந்தை உருவாவதற்கு அவனை அல்லாஹ் காரணமாயிருக்கியுள்ளான். அவன் விட்டுச் சென்ற கல்வியும் அதன்மூலம் மக்கள் பயனடையும் போது அவனுக்கு நன்மைகள் வந்து கொண்டேயிருக்கும். அதேபோன்று, பொதுப்பணிக்காக அவன் கொடுக்கும் தர்மம் அதனால் பாவணையாளர்கள் பயனடையும் காலமெல்லாம் இவனுக்கு நன்மை வந்து கொண்டிருக்கும். அதற்கு அழகான வழி அதிக காலம் பயனளிக்கும் ஏதாவது பொருளை வக்பு செய்வதாகும்.
(2) இறந்த ஒருவருக்காக உயிருள்ளவர்கள் செய்யும் நற்செயல்களில் அதன் நன்மைகள் சென்றடையுமென என்னென்ன அமல்கள் நபியவர்கள் மூலம் அறிவிக்கப் பட்டுள்ளதோ அவை மாத்திரமே சென்றடையும். அதன்படி ஹஜ், உம்ரா, தர்மம், இஸ்திஃபார், கடனடைத்தல், அவருக்கு விடுபட்ட கடமையான நோன்பு போன்றன இறந்தவர்களுக்குப் பயனளிக்கும். தொழுகை, திக்ருகள், அல்குர்ஆன் ஓதி நன்மை சேர்த்தல் போன்றன ஸஹீஹான ஹதீஸ்களில் ஆதாரபூர்வமாக இடம்பெறாததால் அவை பயனளிக்க மாட்டது. குர்ஆன் ஓதி நன்மை சேர்த்துவதன் மூலம் இறந்தவர் பயனடைவார் என்றிருந்தால் இந்த சமூகத்தின் மீது அதிக கருணை கொண்ட நபியவர்கள் அதனை எங்களுக்கு அறிவித்திருப்பார்கள்.
(3) துறவி என்ற பெயரில் பிரம்மச்சாரியாக இருப்பதை விட இஸ்லாம் காட்டிய வழியில் திருமணம் செய்து அதன் மூலம் நல்ல குழந்தை பெற முயற்சிப்பதே அறிவுடமை.


நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு
87- عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ:  قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا".
(جامع الترمذي، رقم الحديث 807، واللفظ له،  وسنن ابن ماجه، رقم الحديث 1746، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه:  حسن صحيح، وصححه الألباني).
(87) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறாரோ அந்நோன்பாளி அடையும் கூலியைப் போன்று இவருக்கும் வழங்கப்படும். அதனால் அந்நோன்பாளியின் எந்தவொரு நன்மையும் குறைய மாட்டாது.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல் ஜுஹனீ (ரலி).
ஆதாரம் : திர்மிதீ 807, இப்னு மாஜாஃ 1746. இவ்வார்த்தை திர்மிதீயிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இதனை ஹஸன் ஸஹீஹ் என்றும், அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஸஹீஹ் என்றும் கூறியுள்ளனர்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
ஜுஹைனாக் கோத்திரத்தைச் சேர்ந்த அபூ அப்திர்ரஹ்மான் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) நபியவர்களுடன் ஹுதைபியா ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட ஒரு நபித்தோழராவார். மக்கா வெற்றியின் போது ஜுஹைனாக் கோத்திரத்தின் கொடி இவருடைய கையிலேயே இருந்தது. இவர் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கை 81. ஹிஜ்ரி 78ல் தனது 85வது வயதில் இவர்கள் மரணித்தார்கள். இவர் மரணித்த இடம் மதீனா, எகிப்து, கூபா என மூன்று கருத்துக்களுள்ளன.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவுவது நல்ல காரியமென்பதில் எள்ளலவும் ஐயமில்லை. அதிலே அல்லாஹ்விடம் நன்மைகள் கிடைப்பதுடன் பல சமூக நலன்களுமுள்ளன. பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்த ஒரு களமாகவும் இது திகழ்கின்றது.
(2) நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஏற்பாடு செய்வதால் நோன்பு திறக்கச் செய்த நன்மை, உறவினர்களுடன் சேர்ந்து நடந்த நன்மையென இரட்டிப்பு நலன்கள் கிடைக்கின்றன. எனினும் நோன்பு திறக்க அறவே வசதியில்லாத ஒருவருக்கு அதற்காக உதவுவது இன்னும் அதிக நன்மைகளை ஈட்டித்தரும்.
(3) இப்தார் நிகழ்ச்சி என்ற பெயரில் இன்று முஸ்லிம் சமூகத்தில் பரவியிருக்கும் வீண்விரயம் கண்டிக்கத்தக்கது. போட்டிக்காகவும் பெருமைக்காகவும், ஆடம்பரத்திக்காகவும் இப்தார் என்ற பெயரில் எமது சமூகத்தில் பரவியிருக்கும் நோயே வீண்விரயம். ஒருவர் ஓர் இப்தார் நிகழ்ச்சி வைத்தால் அதனைவிட அதிக வகை சிற்றுண்டிகள் வைத்து நாம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேவைக்கதிகமாக உணவுவகைகள் பரிமாறப்பட்டு இறுதியில் அவை குப்பைகூலங்களில் எறியப்பட்டு, முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோர் அனைவரையும் முகம்சுளிக்க வைக்கும் செயல் பல இடங்களில் அரங்கேருவதைக் காணலாம்.
(4) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும், அடையாளச் சின்னமாகவும் இருக்கின்ற இந்த நோன்பையே கொச்சைப் படுத்தும் வகையில் அல்லாஹ்வுக்கு முழுக்க முழுக்க சதாவும் இணைவைத்துக் கொண்டேயிருக்கும் முஷ்ரிக்குகளையும், அவனை முழுமையாக மறுக்கும் காபிர்களையும் இப்தார் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாகவும், கௌரவ அதிதிகளாகவும் அழைக்கப்பட்டு முஸ்லிம்களின் தனித்துவத்தையே இழக்கும் நிலையைக் காண்கிறோம்.


ரமழான் மாதத்தின் சிறப்பு
88- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ،  قَالَ : دَخَلَ رَمَضَانُ؛ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ، وَفِيْهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَهَا؛ فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ، وَلاَ يُحْرَمُ خَيْرَهَا إِلاَّ مَحْرُوْمٌ".
(سنن ابن ماجه، رقم الحديث 1644، وحسنه الألباني وصححه).
(88) ரமழான் மாதம் வந்ததும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இதோ இந்த மாதம் உங்களிடத்தில் வந்து விட்டது. அதில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓரிரவுள்ளது. அவ்விரவை யார் இழக்கின்றாரோ அவர் அனைத்து நலவுகளையும் இழந்து விடுகின்றார். துர்ப்பாக்கியசாலியைத் தவிர யாரும் அவ்விரவின் நன்மைகளை இழக்க மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : இப்னு மாஜாஃ 1644. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஹஸன் என்று கூறியுள்ளார்கள்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ரமழான் மாதத்திற்குப் பல சிறப்புக்கள் உள்ளன. அது பொறுமைக்குரிய மாதம். நோன்பு, இரவுத் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதல் போன்ற நற்செயல்கள் அதிகமாகச் செய்யப்படும் மாதம். அம்மாதத்தில் அதிக மக்கள் நரகவிடுதலை அளிக்கப்படுகின்றனர். அம்மாதத்தில் லைலதுல் கத்ர் இரவுள்ளது. அதில் நல்லமல்கள் புரிவது ஆயிரம் மாதங்கள் நல்லமல்கள் செய்வதை விடச் சிறந்தது. இதனால்தான் அவ்விரவைப் பயன்படுத்தாதவன் துர்ப்பாக்கியசாலியாகி விடுகின்றான்.  
(2) வருடத்துக்கொரு முறை எம்மிடம் விருந்தாளியாக வரும் ரமழானை நாம் சிறந்த முறையில் பயன்படுத்தி பாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகவிடுதலை பெற முயற்சிக்க வேண்டும்.
நயவஞ்சகர்களின் அடையாளங்கள்
89- عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ".
(صحيح البخاري، رقم الحديث 33، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 107 - (59)،).
(89) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நயவஞ்சகர்களின் அடையாளங்கள் மூன்று : 1. பேசினால் பொய் பேசுவான். 2. வாக்களித்தால் மாறு செய்வான். 3. நம்பப்பட்டால் துரோகம் செய்வான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி 33, முஸ்லிம் 59. இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டது.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 1ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) நயவஞ்கர்களின் பிரதான அடையாளங்களான பொய், வாக்கு மாறுதல், துரோகம் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
(2) நயவஞ்சகன் தன்னிடமுள்ள தீய கருமங்களை மறைத்து நல்லதை சிரமப்பட்டு மக்கள் மத்தியில் காட்ட முற்படுவான். அதைவிடக் கொடூரம் இறைநிராகரிப்பை மறைத்துக் கொண்டு முஸ்லிம் போல் நடிப்பதாகும்.
(3) மேற்கண்ட பண்புகள் யாரிடமிருக்கின்றதோ அவன் நயவஞ்சகனாகின்றான். அதில் ஒரு பண்பிருந்தால் அதனளவு அவனிடம் நயவஞ்சகம் இருக்கும்.
குர்ஆனைச் சுமந்தோரை மதித்தல்
90- عَنْ أَبِيْ مُوْسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ: إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلَ الْقُرْآنِ غَيْرَ الْغَالِيْ فِيْهِ وَالْجَافِيْ عَنْهُ، وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ".
(سنن أبي داود، رقم الحديث 4843، وحسنه الألباني).
(90) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வயோதிப முஸ்லிமையும், அல்குர்ஆனைச் சுமந்து அதில் அளவு கடக்காமலும் அதனைப் வெறுக்காமலும் இருப்பவரையும், நீதமான ஆட்சியாளரையும் மதிப்பது அல்லாஹ்வை மதிப்பதிலுள்ளதாகும்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 4843. அஷ்ஷேஹ் அல்பானீ இதனை ஹஸன் என்று கூறியுள்ளார்கள்.
 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அறிவிப்பாளர் பற்றி 28ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
 ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) வயோதிபர்களை மதித்து, அவர்களுக்கு இரக்கம் காட்டி மென்மையாக நடப்பது அவசியமாகும். இது அல்லாஹ்வை மதிப்பது போன்றாகும்.  
(2) அல்குர்ஆனைக் திறன்படக் கற்று, மனனமிட்டு, அதன்படி செயற்படுபவர்களையும் மதிக்க வேண்டும். அதுவும் அல்லாஹ்வை மதிப்பதிலுள்ளதுதான்.
(3) அல்குர்ஆன் விடயத்தில் அளவு கடந்து செல்வதென்பது, அதிலுள்ள உள்ரங்கமான கருத்துக்களை சிரமப்பட்டு விளங்க முயற்சிப்பது, அதன் விளைவாக தவறான விளக்கங்களை கொடுப்பது, தஜ்வீத் சட்டங்கள், எழுத்து உச்சரிப்புக்கள் விடயத்தில் அளவுக்கு மீறி கரிசனையெடுத்து தான் ஓதுவது சரிதானா என்று தன்னையே சந்தேகப்படும் அளவிற்கு மனக்குழப்பம் ஏற்படல் போன்றனவே அல்குர்ஆன் விடயத்தில் அளவு கடப்பதாகும்.
(4) அல்குர்ஆனை வெறுப்பதென்பது, அதனை வெறுமனே மனனம் மாத்திரம் செய்து விட்டு அதனைத் தொடர்ந்து ஓதாமலும், விளங்காமலும், அதன்படி செயற்படாமலும் இருப்பதாகும்.
அனைத்து நற்காரியங்களும் எவனுடைய அருளினாலே நிறைவடைகின்றதோ அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஸலவாத்தும் ஸலாமும் எமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.