நபிகளாரின் வழிகாட்டல்

சுத்தம், தொழுகை, ஜனாஸா, ஸகாத், ஸதகா, நோன்பு, ஹஜ் மற்று குர்பான்போன்ற சகல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் பின்பற்றக் கூடிய முறையில் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டி வழி முறளை பற்றிய விளக்கம்.

 

நபிகளாரின் வழிகாட்டல்
<التاميلية- தமிழ்- Tamil>
        

அஹ்மத் பின் உத்மான் அல் மசீத்
ஆசிரியரின்பெயர்


ஷெய்க் செய்யத் இஸ்மாயில் இமாம்
மொழி பெயர்த்தவர்

ஜாசிம் இப்னு தஇயான்/
முஹம்மத் அமீன்
மீளாய்வு செய்தவர்கள்

هدي محمد صلى الله عليه وسلم في عبادته ومعاملاته وأخلاقه


اختصره د. أحمد بن عثمان المزيد
من كتاب زاد المعاد في هدي خير العباد للإمام إبن القيم




ترجمة: الشيخ  سيد إسماعيل إمام
مراجعة:محمدأمين / جاسم دعيان

 


அன்றாட வாழ்வில் நபிகளாரின் வழிகாட்டல்
நூலாசிரியர்
அஹ்மத் பின் உத்மான் அல் மசீத்
மொழி பெயர்த்தவர்
ஸெய்யித் இஸ்மாயீல் இமாம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
அல்லாஹ்வின்  அருளும் சாந்தியும் ரஸூல் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார் மற்றும் தோழர்கள் மீதும் உண்டாவதாக.
    அல்லாஹ் நம்மீது சொரிந்துள்ள  அருட் கொடைகளில் எல்லாம், அவன் நமக்குத் தந்துள்ள இஸ்லாம் மார்க்கமே மிகப் பெரிய அருட் கொடையாகும். ஏனெனில் இதுதான் இயற்கை யானதும், நடு நிலையானதும், அனைத்தையும் உள்ளடக்கியதுமான மார்க்கம். மேலும் அறிவையும் நல்லொழுக்கதையும் உள்ளடக்கிய மார்க்கமும், எல்லா காலத்துக்கும், இடத்துக்கும் பொருத்தமான மார்க்கமும் இதுதான். அத்துடன் இலகுவான அருள் நிறைந்த மார்க்கமும், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரும் மார்க்கமும் இது வொன்றுதான்.
    ஆகையால் இன்றைய யுகத்தில் இஸ்லாம் மார்க்கத்தின் தெளிவான தோற்றத்தையும், அதன் சிறப்புக்ளையும்,  அனுகூலங்ளையும் பற்றி எடுத்துக் காட்டுவது காலத்தின் தேவையாகும். மேலும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் யாவும், இஸ்லாம் மார்க்கத்தின் செயல் வடிவமாக திகழ்கின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனெனில் நபிகளாரின் வழிகாட்டலில், அமுல் படுத்த இலகுவான இஸ்லாத்தின் சகல சிறப்பம்சங்ளும் பொதிந்துள்ளன. அதாவது நபியின் வழிகாட்டல் பொருள் முதல் வாதத்துடனும், ஆத்மீகத்துடனும் சம்பந்தப்பட்ட வணக்க வழிபாடுகள், கொடுக்கள் வாங்கல் நடவடிக்கைள், மற்றும் நல்லொழுக்கம் உள்ளிட்ட  அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாகும்.
எனவே ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் பற்றிய சிறந்த நூல்களில் ஒன்றான,  زاد المعاد في هدي خير العباد என்ற இமாம் இப்னுல்கையிம் (ரஹ்) அவர்களின்  நூலில் இருந்து இந்நுலை நான் வடித்தெடுத்துள்ளேன்.  நபியவர்களின் வாழ்வின் சகல அம்சங்களிலுமுள்ள வழிகாட்டல்களையும் நாம் எடுத்துப் பின்பற்றவும், அதன்படி நாம் செயல் படவும் ஏதுவாக இது அமைந்துள்ளது.
இவ்விடயத்தில் நமக்குத் தூய எண்ணத்தைத் தந்து, அருள் பாளிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்.                                                 டாக்டர்  அஹ்மத் பின் அல் மஸீத்
சுத்தம் மற்றும் மலசல கழிப்பின் ஒழுங்குகள்
1-    நபி (ஸல்) அவர்கள் கழிவிடத்தில் பிரவேசிக்கும் போது,
اللهم إني أعوذ بك من الخبث والخبائث
اللهم إني أعوذ بك من الخبث والخبائث
அல்லாஹ்வே! கெட்ட ஷைத்தான்களின் தீமைகளை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்  என்றும், அங்கிருந்து வெளியே வரும் போது, غفرانك அல்லாஹ்வே! உனது மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் சொல்வார்கள்.
1-    ரஸூல் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் அமர்ந்த வாரே சிறுநீர் கழிப்பார்கள்.
2-    அன்னார் தங்களின் தேவையைப் பூர்த்தி செய்த  பின்னர் சில வேளை தண்ணீரைக் கொண்டும், சில வேளை கற்களைக் கொண்டும் சுத்தம் செய்து கொள்வார்கள். இன்னும் சில வேளை இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து சுத்தம் செய்து கொள்வார்கள்.
3-    நபியவர்கள் சுத்தம் செய்யும் போது தங்களின் இடது கையால் சுத்தம் செய்வார்கள்.
4-    தண்ணீர் கொண்டு அன்னார் சுத்தம் செய்ததும், அதன் பின்னர் தங்களின் கையை நிலத்தில் அடித்துத் தேய்த்துக் கொள்வார்கள்.
5-    நபியவர்கள் பிரயாணத்திலிருக்கும் வேளையில் தங்களின் தேவையை நிறைவேற்றச் செல்லும் போது தங்களின் தோழர்களை விட்டும் மறைந்து கொள்வார்கள்.
6-    சில வேளை தன் இலக்கின் இறுதி வரை சென்றும், சில வேளை ஈத்த மரப் பத்தைகளின் இடையில், இன்னும் சில வேளை ஓடையின் மரங்களுக்கிடையில் மறைந்து கொள்வார்கள்.
7-    சிறு நீர் கழிப்பதற்காக மிருதுவான பூமியை நாடிச் செல்வார்கள்.
8-    தன் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அமரும் வேளையில் நிலத்திற்குச் சமீபமாகும் வரையில் தனது ஆடையை உயர்த்த மாட்டார்கள்.
9-    நபியவர்கள் சிறு நீர் கழிக்கும் வேளையில் அன்னாருக்கு யாரேனும் ஸலாம் சொன்னால் அன்னல் நபியவர்கள் பதில் ஸலாம் சொல்ல மாட்டார்கள்
ரஸூல் (ஸல்) அவர்களின் வுழூஃ
1-    ரஸூல் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் வெவ்வேறாக  வுழூஃ செய்து கொள்வார்கள். சில வேளை பல தொழுகைகளை ஒரே வுழூவைக் கொண்டு  நிறைவேற்றிக் கொள்வார்கள்.   
2-    நபியவர்கள் சில வேளை இரண்டு கைகள் நிறைவான ஒரு அள்ளு தண்ணீரைக் கொண்டும், இன்னும் சில வேளை அதன் மூன்றில் இரண்டு பாகம் அளவு கொண்ட தண்ணீரைக் கொண்டும், வேறு சில நேரங்களில் அதை விடவும் அதிகமான தண்ணீரைக் கொண்டும் வுழூஃ செய்து கொள்வார்கள்.
3-    குறைந்த அளவு தண்ணீர் உபயோகித்து வுழூவு செய்து கொள்ளும் ஒரு மனிதராக ரஸூல் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். மேலும் வுழூவின் போது ஏற்படும்  தண்ணீர் விரயம் பற்றி தன் சமூகத்தினரை எச்சரிக்கையும் செய்தார்கள்.
4-    நபியவர்கள் வுழூவின் உருப்புக்களை ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் அல்லது  மூன்று தடவைகள் தண்ணீர் ஊற்றி வுழூஃ செய்து கொள்வார்கள். சில வேளை சில உருப்புக்களை இரண்டு தடவைகளும் இன்னும் சில உருப்புக்களை மூன்று தடவைகளும் கழுவிக் கொள்வார்கள். ஒரு போதும் மூன்று தடவைகளுக்கு அதிகமாக அன்னார் கழுவிக் கொண்டதில்லை.  
5-    நபியவர்கள் சில வேளை ஒரு உள்ளங் கை அளவு தண்ணீரையும், இன்னும் சில வேளை இரண்டு உள்ளங் கை அளவு தண்ணீரையும் மற்றும் சில வேளை மூன்று உள்ளங் கை  அளவு தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தலையும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்வார்கள்.
6-    நபியவர்கள் வலது கையால் நாசிக்குத் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூக்கை உரிஞ்சி விடுவார்கள்.
7-    வுழூஃவின் போது வாய் கொப்பளிக்கவும், நாசிக்குத் தண்ணீர் செலுத்தவும் தவற மாட்டார்கள்.
8-    தலை முழுவதையும் மஸ்ஹு செய்து கொள்ளும் ரஸூல் (ஸல்) அவர்கள் தன் கைகளை தலைக்கு முன்னும் பின்னும் ஒரு தடவை  கொண்டு செல்வார்கள்.
9-    நபியவர்கள் நெற்றி முடியின் மீது மஸ்ஹு செய்யும் போது தலைப்பாகையின் மேலாலும் மஸ்ஹு செய்து மஸ்ஹைப் பூரணப்படுத்திக் கொள்வார்கள்.
10-    தலையை மஸ்ஹு செய்யும் போது,  அதனுடன் இரு காதுகளையும் சேர்த்து மஸ்ஹு செய்துக் கொள்வார்கள், அவ்வமயம் அதன் உள்ளேயும், புறத்தையும் மஸ்ஹு செய்து கொள்வார்கள்.
11-    பூட்ஸ் அணிந்து கொள்ளாத போது இரண்டு கால்களையும் கழுவிக் கொள்வார்கள்.
12-    வுழூவை வரிசை கிரமமாக இடைவிடாது தொடர்ச்சியாக செய்து முடிப்பார்கள்.
13-    வுழூவை பிஸ்மியை கொண்டு  துவங்கும் நபியவர்கள் வுழூஃ செய்து முடிந்ததும்,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ الله وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ،سُبْحَانَكَ اللهُمَّ، وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ،“
   “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை யன்றி எதுவுமில்லை. அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும், தூதருமாவார் என்றும் சாட்சி பகர்கின்றேன். அல்லாஹ்வே!  நீ தூய்மையான வன், நீயே புகழுக்குரியவன். வணக்கத்திற்குத் தகுதியானவன் உன்னையன்றி எதுவுமில்லை. உன்னிடம் பாவ மன்னிப்புக் கோரி உன் பக்கம் திரும்புகிறேன்.” என்று ஓதுவார்கள்.                  
14- வுழூவை துவங்கும் போது தொடக்கை அகற்றிக் கொள்ளுமுகமாக நிய்யத்து வைத்துக் கொண்டேன், அல்லது தொழுகை அங்கீகரிக்கப் படுவதற்காக நிய்யத் வைத்துக் கொண்டேன் என்று தங்களின் வாயால் நபியவர்களும் அன்னாரின் தோழர்களும்   ஒரு போதும்    சொன்னதில்லை.
15- முழங்கை,  மற்றும் கரண்டைக்கால் விடயத்தில் நபிகளார் எல்லை மீறியதில்லை.
16- வுழூஃ செய்த பின்னர் தங்களின் உருப்புக்களைத் துடைத்துக் கொள்ளும் வழக்கம் ரஸூல் (ஸல்) அவர்களிடம் இருந்தில்லை.
17- சில வேளை தங்களின் தாடியை நபியவர்கள் கோதி விடுவார்கள், எனினும் வழமையாக அப்படிச் செய்ததில்லை.
18- தங்களின் விரல்களைக் கோதி வந்த அன்னார் அதனையும் எப்போதும் பேணி வரவில்லை.
19- தான் வுழூஃ  செய்யும் போதெல்லாம் யாரேனும் தனக்குத் தண்ணீர் ஊற்றிவிடும் பழக்கம் நபிகளாரின் வழிகாட்டலாக இருந்ததில்லை. எனினும் அவசியம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மாத்திரம் சிலர் அன்னாருக்குத் தண்ணீர் ஊற்றி உதவியுள்ளனர். எனினும் தாங்கனாகவே தண்ணீர் ஊற்றி வுழூஃ செய்து கொள்வதே ரஸூல் (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.
பூட்ஸ் மேல் மஸ்ஹு செய்தல்
1- நபியவர்கள்  ஊரில் இருக்கும் போதும், பிரயாணத்தில் இருக்கும் போதும் தங்களின் பூட்ஸ் மேல் மஸ்ஹு செய்துள்ளார்கள். மேலும்  ஊரிலிருக்கும் ஒருவர், ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்த ஒரு தினமும், ஒரு பிரயாணி  பகலும்  இரவும்  சேர்ந்த மூன்று தினங்களும் தங்களின் பூட்ஸ் மேல் மஸ்ஹு செய்து கொள்ள நபியவர்கள் அனுமதியளித்தார்கள்.
2- நபியவர்கள் பூட்ஸ் மீது மஸ்ஹு செய்யுமிடத்து அதன் மேல் பக்கத்தில் தண்ணீரைத் தடவிக் கொள்வார்கள். மேலும் தலையை மஸ்ஹு செய்யும் போது நெற்றி முடியை  மஸ்ஹு செய்து கொள்வதுடன் தலைப்பாகையின் மீதும் மஸ்ஹு செய்து கொள்வார்கள்.
3- ரஸூல் (ஸல்) அவர்கள்  பூட்ஸ் அணிந்திருக்கும் வேளையில் அதன் மேல் மஸ்ஹு செய்து கொள்வார்கள், அல்லாத சந்தர்ப்பத்தில் தங்களின் காலைக் கழுவிக் கொள்வார்கள். ஒரு போதும் இதற்கு மாறாக அன்னார் செயற்பட்டதில்லை.
தயம்மம் செய்யும் போது
1- ரஸூல் (ஸல்)  அவர்கள் தான் தொழும் பூமியின் மேலிருக்கும் மண் அல்லது கூலாங் கல் அல்லது மணல் எதையேனும் கொண்டு தயம்மம் செய்து கொள்வார்கள். மேலும் “என் உம்மத்தைச் சேர்ந்த ஒருவர் எங்கேயேனும் இருக்கும் போது அன்னவரை தொழுகையின் நேரம் வந்தடைந்தால், அதுவே அவரின் தொழுகையின் இடம். மேலும் அதுவே அவர் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளும் பொருளுமாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள்.  
2- நீண்ட பிரயாணத்தின் போது தயம்மம் செய்து கொள்வதற்காக நபியவர்கள் மண் எதையும் எடுத்துச் சென்றதில்லை. அப்படி எவருக்கும் கட்டளை பிறப்பிக்கவும் இல்லை.
3- நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கா கவும் தயம்மம் செய்து கொண்டார்கள் என்பதற்கோ, அப்படி கட்டளைளயிட்டார்கள் என்பதற்கோ ஆதாரம் எதுவும் காணப்பட வில்லை. எனினும் அன்னார் பொதுவாக தயம்மமை வுழூவின் தானத்திலேயே  வைத்தார்கள்.
4- நபியவர்கள் முகத்திற்கும், இரண்டு கைகளுக்குமாக மண் மீது ஒரு தடவையே கையைத் தட்டிக்கொண்டார்கள்.
தொழும் போது
a.  தொழுகையை ஆரம்பித்தலும், ஓதல்களும்
1- நபியவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றதும் ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்வார்கள். அதற்கு முன்னர் வேறெதுவும் அன்னார் ஓதியதில்லை. மேலும் ஒரு போதும் நிய்யத்தை வாயால் மொழிந்ததில்லை.
2- அப்பொழுது முதலில் இரு கைகளையும் அதன் விரல்களையும் உயர்த்தி, இரண்டு காதுகளுக்கும் புயங்களுக்கும் நேராகவும், கிப்லா திசைக்கு நேராகவும் வைத்துக் கொள்வார்கள். பின்னர் வலது கையை இடது கையின் மேலால் வைத்துக் கொள்வார்கள்.
3- நபியவர்கள் தொழுகையை ஆரம்பித்ததும் சில வேளை,
اللهم باعد بيني وبين خطاياي كماباعدت بين المشرق والمغرب، اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس،
“அல்லாஹ்வே! கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையே  எட்ட முடியாத பெரும் தூரத்தை நீ எப்படி ஏற்படுத்தி இருக்கின்றாயோ, அதே போல்   எனக்கும் என் தவறுகளுக்குமிடையில் எட்ட முடயாத தூரத்தை ஏற்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே! என் தவறுகளை தண்ணீரைக் கொண்டும், பனியைக் கொண்டும், குளிர் நீரைக் கொண்டும் கழுகி விடுவாயாக. அல்லாஹ்வே! அழுக்குகளை விட்டும் வெண்ணிர ஆடை தூய்மைப் படுத்தப் படுவது போன்று என் பாவங்களை விட்டும் என்னைத் தூய்மையாக்கி வைப்பாயாக.” என்றும், இன்னும் சில வேளைகனில்,
وجّهت وجهي للّذي فطر السموات والأرض حنيفاً مسلما، وما أنا من المشركين، إنّ صلاتي ونسكي ومحياي ومماتي لله ربّ العالمين، لا شريك له وبذلك أمرت وأنا اول  المسلمين،
“நான் ஒரு தூய முஸ்லிமாக இருக்கும் நிலையில், விண்ணையும், மண்ணையும் படைத்த ஒருவனின் பக்கம், என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். எனது தொழுகையும், வணக்க வழிபாடுகளும் என் வாழ்வும், சாவும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு இணை எதுவும் இல்லை. அப்படியே எனக்கு கட்டளையயிடப்பட்டுள்ளது மேலும் நான் முஸ்லிம்களில் முதலாமவன்.” என்றும் ஓதுவார்கள்.
 4-     அதன் பின் اعوذ بالله من الشيطان الرجيم  என்று கூறி விட்டு, அதனைத்   தெடர்ந்து  ஸூரத்துல் பாதிஹாவை ஓதுவார்கள்.
5-    மேலும் நபியவர்கள் இரண்டு சந்தர்ப்பத்தில் மௌனமாக இருப்பார்கள். அவை தக்பீர் தஹ்ரீமாவுக்கும், ஸூரா பாதிஹா  ஓதுவதற்கு மிடையில் ஒரு தடவையும், இன்னொரு தடவை பாதிஹா ஸூரா ஓதிய பின்னருமாகும். இப்படி ஒரு ரிவாயத்திலும் இன்னொரு ரிவாயத்தில் நிலையிலிருந்து  றுகூவிற்குச் செல்ல முன்னர் எனவும் பதிவாகியுள்ளது.
6- ஸூரா பாதிஹா ஓதி முடிந்ததும் இன்னொரு ஸுராவை ஓத ஆரம்பிப்பார்கள். அதனை சில வேளை நீட்டி ஓதுவார்கள். சில வேளை பிரயாணம் போன்ற ஏதேனும் கருமம் வரும் போது அதனைக் சுறுக்கிக் கொள்வார்கள். எனினும் அனேகமாக, ஸூராக்களை நடு நிலை படுத்தி ஓதுவதே அதிகம்.
7- பஜ்ருத் தொழுகையின் போது அறுபது ஆயத்துக்கள் முதல் நூறு ஆயத்துக்கள் வரையில் ஓதுவார்கள். சில வேளைق  ஸூராவையும் சில வேளை ஸூரா ‘றூமையும், ஓதியிருக்கின்றார்கள். இன்னும் சில சந்தர்ப்பத்தில்,
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
“சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும் போது” என்ற ஸூராவை ஓதுவார்கள். மேலும் சில வேளை இரண்டு ரக்ஆத்திலும்
 إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا

“பூமி பலமாக அசைக்கப்படும் போது” என்ற ஸூராவை ஓதுவார்கள்.  மேலும் பிரயாணத்தில் இருக்கும் போது குல் அஊது பிரப்பில் பலக், மற்றும் குல் அஊது பிரப்பின் நாஸ் ஆகிய இரண்டு ஸூராக்களையும் ஓதியிருக்கின்றார்கள். மேலும் ஒரு முறை ரஸூல் (ஸல்) அவர்கள் الْمُؤْمِنُونَ அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது மூஸா, ஹாரூன் (அலை) ஆகியோர் பற்றிய செய்தியுள்ள இடத்தை அடைந்ததும், அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. எனவே அன்னார் உடனே ருகூவுக்குச் சென்று விட்டார்கள்.
8- வெள்ளிக் கிழமை  ஸுபுஹுத் தொழுகையில் أَلَم  ஸஜதா வையும் هَلْ أَتَىٰ عَلَى الْإِنسَانِ என்ற  ஸூராவையும் ஓதி வந்துள்ளார்கள்.
9  சில வேளை நபியவர்கள், ழுஹர் தொழுகையில் கிராஅத்தை நீட்டிக் கொள்வார்கள். மேலும் ழுஹர் தொழுகையில் கிராஅத்தை நீட்டியிருந்தால் அஸர் தொழுகையில் அதன் பாதி அளவும், மேலும் ழுஹரில் கிராஅத்தை சுறுக்கியிருந்தால் அதன்  பாதி அளவும் என இரண்டு நேரத்திலும் ஓத வேண்டியதை வரையரை செய்து கொள்வார்கள்.
10- மஃரிபுத் தொழுகையில் ஒரு முறை الطُّورِ ஸூராவையும் இன்னொரு தடவை الْمُرْسَلَاتِ ஸூராவையும் ஓதினார்கள்.
11- இஷாத் தொழுகையில் எவ்வளவு நேரம் ஓத வேண்டுமென்பதை முஆத் (ரழி) அவர்களுக்கு எடுத்துக் காட்டு முகமாக அதில்
 وَالتِّينِ -   وَالشَّمْسِ وَضُحَاهَا     -سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى  -وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
போன்ற ஸூராக்களை நபியவர்கள் ஓதினார்கள். எனினும் இஷாவில் பகரா ஸூரா ஓதுவதை அன்னார் விரும்பவில்லை.
12- ஒரு ரக்ஆத்தில் ஒரு ஸூராவை பூரணமாக  ஓதுவது ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையில் ஒன்றாகும். மேலும் சில வேளை ஒரு ஸூராவை இரண்டு ரக்ஆத்திலும் ஓதி இருக்கின்றார்கள். இன்னும் சில வேளை ஸூராவின் ஆரம்பப் பகுதில் இருந்து ஓதியிருக்கின்றரார்கள். எனினும் ஸூராவின் கடைசியிலிருந்தும் அதன் நடுப் பகுதியிலிருந்தும் ஓதியதாகத் தெரியவில்லை. மேலும் நபில் தொழுகையில் ஒரு ரக்அத்தில் இரண்டு ஸூராக்களை ஓதியிருக்கின்றார்கள். எனினும் ஒரே ஸூராவை இரண்டு ரக்ஆத்திலும் ஓதியிருப்பது அரிது. மேலும் ஜும்ஆவிலும், இரண்டு பெருநாளிலும் தவிர வேறு தொழுகை எதிலும் எந்த வொரு ஸூராவையும் குறிப்பிட்டு அதனை ஓதும்படி  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதில்லை.
13- ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் பஜ்ருத் தொழுகையில் றுகூவுக்குப் பின்னர் குனூத் ஓதினார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஏனெனில் நபியவர்கள் இப்படி குனூத் ஓதியதற்கான காரணம், அப்போது அசம்பாவிதம் ஒன்று ஏற்பட்டிருந்ததுவே. எனவே பிரச்சினை நீங்கியதும் குனூத் ஓதுவதை நபியவர்கள் நிறுத்தி விட்டார்கள். ஆகையால்  குனூத் ஓதுவதானது பிரச்சினைளுடன் தொடர்பு பட்ட ஒன்றேயன்றி பஜ்ருத் தொழுகையுடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல.

நபிகளார் தொழுகையை நிறைவேற்றிய முறை
 1- எல்லாத் தொழுகையிலும் இரண்டாவது ரக்அத்தைப் பார்க்கிலும் முதலாவது ரக்அத்தை நீட்டிக் கொள்வார்கள்.
2- ஸூராவை ஓதி முடித்ததும், மூச்சு விட்டு அது திரும்பும் வரையிலான நேரம் வரையில் மௌனமாக இருப்பார்கள். பின்னர் இரு கைகளையும் உயர்த்தி ருகூவுக்குச் சென்ற வாறு அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்வார்கள். பின்னர் தங்களின் உள்ளங் கைகளை தங்களின் முழங் கால்களின் மீது வைத்து அதனை பிடித்துக் கொள்வார்கள். அவ்வமயம் தங்களின் கைகளை தங்களின் விலாக்களை விட்டும் தூரமாக்கிக் கொள்வார்கள். மேலும் தங்களின் முதுகை விரித்து, நீட்டி, சம நிலையில் வைத்துக் கொள்வார்கள். அவ்வமயம் தங்களின் தலையை உயர்த்திக் கொள்ளவுமட்டார்கள், தாழ்த்திக் கொள்ளவு மாட்டார்கள். எனினும் அதனை தங்களின் முதுகுக்கு நேராக வைத்துக் கொள்வார்கள்.
 3- மேலும் سبحان ربي العظيم என்று சொல்வார்கள். சில வேளை سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي என்றும், سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ المَلائِكَةِ والرُّوحِ என்றும் சொல்வார்கள்.
ருகூவிலும் ஸுஜூதிலும் பத்து தஸ்பீஹாத்துக்கள் சொல்லும் நேர அளவு தரித்திருப்பதுதான் ரஸூல் (ஸல்) அவர்களின் வழமை. சில வேலை, நிலையில் எவ்வளவு நேரம் தரித்து நிற்பார்களோ, அதே அளவு  ருகூவிலும் ஸுஜூதிலும் தரித்திரப்பார்கள். எனினும் சில வேளை இரவுத் தொழுகையில் மாத்திரமே இவ்வாறு தொழுவார்கள். பொதுவாக தொழுகையை உரிய முறையில் சரியாக நிறைவேற்றுவதே நபியவர்களின் நடைமுறை.    
سمع الله لمن حمده
என்று கூறிய வாறு தலையை உயர்த்துவார்கள். அப்போது இரண்டு கைகளையும் உயர்த்தி,  முள்ளந்தண்டை நிமிர்த்தி  கொள்வார்கள். ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அப்படியே செய்வாரகள். எனவேதான் “ருகூவிலும் ஸஜூதிலும் தன் முள்ளந்தண்டை நிமிர்த்திக் கொள்ளாத மனிதனின் தொழுகை திருப்திகரமான தல்ல” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும் நபிகளார் நிலைக்கு வந்ததும்
رَبَّنَا وَلَكَ الحَمْدُ
என்று சொல்வார்கள். சில வேளை
رَبَّنَا لَكَ الحَمْدُ
என்றும், இன்னும் சில வேளை
اللَّهُمَّ رَبَّنَا لك الحَمْدُ
என்றும் சொல்வார்கள்.
  6-  கடமையான இந்த இஃதிதாலின்  நிலையை, ருகூவின் அளவு நீட்டுவார்கள். அவ்வமயம்,     
اللهم ربنا ولك الحمد ملء السموات والأرض ، وملء مابينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد ، أحق ما قال العبد ، وكلنا لك عبد ، لا مانع لما أعطيت ولا معطي لمامنعت ، ولا ينفع ذا الجد منك الجد "
“எங்கள் இறைவனே! வானம் பூமிக்கு இடையேயும் அவை இரண்டிற்கும் இடையேயும்  நிறைவாக வுள்ள புகழ் யாவும் உனக்கே சொந்தம். மேலும் பாராட்டுக்கும் புகழுக்கும் உரியவனே! அதற்கு மேலாலும் இன்னும் எத்தனைப் பாரட்டுக்கள் உனக்கு வேண்டுமென்று நீ எண்ணியிருக் கின்றாயோ அதுவும் உனக்கே சொந்தம். இப்படி  உன் அடிமை கூறுதற்கு நீ மிகவும் தகுதியானவன். மேலும் நாம் அனைவருமே உன் அடிமைகள். ஆகையால் நீ கொடுத்ததை தடுக் கூடியவன் ஒருவனும் இலை. நீ தடை செய்து வைத்துள்ளதைத் யாரும் தரவும் இயலாது. மேலும் செல்வம் யாவும் உனக்குரியது. ஆகையால் ஈற்றில் பணக்காரனின் பணம் அவனுக்குப் பயன் தராது”.  என்று ஓதுவார்கள்  
7- பின்னர் தக்பீர் கூறியவாறு ஸஜூதில் விழுவார்கள். அவ்வமயம் முதலில்  முழங்கால் இரண்டையும் நிலத்தில் வைப்பார்கள். பின்னர் கைகள் இரண்டையும் வைப்பார்கள். அதன் பின்னர் நெற்றியையும் மூக்கையும் வைப்பார்கள்.  தங்களின் தலைப்பாகை சுற்றின் மீது ஸஜூது செய்யமாட்டார்கள் நெற்றியையும் மூக்கையும் நிலத்தில் வைத்தே ஸஜூது செய்வார்கள். நபியவர்கள் வெற்று நிலத்தின் மீது ஸுஜூது செய்வதே அதிகம்.  ஆயினும் தண்ணீர் மீதும் சகதி மீதும், ஈச்ச ஓலையால் வேயப்பட்ட விரிப்பு மற்றும் பாயின் மீதும், உரோமத்துடன் பதனிட்ட தோலின் மீதும் நபிகளார் ஸஜூது செய்திருக்கிறார்கள்.
8- ஸுஜூது செய்யும் சந்தர்ப்பத்தில் தங்களின் நெற்றியையும், கையையும் நிலத்தின் மீது அழுத்திக் கொள்வார்கள். மேலும் தங்களின் இரண்டு கைகளையும் விலாவை விட்டும் விலக்கிக் கொள்வார்கள். அவ்வமயம் தங்களின் அக்குள் பகுதியின் வெண்மை தெரியும் படி கைகளை தூரமாக்கிக் கொள்வார்கள்.
9- ஸுஜூதின் போது தங்களின் கையை இரண்டு புஜத்துக்கும், காதுக்கும் நேராக வைத்துக் கொள்வார்கள். மேலும் கால் விரல்களை கிப்லாவுக்கு நேராக வைத்து, தங்களின் உள்ளங் கைகளையும் விரல்களையும் விரித்து வைத்துக் கொள்வார்கள். மேலும் விரல்களை அதிகம் விரித்துக் கொள்ளாமலும், சேர்த்துக் கொள்ளா மலும் பார்த்துக் கொள்வார்கள்.
10-மேலும்  سُبْحَانَكَ اللهُمَّ رَبَّنَا وبِحَمْدِكَ, اللَّهُمَّ اغْفِرْلِي
“இறைவா! உன்னைத் துதிக்கிறேன். நம் இரட்சகனே! உன்னைப் பாராட்டுகின்றேன். என்னை மன்னிப்பாயாக” என்றும்
سبوح قدّوس ربّ  الملائكة والرّوح “
மலக்குகளினதும், ஜிப்ரீலினதும் இரட்சகனே!  நீ மேன்மையானவன், தூய்மையானவன்” என்றும் சொல்வார்கள்.
11-பின்னர் கைகளை உயர்த்தாமல் தக்பீர் கூறியவாறு தலையை உயர்த்துவார்கள். பின்னர் தங்களின் இடது பாதத்தை விரித்து அதன் மீது அமர்ந்து, வலது பாதத்தை நட்டிக் கொள்வார்கள். மேலும் தங்களின் கைகளை தொடைகளின் மேல் வைத்துக் கொள்வார்கள். அவ்வமயம் முழங் கைகளை தொடைகளின் மேலாலும் கைகளின் ஓரத்தை முழங்காலின் மேலாலும் வைத்துக் கொள்வார்கள். அத்துடன் இரண்டு விரல்களைப் பிடித்து அதனை ஒரு வட்டமாக ஆக்கி தங்களின் ஒரு விரலை உயர்த்தி அதனை அசைத்த வண்ணம் பிரார்த்தனை செய்வார்கள். மேலும்,   
      اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاجْبُرْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي
“அல்லாஹ்வே! என்னை மன்னித்து என் மீது அருள் புரிவாயாக. என் மூட்டுக்களைப் பலப்படுத்திடு வாயாக, மேலும் எனக்கு நேர்வழியைத் தந்து எனக்கு ஆகாரமும் தந்தருள்வாயாக” என்ற  துஆவையும் ஓதுவார்கள்.
12- நபியவர்கள்     ஸுஜூதில் எவ்வளவு  நேரம் தரித்திருப்பார்களோ அவ்வளவு நேரம் இக்கடமையை நிறைவேற்றும்  போதும் தரித்திரப்பது அன்னாரின் ஒரு வழி  முறையாகும்.
13-பின்னர் நபியவர்கள் எழுந்து நிற்பார்கள். அப்போது தொழுகையினை ஆரம்பிக்கும் போது சற்று மௌனமாக இருந்தது போன்று மௌனம் சாதிக்க மாட்டார்கள். மாறாக உடனே ஓதத் துவங்குவார்கள். பின்னர் முதலாவது ரக்அத்தை போலவே இரண்டாவது ரக்அத்தையும் தொழுவார்கள். எனினும் முதல் ரக்அத்தில் செய்த மெளனம் காத்தல், துவக்க துஆ ஓதல், தக்பீர் தஹ்ரீமா  சொல்லுதல், அதிக நேரம் எடுத்தல் ஆகிய நான்கு கருமங்களையும் தவிர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் நபியவர்கள் முதலாவது ரக்அத்தை, இரண்டாவது ரக்அத்தை விடவும் நீட்டித் தொழுது வந்தார்கள். அன்னார் இப்படிச் செய்யக் காரணம் ஜமாஅத்தில் சேர வரும்  மஃமூமின் காலடி ஓசை ஓயும் வரையிலாக இருக்கலாம்,
14- தஷஹ்ஹதுக்காக அதாவது அத்தஹிய்யாத்துக் காக ரஸூல் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டதும் தங்களின் இடது கையை இடது தொடை மீதும், வலது கையை வலது தொடை மீதும் வைத்து ஆல் காட்டி விரலால் சாடை காட்டுவார்கள். அதனை உயர்த்தியோ, படுக்க வைத்தோ வைக்க மாட்டார்கள். எனினும் அதனை சற்றுத் தாழ்த்தி அசைத்துக் கொண்டிருப்பார்கள். அவ்வமயம் சின்ன விரலையும், அதனை அடுத்த விரலையும் மடித்துக் வைத்துக் கொண்டு நடு விரலையும், பெரு விரலையும் சேர்த்து அதனை வட்டமாக ஆக்கிக் கொள்வார்கள். மேலும் துஆவின் போது அதாவது ஸலவாத்து இப்ராஹீமிய்யா முடிந்ததும் ஆல் காட்டி விரலை உயர்த்தி அதனைப் பார்த்த வண்ணம் பிரார்த்தனை செய்வார்கள்.
15- இவ்வமர்வில் நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது,
    التحيات لله والصلوات و الطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
“சகல மாட்சிமையும்,  தொழுகைகளும், நற் கிரியைகளும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும். நபிகளார் அவர்களே! உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியமும் உண்டாகட்டும். மேலும் நம்மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை யன்றி எதுவுமில்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை  எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும், தூதருமாவார் என்றும் சாட்சி பர்கன்றேன்.”   
என்ற தஷஹ்ஹதுவை ஓதுவார்கள். மேலும் இதனை ஓதும் படி தன் தோழர்களுக்கும்  கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறு முதலாவது அத்தஹிய்யாத்தை ரஸூல் (ஸல்) அவர்கள் சுருக்கமாக ஓதுவார்கள். பின்னர் தக்பீர் கூறிய வாறு தொடையின் மீது அழுத்தம் கொடுத்த வண்ணம்  தங்களின் காலின் முன் பகுதியையும்,  முட்டுக்காலையும் ஊன்றி  எழுந்து நிற்பார்கள். இச்சந்தர்ப்பத்தில் தங்களின் கையையும் உயர்த்துவார்கள். பின்னர் ஸூரா பாதிஹாவை மாத்திரம் ஓதுவார்கள். சில வேளை இறுதி இரண்டு ரக்ஆத்திலும் ஸூரா பாத்திஹா மாத்திரமல்லாது அதை விடவும் மேலதிகமாக எதையேனும் ஓதுவார்கள்.
16- நபியவர்கள் இறுதி   அத்தஹிய்யாத்தில் அமரும் போது தங்களின் ஆசனப் பகுதியின் மீது அமர்ந்து கொள்வார்கள். அவ்வமயம் தங்களின் ஆசனப் பகுதியை நிலத்தின் பக்கமாகக் கொண்டு வந்து தங்களின் பாதத்தை ஒரு பக்கத்தால் வெளியே கொண்டு வருவார்கள். அப்பொழுது இடது காலை தங்களின் தொடைக்கும், மற்றும் கெண்டைக் காலின் கீழ் பாகத்திலும் ஆக்கிக் கொள்வார்கள். அத்துடன் இடது பாதத்தை நிமிர்த்தி வைத்துக் கொள்வார்கள். சில வேளை அதனை விரித்து வைத்துக் கொள்வதுமுண்டு.  மேலும் தங்களின் வலது கையை வலது தொடையின் மேல் வைத்து ஆல்காட்டி விரலை உயர்த்தியும், மற்றும் மூன்று விரல்களை மடித்தும் வைத்துக் கொள்வார்கள். மேலும் .  
اللهم إني أعوذ بك من عذاب القبر،وأعوذ بك من فتنة المسيح الدجال،وأعوذ بك من فتنة المحيا والممات، اللهم إني أعوذ بك من المأثم والمغرم
“அல்லாஹ்வே! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் தஜ்ஜாலின் சோதனையை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகிறேன், இன்னும் வாழ்விலும், சாவிலும் ஏற்படும் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! இன்னும் கடன் பழுவையும், மற்றும் பாவ காரியங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.” என்று பிரார்த்தனை செய்வார்கள்.
 பின்னர் வலது பக்கமாக
السلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
என்று ஸலாம் சொல்வார்கள். அவ்வாறு இடது  பக்கமாகவும் ஸலாம் சொல்வார்கள்.
17- தனக்கு முன் ஒரு அம்பையோ, தடியையோ ஸுத்ராவாக- மறைப்பாக ஆக்கிக் கொள்ளுமாறு தொழுகையாளிகளுக்கு  ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபியவர்கள் பயணத்திலும், திறந்த வெளியிலும் தொழும் போது  தனக்கு முன்னால் ஒரு ஈட்டியை மையப்படுத்தி வைத்து, அதனை ஸுத்ராவாக ஆக்கிக் கொள்வார்கள். சில வேளை தனது பயணப் பொதியை எடுத்து அதனை முன்னால் வைத்துக் கொண்டு தொழுவதும் உண்டு..  
18- நபிகளார் ஒரு மதிலுக்குப் பக்கத்தில் தொழுதால், இடையில் ஒரு ஆடு நடமாடும் அளவு இடை வெளியை விட்டு வைப்பார்கள். அதிலிருந்து மிகவும் தூரமாகி நிற்க மாட்டார்கள். ஆகையால் ஸுத்ராவுக்குப் பக்கத்தில் நின்று கொள்ளுமாறு தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
நபிகளார் தொழும் வேளையில்
1- அன்னார் தொழும் வேளையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
2- தங்களின் கண்களை மூடிக் கொள்ளவு மாட்டர்கள்.
3- நபிகளார் தொழும் வேளையில் தங்களின் தலையைப் பணித்துக் கொள்வார்கள். மேலும் அன்னார்  நீட்டித் தொழ நினைக்கும் போது, பிள்ளையின் அழுகைச் சத்தம் கேட்டுவிட்டால் அது குழந்தையின் அன்னைக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சி உடனே தொழுகையை இலகு படுத்தி விடுவார்கள்.
4- நபியவர்கள் தொழும் தருவாயில் தன் மகளின் பிள்ளை தங்களின் புஜத்தின் மேல் ஏறிக் கொண்டால், நபிகளார் எழுந்து நிற்கும் போது பிள்ளையைத் தூக்கிக் கொண்டு எழும்புவார்கள். ருகூவும், ஸுஜூதும் செய்யும் போது பிள்ளையைக் கீழே இறக்கி வைப்பார்கள்.
5-சில வேளை தொழுது கொண்டிருக்கும் அண்ணல் நபியின் முதுகின் மேல் ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்கள்  வந்து ஏறிக் கொள்வார்கள், அப்போது குழந்தை கீழே விழுந்து விடுவதை விரும்பாத நபியவர்கள் ஸஜதாவை நீட்டிக் கொள்வார்கள்.
6- சில வேளை அன்னார் தொழுங்கால் ஆயிஷா (ரழி) அவர்கள் வந்து விடுவார்கள், அப்போது அவருக்குக் கதவைத் திறந்து கொடுத்து விட்டு தங்களின் முஸல்லாவுக்குத் நபிகளார் தரும்பி விடுவார்கள்.
7- தொழும் போது தங்களுக்கு யாரேனும் ஸலாம் சொன்னால், அதற்கு சைகை மூலம்  பதில் தருவார்கள்.
8- தொழும் போது  சில வேளை தங்களின் வாயால் காற்றை ஊதிக் கொள்வார்கள், அழுவார்கள், தேவைப்பட்டால் கனைப்பார்கள்.
9- சில வேளை வெற்றுக் காலோடும், இன்னும் சில வேளை பாதரட்சை அணிந்தவாறும் நபியவர்கள் தொழுவார்கள். மேலும் யூதருக்கு மாறாக பாதணியணிந்து தொழும்படி அன்னார் கட்டளை யிட்டார்கள்.
10- சில வேளை ஒரு ஆடையை அணிந்து கொண்டும், இன்னும் சில வேளை இரண்டு ஆடைகளை அணிந்து கொண்டும் தொழுவார்கள். அண்ணல் நபியவர்கள் இப்படித் தொழுவதே அதிகம்.    
தொழுது முடிந்ததும்
1- இறுதி ஸலாம் கூறிய பின், மூன்று தடவைகள் இஸ்திஃபார் செய்வார்கள். அதன் பிறகு, கிப்லா    திசையை நோக்கிய வாறு
  اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، ومِنكَ السَّلامُ ، تباركْتَ يَاذا الجلالِ والإكرام
“அல்லாஹ்வே! நீயே சாந்தி. உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகின்றது.  கீர்த்தியும் கண்ணியமுமிக்க  இறைவனே நீ அருள் மிக்கவன்.”  என்று சொல்வார்கள். அதன் பிறகு அவசரமாக மஃமூன்களின் பக்கமாக திரும்பி  விடுவார்கள். மேலும் தங்களின் வலது  புறத்தாலும், சில வேலை இடது புறத்தாலும் அப்படி திரும்புவார்கள்.
2- அன்னார் பஜ்ருத் தொழுகையை தொழுது முடிந்ததும் சூரியன் உதயமாகும் வரையில் தாங்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்.
3- சகல பர்ழான தொழுகைக்குப் பிறகும்,
لا إلهَ إلاّ اللّهُ وحدَهُ لا شريكَ لهُ، لهُ المُـلْكُ ولهُ الحَمْد، وهوَ على كلّ شَيءٍ قَدير، اللّهُـمَّ لا مانِعَ لِما أَعْطَـيْت، وَلا مُعْطِـيَ لِما مَنَـعْت، وَلا يَنْفَـعُ ذا الجَـدِّ مِنْـكَ الجَـد.
لا حولَ ولا قوةَ إلا بالله، لا إله إلا الله، ولا نعبدُ إلا إياهُ، لهُ النعمةُ ولهُ الفضلُ ولهُ الثناءُ الحسنُ، لا إله إلا الله مُخلصينَ له الدينَ ولو كرِهَ الكافرون

“வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் வையன்றி எதுவும் இல்லை அவன் ஒருவன். அவனுக்கு இணை ஒன்றுமில்லை. ஆட்சி அனைத்தும் அவனுக்கே சொந்தம். புகழ் யாவும் அவனுக்கே உரியன’ அவன் யாவற்றின் மீதும் வல்லமையுள்ளவன். அல்லாஹ்வே நீ கொடுத்ததை எவராலும் தடுத்துவிட முடியாது. மேலும் நீ தடுத்து வைத்ததை எவராலும் தரவும் முடியாது.
அல்லாஹ்வின்  உதவியின்றி  எதிலும் எத்தகைய அசைவும், சக்தியும் இல்லை. நாம் அவனையன்றி வேறு எதையும் வணங்க மாட்டோம். சகல அருளும், உதவியும் அவனையே சாரும். சிறந்த எல்லாப் பாராட்டுக்களும் அவனுக்கே சொந்தம். வணக்கத்திற்குத் தகுதியாவன் அவனையன்றி எதுவும் இல்லை. எனவே அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவன் மாத்திரமே.” என்று ஓதுவார்கள்.
4-மேலும் சகல பர்ழான தொழுகைக்குப் பிறகும்,   سبحانَ اللهِ என்பதை முப்பத்து மூன்று தடவையும்
الحمد لله என்பதை முப்பத்து மூன்று தடவையும்,
اللهُ أكبرُ என்பதை முப்பத்து மூன்று தடவையும், ஓதுவார்கள் ஈற்றில் நூறாவதாக
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيىء قدير
.”வணக்கத்திற்குத் தகுதியானவன்  அல்லாஹ்வை யன்றி எதுவும் இல்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை ஒன்றுமில்லை. சகல ஆட்சியும்  அவனுக்கே சொந்தம். இன்னும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. மேலும் அவன் சகல வஸ்துக்கள் மீதும் வல்லமையுள்ளவன்.” எனும் வாசகத்தை ஓதி முடிப்பார்கள்.  .
ஸுன்னத்தான, தொழுகையும், இரவுத் தொழுகையும்
1. பொதுவாக ஸுன்னத்தான தொழுகைகளையும், காரணம் குறிக்காத நப்லான  தொழுகைகளையும் தங்களின் இல்லத்திலேயே ரஸூல் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். குறிப்பாக மஃரிப் ஸுன்னத்தை வீட்டில் தொழுவார்கள்.
2. நபியவர்கள் ஊரில் இருக்கும் போது ஸுன்னத்தான பத்து ரக்ஆத்துக்களையும் பேணி தொழுது வருவார்கள். அவையாவன ழுஹருக்கு முன்னர் இரண்டு ரக்ஆத்துக்களும், அதன் பின்னர் இரண்டு ரக்ஆத்துக்களும், மஃரிபுக்குப் பின்னர் இரண்டு ரக்ஆத்துக்களும், இஷாவுக்குப் பின்னர் இரண்டு ரக்ஆத்துக்களும் பஜ்ருக்கு முன்னர் இரண்டு ரக்ஆத்துக்களு மாகும். இவற்றில் பஜ்ரின் ஸுன்னத்து தவிர ஏனையவற்றை தம் வீட்டில் தொழுவார்கள்.
3. மற்றெல்லா ஸுன்னத்தான தொழுகைகளை விடவும் பஜ்ருடைய ஸுன்னத்தின் விடயத்தில் நபியவர்கள் அதிக அக்கறை காட்டி வந்தார்கள். அதனையும், வித்ருத் தொழுகையையும் நபியவர் கள் ஒரு போதும் விட்டதில்லை.  அன்னார் அவற்றை ஊரில் இருக்கும் போதும் தவற விட்டதில்லை, பிரயாணத்தில் இருக்கும் போதும் தவற விட்டதில்லை. மேலும் பர்ழான தொழுகையுடன் சம்பந்தப் பட்ட ராதிபான இவ்விரு தொழுகைகளையும் தவிர்ந்த வேறு எந்த ராதிபான ஸுன்னத்துத் தொழுகையையும் பிரயாணத்தில் இருக்கும் போது நபிகளார் தொழுததாக அறிவிப்புக்களில் காணப்படவில்லை.
4. பஜ்ருடைய ஸுன்னத்துக்குப் பின்னர் தங்களின் வலது புறமாக நபிகளார் சாய்ந்து கொள்வார்கள்
5. சில வேளை நபியவர்கள் ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்ஆத்துக்கள் தொழுவார்கள். ழுஹருக்குப் பிந்திய இரண்டு ரக்ஆத்துக்களும் அன்னாருக்குத்  தவறி விடும் பட்சத்தில் அன்னார் அதனை அஸருக்குப் பின்னர் கழா செய்து கொள்வார்கள்.
 6. அன்னார் இரவுத் தொழுகையை அனேகமாக நின்று கொண்டு தொழுவார்கள். சில வேளை உட்கார்ந்து கொண்டும் தொழுவார்கள். சில வேளை உட்கார்ந்தவாறு ஓதிக் கொண்டிருக்கும் நபியவர்கள், ஓதுவதற்கு இன்னும் சற்று எஞ்சி இருக்கும் போது எழுந்து நின்று அதனை ஓதி விட்டு அந்த நிலையிலிருந்து ருகூவுக்குச் செல்வார்கள்.
7. நபிகளாரின் இரவுத் தொழுகை பலவாறு அமைந்திருந்தது. முதலில் இரண்டிரண்டு ரக்ஆத்துக்களாகத் எட்டு ரக்ஆத்துகள் தொழுவார் கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பிறகும் ஸலாம் கொடுப்பார்கள். அதன் பின்னர் வித்ருத் தொழுகையை நிறைவேற்றுவார்கள். வித்ருத் தொழுகையை ஐந்து ரக்அத்துக்களாகவோ, ஒன்பது ரக்அத்துக்களாவோ, ஏழு ரக்அத்துக்க ளாகவோ தொழுவார்கள். இதில் வித்ரை ஐந்து ரக்அத்துக்களாக நிறைவேற்றும் போது, இடையில் உட்காராமல் ஐந்து ரக்அத்துக்களையும் ஒரேயடியா கத் தொழுவிட்டு இறுதியாகக் கடைசி ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத் ஓதி, அதன் பின் ஸலாம் கொடுப்பார்கள்.
ஆனால் ஒன்பது ரக்அத்துக்களைக் கொண்டு வித்ரு தொழும் போது, முதலில் எட்டு ரக்அத்துக்களையும் இடைவிடாது தொடர்ச்சி யாகத் தொழுது விட்டு அதில் முதலாம் அத்தஹிய்யாத்துக்காக அமருவார்கள். அதன் பின் எழுந்து ஒன்பதாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர், ஒன்பதாவது ரக்அத்தில் இரண்டாம் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து கொள்வார்கள். அதில் அத்தஹிய்யாத் ஓதிய பின்னர் ஸலாம் கொடுப்பார்கள். இவ்வாறே ஏழு ரக்அத்துககளைக் கொண்டு வித்ரு தொழும் போது, ஆறு ரக்அத்துக் களையும் இடைவிடாது தொடர்ச்சியாகத் தொழுது விட்டு ஆறாவது ரக்அத்தில் முதலாம் அத்தஹிய்யாத்துக்காக அமருவார்கள். பின்னர் எழுந்து ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் அதில் இரண்டாவது அத்தஹிய்யாத்தை ஓதி விட்டு  ஸலாம் கொடுப்பார்கள்.
அத்துடன் ஏழு, ரக்அத்துக்களைக் கொண்ட வித்ருத் தொழுகையினைத் தொழும் சமயத்தில், அதனைத் தொழுது முடித்த பிறகு இன்னும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனை நின்று தொழாமல் உட்கார்ந்து தொழுவார்கள்.     
8. வித்ருத் தொழுகையை சில வேளை இரவின் முதல் பகுதியிலும், சில வேளை அதன் நடுப் பகுதியிலும், இன்னும் சில வேளை அதன் இறுதிப் பகுதியிலும் நிறைவேற்றுவார்கள். மேலும் “வித்ருத் தொழுகையை, உங்களின் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்
 9. சில வேளை வித்ருக்குப் பின் உட்கார்ந்து கொண்டு இரண்டு ரகஆத்துக்கள் தொழுவார்கள். மேலும் சில வேளைகளில் அவ்விரண்டு ரகஅத்தி லும் உட்கார்ந்தவாறு கிராஅத்தை ஓதுவார்கள். அவ்வமயம் ருகூஃ செய்ய நினைத்தால் எழுந்து நின்று, அதன் பின் ருகூஃ செய்வார்கள்.
10. நபியவர்ளுக்குத் தூக்கம் மேலிட்டாலோ அல்லது அசௌகரியம் ஏற்பட்டாலோ பகற் பொழுதில் பண்ணிரண்டு ரக்ஆத்துக்கள் தொழுவார்கள்.
11. ஓரிரவு நபியவர்கள் ஒரு ஆயத்தை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டு ஸுப்ஹு வரை நின்று கொண்டிருந்தார்கள்.
12. இரவுத் தொழுகையில் சில வேளை அல் குர்ஆனை மௌனமாகவும், சில வேளை ஓசையுடனும் ஓதுவார்கள். அவ்வாறே சில வேளை நிலையில் நிற்பதை நீட்டிக் கொள்வார்கள். இன்னும் சில வேளை அதன் நீளத்தைக் சுறுக்கிக் கொள்வார்கள்.        
13. நபியவர்கள் வித்ருத் தொழுகையில்,
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى , قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ , قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ
எனும் ஸூராக்களை ஓதுவார்கள்    ஸலாம் கொடுத்ததும் நபியவர்கள் سبحان الملك القدوس என்று மூன்று தடவைகள் சொல்வார்கள். மூன்றாவது தடவையில் தங்களின் சப்தத்தை நீட்டி உயர்த்தி கொள்வார்கள்.
ஜும்ஆ தினத்தில் நபியவர்கள்
1- நபிகளார் ஜும்ஆ தினத்தை கௌரவித்தும் அதனை சிறப்பித்தும் அத்தினத்தில் விசேடமான சில காரியங்களை மேற் கொண்டும் வந்தார்கள். இதன் மூலம் அத்தினத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதற்கான  சிறந்த வழிகாட்டளை தந்துள்ளார்கள். இத்தினத்தில் நபிகளார் குளித்து, அழகான ஆடை அணிந்து, அத்தினத்தை கௌரவித்தார்கள். மேலும் இத்தினத்தில் குத்பா பிரசங்கத்திற்குச் செவிமடுத்தலைக் கடமையாக்கி னார்கள். அத்துடன் அன்னார் மீது அதிகமாக ஸலவாத்து சொல்வதையும் விதியாக்கினார்கள்.
2- மக்கள் பள்ளி வாயலில் ஒன்று கூடியதும் நபிகளார், மக்களுக்கு ஸலாம் கூறுவார்கள். பின்னர் மிம்பரில் ஏறி மீண்டும்  ஜனங்களை நோக்கி ஸலாம் கூறி விட்டு அமர்ந்து கொள்வார்கள். அதனைத் தொடர்து பிலால் (ரழி) அவர்கள் அதான் சொல்வார்கள். அதான் முடிந்ததும், நபிகளார் எழுந்து நின்று அதானுக்கும் குத்பாவுக்குமிடையில் இடைவெளியின்றி உடனடியாக குத்பாவை ஆரம்பிப்பார்கள். குத்பா ஓதும் போது ஊன்றிக் கொள்வதற்காக, ஒரு தடியை அல்லது ஒரு வில்லை எடுத்துக் கொண்டு மிம்பர் மீது ஏறுவார்கள்.
.3.  எழுந்து நின்று கொண்டு பிரசங்கம் செய்யும்  அன்னார் இடையில் சற்று அமருவார்கள். பின்னர் மீண்டும் எழுந்து இரண்டாம் குத்பா ஓதுவார்கள்.
4. குத்பா பிரசங்கம் நிகழ்த்துகையில் தன் பக்கம் நெருங்கி வரும்படியும், குத்பாவை காது தாழ்த்தி கேட்கும் படியும் கட்டளையிடுவார்கள். அவ்வமயம் “தன் தோழனிடம் மௌனமாக இரு” என்று அறிவிக்கும் மனிதன் குத்பாவின் பலனை வீனாக்கி விட்டான், எவன் இதனை வீனாக்கி விட்டானோ அவனுக்கு ஜும்ஆவின் பலன் கிட்டாது” என்று கூறுவார்கள்.
5. நபியவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்த துவங்கியதும் அன்னாரின் கண்கள் சிவந்து விடும். சப்தம் உயர்ந்து விடும். கோபம் மேலோங்கி விடும். அப்போதவர்கள் ஒரு படைத் தளபதி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பது போன்று காட்சி யளிப்பார்கள்.
6. குத்பாவின் போது   اما بعدஎன்று விளிப்பார்கள். மேலும் அன்னார் தங்களின் குத்பாவை சுறுக்கமாக நிகழ்த்தி, தொழுகையை நீட்டிக் தொழுவார்கள்.
7. தங்களின் குத்பாவில் இஸ்லாத்தின் அடிப்படைகளையும், அதன் சட்டங்களையும் பற்றித் தன் தோழர்களுக்கு அறிவுறுத்துவார்கள். மேலும் கட்டளை ஏதும் வரும் போது அதனை அவர்களுக்கு எடுத்தேவுவார்கள், அவ்வாறே தடை ஏதும் வரும் போது அதனை விட்டும் அவர்களைத் தடுப்பார்கள்.
 8.  ஏதேனும் ஒரு தேவை ஏற்பட்டாலோ, அல்லது எவரேனும் விளக்கம் கோரி அதற்குப் பதில் அளிக்க வேண்டியிருந்தாலோ தங்களின் குத்பாவை இடையில் நிறுத்தி,  மீண்டும் குத்பாவைத் தொடரு வார்கள். சில வேளை ஏதும் அவசியம் ஏற்பட்டால் மிம்பரிலிருந்து கீழே இறங்கி வந்து விட்டு மீண்டும் அவ்விடத்துக்குத் திரும்புவார்கள். சந்தர்ப்பத்திற்குத் தேவையான விடயங்களைப் பற்றி மக்களுக்கு குத்பாவில் கட்டளையிடுவார்கள். மக்கள் மத்தியில் வறுமைப் பட்ட எவரையுமோ, அல்லது தேவைப் பட்ட எவரையுமோ கண்டு கொண்டால் அவர்களுக்கு  தர்மம் செய்யும்படி மக்களைத் தூண்டி அதைச் செய்யும் படி அவர்களுக்குக் கட்டளையிடுவார்கள்.
9.  நபியவர்கள் குத்பா நிகழ்த்தும்  போது அல்லாஹ்வின் நாமம் உரைக்கும் போது தங்களின் ஆல்காட்டி விரலைக் கொண்டு சைகை செய்வார்கள். மழையின்றி பஞ்சம் ஏற்பட்டால் குத்பாவில் மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள்.
10.  நபியவர்கள் ஜும்ஆ தொழுது முடிந்ததும் அதன் ஸுன்னத்  இரண்டு ரக்ஆத்தையும் தங்களின் இல்லம் சென்று தொழுவார்கள். மேலும் அதனை தொழுதவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றதும் மேலும் நான்கு ரக்ஆத்துக்கள்  தொழும்படி ஏவினார்கள்.     
இரு பெருநாட்களில் நபியவர்கள்  
1. நபியவர்கள் இரண்டு பெருநாளையும் “முஸல்லாவில்”- பெருநாள் தொழுகை நடாத்தும் மைதானத்தில் தொழுவார்கள். அந்நாளில் அன்னார் அழகான ஆடையை அணிந்து கொள்வார்கள்.
2. நபியவர்கள் நோன்புப் பெருநாளன்று வீட்டிலிருந்து புறப்பட முன் ஒற்றைப் படையாகச்  சில ஈத்தம்  பழங்களைச் சாப்பிடுவார்கள். ஆனால் ஹஜ்ஜுப்  பெருநாளன்றோ முஸல்லாவிலிருந்து திரும்பி வரும் வரையில் எதுவும் சாப்பிட மாட்டார்கள். திரும்பிய பின் தங்களின் உழ்ஹிய்யா குர்பானியிலிருந்து சிலதை உண்பார்கள். மேலும் நேன்புப் பெருநாள் தொழுகையை நேரம் தாழ்த்தி தொழும் நபிகளார், அதை விடவும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நேர காலத்துடன்  முன் கூட்டித் தொழுவார்கள்.  
3. அன்னார் முஸல்லாவுக்கு நடந்து செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் ஈட்டியொன்றும்  எடுத்துச் செல்லப்படும். முஸல்லாவில் வைத்து அதன்பால் நின்று தொழுவதற்கு அது ஸுத்தராவாக  நட்டி வைக்கப்படும்
4. நபியவர்கள் முஸல்லாவை சென்றடைந்ததும் தொழ ஆரம்பிப்பார்கள். அதற்காக அதானும் இகாமத்தும் சொல்லப்பட மாட்டாது. மேலும் நபியவர்கள் الصلاةُ جامعةٌ என்றும் கூறமாட்டார்கள். மேலும் பெருநாள் தொழுகையைத் தொழ முன்னரும் அதன் பின்னரும் நபியவர்களோ அன்னாரின் தோழர்களோ முஸல்லாவில் வேறு எந்தத் தொழுகையையும் தொழவில்லை.
5. நபிகளார் குத்பாவுக்கு முன்னர் இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுவார்கள். முதலாவது ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமா உள்ளடங்களாக  தொடர்ச்சியாக ஏழு தக்பீர்கள் சொல்வார்கள். எல்லா இரண்டு தக்பீர்களுக்குமிடையில் சற்று மௌனமாக இருப்பார்கள். தக்பீர்களுக் கிடையில் குறிப்பிடத்தக்க திக்ரு எதனையும் ரஸூல் (ஸல்) அவர்கள் ஓதினார்களா என்பதற்குப் பதிவுகள் எதுவும் இல்லை. தக்பீர் அனைத்தையும் பூர்த்தி செய்ததும் ஓத ஆரம்பிப்பார்கள். அதன் பின் தக்பீர் கூறி ருகூஃ செய்வார்கள். முதலாம் ரக்அத்தின் பின்னர் இரண்டாம் ரக்அத்தில் தொடர்ச்சியாக ஐந்து தக்பீர்கள் சொல்வார்கள். அதன் பின்  ஓதத் துவங்குவார்கள். தொழுகை முடிந்ததும் மக்கள் வரிசைகளில் அமர்ந்திருக்க நபியவர்கள் பிரசங்கம் நிகழ்த்துவார்கள். அவ்வமயம் நபியவர்கள் நல்லுபதேசம் செய்வார்கள். மேலும் நல்லதை செய்யும் படியும், தீயதை விட்டும் விலகும் படியும் மக்களுக்குக் கட்டளை யிடுவார்கள். தொழுகையில் ق  ‘اقْتَرَبَتِ ஸூராக்களை பூரணமாக ஓதி முடிப்பார்கள். சில வேளை سَبِّحِ اسْمَ மற்றும் الْغَاشِيَةِ     ஸூராக்களை ஓதுவார்கள்.           
6. நபியவர்கள் நிலத்தில் நின்று பிரசங்கம் நிகழ்த்துவார்கள். அங்கு மிம்பர் எதுவும் இருக்கவில்லை.
7. மேலும் குத்பாவில் அமராதிருக்க நபியவர்கள் சலுகையளித்தார்கள். அவ்வாறே  ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால், பெருநாள் தொழுகையைக் கொண்டு  ஜும்ஆத் தொழுகையைத் தவிர்த்துக் கொள்ளவும் சலுகையளித்தார்கள்.
8. பெருநாள் தினத்தில் தொழுகைக்கு செல்லவும் தொழுகையின் பின் திரும்பி வரவும் வெவ்வேறு வழிகளைப் நபியவர்கள் பயன்படுத்தினார்கள்.
சூரிய கிரகணம் தோன்றும் போது நபிகளார்
1. சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபியவர்கள் தங்களின் மேல் துண்டை இழுத்துக் கொண்டு, பீதியுடன் பள்ளிவாசலை நோக்கி விரைந்தார்கள். அங்கு முன்னே சென்று இரண்டு ரகஆத்துக்கள் தொழுதார்கள். முலாவது ரக்அத்தில் ஸூரதுல் பாதிஹாவும் இன்னொரு நீளமான ஸூராவும் ஓதினார்கள். சத்தமிட்டு கிராஅத்தை ஓதினார்கள். பின்னர் ருகூ;ஃ செய்தார்கள். அதில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் ருகூவுலிருந்து எழுந்தார்கள். அந்த நிலையிலும் நீண்ட நேரம் வரை நின்று கொண்டிருந்தார்கள். இது முதலில் நின்ற நிலையன்று. மேலும் நபியவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும்.
 سمع الله لمن حمده  ربنا ولك الحمد
என்று சொன்னார்கள், அந்த நிலையில் வைத்தும் ஓதத் துவங்கினார்கள். பின்னர் மறுபடியும் ருகூவுக்குச் சென்று அந்த ருகூவிலும் நீண்ட நேரம் இருந்தார்கள். இது முதலாவது ருகூஃ அல்ல. இது மேலதிகமான இன்னொரு ருகூவாகும். பின்னர் அந்த ருகூவலிருந்து தலையைத் தூக்கினார்கள். பின்னர் ஸஜதாவுக்குச் சென்றார்கள். அதில் நீண்ட நேரம் இருந்தார்கள். இவ்வாறு முதலாம் ரக்அத்தைத் தொழுது முடிந்ததும் இரண்டாவது ரக்அத்தைத் தொழுதார்கள். இதிலும் முதலாம் ரக்அத்தில் செய்தது போலவே செய்தார்கள். இதன்படி ஒவ்வாரு ரக்அத்தும் இரண்டு ருகூஃகளும் இரண்டு ஸஜூதுகளும் கொண்டதாக இருந்தது. தொழுது முடிந்ததும் கருத்தாளமான பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார்கள்.
2. கிரகணம் தோன்றிய போது அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறும், தொழுகையிலும் மற்றும் துஆ இஸ்திஃபாரிலும் ஈடுபடுமாறும் நபியவர் கள் கட்டளையிட்டார்கள். மேலும் தர்மம் செய்யுமாறும், அடிமைகளை உரிமையிடுமாறும் அன்னார் உத்தரவிட்டார்கள்.
மழை தேவைப்பட்ட போது நபிகளார்
1.    மழை தேவைப்படும் போது நபியவர்கள் மிம்பரில் வைத்து குத்பாவின் இடையே மழையை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். ஜும்ஆ அல்லாத சந்தர்ப்பத்திலும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். ஒரு முறை பள்ளிவாசலில் அமர்ந்திருந்தவாறு தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி மழையை வேண்டி அல்லாஹ்விடம் துஆ பிரார்த்தனை செய்தார்கள்.
2. மழைக்காக பிரார்த்தனை செய்யும் போது. நபியவர்கள்
نافعاً غير ضار ،عاجلاً غير آجل  اللهم اسق عبادك وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت اللهم اسقنا غيثاً مغيثاً مريئا   
“இறைவா! உன் அடியார்களுக்கும், உன் கால் நடைகளுக்கும் தண்ணீர் புகட்டிடுவாயாக. உன் அருள் மூலம் கேடு விளையாது அதன் மூலம் பயன் தர தக்கதாய், கால தாமதமின்றி இப்பொழுதே அதனைப்  பரவச் செய்திடுவாயாக, இறைவா! இறந்து போயுள்ள உனது தேசத்துக்கு வாழ்வளிப்பாயாக. இறைவா! நமக்குத் தாரளமாக மழையை பொழியச் செய்திடுவாயாக.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் என்று பதிவாகியுள்ளது.
3. மேகத்தையும் காற்றையும் நபியவர்கள் காணுமிடத்து அதன் தாக்கம் அன்னாரின் முகத்தில் தெரியும். எனவே அவர்கள் முன்னும் பின்னும் போய் வருவார்கள். (அதாவது ஒரு இடத்தில் நிற்காது நடப்பார்கள்.) அவ்வமயம் மழை பொழிந்தது விட்டால் அன்னார் மகிழ்ச்சி அடைவார்கள்.
4.மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் மழையைக் கண்டதும்.
      اللهم صيبا نافعا  “இறைவா! இதனை பயன் தர தக்கதாக கொட்டச் செய்வாயாக” என்று சொல்வார்கள், மேலும் நபி (ஸல்) அவர்கள், தங்கள்        மேனியில் மழைத் தண்ணீர் பட வேண்டும் என்பதற்காக  தங்களின் ஆடையை சற்று திறந்து கொள்வார்கள். அது பற்றி அன்னாரிடம் வினவப்பட்ட போது, அது அல்லாஹ்விட மிருந்து கிடைத்துள்ள புது மழை - அருள் என்று கூறினார்கள்.
5. மழை அதிகரித்த போது அதனை நிறுத்த பிரார்த்தனை செய்யுமாறு ஸஹாபாக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வேண்டினர். அப்போது நபிகளார்,            
اللهم حَوَالَيْنَا، ولا علينا، اللهم على الآكام والظِّرَاب وبطون الأودية، ومنابت الشجر
“அல்லாஹ்வே! இம்மழையை நமதூருக்குச் சூழ பொழியச் செய்திடுவாயாக. இதனை நமது ஊர் மீது இறக்கி விடாதே. அல்லாஹ்வே! இதனை குன்றுகளிலும், மர மட்டைகள் மீதும், மலைகள் மீதும், அருவிகளுக்குள்ளேயும் மற்றும் செடிகள் முளைக்கும் இடங்களிலும் பொழியச் செய்வாயாக.”  என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அச்ச காலத்து தொழுகையில் ரஸூல் (ஸல்)
1-    ரஸூல் (ஸல்) அவர்கள் யுத்த களத்தில் இருக்கும் போது, அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் எதிரிகள் இருந்தால், அப்போது நபிகளார் முஸ்லிம் படையை இரண்டு வரிசையில் நிறுத்துவார்கள். பின்னர் தக்பீர் தஹ்ரீமா சொல்வார்கள். அப்போது இரண்டு அணியிலும் நிற்கும் யாவரும் தக்பீர் முழங்குவார்கள்.
பின்னர் நபியவர்கள் ருகூஃ  செய்யும் போது எல்லோரும் ஒன்றாக ருகூஃ செய்து விட்டு, நபியவர்கள் ருகூவிலிருந்து எழும் போது எல்லோரும் ஒனறாக எழுந்து நிற்பர். பின்னர் நபிகளார் ஸுஜூது செய்யும் போது அன்னாருக்கு அடுத்துள்ள முதலாம் ஸப்பில் இருப்பவர்கள் மாத்திரம் நபியுடன் சேர்ந்து ஸுஜுது செய்வர். அப்போது இரண்டாம் வரிசையிலிருப்போர் எதிரிகளை முன்னோக்கியவாறு நிலையில் நிற்பர்.
 ரஸூல் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரகஅத்திற்காக எழுந்ததும், இரண்டாவது வரிசை யில் இருப்போர் இரண்டு ஸுஜூதுகளையும் நிறை வேற்றுவார்கள். அதன் பின்னர் அவர்கள் முதலாம் ஸப்பில் இருக்கின்றவர்களின் இடத்தில் வந்து நிற்பார்கள். மேலும் ஆரம்பத்தில் முதலாம் ஸப்பில் இருந்தவர்கள் பின் வரிசைக்கு வருவார்கள். இதன் மூலம் இரண்டு வரிசையில் இருந்தவர்களும் முதல் வரிசையில் இருந்த சிறப்பினை பெறுவர். மேலும் ஏற்கெனவே இரண்டாம் வரிசையில் இருந்த வர்களும் ரஸூலுல்லாஹ்வுடன் சேர்ந்து இரண்டு ஸுஜூதகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் பேற்றைப் பெறுவர். பின்னர் ரஸூல் (ஸல்) அவர்கள் ருகூஃ செய்ததும் இரண்டு வரிசையிலும் இருப்பவர்கள்,  முன்னர் முதலாம் ரக்அத்தில் நடந்து கொண்ட பிரகாரம் நடந்து கொள்வார்கள். அதாவது இரண்டு வரிசையிலும் இருப்பவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களுடன் ஒன்றாக  ருகூஃ செய்து. ஒன்றாக எழுந்து நிற்பர்.  மேலும் நபியவர்கள் இரண்டாம்  ரக்அத்தின் ஸுஜூதுக்குச் செல்லும் போது தற்போது முதலாம் வரிசையில் இருப்பவர்களும் நபிகளாருடன் சேர்ந்து இரண்டு ஸுஜூதுகளையும் செய்வார்கள். ஆனால் இரண்டாம் வரிசையில் நிற்போர் அப்படியே நின்ற நிலையில்  நிற்பார்கள்.  பின்னர்  நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்ததும் தற்சமயம் பின் வரிசையில் இருக்கும் அந்த அணியினர், தாங்கள் நிறைவேற்ற வேண்டிய இரண்டு ஸுஜூதுகளையும் செய்து விட்டு ரஸூலுல்லாஹ்வுடன் சேர்ந்து கொள்வார்கள். பின்னர் எல்லோரும் ஒன்றாக ஸலாம் கொடுப்பர்.
2-    கிப்லா திசையில் அல்லாமல் வேறு திசையில் எதிரி இருந்தால், நபியவர்கள் சில வேளை தங்களின் அணியை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். இதில் ஒரு குழுவினரை எதிரிகளுக்கு நேராகவும் இன்னொரு குழுவை தன்னுடன் தொழுகின்ற குழுவாகவும் நிறுத்துவார்கள். அப்போது தன்னுடன் இருக்கும் குழுவினர் ஒரு ரக்அத்தை தொழுவர். பின்னர் அவர்கள் தொழுகையில் இருந்தவாறே எதிரிகளை நோக்கி நிற்கும் குழுவின் இடத்திற்குச் வருவார்கள். அதனை அடுத்து எதிரிகளின் திசையிலிருந்த குழுவினர், நபிகளாருடன்  இருந்த குழுவின்  இடத்திற்கு வருவர்.
அப்பொழுதவர்கள் இரண்டாவது ரக்அத்தில் நபியவர்களுடன் சேர்ந்து தங்களின் முதலாவது ரக்அத்தை தொழுவார்கள். இந்நிலையில் இரண்டு ரக்அத்துக்களையும் நிறவேற்றியுள்ள ரஸூல் (ஸல்)  அவர்கள்   ஸலாம் கொடுத்து விடுவார்கள். ஆனால் இதுவரை இரண்டு குழுவினரும்  ஒரேயொரு ரக்அத்தை மாத்திரம் நிறைவேற்றியிருக்கின்ற படியால், அவர்கள் தங்களின்  எஞ்சியுள்ள  மற்றொரு ரக்அத்தையும் இமாம் ஸலாம் கொடுத்த  பின்னர்  தனியாகத்  தொழுது விட்டு ஸலாம் கொடுப்பார்கள்.
3-    சில வேளை  நபியவர்கள் ஒரு குழுவினருக்கு ஒரு ரக்அத்தை தொழ வைத்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக எழுந்து நிற்பார்கள். நபியவர்கள் அப்படி நின்று கொண்டிருக்க, அந்தக் குழு  இரண்டாவது ரக்அத்தை தனியாக நிறைவேற்றி விட்டு ரஸூல் (ஸல்) அவர்கள் ருகூவில் இருந்து எழுந்திருக்க முன்னர் ஸலாம் கொடுப்பர். அதனையடுத்து அடுத்த குழுவினர் நபியவர்கள் இரண்டாம் ரக்அத்தில் இருக்க அங்கு வந்து சேருவார்கள். மேலும் நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து கொண்டதும் அந்தக் குழுவினர் எழுந்து தங்களின் மறு ரக்அத்தை நிறைவேற்றுவார்கள். மேலும் அந்தக் குழுவினர்  அத்தஹிய்யாத் ஓதி முடிக்கும் வரையில், ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தஹிய்யாத்தில் காத்திருப்பார்கள். பின்னர் ரஸூல் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் அவர்களும் ஸலாம் கொடுப்பார்கள்.
4-    சில வேளை நபியவர்கள் ஒரு குழுவினருக்கு இரண்டு ரம்ஆத்துக்களை தொழ வைப்பார்கள். பின்னர் அக்குழுவினர் ஸலாம் கொடுத்து விடுவார்கள். அதன் பின் அடுத்தக் குழுவினர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்து கொள்வார்கள். அப்பாழுது அவர்களுக்கும் இரண்டு ரக்ஆத்துக்களை நபியவர்கள் தொழ வைப்பார்கள். பின்னர் அவர்கள் எல்லோருக்கு மாக அன்னார் ஸலாம் கொடுப்பார்கள்.
5-    சில வேளை நபியவர்கள் ஒரு குழுவினருக்கு ஒரு ரக்அத்தை தொழ வைப்பார்கள். பின்னர் அக்குழுவினர் சென்று விடுவார்கள். அவர்கள் வேறு எதனையும் செய்ய மாட்டார்கள். பின்னர் அடுத்தக் குழுவினர் நபியவர்களிடம் வருவார்கள். நபியவர்கள், அந்தக் குழுவினருக்கும் ஒரு ரக்அத்தை தொழ வைப்பார்கள். அவர்களும் வேறு எதனையும் செய்ய மாட்டார்கள். இதன்படி நபியவர்களுக்கு இரண்டு ரக்ஆத்துக்களும், இரண்டு குழுக்களுக் கும் ஒரு ரக்அத்தும் உரித்துடையதாகும்.
ஜனாஸாவை ஆயத்தப்படுத்துதல்
1-    ஏனைய சமூகத்தினருக்கு மாறாக ஒரு மையித்தின் இறுதி சடங்குகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதற் காக  சிறந்த வழிகாட்டல்களை நபியவர்கள் தன் சமூகத்திற்குத் தந்துள்ளார்கள். இது மையித்துட னும், அதன் குடும்பத்தாருடனும் மற்றும் சுற்றத்தாருடனும் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டு மென்ற நல்ல அனுகு முறை களை உள்ளடக்கியதாகும். இதில் முதலாவது, மரணத்தை எய்திருப்பவர் சுகவீனமுற்றிருக்கும் போது அவரை தரிசித்து அவருக்கு மறுமையைப்பற்றி நினைவூட்டி, அவர் பிறருக்குச் சொல்ல வேண்டிய விடயம் ஏதுமிருந்தால் அது பற்றி வஸிய்யத் செய்யுமாறும், மற்றும் தௌபா செய்து கொள்ளுமாறும் அவரிடம் வேண்டிக் கொள்வதாகும். அவ்வாறே மரணத்தை நெருங்கியுள்ளவரின் இறுதி வாசகம்
شهادة ان لاإله إلاالله
“வணங்கத் தகுமானவன் அல்லாஹ்வையன்றி எதுவுமில்லை” என்ற வாசகமாக இருக்க வேண்டும். எனவே அவருக்கு அந்த வாசகங் களை அறிவுருத்துவதும் இதில் அடங்கும்.  
2-    மனிதரில் அல்லாஹ்வின் விதியை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட, அவனின் புகழை மேண்மைப் படுத்திய  ஒரு மா மனிதராக ரஸுல் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். எனினும் தன் புதல்வன் இப்ராஹீம் மரணத்தைத் தழுவிக் கொண்ட போது அவர் மீது தனக்கிருந்த அன்பு, கருணையின் காரணமாக அவரின்  பிரிவைக் கண்டு நபியவர்கள் அழுதார்கள். ஆயினும் அன்னாரின் உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய திருப்தியும், அவன் மீதான நன்றியும் நிறம்பியிருந்தது. மேலும் அன்னாரின் நாவு அல்லாஹ்வை நினைவு கூறுவதிலும், துதி பாடுவதிலும் சதாவும்  மூழ்கி இருந்தது. மேலும் “கண் கலங்கி, உள்ளம் கவலையுற்றுள்ள போதிலும், அல்லாஹ்வுக்கு திருப்தி தரும் வார்த்தைகளையன்றி வேறு வார்த்தை எதனையும் நாம் பேச மாட்டோம்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
3-    மரணத்திற்காக கண்ணத்தில் அறைந்து கொள்வதையும், சப்தமிட்டு  ஒப்பாரி வைத்து அழுவதையும் நபியவர்கள் தடுத்தார்கள்.
4-    மேலும் மையத்தினை  அல்லாஹ்வின் பால் வழி அனுப்பி வைப்பதற்காக அதனைக் கழுவி, குளிப்பாட்டி தூய்மைப் படுத்தி வெள்ளை ஆடையில் கபனிட்டுத் தீவிரமாக அதனை ஆயத்தப்படுத்து மாறு ரஸூல் (ஸல்) அவர்கள் வழி காட்டிச் சென்றார்கள்.   
5-    மேலும் மையத்தின் முகத்தையும், மேனியையும் மூடி வைப்பதும், அவ்வாறே அதன் இரண்டு கண்களையும் மூடி விடுவதும் நபியவர்களின் சிறந்த வழிகாட்டலைச் சார்ந்த தாகும்.
6-    சில வேளை நபியவர்கள், மையத்தைப் முத்தமிடுவார்கள்.
7-    மேலும் மையித்தை மூன்று தடவை அல்லது ஐந்து தடவைகள் கழுவும் படியாக ரஸூல் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். மேலும் மையத்தை குளிப்பாட்டுகின்றவரின் எண்ணத் திற்கு ஏற்றாப் போல் அதைவிட அதிகமாகக் கழுவும் படியும், இறுதியாக கற்பூரம் கொண்டு கழுவும் படியும் நபியவர்கள் பணித்தார்கள்.   

8-    போர்க் களத்தில் உயிர் நீத்த ஷஹீதை நபியவர்கள் குளிப்பாட்ட வில்லை. மேலும் ஷுஹதாக்கள் தம்முடன் வைத்திருந்த    போராயுதங்களை எல்லாம் அகற்றி, பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடையையே அவர்களுக்கு கபனாக ஆக்கினார்கள். மேலும் அவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடாத்த வில்லை.
9-    இஹ்ராம் அணிந்த நிலையிலுள்ள மையித்தை தண்ணீரும், இளந்தை இலையும் கொண்டு குளிப்பாட்டும்படி நபியவர்கள் பணித்தார்கள். மேலும் அவர் அணிந்திருக்கும் இஹ்ராமையே கபனாக ஆக்கிக் கொள்ளுமாரும் உத்தர விட்டார்கள். மேலும் அந்த மையித்துக்கு மனம் பூசுவதையும், அதன் தலையை மூடுவதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.
10-    மையித்திற்கு வெள்ளை நிரத்தில் அழகாக கபன் அணிவிக்கும்படி மையித்தின் உரிமை யாளனுக்கு நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.
11-    மையத்தை முற்றாக மறைக்க கபன் பற்றாக் குறையாக இருந்த போது, நபியவர்கள் மையத்தின் தலையை கபனைக் கொண்டு மூடிவிட்டு, அதன் இரண்டு கால்களையும் புற்களை வைத்து மறைத்தார்கள்.
ஜனாஸாத் தொழுகையில் நபிகளாரின் வழி முறை
1. மையித்தைப் பள்ளிவாசலுக்கு வெளியே வைத்து ஜனாஸாத் தொழுகையை நடாத்துவதே நபியவர்களின் வழக்கம். சில வேளை பள்ளிக்குள்ளே வைத்தும் நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையை நடாத்தியிருக்கின்றார்கள். ஆயினும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபியவர்கள் இவ்வாறு செய்ததில்லை.
2. நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையை நடாத்த முன் வந்தால், ‘அந்த மையித்தின் மீது கடன் சுமை ஏதும் உண்டா?” என்று விசாரிப்பார்கள். அப்படி ஏதும் இல்லை என்றால் அதன் ஜனாஸாத் தொழுகையை ரஸூல் (ஸல்) அவர்கள் நடாத்துவார்கள். அப்படி இருந்தாலோ நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையை நடாத்த மாட்டார்கள். மாறாக அதன் ஜனாஸாத் தொழுகையை அதன் உரிமையாளர்கள் நடாத்தும்படி கட்டளையிடு வார்கள். எனினும் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வெற்றி வாயலைத் திறந்து கொடுத்த பின்னர், நபியவர்கள் கடன் பட்ட மையித்தின் கடன் பொறுப்பை தாங்களே எற்றுக் கொண்டு அதன் ஜனாஸா தொழுகையையும் தாங்களே நடாத்தி வைத்தார்கள். மேலும் மையித்தின் கடனை நிறைவேற்றும் பொருட்டு தாங்கள்  கொடுத்த பணத்தை, மையித் விட்டுச் சென்ற சொத்துக்களில் இருந்து  நபியவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றை அதன் வாரிஸுகளுக்கே விட்டுக் கொடுத்தார்கள்.
3. நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, மையித்துக் காக துஆவும் கேட்பார்கள். இத் தொழுகையைப் பொதுவாக நான்கு தடவைகள் தக்பீர்கள் கூறி நடாத்தி வந்த நபியவர்கள். சில வேலை ஐந்து தடவைகள் தக்பீர் கூறி அதனை நடாத்தியும் இருக்கின்றார்கள்.
4. மையித்துக்காக மனத் தூய்மையுடன் துஆ கேட்கும்படி ரஸூல் (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.  மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள்,
اللَّهم اغفر لِحَيِّنَا وَميِّتِنا ، وَصَغيرنا وَكَبيرِنَا ، وذَكَرِنَا وَأُنْثَانَا ، وشَاهِدِنا وَغائِبنَا . اللَّهُمَّ منْ أَحْيَيْتَه منَّا فأَحْيِه على الإسْلامِ ، وَمَنْ توَفَّيْتَه منَّا فَتَوَفَّهُ عَلى الإيمانِ ، اللَّهُمَّ لا تَحْرِمْنا أَجْرَهُ ، وَلا تَفْتِنَّا بَعْدَهُ
“இறைவா! நம்மிடையே ஜீவித்துக் கொண்டிருப்ப வர்களையும், இறந்து போனவர்களையும், நமது சிறியோரையும், பெரியோரையும், நமது ஆண்களையும் பெண்களையும் மன்னித்திடு வாயாக. இறைவா! நம்மிடையே எவரை நீ உயிருடன் இருக்கச் செய்கின்றாயோ  அவரை இஸ்லாத்தின் மீது வாழ வைப்பாயாக. மேலும் எவரை நீ மரணிக்கச் செய்கின்றாயோ அவரை ஈமானின் மீது மரணிக்கச் செய்வாயாக. இறைவா! அவரின் கூலியை நமக்கு இல்லாமல் செய்து விடாதே. மேலும்  அவருக்குப் பின்னர் நம்மை சோதனைக்குள்ளாக்கி விடாதே” என்றும்,
للَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما ينقى الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
“இறைவா! அவரை மன்னித்து, அவருக்கு கருணை காட்டுவாயாக. மேலும் அவரின் தொல்லைகளை நீக்கி அவரை மன்னித்திடுவாயாக. அவரை கண்ணியமாக உபசரிப்பாயாக, மேலும் அவர் பிரவேசிக்கும் ஸ்தானத்தை விசாலமாக்கி விடுவாயாக. அவரை தண்ணீரைக் கொண்டும் பணியைக் கொண்டும் குளிர்ந்த ஜலத்தைக் கொண்டும் குளிப்பாட்டுவாயாக. அழுக்கை விட்டும் வெண்ணிற ஆடை தூய்மைப்படுத்தப் படுவது போன்று பாவங்களை விட்டும் அவரைத் தூய்மையாக்கிடுவாயாக. அவருடைய இல்லத் திற்குப் பதிலாக அதை விடவும் சிறந்த இல்லத்தைக் அவருக்குக் கொடுத்திடுவாயாக. அவரின் குடும்பத்தை விடவும் சிறந்த குடும்பத்தையும், அவரின் மனைவியை விடவும் சிறந்த மனைவியை யும் அவருக்குக் கொடுத்திடுவாயாக. மேலும் அவரை சுவனபதயில் பிரவேசிக்கச் செய்வாயாக. மேலும் கப்ரின் வேதனையும் மற்றும் நரக வேதனையையும் விட்டும் அவரைப் பாதுகாப்பா யாக”. என்றும் பிரார்த்தனை செய்துள்ளார்கள் என ஹதீஸில் பதிவாகியுள்ளது.
ரஸூல் (ஸல்) அவர்கள்  ஜனாஸாத் தொழுகையை நடாத்தும் போது, அது ஆண் மையித்தாக  இருந்தால் அதன், தலைக்கு நேராகவும், பெண் மையித்தாக இருந்தால் அதன் இடுப்புக்கு நேராகவும்    நின்று  கொள்வார்கள்.
நபியவர்கள் குழந்தையின் ஜனாஸாத் தொழுகை யையும் முன்னின்று  நடாத்துவார்கள். ஆனால் தற்கொலை செய்தவனின் ஜனாஸாவை யும், கனீமத் பொருளில் மோசடி செய்தவரின் ஜனாஸாவையும் நபிகளார் முன் நின்று நடாத்த மாட்டார்கள்.
கல்லெறிந்து மரண தண்டனை பெற்ற ஜுஹனீ குலத்து பெண்ணின் ஜனாஸாவையும் நபியவர்கள் நடாத்தி வைத்தார்கள்.
மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் வபாத்தான போது அவரின் “காயிப்” ஜனாஸாத் தொழுகையை நபியவர்கள் தொழுதார்கள். எனினும் எல்லா மையித்தின் மீதும் நபி (ஸல்) அவர்கள் “காயிப்” ஜனாஸா தொழுகை தொழுதார்கள் என்பது அவர்களின் வழிகாட்டலில் காணப்பட வில்லை.
ரஸூல் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஜனாஸாத் தொழுகை தவறி விட்டால் உரியவரின் கப்ரின் பால் சென்று ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வது நபியவர்களின் ஒரு வழி காட்டலாகும்.
மையித்தைக் கபனிடுதலும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களும்
1-    ரஸூல் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றியதும் ஜனாஸாவின் முன்னால் நடந்தவாறு மையவாடிக்குச் செல்வார்கள். மேலும் வாகனத்தில் செல்வோர் அதன் பின்னால் செல்வதையும், நடந்து செல்வோர், அதன் முன்னாலோ, பின்னாலோ, வலது, இடது புறங்களில் சென்ற போதிலும் அதற்கு மிக நெருக்கமாகச் செல்ல வேண்டும் என்பதையும் நபியவர்கள் ஒரு ஸுன்னத்தான வழிமுறையாக ஆக்கினார்கள். மேலும் ஜனாஸாவை வேகமாக எடுத்துச் செல்லும் படியாகவும் நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
2-    மையித் கப்ரில் வைக்கப்படும் வரையில் ரஸூல் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்ள மாட்டார்கள்.
3-    ஜனாஸா செல்லும் போது எழுந்து நிற்கும் படி நபிகளார் பணித்தார்கள். சில வேளை அன்னார் உட்கார்ந்து  கொண்டும் இருந்துள்ளார்கள்,
4-    சூரியன் உதிக்கும் போதும், அது மறையும் போதும், மற்றும்  நடுப் பகலிலும் ஜனாஸாவை அடக்கம் செய்யாமலிருப்பது நபியவர்களின் வழிகாட்டலில் ஒன்றாகும்
5-    புதை குழியை ஆழமாகத் தோண்டி அதன் தலைமாட்டிலும் கால் மாட்டிலும் அதனை விசாலப்படுத்தி வைப்பதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒரு வழியாகும்.
6-    புதை குழியில் மையித் வைக்கப்பட்ட பின் அதன் தலைப் புறத்தில் மூன்று தடவைகள் நபியவர்கள் மண் போடுவார்கள்.
7-    மையித் அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும், ரஸூல் (ஸல்) அவர்கள் கபுரின் பக்கமாக நின்று கொண்டு அதற்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அப்படி செய்யுமாறு தன் தோழர்களையும் பணித்தார்கள்.

8-    கப்ரில் வைக்கப்படிருக்கும் மையித்தின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ரஸூல் (ஸல்) அவர்கள்  குர்ஆன் ஓதியதோ, மையித்துக்கு “தல்கீன்”  சொல்லிக் கொடுத்ததோ இல்லை.

9-    ரஸூல் (ஸல்) அவர்கள், மரண அறிவித்தல் கொடுப்பதைத் தவிர்த்து வந்ததுடன், அதனைத் தடை செய்தார்கள்.
கப்ர் ஸ்தானத்தில் கவணிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும், ஆறுதல் தெரிவித்தலும்
10-    புதை குழியின் மேல் புறத்தை உயர்த்தி வைப்பதும், அதனைக் கட்டுவதும், அதனை மெழுகி விடுவதும், அதன் மீது dome - குவிந்த கூறை  எழுப்புவதும் நபி வழியல்ல.
11-    நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை யமன் தேசத்துக்கு அனுப்பிய போது அவரிடம், சிலை எதனையும் அழிக்காது விட வேண்டாம் என்றும், உயரமாக காட்சியளிக்கும் புதை குழி எதனையும் மட்டமாக்காது விட வேண்டாம் என்றும் கூறினார்கள். எனவே உயரமாக காட்சி யளிக்கும் சகல கப்ருகளையும் மட்ட மாக்க வேண்டுமென்பதே நபியவர்களின் வழிமுறையாகும்.
12-    கப்ருக்கு சாந்து பூசுவதையும், அதன் மீது கட்டிடம் எழுப்புவதையும், அதன் மீது எழுத்துக்கள் பொறிப்பதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.
13-    கப்ரை இனங் கண்டு கொள்ள விரும்புவோர், அதற்கோர் அடையாளமாக அதன்மீது ஒரு கல்லை வைத்துக் கொள்ளலாம், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள்.
14-    கப்ருகளை பள்ளிவாசலாக ஆக்கிக் கொள்வ தையும், அதன் மீது விளக்கேற்றுவதையும் நபியவர்கள் தடை செய்தார்கள். மேலும் அப்படிச் செய்கின்றவனை  சபித்தார்கள்.
1-    மேலும் அங்கு தொழுவதையும், மற்றும் தங்களின் கப்ரை களியாட்ட இடமாக ஆக்கிக் கொள்வதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.
2-    மேலும் கப்ருகளைக் கேவலப் படுத்துவதும், அதனை மிதிப்பதும், அதன் மீது அமர்ந்து கொள்வதும், அதன் மீது சாய்ந்து கொள்வதும், அவ்வாறே அதனை கௌரவப்படுத்துவதும் நபி வழியல்ல.
3-    மேலும் இறந்து போன தங்களின் தோழர்களின் கப்ருகளை, நபியவர்கள் தரிசித்து வந்ததன் நோக்கம் அன்னவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யவும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோறவும்தான். மேலும் கப்றுளைத் தரிசிப்பவர்கள்,
السَّلامُ عَلَيكُمْ أَهْل الدِّيارِ مِنَ المُؤْمِنِينَ والمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ ، أَسْأَلُ اللَّه لَنَا وَلَكُمُ العافِيَةَ
"இங்கு குடியிருக்கும் விசுவாசிகளே! முஸ்லிம்களே! இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக நாம் உங்களிடம் வந்து சேருவோம். நான் எமக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோறுகின்றேன்.” என்று சொல்வது ஸுன்னத்தான காரியமாகும்.
4-    மேலும் மையித்தின் வீட்டாருக்கு ஆறுதல் கூறுவது நபி வழியாகும். எனினும் ஆறுதல் சொல்வதற்காக ஒன்று கூடுவது நபி வழியல்ல. அவ்வாறே மரணித்தவருக்காக மைய வாடியிலோ, அதுவல்லாத இடத்திலோ குர்ஆன் ஓதுவதும் நபி வழியல்ல.  
5-    மேலும் மக்களுக்கு உணவளிப்பதற்காக மையித்தின் வீட்டார் சிரமப் படக்கூடாது, ஏனெனில் அது நபி வழியல்ல. மாறாக மற்றவர்கள் அவர்களுக்கு  உணவு சமைத்துக் கொடுக்கும் படி ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
ஸகாத்தும், ஸதகாவும்
ஸகாத்
1-    இவ்விடயத்தில் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் பரிபூரணமானது. அதன் நிஸாப் யாது, அதனை எப்பொழுது, எந்த அளவு  வழங்க வேண்டும்?  அது எவர் மீது கடமை, அதனை யாருக்கு வழங்க வேண்டும்? என்பதை எல்லாம் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் பணக்காரனின் நலனையும், ஏழைகளின் நலனையும் ரஸூல் (ஸல்) அவர்கள் பேணி பாதுகாத்திருக்கின்றார்கள். எனவே செல்வந்த ரின் பொருளில் இருந்து அவர்களுக்கு கேடு எதுவும் ஏற்படாதவாறு ஏழைகளுக்குத் போதுமானதை வழங்குமுகமாக ஸகாத்தை நபியவர்கள் கடமையாக்கினார்கள்.
2-    ஒருவன் ஸகாத் பெறத் தகுதியுடையவன் என்பதை அல்லாஹ்வின் தூதர் அறிந்திருந்தால், அவனுக்கு ஸகாத்தை வழங்குவார்கள். எவனின் நிலவரம் குறித்து நபியவர்கள் அறிந்திருக்க வில்லையோ அப்படியான ஒருவர் அன்னாரிடம்வேண்டி நின்றால், அவரிடம், இதில் செல்வந்தனுக்கும், சம்பாதிக்கத் திராணியுள்ள வனுக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று அறிவிப்பார்கள். அதன் பின்னரே அந்த மனிதனுக்கு ரஸூல் (ஸல) அவர்கள் ஸகாத்தை வழங்குவார்கள்.
3-    மேலும் எவ்வூரிலிருந்து ஸகாத் அறவிடப் படுகின்றதோ, அவ்வூரில் ஸகாத் பெறத் தகுதி பெற்றவர்களுக்கு மத்தியில் அதனைப் பகிர்ந்த ளிப்பதே நபிகளாரின் வழிகாட்டலாகும். எனவே அவ்வூர் மக்களிடையே பகிர்ந்தது போக, எஞ்சியது நபிகளாரிடம் எடுத்து வரப்படும். அப்போது அதனை பெறத் தகுதியானோருக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
4-    கால் நடைகள், தானியம், கனிகள் ஆகிய செல்வங்களைப் பெற்று விளங்கும் தனவந்தர் களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வர  சேகரிப்பவர்களை நபிகளார் அனுப்புவார்கள்.
5-    ஈத்த மரச் சொந்தக்காரரின் ஈத்தம் பழங்களையும், திராட்சை சொந்தக்காரரின் திராட்சைப் பழங்களையும் மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீட்டாளர்களை நபியவர்கள் அனுப்புவார்கள். அவர்களின் மதிப்பீட்டில் எத்தனை “வஸக்” இருக்கின்றன என்பதை நபியவர்கள் அவதானிப்பார்கள். பின்னர் அந்த அளவின் படி அவர்களிடமிருந்து பெற வேண்டிய ஸகாத்தின் அளவை நபியவர்கள்  நிர்ணயிப்பார்கள். (வஸக் என்பது ஓர் அளவு)
6-    மேலும் குதிரை, அடிமை, கோவேறு கழுதை, கழுதை, காய் கறிகள், சாதாரணமாக சேமித்து வைக்க இயலாத கனிகள் என்பவற்றிலிருந்து ஸகாத்தை அறவிட நபிவைர்கள் வழி காட்டவில்லை. எனினும் இதிலிருந்து திராட்சைப் பழத்திற்கும், பேரீத்தம் பழத்திற்கும் ரஸூல் (ஸல்) அவர்கள் விதிவிலக்களித்தார்கள். எனவே இதில் காயந்தது என்றும் காயாதவை என்றும் நபியவர்கள் வேறு படுத்த வில்லை.
7-    ஸகாத்தை அறவிடும் போது அதில் மிகச் சிறந்ததை மாத்திரம் அறவிட்டுக் கொள்வது நபிகளாரின் வழிகாட்டலாகாது. மாறாக அதில் நடுத்தரமானதை அறவிடுவதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும்.
8-    தர்மம் செய்தவர் தன் தர்மத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை ரஸூல் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். எனினும் தன் தர்மத்தைப் பெற்றுக் கொண்ட ஏழை, அதிலிருந்து எதையாவது அவருக்கு அன்பளிப்புச் செய்தால் அதனை அவர் உண்ண  நபியவர்கள் அனுமதித்தார்கள்.
9-    சில வேளை முஸ்லிம் மக்களின் நலன் கருதி, நபியவர்கள் ஸதகா நிதியிலிருந்து கடன் வாங்கிக் கொள்வார்கள், பின்னர் அதன் இலாபத்திலிருந்து கடனை திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.
10-    மேலும் ஸகாத்தை எடுத்து வரும் மனிதருக்கு ரஸூல் (ஸல்) அவர்கள்,
اللهم بارك فيه وفي ابله
“இறைவா! இவர் விடயத்திலும், இவரின் ஒட்டகத்தின் விடயத்திலும் அபிவிருத்தி செய்வாயாக” என்றும், சில வேளை
  اللهم صل عليه
“இறைவா! இவர் மீது அருள் புரிவாயாக”  என்றும் பிரார்த்தனை செய்வார்கள்.

ஸகாத்துல் பித்ர்
1-    ஸகாத்துல் பித்ருக்காக ஈத்தம் பழம், கோதுமை, மற்றும்  வெண்ணெய் ஆகியவற்றிலிருந்து ஒரு “ஸாஉ”வை (ஒரு சேரை) கடமையாக்கினார்கள். (ஒரு ஸாஉ என்பது நான்கு தடவைகள் இரண்டு கை நிறைய அள்ளி எடுக்கும் ஓர்அளவு)
2-    பெருநாள் தொழுகையைத் தொழ முன்னர் ஸகாத்துல் பித்ரை வழங்குவதே நபி வழியாகும். ஏனெனில் “யார் இதனை தொழுவதற்கு முன்னர் நிறைவேற்றி வைத்தாரோ அதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸகாத்தாகும், எவர் அதனைத் தொழுகைக்குப் பின்னர் நிறைவேற்றினாரோ அது ஸகாத்துல்பித்ர்  ஆகாது, மாறாக அதுவும் ஏனைய தர்மத்தைப் போன்ற ஒரு பொதுவான தர்மமே” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
3-    நபியவர்கள் ஸகாத்துல் பித்ரை பொதுவாக எட்டுக் கூட்டத்தினருக்கும் பகிர்ந்தளிக்காமல், குறிப்பாக அதனை. ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள்.     

உபரி –மேலதிக தர்மம்
1-    தனக்குச் சொந்தமானவற்றில இருந்து தர்மம் செய்வதை மிகவும் விரும்புகின்ற ஒரு மாமனிதராக நபிகளார் விளங்கினார்கள். அல்லாஹ் தனக்கு வழங்கியிருப்பதை அதிகரித்து வைத்துக் கொள்ள வேண்டு மென்றோ, தர்மத்தின் காரணமாக தன் செல்வம் குறைந்து விடுமென்றோ நபிகளார் ஒரு போதும் நினைத்ததில்லை.
2-    நபி (ஸல்) அவர்கள் பிறரிடமிருந்து பொற்றுக் கொள்வதை விட, மற்றவர்களுக்குத் தாம் கொடுப்பதிலேயே மிக மகிழ்ச்சியடைந்தார்கள்.
3-    தேவைப்பட்ட எவரேனும் நபிகளாரிடம் தன் தேவையை முன் வைத்தால், அப்பொழுது தன் தேவையைப் விட மற்றவரின் தேவைக்கு நபிகளார் முன்னுரிமை அளிப்பார்கள். எனவே சில சமயங்களில் அப்படி  தங்களின் உணவையும், இன்னும் சில சமயங்களில் தங்களின் ஆடையையும் பிறருக்கு வாரி வழங்கி யிருக்கின்றார்கள்.
4-    தம்முடன் இருக்கின்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பதென்பது நபியவர்களைப் பொருத்த வரை, அது ஒரு அசாத்தியமான  விடயம்.
5-    நபியவர்களின் தர்மம் பல வகைப்பட்டதாக இருந்தது. சில வேளை அண்ணல் நபியவர்கள் நன்கொடையாகவும், இன்னும் சில வேளை ஸதகாவாகவும், இன்னும் சில வேளை அன்பளிப்பாகவும். மற்றும் சில வேளை ஒருவரிடம் ஒரு பொருளை வாங்கிய பின் அப்பொருளையும், அதன் கிரயத்தையும் அதே நபருக்கு வழங்கி விடுவதன் மூலமும், மேலும் சில வேளை எதையேனும் கடனாகப் பெற்ற பின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது அதை விடவும் அதிகமாகத் திருப்பிக் கொடுப்பதன் மூலமும், சில வேளை நன் கொடை எதையும் பெற்றுக் கொண்ட பின்னர் அதற்குப் பகரமாக அதை விடவும் அதிகமாக நன்கொடை வழங்குவதன் மூலமும் என பல வகையிலும் ரஸூல் (ஸல்) அவர்கள் தர்மம் செய்து வந்தார்கள்.   

நோன்பு விடயத்தில் நபிகளாரின்
வழி காட்டல்
1-    ரமழான் மாதப் பிறையை திட்டவட்டமாகக் காணாத வரை, அல்லுது சரியான சாட்சி மூலம் அது உறுதிப் படுத்தப்படாத வரையில் ரஸூல் (ஸல்) அவர்கள் ரமழான் மாத நோன்பு பிடிக்க மாட்டார்கள். எனவே பிறையைக் கண்ணால் காணாமலும், சாட்சி மூலம் அது உறுதிப் படுத்தப்படாமலும் இருந்தால் ஷஃபான் மாதத்தை பூரணமான முப்பது நாட்களாகக் கணித்துக் கொள்வார்கள். இவ்விடயத்தில் இதுவே நபி வழியாகும்.
2-    மேலும் முப்பதாவது இரவில் பிறை தென்படாத வாறு மேகம் குறுக்கிட்டிருந்தால், ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகப் பூரணப்படுத்திக் கொள்வார்கள். மேலும் மேக மூட்டமுள்ள நாளில் நபியவர்கள் நோன்பு பிடிக்க மாட்டர்கள். அத்தினத்தில் நோன்பு பிடிக்கும் படி உத்தரவு பிரப்பிக்கவும் மாட்டார்கள்.  
3-    பிறையை இரண்டு சாட்சிகள் உறுதிப் படுத்தியதும் ஷஃபான் மாதத்தை கை விட்டு ரமழான் மாதத்தை ஏற்றுக் கொள்வதே நபி வழியாகும்.
4-    மேலும் பெருநாள் தொழுகை அறிவிக்கும் நேரம் கழிந்த பின்னர் பிறை கண்டதாக ஒருவர் சாட்சியளித்தால், நபியவர்கள் நோன்பை விட்டுவிடுவார்கள். மற்றவர்களும் நோன்பை விடும் படி கட்டளையிடுவார்கள். பின்னர் மறு நாளில் உரிய நேரத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.
5-    நபியவர்கள் அதான் சொன்னவுடன் அவசரமாக நோன்பு திறப்பார்கள். அப்படி செய்யும்படி மற்றவர்களையும் தூண்டினார்கள். மேலும் தான் ஸஹர் செய்ததுடன், மற்றவர்களையும் ஸஹர் செய்யும்படி  தூண்டினார்கள். மேலும் நபியவர் கள் ஸஹர் செய்வதைப் பிற்படுத்தியதுடன் அப்படி பிற்படுத்தி ஸஹர் செய்ய வேண்டு மென மற்றவர்களை ஆர்வமூட்டினார்கள்.
6-    நபிகளார் நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னர் காலையில் சாப்பிடுவார்கள். ஈத்தம் பழம் ஏதும் இருந்தால் அன்னார் அதனை உண்பார்கள். அப்படி இல்லை எனறால் சில மிடக்குத் தண்ணீர் அருந்திக் கொள்வார்கள்.
7-    காலையில் நோன்பை விடும் வேளையில், நபிகளார்,
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ      
 “தாகம் நீங்கி விட்டது, நரம்புகள் ஈரமாகி விட்டன,                                                  இன்ஷாஅல்லாஹ் இதன் கூலியும் உறுதியாகி              விட்டது” என்று கூறுவார்கள்.
8-    நபிகளார் ரமழான் மாதத்தில் அதிகமாக இபாதத்தில் ஈடுபடுவார்கள். மேலும் இம் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்களும் ரஸூல் (ஸல்) அவர்களும் பரஸ்ரம் அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருப்பார்கள்.
9-    ரஸூல் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் அதிகம் தானதர்மங்கள் வழங்கி வந்ததுடன் அல்குர்ஆன் ஓதல், தொழுதல், திக்ரு செய்தல், இஃதிகாப் இருத்தல் போன்ற காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்தார்கள்.
10-    நபியவர்கள் சில வேளை ஏனையோருக்கு அல்லாத பிரத்தியேகமான தனிப்பட்ட சில இபாத்ததுக்களில் ஈடுபடுவார்கள். எனவே அன்னார் நோன்பு திறக்காமல் பல நோன்புகளைத் தொடர்ந்து நோற்றிருந்தார்கள். இதனை செய்ய ரஸூலுல்லாஹ் தன் தோழர்களுக்கு அனுமதிக்கவில்லை. எனினும் அவர்களுக்கு, ஸஹர் வரையில் தொடர்ந்து நோன்பு வைத்திருக்க அனுமதி வழங்கினார்கள்.
நோன்பு வைத்திருக்கும் போது அனுமதிக்கப்பட்டவையும், அனுமதிக்கப்படாதவையும்
1-    நோன்பாளி ஆபாச பேச்சுக்களிலும், கூச்சல் போடுவதிலும், ஏசுவதிலும், ஏச்சுப் பேச்சுக்க ளுக்குப் பதில் தரும் காரியங்களிலும் ஈடுபடு வதை நபிகளார் தடை செய்தார்கள். மேலும் தன்னை ஏசியவனிடம் “நான் நோன்பு வைத்தி ருக்கின்றேன்” என்று கூறும் படி பணித்தார்கள்.
2-    ரஸூல் (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் இருக்கும் போது நோன்பு வைத்திருக்கின்றார் கள், மேலும் நோன்பை விட்டுமிருக்கின்றார்கள். எனவே இவ்விடயத்தில் ஸஹாபாக்கள் தாம் விரும்பியதைச் செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.
3-    யுத்தத்தில் எதிரிகளை நெருங்கும் போது நோன்பை விட்டு விடும் படி நபிகளார் உத்தரவிட்டார்கள்.
4-    பிரயாணி நோன்பை விடுவதற்கு, பிரயாணத் தின் தூர எல்லையை வரையரை செய்வது நபிகளாரின் வழிகாட்டலைச் சாராது.
5-    ஸஹாபாக்கள் பிரயாணத்தை ஆரம்பித்ததும் நோன்பை விட்டு விடுவார்கள். அதற்குத் தங்களின் வீட்டு எல்லையைத் தாண்ட வேண்டு மென்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
6-    சில வேளை நோன்பு காலத்தில் ரஸூல் (ஸல்) அவர்கள் பஜ்ரு நேரத்தை அடையும் போது அவர்கள் பெரும்தொடக்கை உடையவராக இருப்பார்கள். எனினும் அந்நேரத்தில் பஜ்ருக்குப் பின் நபிகளார் நோன்பு வைத்திருக்கும் நிலையில் குளித்துத் தங்களின் தொடக்கை நீக்கிக் கொள்வார்கள்.
7-    சில வேளை நபிகளார் ரமழான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் போது தன்  மனைவியர் சிலருக்கு முத்தம் தந்துள்ளார்கள்.
8-    மேலும் நபிகளார் நோன்பு வைத்திருக்கும் போதே மிஸ்வாக் செய்து பல் துலக்கிக் கொள்வார்கள். மேலும் வாய் கொப்பளித்து நாசிக்குத் தண்ணீரும் செலுத்திக் கொள்வார்கள். அவ்வாறே தங்களின் தலையில் தண்ணீரும் ஊற்றிக் கொள்வார்கள்.
9-    நோன்பாளி மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அதற்காக அந்த நோன்பை கழாச் செய்ய வேண்டியதில்லை என்றார்கள் காருண்ய நபிகளார் அவர்கள்.
10-    நோயாளியும், பிரயாணியும் நோன்பை விட்டுவிட்டு பின்னர் கழாச் செய்து கொள்ள அவர்களுக்குச்  நபிகளார் சலுகை வழங்கினார் கள். அவ்வாறே தங்களின் உயிர் மீது அச்சம் கொண்டுள்ள   கர்ப்பிணிக்கும் பாலூட்டும் தாய்க்கும் நபிகளார் சலுகையளித்தார்கள்.  
மேலதிக நோன்பு
பர்ழு நோன்பல்லாத உபரி நோன்புகளை எவ்வாறு நோற்றல் வேண்டுமென்பதற்கும் ரஸூல் ((ஸல்) வழிகாட்டித் தந்துள்ளார்கள். இதன் மூலம் ஆத்மாவுக்கு சிரமம்  ஏற்படாதவாறு உயர் இலட்சியத்தை அடையும் வாயப்பு கிட்டும். ரஸூல் (ஸல்) அவர்கள் எல்லா மாதத்திலும் நோன்பு நோற்று வந்திருக்கின்றார்கள். சில வேளை சில மாதத்தில் நபிகளார் அதிகமாக நோன்பு நோற்று வருவார்கள், அப்பொழுது இனி நபியவர்கள் நோன்பை விடவே மாட்டார்களோ என்று மக்கள் கூறுமளவுக்கு அந்த மாதத்தில் நபிகளாரின் நோன்பு அதிகமாக இருக்கும்.  அப்பொழுது நோன்பு பிடிப்பதை நபிகளார் நிறுத்தி விடுவார்கள். சில மாதத்தில்  நபிகளார் பல நாட்கள்    நோன்பு நோற்காமல் இருந்து விடுவார்கள். அப்போது இனி நபியவர்கள் நோன்பு வைக்க மாட்டார்களோஎன்று மக்கள் சொல்லி விடுவார்கள். அப்பொழுது நபிகளார்  நோன்பு நோற்க ஆரம்பித்து விடுவார்கள். எவ்வாறாயினும்  எந்தவொரு மாதத்திலும் ரஸூல் (ஸல்)  அவர்கள் நோன்பு நோற்காமல் இருந்ததில்லை.  மேலும் ரமழான் மாதம் தவிர்ந்த வேறு எந்த மாதத்திலும் மாதம் முழுதும் நபியவர்கள் நோன்பு நோற்றதில்லை. மேலும் ஏனைய மாதங்களை விடவும் ஷஃபான் மாத்த்தில் நோற்கும் நோன்புகளே அதிகம்.
1-    குறிப்பாக வெள்ளிக்கிழமை  நோன்பு நோற்பதை நபியவர்கள் விரும்பவில்லை. எனினும் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு நோற்று வந்துள்ளார்கள்.
2-    பயனத்திலும் சரி ஊரில் இருக்கும் போதும் சரி ஐயாமுல்பீழ் தினங்களில் நோன்பு நோற்பதை நபியவர்கள் ஒரு போதும் விட்டதில்லை.
3-    எல்லா மாதத்திலும் நபிகளார், பௌர்ணமி நாட்களில் மூன்று தினங்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்.
4-    நபியவர்கள் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது “இவை ரமழான் நோன்புடன் சேர்ந்து ஒரு வருட நோன்புக்குச் சமமாகும்” என்றார்கள். மேலும் நபியவர்கள்,  ஏனைய நாட்களை விடவும் ஆசூரா தினத்தைத் தேடி அத்தினத்தில் நோன்பு நோற்பார்கள். மேலும் அன்றைய நோன்பு கடந்த ஆண்டின் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகும் என்றும் கூறினார்கள்.
5-    மேலும் அரபா தினத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, “அன்றைய நோன்பு கடந்த வருடத்தினதும், எஞ்சிய வருடத்தினதும் பாவங்களுக்குப் பிராயச் சித்தமாகும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
6-    வருடம் பூராவும் நோன்பு நோற்பது நபிகளாரின் வழியைச் சார்ந்ததல்ல. ஏனெனில் “வருடம் பூராவும் நோன்பு நோற்றவன் நோன்பு நோற்கவும் இல்லை, அவன் நோன்பை விடவும் இல்லை” என்று நபிகளார் கூறினார்கள்.
7-    சில வேளை உபரி – மேலதிக நோன்பு பிடிக்க நிய்யத் வைத்திருந்த நபியவர்கள், பின்னர் அந்த நோன்பை விட்டு விடுவதுமுண்டு. மேலும் சில வேளை தங்களின் இல்லாளிடம் நபியவர்கள் சென்று “உங்களிடம் ஆகாரம் ஏதும் உண்டா?” என்பார்கள். அதற்கு அவர்கள் “இல்லை” என்றால், நபியவர்கள் “அப்படியாயின் நான் நிச்சயமாக நோன்பு வைத்துள்ளேன்” என்று சொல்வார்கள்.
8-    மேலும் “உங்களில் நோன்பு வைத்திருக்கும் எவரேனும்  விருந்துக்கு அழைக்கப்படால், அவர் “நான் நிச்சயமாக நோன்பு பிடித்திருக்கின்றேன்” என்று கூறிவிடுவாராக” என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.        

இஃதிகாப் இருக்கும் போது

1-    ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வபாத் வரையில் ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களும் ‘இஃதிகாப்’ இருந்து வந்தார்கள். எனினும் அன்னாருக்கு ஒரு முறை ‘இஃதிகாப்’ இருக்க கிடைக்கவில்லை. எனவே அதனை அன்னார் ஷவ்வால் மாதத்தில் கழா செய்து கொண்டார்கள்.
2-    நபியவர்கள் ஒரு தடவை ரமழான் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களிலும், இன்னொரு தடவை நடுப் பத்து நாட்களிலும், மற்றொரு தடவை கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாப் இருந்து, அதில் லைலதுல் கத்ரை அடைந்து கொள்ள முயன்றார்கள். பின்னர் அது பிந்திய பத்தில்தான் இருக்கின்றது என்பது அன்னாருக்குத் தெளிவாக தெரிய வந்ததும், தாங்கள் இறையடி சேரும் வரையில், அன்னார் தொடர்ந்தும் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்.
3-    நோன்பின்றி நபியவர்கள் இஃதிகாப் இருந்ததில்லை.
4-    தான் தனியாக பள்ளிவாசலில் ஒதுங்கியிருக்க அங்கு தனக்கொரு கூடாரம் அடிக்குமாறு ரஸூல் (ஸல்) அவர்கள்  உத்தரவு பிரப்பிப்பார்கள்.
5-    ரஸூல் (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நினைத்தால், பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றி விட்டு இஃதிகாபைத் தொடங்குவார்கள்.
6-    ரஸூல் (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்தில் அன்னாருக்கு விரிப்பும், கட்டிலும் போடப்படும். எனவே நபியவர்கள் தங்களின் அந்தக் கூடாரத்திற்குள் சென்று அதில் தனியாக இருப்பார்கள்.   
7-    நபியவர்கள் இஃதிகாப் இருக்கும் போது, மனிதத் தேவையை நிறை வேற்றிக் கொள்ள வல்லாது வேறு எதற்காகவும் தங்களின் இல்லத்திற்குச் செல்ல மாட்டார்கள்.
8-    சில வேளை இஃதிகாபில் இருக்கும் நபியவர்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் மாதத் தீட்டுடையவராய் இருக்கும் நிலையிலும் தங்களின் தலையை அவர் வாரி விடும் பொருட்டு, அவர்களின் வீட்டுக்குள் தம் தலையை  வைப்பார்கள்.
9-    இஃதிகாபில் இருக்கும் நபிகளாரைப் பார்க்க சில வேளை அன்னாரின் மனைவியர் எவரும் இரவில் வருவர். பின்னர் அவர்கள் அங்கிருந்து எழுந்து போகும் போது, நபியவர்களும் அவருடன் எழுந்து சென்று அவரை அனுப்பி வைப்பார்கள்.
10-    நபியவர்கள் இஃதிகாபில் இருக்கும் வேளையில் எந்தவொரு மனைவியுடனும் சல்லாபம் செய்ததில்லை. அவ்வாறே அவர்களை முத்தமிடவோ, வேறு எந்தக் காரியமோ செய்யவுமில்லை.
11-    நபியவர்கள் எல்லா ஆண்டுகளிலும் பத்து தினங்கள் இஃதிகாப் இருந்து வந்தார்கள். எனினும் அன்னாரின் உயிர் எடுக்கப்பட்ட ஆண்டு அன்னார் இருபது தினங்கள் இஃதிகாப் இருந்தார்கள்.    
ஹஜ்ஜும், உம்ராவும்
(1)    நபிகளாரின் உம்ரா
1-    ரஸூல் (ஸல்) அவர்கள் நான்கு தடவைகள் உம்ரா செய்தார்கள். இதில் ஒன்று உம்ரதுல் ஹுதைபிய்யாவாகும். இது முஷ்ரிகீன்கள் ரஸூல் (ஸல்) அவர்களை மக்காவுக்குள் வர விடாமல் அவர்களை அங்கு வைத்து தடுத்த போது நிகழ்ந்தது. எனவே நபியவர்கள், தடுக்கப்பட்ட அவ்விடத்தில் குர்பானீ கொடுத்து, முடியையும் சிறைத்து இஹ்ராம் உடையைக் கலைந்தார்கள்.
2-    இரண்டாவது உம்ரா, உம்ரதுல் கழா எனப்படும். முந்திய ஆண்டு நபியவர்கள் ஹுதைபிய்யாவில் வைத்து உம்ரா செய்ய இயலாதவாறு தடுக்கப் பட்டார்கள் அல்லவா? எனவே அதனைக் கழா செய்யுமுகமாக நபியவர்கள் செய்த உம்ராவே இந்த உம்ரதுல் கழா என்பது.   
3-    நபியவர்களின் மூன்றாவது உம்ரா, அன்னார் தங்களின் ஹஜ்ஜுடன் சேர்த்து ஒன்றாகச் செய்த உமராவாகும்.
4-    நபியவர்களின் நான்காவது உம்ரா, அன்னார் ஜஃரானா எனும் இடத்திலிருந்து மேற் கொண்ட உம்ராவாகும்.
5- நபியவர்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டுச் செல்லும் வேளையில்,   மக்காவின் எல்லைக்கு வெளியில் அவர்களுக்கு  ஏதேனும் இடையூறு ஏற்பட்டு, அதன் காரணமாக அதனை  மக்காவின் எல்லைக்கு வெளியில் முறித்துக் கொண்ட எந்தவொரு உம்ராவும் இல்லை. மாறாக ஹுதைபிய்யாவில் இடை நிறுத்தப்பட்ட உம்ரா உள்ளிட்ட நபியவர்களின் எல்லா உம்ராவும் மக்காவின் எல்லைக்குள்ளேயே நிகழ்ந்தன.      
 நபியவர்கள் வருடத்தில் ஒரு உம்ரா மாத்திரமே செய்தார்கள். அன்னார் வருடத்தில் இரண்டு தடவைகள் உம்ரா செய்யவில்லை.
5-    நபியவர்களின் எல்லா உம்ராவும் ஹஜ்ஜின் மாதங்களிலேயே நிகழ்ந்தன. அதாவது ஷவ்வால், துல்கஃதா மற்றும் துல்ஹிஜ்ஜா மாதங்களிலேயே நிகழ்ந்தன.
6-    மேலும் “ரமழான் மாதத்து உம்ரா, ஒரு ஹஜ்ஜுக்குச் சமமாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.              
 (2) நபிகளாரின் ஹஜ்ஜு
1.    ஹஜ்ஜு கடமையாக்கப்பட்டதும் நபியவர்கள் தாமதமின்றி உடனே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார்கள். நபியவர்கள் ஒரேயொரு ஹஜ் மாத்திமே செய்தார்கள். அதனை உம்ராவுடன்  இணைத்து மேற் கொண்டார்கள்.
2.    ழுஹர் தொழுகைக்குப் பின்னர் ஹஜ்ஜுக்காக நபியவர்கள் நிய்யத் வைத்து,
لبيك اللهم لبيك , لبيك لا شريك لك لبيك , إن الحمد والنعمة لك والملك , لا شريك لك ، لبيك   
3.    “அல்லாஹ்வே! உன் அழைப்பை ஏற்றுக் கொண்டேன், உன் அழைப்பை ஏற்றுக் கொண்டேன் உனக்கு இணை எதுவுமில்லை, சர்வ புகழும், அருளும், ஆட்சி அதிகாரங்களும் உனக்கே சொந்தம், உனக்கு இணை எதுவுமில்லை.” என்ற தல்பியாவை தோழர்களும் கேட்கும் படியாக சப்தமிட்டுச் சொன்னார்கள். மேலும் இதனை ஓசையுடன் சொல்லும் படி தோழர்களுக்கும் உத்தரவிட்டார்கள். மேலும் மக்கள் அதிகமாக இருந்த போதும் அவர்கள் குறைவாக இருக்த போதும் அவர்களுக்குச் சிரமம் தராது நபியவர்கள் எப்போதும் தல்பியாவைக் கூறிக் கொண்டிருந்தார்கள்.
3- தம் தோழர்கள் இஹ்ராம் அணியும் போது  ஹஜ்ஜின் மூன்று வகையில் தாம் விரும்பிய படி நிய்யத் வைத்துக் கொள்ள அவர்களுக்கு, நபியவர்கள் வாய்ப்பளித்தார்கள். மேலும் அவர்கள் மக்காவை நெருங்கியதும், எவரெல்லாம் ஹஜ்ஜுக்கென்றும், கிரான் ஹஜ்ஜுக்கென்றும் நிய்யத் வைத்தார்களோ அவர்களில் தம் வசம் குர்பானீ   வைத்தில்லாத ஹாஜிகள் தங்களின் நிய்யத்தை உம்ராவின் பக்கம் மாற்றிக் கொள்ளும் படி கூறிக் இதனை ஒரு ஸுன்னத்தாகவும் ஆக்கினார்கள்.
4-    நபியவர்கள் பல்லக்கின் உள்ளே அமர்ந்து கொள்ளாது ஒட்டகத்தின் மீது இருந்து கொண்டு தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். அவர்களின் உணவு  ஒட்டகத்தின் அடிப் பாகத்திலிருக்கும் பையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் மக்காவை அடைந்த போது தங்களுடன் குர்பானீ  வைத்தில்லாத அனைவரும்  தங்களின் ஹஜ்ஜை உம்ராவின் பக்கம் மாற்றி, உம்ராவை நிறைவேற்றி விட்டு, தங்களின் இஹ்ராமை நீக்கும் படியும், தங்களுடன் குர்பானீ வைத்திருப்பவர்கள், இஹ்ராமுடன் தொடர்ந்து இருக்குமாறும் உத்தரவிட்டார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பி “தூதுவா” என்ற இடத்தை வந்தடைந்தார்கள். அங்கு துல் ஹிஜ்ஜா மாதம் நான்காம் நாள், ஞாயிறு இரவைக் கழித்தார்கள். அங்கு ஸுப்ஹுத் தொழுகையையும் நிறைவேற்றினார்கள். மேலும் அங்கு குளித்து விட்டு அல் ஹஜூன் என்ற இடம் தெரியும்படியான ஸன்யதுல் உல்யாவின் ஊடாக மக்காவுக்குள் பிரவேசித்தார்கள்.
பின்னர் நபியவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் பிரவேசித்தார்கள். அங்கு தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையைத் அன்னார் தொழவில்லை. உடனே கஃபாவை நெருங்கினார்கள். ஹஜருல் அஸ்வதுக்கு நேரில் நின்று கொண்டதும் அதனை முத்தமிட்டார்கள். அதற்காக முண்டியடிக்க வில்லை. பின்னர் தங்களின் வலது பக்கமாக வந்து, கஃபாவை தங்களின் இடது புறத்திலாக்கிக் கொண்டார்கள். கஃபாவின் வாசலிலும், அதன் பீலிக்கடியிலும், அதன் தூண் உள்ள இடங்களிலும் நபியவர்கள் துஆ எதுவும் கேட்கவில்லை. எனினும் ருக்னுல்  யமானீயிக்கும், மற்றும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையில்  நபியவர்கள், துஆ கேட்டிருக்கின் றார்கள். (ருக்ன் என்பது, தூண், மூலை எனும் கருத்தைத் தரும். கஃபாவின் நான்கு தூண்களும், மூலைகளும் அவை அமைந்திருக்கும் திசையை அடிப்படையாக வைத்து பல்வேறு பெயர்கள் கொண்டு  அழைக்கப்படுகின்றன.  இதன்படி  கஃபாவின் கிழக்குத் திசை  மூலை “ அர்ருக்னுஷ் ஷர்கீ” என்றும், யமன் திசை மூலை அர்ருக்னுல் யமானீ என்றும், ஷாம் தேச திசையிலிருக்கும் மூலை அர்ருக்னுஷ் ஷாமீ  என்றும், இராக்குத் திசை மூலை  அர்ருனுல் இராகீ” என்றும் வழங்கப்பட்டு வருகின்றன.) நபியவர்கள்  யமன் தேசத் திசையிலிருந்த  ருக்னுல் யமானிக்கும் மற்றும் ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள தூணுக்கும் இடையில் வைத்து,
رَبَّنَا آتِنَا في الدُّنيا حَسَنَةً وفي الآخِرَةِ حَسَنَةً وِقِنَا عَذَابَ النَّارِ
“நம் இரட்சகனே! நமக்கு இவ்வுலகிலும் நல்லதைத் தந்து மறு உலகிலும் நல்லதைத் தந்தருள்வாயாக”
என்று பிரார்த்தனை செய்தார்கள். தவாபின் போது இது தவிர குறிப்பாக வேறு துஆ எதனையும் ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை.
மேலும் தவாபின் முதல் மூன்று சுற்றுக்களின் போதும் நபியவர்கள் ரமல் செய்தார்கள். ரமல் என்பது வேகமாக நடப்பதைக் குறிக்கும். அதாவது இச்சந்தர்ப்பத்தில் ரஸூல் (ஸல்) தங்களின் எட்டுக்களை நெருக்கமாக வைத்து வேகமாக நடந்தார்கள். அவ்வமயம் தங்களின் புயத்தின் மேல் போட்டிருந்த  போர்வையின் ஒரு முனையை தங்களின் ஒரு தோலுக்கு மேலால் போட்டுக் கொண்டார்கள்., மேலும் தங்களின் மறு தோலையும், புயத்தையும் திறந்து வைத்துக் கொண்டார்கள். இதுவே ரமலின் முறையாகும்.
மேலும் ஹஜருல் அஸ்வதுக்கு நேரில் வருகின்ற போதெல்லாம் நபியவர்கள் தலைப்பாகம் வளைந்த தங்களின் ஊன்று கோலைக் கொண்டு அதைத் தொட்டு தடியை முத்திக் கொண்டார்கள். அப்போது  اللهُ أُكْبَرُ என்றும் கூறினார்கள்.  
மேலும் நபியவர்கள் ருக்னுல் யமானியிடம் வந்ததும் அதனைத் தொட்டார்கள். எனினும் அதனைத் தொட்ட தங்களின் கையை நபியவர்கள் முத்திக்கொள்ள வில்லை.  
நபியவர்கள் தங்களின் தவாபை நிறைவு செய்ததும், மகாமு இபராஹீமுக்குப் பின்னால் வந்து நின்று,    
واتخذوا من مقام إبراهيم مصلى    
என்ற வாசகத்தை ஓதினார்கள். அதன் பின்னர், மகாமு இக்ராஹீமை தமக்கும், கஃபாவுக்கும் மத்தியில் ஆக்கிக் கொண்டவாறு இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்ஆத்திலும்,
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ   قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ
சூரா காபிரூன், சூரா இஹ்லாஸ் ஆகிய இரண்டு ஸூராவையும் ஓதினார்கள்.
பின்னர் ஸபா குன்றின் பக்கம் சென்றார்கள். அதனை நெருங்கியதும்.
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّـهِ [البقرة: 159]
 என்று ஓதினார்கள். அதனை அடுத்து
أبدأ بما بدأ الله به
 “அல்லாஹ் எதைக் கொண்டு ஆரம்பம் செய்தானோ அவ்விடத்திலிருந்து தவாபை ஆரம்பம் செய்கின்றேன்” என்று கூறினார்கள். பின்னர் அந்தக் குன்றின் மேல் ஏறி பைதுல்லாஹ் தெரியும் படியாக நின்று கிப்லாவை முன்னோக்கி னார்கள். அதனை அடுத்து அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி, அவன் மீது தக்பீர் கூறினார்கள். பின்னர்,
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، لا إله إلا الله وحده، أنجز وعده، ونصر عبده، وهزم الأحزاب وحده
"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் எவரும், எதுவும் இல்லை, அவன் ஒருவன் அவனுக்கு இணை எதுவுமில்லை. ஆட்சி அதிகாரமும், சர்வ புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்து வஸ்துக்களின் மீதும் வல்லமையுள்ளவன். அல்லாஹ்வைத் தவிற வணக்கத்திற்குத் தகுதியானவன் எவரும், எதுவும் இல்லை. அவன் ஒருவன், அவன் தன் வாக்கை நிறைவேற்றியவன், தன் அடியானுக்கு உதவி செய்தவன், படைகளைத் தனியாகத் தோழ்வி யடையச் செய்தவன்.” எனும் வாசகங்களை மூன்று தடவைகள் ஓதி, அதனிடையே பிரார்த்தனை செய்தார்கள்.
பின்னர் அங்கிருந்து இறங்கி மர்வாவுக்கு நடந்து வந்தார்கள். அப்போது நபிகளாரின் பாதங்கள் இரண்டும் பல்லத்தாக்கின் நடுப் பகுதிக்கு இறங்கி வந்த போது,  அங்கிருந்து பல்லத்தாக்கை கடக்கும் வரையில் இரண்டு பச்சை நிற களங்கரை விளக்கிற்கும் அடையாள விளக்கிற்கும் இடையில் ஓடிச் சென்றார்கள். நபியவர்கள் தங்களின் ஸஃயுவை ஸபா, மர்வாவுக்கிடையிலான ஓட்டத்தை கால் நடையாக ஆரம்பித்தார்கள். பின்னர் அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்ததும், ஒட்டகத்தின் மேலேறி ஸஃயுவை நிறைவு செய்தார்கள்.
நபியவர்கள் மர்வாவை வந்தடைந்ததும், அதன் மேல் ஏறி நின்றார்கள். பின்னர் கிப்லாவை முன்நோக்கி, அல்லாஹ்வின் மீது தக்பீர் கூறி அவனை ஏகப்படுத்தி, ஸபா குன்றின் மீது செய்தது போலவே இங்கும் செய்தார்கள்  
மர்வாவில் தங்களின் ஸஃயுவை நிறைவு செய்து கொண்ட நபிகளார் தம் வசம் குர்பானீ இல்லாத சகல காரின் மற்றும் முப்ரித்  ஹாஜிகளும் தங்களின் இஹ்ராமைக் கட்டாயம் கலைந்து விட வேண்டும், என கட்டளையிட்டார்கள். (ஹஜ்ஜையும், உம்ராவையும் ஒன்றாகச் சேர்த்து நிறைவேவற்ற வென இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்துக் கொண்ட யாத்திரி “காரின்” என்றும், உம்ராவுக்காக நிய்யத் வைத்து இஹ்ராம் அணிந்து கொண்டு, மக்காவுக்குச் சென்று, உம்ராவின் கடமைகளை நிறைவேற்றிய பின், துல் ஹிஜ்ஜா பிறை எட்டாம் நாள் மக்காவில் வைத்து ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜுக் கடமைகளை நிறை வேற்றும் ஒருவர் முதமத்திஉ என்றும்  மேலும் காரினுக்கும், முதமத்திஉவுக்கும் மாறாக   ஹஜ்ஜைத் மாத்திரம் நினைத்து  இஹ்ராம் அணிந்து  கொண்ட ஹாஜி முப்ரித் என்றும் அழைக்கப்படுவர்)   
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள், தான் கொடுக்க வேண்டிய குர்பானீ பிராணியை தம் வசம் வைத்திருந்ததன் காரணமாக அன்னார், உம்ராவை நிறைவேற்றிய பின்னர், தங்களின் இஹ்ராமைக் கலைந்து விடவில்லை.  அன்னார் ஹஜ்ஜை நிறைவேற்றும் காலம் வரையில் தங்களின் இஹ்ராம் உடையில்  தொடர்ந்து இருந்தார்கள். மேலும் “நான் என் காரியத்தை முன்னெடுத்து விட்டால், அதிலிருந்து பின் வாங்க மாட்டேன். நான் என்னுடைய குரபானீயைக் கொண்டு வராதிருந்தால், நான் இதனை உம்ராவாக மாற்றிக் கொண்டிருப்பேன்” என்று கூறினார்கள்.
பின்னர் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளும் பொருட்டு மொட்டையடித்துக் கொண்டோருக்கு மூன்று தடவைகளும், முடியைக் குறைத்துக் கொண்டோருக்கு ஒரு தடவையுமாக ரஸூல் (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்.
ரஸூல் (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்த காலத்தில், தர்வியா - எனும் துல்ஹிஜ்ஜாவின் எட்டாம் நாள் வரையில் மக்காவுக்கு வெளியே இருந்த தங்களின் வதிவிடத்தில் தொழுகையை கஸ்ரு செய்து- சுறுக்கித் தொழ வைத்தார்கள்.  
தர்வியா தினம் காலையில் ரஸூல் (ஸல்) அவர்கள்  தன்னுடன் இருப்பவர்கள் சகிதம் மினாவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்பொழுது முன்னர் தங்களின் இஹ்ராமைக் கலைந்தவர்கள், தாமிருக்கும் இடத்தில் இருந்த வாறே ஹஜ்ஜுக்காக இஹராம் அணிந்து நிய்யத் வைத்தனர்.  
மினாவை சென்றடைந்த நபிகளார் அங்கு ழுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் சேர்த்து இரண்டு இரண்டு ரக்அத்துக்களாகச் சுறுக்கித் தொழுதார்கள். (இப்படித் தொழுவது ஜம்மு கஸ்ர் எனப்படும்) அன்றிரவு நபியவர்கள் அங்கு தங்கினார்கள். சூரியன் உதயமானதும் அங்கிருந்து அரபாவுக்குச் சென்றார்கள். மேலும் நபிகளாரின் தோழர் சிலர் தல்பியாவை முழங்கினர். இன்னும் சில தோழர்கள், தக்பீர் முழங்கினர். இதனை செவி மடுத்துக் கொண்டிருந்த ரஸூல் (ஸல்) அவர்கள், எவரையும் ஆட்சேபிக்க வில்லை. மேலும் தங்களின் கட்டளைப்படி தனக்காக நமிராவில் அடிக்கப் பட்டிருந்த கூடாரத்தை அன்னார் கண்டார்கள். நமிராவானது அரபாவைச் சேர்ந்த இடமல்ல. இது அரபாவின் கிழக்குத் திசைக்குரிய ஒரு கிராமம். எவ்வாறாயினும் நபியவர்கள் அதில் இறங்கினார்கள். சூரியன் உச்சியிலிருந்து விலகும் வரை அதில் இருந்தார்கள். பின்னர் தங்களின் “கஸ்வா” எனும் ஒட்டகத்தை கொண்டு வரும் படி உத்தரவிட்டார்கள். நபியவர்களின் கட்டளைப்படி ஒட்டகத்தில் ஆசனம் பூட்டப்பட்டது.
பின்னர் நபியவர்கள் “உர்னா” பூமியின் பத்ன் அல் வாதி வரை சென்றார்கள். அங்கு தங்களின் ஒட்டகத்தின் மீது இருந்தவாறு மக்களுக்கோர் மகத்தான உரை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாத்தின் அடிப்படைகளை உறுதிப்படுத்தி, ஷிர்க்கின் அடிப்படைகளையும், மௌட்டீகச் செயல்களையும் கண்டித்தார்கள். மேலும் வேதங்கள் அனைத்தும் ஒருமித்து ஹராம் என்று கூறியவற்றை உறுதிப்படுத்தி, ஜாஹிலிய்ய- மௌட்டீக விடயங்களையும், ஜாஹிலிய்யத்தான வட்டியையும் தங்களின் பாதத்துக்கடியில் போட்டு மிதித்தார்கள். மேலும் பெண்கள் விடயத்தில் நல்ல முறையைக் கையாலுமாறு உபதேசம் செய்தார்கள். மேலும் அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு  தங்களின் சமூகத்திற்கு வஸிய்யத் செய்தார்கள். மேலும் இவற்றை ஏற்றுக் கொள்ளு மாறும் அவர்களை வேண்டிக்கொண்டார்கள். அத்துடன் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து தாங்கள் எத்தி வைத்து விட்டதாகவும், பொறுப்பை நிறைவேற்றி விட்டதாகவும், உபசேம் செய்து விட்டதாகவும் பிரகடனம் செய்தார்கள்.  
நபிகளார்,  பிரசங்கத்தை நிறைவு செய்ததும், அன்னாரின் கட்டளைப்படி பிலால் (ரழி) அவர்கள் அதானும், இகாமத்தும் சொன்னார்கள். அதை அடுத்து ரஸூல் (ஸல்) ழுஹரை இரண்டு ரக்அத்தாகச் சுறுக்கித் தொழுதார்கள். அதில் கிராஅத்தை மெளனமாக ஓதினார்கள். அன்று ஒரு ஜும்ஆ தினம் என்பது குறிப்பிடத் தக்கது. பின்னர் பிலால் (ரழி) அவர்கள் மீண்டும் இகாமத் சொன்னார்கள். அப்போது நபியவர்கள் அஸரையும் இரண்டு ரக்அத்தாகச் சுருக்கித் தொழுதார்கள். அவ்வமயம் அவர்களுடன் மக்கா வாசிகளும் இருந்தனர். எனினும் அவர்கள் தொழுகையைப் பூரணப்படுத்தித் தொழ வேண்டு மென்றோ, அல்லது அவர்கள் ஜம்உ செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றோ நபியவர்கள் அவர்களுக்கு உத்தரவிடவில்லை.
ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையை நிறைவேற்றிய பின்னர்  ஒட்டகத்தில்  ஏறி அரபாவுக்கு வந்தார்கள். அன்று நபியவர்கள் நோன்பு வைத்துள்ளார்களோ என்று மக்கள் ஐயம் கொண்டிருந்த போது, நபியவர்கள் அரபாவில் தங்குமிடத்தில் இருக்கும் போது அன்னாருக்கு மைமூனா (ரழி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் அனுப்பினார்கள். அப்பேது ரஸூல் (ஸல்) அவர்கள் அதனைக் குடித்தார்கள். அங்கிருந்த மனிதர்களும் அதனை அவதானித்துக் கொண்டி ருந்தனர். பின்னர் நபியவர்கள் மலைக்குக் கீழே கற்கள் நிறைந்த ஓர் இடத்தில் கிப்லாவை முன்னோக்கியவாறு நின்றார்கள். அங்கு நபிகளார் தங்களின் ஒட்டகத்தின் மீதமர்ந்து அதன் கயிற்றைத் தங்களின் முன்னால் வைத்துக் கொண்டு, பிரார்த்தனை செய்யவும், இரைஞ்சவும் ஆரம்பித்தார்கள். சூரியன் மறையும் வரையில் இதில் ஈடுபட்டார்கள்.    
பின்னர் “பத்னு உர்னா”வை விட்டும் எல்லோரையும் எழும்பும்படி நபியவர்கள் கட்டளை யிட்டார்கள். பின்னர் தாங்கள் தங்கிருந்த இடத்தைக் காட்டி “ நான் இவ்விடத்தில் தங்கியுள்ளேன். அரபாவின் எல்லா இடமும் “மௌகப்” தான்- தங்குமிடம்தான்” என்று கூறினார்கள்.
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது, ஒரு ஏழை உணவு வேண்டி கையேந்துவது போன்று தங்களின் இரு கரங்களையும் தமது நெஞ்சின் பக்கமாக உயர்த்தி வைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் நபிகளார் “பிராத்தனையில் சிறந்தது அரபாவின் பிரார்த்தனையாகும், நானும் எனக்கு முந்திய நபிமார்களும் சொன்ன வார்த்தைகளில் சிறந்தது,
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் எவனும் இல்லை, எதுவும் இல்லை, அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை. ஆட்சி அதிகாரமும், சர்வ புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்து வஸ்துக்களின் மீதும் வல்லமையுள்ளவன் எனும் வார்த்தையாகும்” என்றும் கூறினார்கள்.
வானத்தின் சூரியனின் மஞ்சல் நிறம் யாவும் நீங்கி அது முற்றாக மறைந்து விட்ட போது, நபியவர்கள் உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களைத் தமக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டு மிக அமைகியாக அரபாவிலிழுந்து புறப்பட்டார்கள். மேலும் தனது ஒட்டகத்தின் கடிவாளத்தை தன்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டார்கள். அதன் காரணமாக அதன் தலை அன்னாரின் ஆசனத்தின் ஓரத்தைத் தொடக் கூடிய வாறு இருந்தது. அப்பொழுது நபிகளார், “ஜனங்களே! அமைதி இருங்கள். ஏனெனில் தீவிரப்படுவதில் நன்மை இல்லை” என்று கூறினார்கள்.  
 ரஸூல் (ஸல்) அவர்கள் ஒடுக்கமான ஒரு வழியால் வெளியேறினார்கள்.  அப்போது அவசரமோ, மந்தகெதியோ இல்லாமல் சாதாரணமாக நடந்து சென்றார்கள். வழி விசாலமாகவுள்ள இடத்தில்  வேகமாக நடந்தார்கள்.
     ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வழியில் தல்பியாவை நிறுத்தாமல் கூறிக் கொண்டே சென்றார்கள். இடை வழியில் நபிகளாருக்குச் சிறு நீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே அன்னார் சிறு நீர் கழித்த பின்னர் சுத்தம் செய்து கொண்டார்கள். மேலும் அவ்விடத்தில் தொழாமல் நடையைத் தொடர்ந்தார்கள். அப்படியே முஸ்தலிபாவை வந்தடைந்த ரஸூலுல்லாஹ் அங்கு தொழுகைக்காக வுழூஃ செய்து கொண்டார்கள். பின்னர் அதானும், இகாமத்தும் சொல்லும் படி பிலால் (ரழி) அவர்களைப் பணித்தார்கள். பொதிகளை இறக்கி வைத்து, ஒட்டகங்கள் படுத்துக் கொள்ளும் முன்னர் மஃரிபுத் தொழுகையைத் தொழுதார்கள். ஸஹாபாக்கள் தம் பொதிகளை இறக்கிய பின்னர் மீண்டும் இகாமத் சொல்லும் படி நபியவர்கள் பணித்தார்கள். பின்னர் அதான் இன்றி இகாமத்துடன் இஷாத் தொழுகையைத் தொழுதார்கள். இரண்டு தொழுகைக்கும் இடையில் வேறு எதுவும் ரஸூல் (ஸல்) அவர்கள் தொழவில்லை. பின்னர் ஸுபுஹு வரை நித்திரை கொண்டார்கள். எனவே அன்றிரவு நபிகளார் கண் விழித்திருக்கவில்லை.
அன்றிரவு சந்திரன் மறைந்ததும்  தங்களின் குடும்பத்திலுள்ள பலவீனர்களுக்கு, பஜ்ரு உதயமாக முன்னர் மினாவுக்குப் புறப்பட்டுச் செல்ல, நபியவர்கள் அனுமதியளித்தார்கள். எனினும் சூரியோதயத்திற்கு முன் கல் எறிய வேண்டாம் என அவர்களை நபிகளார் பணித்தார்கள்.
    பஜ்ரு உதயமானதும் அதான் கூறப்பட்டது. பின்னர் அதன் ஆரம்ப நேரத்திலேயே  இகாமத்தின் பின்  ரஸுல் (ஸல்) அவர்கள் பஜ்ருத் தொழுகையை  தொழுதார்கள்.  பின்னர் ஒட்டகத்தில் ஏறி முஸ்தலிபாவில் உரிய இடத்திற்கு வந்தார்கள். மேலும் முஸ்தலிபாவின் எல்லா இடமும் ஹாஜிகள் தரிப்பதற்குரிய  இடம்தான், என்று நபிகளார் ஜனங்களுக்கு அறிவுருத்தினார்கள். பின்னர் கிப்லாவை முன்னோக்கி நன்றாக விடியும் வரையில் துஆ- பிரார்த்தனையிலும், மற்றும்  தக்பீர் சொல்வதிலும், திக்ரு செய்வதிலும் ஈடுபட்டார்கள். பின்னர் பழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களையும் தம்முடன் ஏற்றிக் கொண்டு,  சூரியன் உதயமாக முன்  முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டார்கள்.
ஜம்ராவில் எறிய ஏழு கற்களைப் பொறுக்கி எடுக்க முடியாமல், இப்னு அப்பாஸ் அவர்கள் வழியில் சிரமப் பட்டார்கள். அதனைக் கண்ட நபியவர்கள் அதனைத் தம் கையுள் வைத்து நொறுக்கினார்கள். பின்னர் “இது  போன்ற கற்களைக் கொண்டு எறியுங்கள். மேலும் மார்க்க விடயத்தில் நீங்கள் எல்லை மீறி விடுவதையிட்டும் உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்” என்று கூறினார்கள்.
நபியவர்கள் “பத்னு முஹஸ்ஸிரை” வந்தடைந்த போது நடையின் வேகத்தைக் கூட்டினார்கள்.  மேலும் ஜம்ரதுல் குப்ரா ஊடாக வெளியேறும் மத்திய பாதையால் சென்றார்கள். தல்பியா கூறிய வாறு  மினாவை வந்தடைந்த நபியவர்கள்,  கல்லெறியத் துவங்கினார்கள்.  எனவே சூரிய உதயத்தின் பின் நபியவர்கள் ஒட்டகத்தில் இருந்த வாறு ஓடையின் பள்ளத்திலிருந்து ஜம்ரதுல் உக்பாவுக்குக் கல் எறிந்தார்கள். அவ்வமயம் தங்களின் இடது புறத்தில் கஃபாவையும் வலது புறத்தில் மினாவையும் வைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் ரஸுலுல்லாஹ் தக்பீர் சென்னார்கள்.   
பின்னர் நபியவர்கள் மினாவிலிருந்து திரும்பினார் கள். அதனையடுத்து மக்களுக்குத் தெளிவான  பிரசங்கம் ஒன்று நிகழ்த்தினார்கள். அவ்வமயம்  குர்பானீ கொடுக்கும் நாளின் கண்ணியத்தையும் அதன் சிறப்பையும் பற்றி மக்களுக்கு எடுத்து விளக்கினார்கள். அவ்வாறே மக்காவின் கண்ணியத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் கள். மேலும் அல்லாஹ்வின் வேதத்தின் பிரகாரம் அவர்களை வழி நடாத்தும் தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அத்துடன் ஹஜ்ஜின் கிரியைகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் மன்ஹருக்கு-  அதாவது கால்நடைகள் அறுக்கும் இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் சென்றார்கள். அவ்விடத்தில் நூறு ஒட்டகங்கள் அறுக்கப்பட்டன. அதில் அறுபத்து மூன்று ஒட்டகங்கள  நபியவர்கள் அறுத்தார்கள். அதில் எஞ்சியதை  அறுக்கும்படி அலீ (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஒட்டகங்கள் அறுக்கப்படும்போது அதன் இடது முன் கால்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அதனை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்குமாறும், அதிலிருந்து எதனையும் கசாப்புக்காரனுக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்கள்.
 மேலும் மினாவின் எல்லா இடங்களும் குர்பானீ பிரானிகள் அறுப்பதற்கு ஏற்ற இடம் என்றும்,  மக்காவின் பாதைகளும் அப்படியே என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குத் தெளிவு படுத்தினார்கள்
பின்னர்  நபியவர்கள்  முடி வெட்டுபரை அழைத்தார்கள். அவர் நபிகளாரின் தலையின் வலது பக்கத்தை முதலில் சிரைத்தார். அதன் பின்னர் இடது பாகத்தை சிரைத்தார். பின்னர் நபிகளார், எவரெல்லாம் தங்களின் முடியை சிரைத்துக் கொண்டனரோ அவர்களுக்காக மூன்று தடவைகளும், மேலும் எவர்கள் தங்களின் முடியை வெட்டிக் கொண்டனரோ அவர்களுக்காக ஒரு தடவையும் துஆ செய்தார்கள்.
பின்னர் ழுஹருக்கு முன்னர் வாகனத்தில் ஏறி மக்காவுக்குப் புறப்பட்டார்கள். அங்கு தவாபுல் இபாழாவை- ஹஜ்ஜின் தவாபை  நபிகளார் நிறை வேற்றினார்கள. இது தவிர வேறு தவாப் எதனையும் அன்னார் நிறைற்றவில்லை. மேலும் இந்த தவாபிலும், அவ்வாறே  தவாபுல் விதாவிலும் அன்னார் ரமல் செய்யவுமில்லை.  மக்காவில் பிரவேசித்ததும் நிறைவேற்றும் தவாபுல் குதூமில்  மாத்திரமே நபிகளார் ரமல் செய்தார்கள்.  
பின்னர் நபிகளார் ஸம்ஸம் கிணற்றின் பக்கம் சென்றார்கள். அங்கு மக்கள் தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடமிருந்து நபிகளார் வாளியைப் பெற்று, அங்கு நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள். பின்னர் மீண்டும் மினாவுக்குத் திரும்பி வந்த நபிகளார், அங்கு அன்றிரவைக் கழித்தார்கள். நபியவர்கள் மக்காவுக்குச் சென்ற போது, அன்று எவ்விடத்தில் வைத்து ழுஹர் தொழுதார்கள் என்பதில் ஒற்றைக் கருத்துக் காணப்பட வில்லை. நபியவர்கள் அன்று மினாவில் ழுஹர் தொழுதார்கள் என்று இப்னு உமர் (ரழி) அவர்களும், மக்காவில் தொழுதார்கள், என்று ஜாபிர் (ரழி) அவர்களும் மற்றும் ஆயிஷா (ரழி) அவர்களும் அறிவித்துள்ளனர்.
மறு நாள் விடிந்ததும் சூரியன் உச்சிலிருந்து விலகும் வரை நபிகளார் காத்திருந்தார்கள். சூரியன் சாய்ந்ததும் தங்களின் தங்கு தலத்திலிருந்து ஜம்ராக்கலுள்ள இடத்திற்குச் சென்றார்கள். முதலில் ஜம்ரதுல் ஊலாவுக்குக் கல் எறிந்தார்கள். இது மஸ்ஜிதுல் கீபுக்குப் பக்கத்தில் இருக்கின்றது. அதற்கு ஏழு கல்லெறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் اللهُ أكْبَر என்று  கூறினார்கள்.
பின்னர் இயன்ற அளவு அதற்கு முன்னுள்ள ஜம்ராவின் பக்கம் முன்னேறினார்கள். அங்கு கிப்லாவின் பக்கம் முகம் நோக்கி தங்களின் இரு கரம் ஏந்தி ஸூரா அல் பகரா அளவு நீளமான ஒரு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.
பின்னர்  ஜம்ரதுல் வுஸ்தாவுக்கும் அதே போன்று கல் எறிந்தார்கள். பின்னர் பல்லத்தாக்கின் இடது பக்கத்தால் இறங்கினார்கள். அங்கும் கிப்லாவை முன்னோக்கி நின்று இரு கரமேந்தி முன்னர் போலவே நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அதனையடுத்து மூன்றாம் ஜம்ராவின் பக்கம் நபியவர்கள் வந்தார்கள். அதுதான்  “ஜம்ரதுல் அகபா” - இறுதி ஜம்ரா எனப்படுகிறது. அங்கு அந்த பல்லத்தாக்கின் உள்ளே நபியவர்கள் வந்தார்கள். பின்னர் ஜம்ராவைத் தங்களின் முன் புறமாகவும், கஃபாவை தங்களின் இடது பக்கமாகவும், மினாவை தங்களின் வலது பக்கத்திலும் ஆக்கிக் கொண்டார்கள். இங்கும் முன் போலவே ஏழு கற்கள் எறிந்தார்கள்.  இங்கு கல் எறிதலை நிறைவு செய்த நபியவர்கள், அங்கு மேலும் நின்று கொண்டிருக்காது அங்கிருந்து திரும்பி விட்டார்கள்.
நபியவர்கள் ழுஹர் தொழ முன்னர்  ஜம்ராக்களுக்கு கல் எறிந்து விட்டு அங்கிருந்து திரும்பிய பின்னரே ழுஹர் தொழுதார்கள் என்பது பெரும்பாலோரின் கருத்து. மேலும் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் தண்ணீர் இரைக்கும் பொறுப்பு சாட்டப் பட்டிருந்தது. ஆகையால் மினாவில் கழிக்க வேண்டிய இரவுகளை, அவர்  மக்காவில் கழிக்க அவருக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
நபியவர்கள் ஐயாமுத் தஷ்ரீக்கின் மூன்று நாட்களில் அவசரப்பட்டு  இரண்டு நாட்களில் மினாவிலிருந்து வெளியேறி விடாமல், அங்கு மூன்று நாளும் தங்கி இருந்து கல் எறிந்தார்கள். மூன்றாம் நாள் ழுஹருக்குப் பின் புறப்பட்டு  “அல் மிக்ஸபை” வந்தடைந்தார்கள். அங்கு ழுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைளைத் தொழுதார்கள். பின்னர் அங்கு சற்று நேரம் தூங்கியெழுந்து மக்காவுக்குச் சென்றார்கள். அங்கு ஸஹர் நேரத்தில் தவாபுல் விதாஃவை நிறை வேற்றினார்கள். இந்தத் தவாபில் நபியவர்கள் “ரமல்” செய்யவில்லை. இச்சந்தர்ப்பத்தில் ஸபிய்யா (ரழி) அவர்களுக்கு மாதத் தீட்டு ஏற்பட்டிருந்தது. எனவே அவர் தவாபுல் விதாஃவை நிறைவேற்றாம லிருக்க அவருக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் சலுகை வழங்கினார்கள். ஆகையால் அவர் தவாபுல் விதாஃவை நிறைவேற்ற வில்லை.
ஆயிஷா (ரழி) அவர்களின் மனம் திருப்தியடையும் பொருட்டு அவர் உம்ராவுக்கு நிய்யத் வைத்து வர, அவரின் சகோதரன் அப்துர் ரஹ்மான் என்பாருடன் அன்றிரவு அவரை, நபியவர்கள் “தன்ஈமுக்கு” அனுப்பி வைத்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் உம்ராரவை நிறைவேற்றி முடிந்ததும், நபியவர்கள் சகல தோழர்களையும் அழைத்து மக்காவிலிருந்து புறப்டுமாறு உத்தரவிட்டார்கள். எனவே மக்கள் யாவரும் அங்கிருந்து பயணமாகினர்.  


குர்பான் விடயத்தில் நபிகளாரின் வழிகாட்டல்
1.    ஹத்யு
1-    ஹஜ்ஜு கிரியைகளின் பொருட்டு வேறுபடுத்தி வைக்கும் பிராணி  “ஹத்யு எனப்படும். எனவே இவ்வாறு வேறு படுத்திய, ஆடு, மாடு, ஒட்டம் என்பவற்றை, நபியவர்கள் தாங்கள் தங்கியருந்த இடத்திலும், தங்களின் ஹஜ்ஜுவிலும், உம்ராவிலும் தனக்காகவும், தன் மனைவியருக் காகவும் அறுத்துப் பலியிட்டார்கள்.  
2-    வேறுபடுத்திய ஆட்டின் மேனியில் அடையளம் எதனையும் பதிய வைக்காது, அதன் கழுத்தில் வளையல் ஒன்றைத் தொங்க விடுவதே நபிகளாரின் நடைமுறையாகும். ரஸூல் (ஸல்) அவர்கள் ஊரில் இருந்து கொண்டு ஒரு ஹத்யுவை மக்காவுக்கு அனுப்பி வைத்த போது, அதன் காரணமாக ஒரு முஹ்ரிமின் மீது சில விடயங்கள் ஹராமாகி விடுவது போன்று, இந்த ஹத்யுவின் காரணமாக ரஸூலுல்லாஹ்வின் மீது எதுவும் ஹராமாகி விடவில்லை.
3-    மேலும் நபியவர்கள் ஒட்டகையை வேறு படுத்திய போது அதன் கழுத்தில் வளையலை தொங்க விட்டதுடன், அதன் மேல் ஒரு அடையாளத்தையும் பதித்தார்கள். அப்பொழுது அதன் திமிழின் மேற்பரப்பின்  வலது பக்கத்தில் இரத்தம் வழியும் படி இலேசாகக் கீறி விட்டார்கள்.
4-    மேலும் ஹத்யுவை ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கும் போது அதனை எடுத்துச் செல்பவரிடம், அதற்கு நாசம் ஏதுமுண்டாகி அது அழிந்து விடும் என்றிருந்தால் அதனை அறுத்து விடும் படி கட்டளையிட்டார்கள். பின்னர் அதனை எடுத்துச் செல்பவரின் செருப்பைத் அதன் இரத்தத்தில தோய்த்து, அதனை அதன் கண்ணத்தின் மேல் வைக்கும் படியும், அதிலிருந்து எதனையும்  அவரும், அவரின் சகாக்களும் உண்ணாமல், அதன்  மாமிசத்தைப் பகிர்ந்து விடுமாறும் உத்தரவிட்டார்கள்.
5-    மேலும் ஹத்யுவின் விடயத்தில் தங்களின் தோழர்களுக்கிடையில் கூட்டுச் சேர்த்தார்கள். இதன் படி ஒரு ஒட்டகத்தை ஏழு போரும், அவ்வாறே ஒரு மாட்டை ஏழு பேரும் கூட்டு சேர்ந்து குர்பான் கொடுப்பதற்கு நபிகளார் வாயப்பளித்தார்கள்.
6-    தேவைப்படால்  ஹத்யுவை இழுத்துச் செல்லும் நபர் தனக்கு இன்னொரு பிராணி கிடைக்கும் வரை அதில் ஏறிச் செல்ல  நபியவர்கள் அவருக்கு  அனுமதியளித்தார்கள்.
7-    ஒட்டகத்தை நிற்பாட்டி அதன் இடது முன்காலை கட்டி வைத்து அதனை அறுப்பதுவே நபி வழியாகும். மேலும் அதனை அறுக்கும்  போது அன்னார் பிஸ்மிலும், தக்பீரும் சொல்வார்கள்.    
8-    அறுக்க வேண்டிய தங்களின் பிராணியை நபியவர்கள் தங்களின் கரத்தினாலே அறுப்பார்கள். சில வேளை அதில் சிலதை அறுக்கும் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைத்து விடுவார்கள்.
9-    நபியவர்கள் ஆட்டை அறுக்கும் போது தங்களின் பாதத்தை அதன் கன்னத்தின் அகளமான பகுதியின் மேல் வைத்துக் கொள்வார்கள். பின்னர் பிஸ்மியும் தக்பீரும் சொல்லி  அதனை அறுப்பார்கள்.
10-    தமது உம்மத்தினர், தங்களின் ஹத்யவில் இருந்தும், உழ்ஹிய்யாவிலிருந்தும், சாப்பிடுவ தையும், உணவுக்காக அதனை சேகரித்து வைப்பதையும் நபியவர்கள் அனுமதித்தார்கள்.
11-    சில வேளை நபியவர்கள் குர்பானீ மாமிசத்தைப் பகிர்ந்து விடுவார்கள். சில வேளை விரும்பியோர் அதிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள்.
12-    உம்ராவின் ஹத்யுவை மர்வாவில் வைத்தும், கிரானின் ஹத்யுவை மினாவில் வைத்தும் அறுப்பது நபிகளாரின் வழிகாட்டலாகும். நபியவர்கள் ஒரு போதும் இஹ்ராமின் நிலையிலிருந்து நீங்கிவிடுமுன்னர் தங்களின் ஹத்யுவை அறுத்ததில்லை. மேலும் சூரியன் உதிக்க முன் அதனை அறுக்க ஒரு போதும் யாரையும் அனுமதிக்கவும் இல்லை.
உழ்ஹிய்யாவில் நபிகளாரின் வழி முறை
1-    ரஸூல் (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யா கொடுப்பதைக் கைவிட்டதில்லை. பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இரண்டு செம்மரி ஆடுகளை நபிகளார் அறுப்பார்கள். மேலும் “ஐயாமுத் தஷ்ரீக்கின் எல்லா நாட்களும் குர்பானீ கொடுக்கும் நாட்கள்தான்” என்றும் நவின்றுள்ளார்கள்.
2-    “தொழுகை நிறைவேற்றப்பட முன் எவரேனும் அறுத்துப் பலியிடுவாராகில், அது ஹஜ்ஜின் வழிபாட்டைச் சாராது, அது அவன் தன் குடும்பத்திற்குக் கொடுக்கும் ஒரு மாமிசம்தான்”  என்று நபியவர்கள் அறிவித்துள்ளார்கள்.
3-    குர்பானீ கொடுக்கும் பிராணி ஆடாக இருந்தால், ஆறுமாதம் நிரம்பிய குட்டியையும், மாடாக இருந்தால், ஐந்து வயது நிரம்பிய மாட்டையும், ஒட்டகமாக இருந்தால் மூன்றாம் ஆண்டில் பிரவேசித்துள்ள ஒட்டகத்தையும் அறுக்கும் படி ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.
4-    நபியவர்கள் உழுஹிய்யா கொடுக்கும் போது குறைகளில்லாத நல்ல பிராணியைத் தெரிவு செய்தெடுப்பார்கள். எனவே காதருந்த, கொம்பு டைந்த, ஒற்றைக் கண்ணுள்ள, நொண்டியான, எழும்பு முறிந்த பிராணிகளை உழ்ஹிய்யா கொடுப்பதை நபிகளார் தடை செய்தார்கள். ஆகையால் குறையில்லாத நல்ல பிராணிகளைக் கவணித்தெடுக்குமாறு நபிகளார் கட்டளை யிட்டார்கள்.
5-    மேலும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியிருக்கும் ஒருவர், அதனை நிறைவேற்றும் வரை, துல் ஹிஜ்ஜா மாதத்தின் பத்து நாட்களிலும் தங்களின் முடியெதையும் அகற்றி விட வேண்டாம் என நபியவர்கள் பணித்தார்கள்.
6-    உழ்ஹிய்யா பிராணியை தொழுகை நிறைவேற்றும் மைதானத்தில் அறுப்பதுவும் ஒரு நபி வழியே.
7-    மேலும் தனக்காகவும், தன் குடும்ப அங்கத்தினர் அதிக எண்ணிக்கையுடையவராக, அல்லது குறைந்த எண்ணிக்கை யுடையவராக இருந்த போதிலும் அவர்கள் எல்லோருக்குமாக ஒரு ஆடு போதுமானது, இதுவும் நபிகளாரின் சிறந்த வழிகாட்டலைச் சார்ந்ததாகும்.      
அகீகாவில் நபிகளாரின் வழிகாட்டல்
1-    “எல்லா பிள்ளைகளும் அதன் ஏழாம் நாளில் அறுக்கப்படும் அதன் அகீகாவுடன் அடகு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாளில் அதன் முடி சிரைக்கப்பட்டு அதற்குப் பெயரும் சூட்டப்பட வேண்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள்  நவின்றார்கள்.
2-    மேலும் “சிறுவனுக்கு இரண்டு ஆடுகளும், சிறுமிக்கு ஒரு ஆடும் அகீகாவாகும்” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்)